'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)
Sanjayan Selvamanickam 2நா · “கனவுச்சிறை” ****** தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஒன்றே போதும் அவரைத் தலையில்வைத்துக் கொண்டாட. இதுவரை வெளிவந்த ஈழப்போரட்டம் பற்றிய புனைவுகளில் இது உச்சம் என்றால் அது மிகையேயில்லை. One and Only! இந்த நாவல், இன்றுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை, ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு துன்பியல். ஈழப்போராட்டத்தையும், அது கருக்கொண்ட நாளில் இருந்து வளர்ந்து, பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து, அதிர்ந்து ஓய்ந்த காலம்வரை நாம் கடந்துகொண்ட வாழ்வையும், பிரளயங்களையும், வலிகளையும், இழப்புக்களையும், கனவுகளையும் இத்தனை ஆழமாக, அழகுற, சரித்திரச் சான்றுகளைப் பிசைந்து, உயிரூட்ட தேவகாந்தனால் மட்டும்தான் இதுவரை முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது 200 - 300 பக்க நாவல் அல்ல. ஆயிரத்திற்கு ஒரே ஒரு பக்கம் குறைவான ஈழப்போராட்டத்தின் சாட்சியம். அத்தனையும் இரத்தமும், எலும்பும் கலந்த சதை. குருதியின் வெடில் மூக்கில் ஒட்டிக்கொண்டு நாட்கணக்கில் மனதை அலைக்கழிக்கிறது. பல காதாபாத்திரங்களுடன் பெரு நட்புப் பூண்டிருக்கிறேன். பலரது நாட்குறிப்புகளை இரகசியமாக வாசித்து இந்த நாவலை எழுதினாரா...