கனடிய இலக்கியத்தின் வரைபடத்தில் கனடிய நாவல்கள் - தேவகாந்தன்

தனது பல்வேறு நாட்டினங்களது இலக்கிய முயற்சிகளுக்கும் களமாக இருக்கிற ஒரு தேசம் கனடாவென்றே தோன்றுகிறது. அதன் பல்லின, பல் கலாச்சார கொள்கைக் கூறுகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு மேலேதான் வலிவுபெறத் தொடங்கினவென்றாலும், அது சார்ந்த அதன் இன்றைய இலக்கிய வளம் மிகுந்த கூர்மை பெற்றிருக்கிறது. கல்விமுறை சார் ஆங்கில இலக்கியப் பரிச்சயமுள்ள பலருக்கு அதன் இன்றைய நவீன இலக்கியத்தின் வீச்சு காணப்படாதது. ஆங்கில இலக்கியமென்று பொதுப்படச் சொல்வதனாலேயே அதன் தனித்துவமும் காணாமல் போய்விடுகிறது. அதனால் கனடிய ஆங்கில இலக்கியமென்ற பதச் சேர்க்கை அதன் தனித்துவத்தை நிலைநிறுத்துவதாய் இருக்கமுடியும். கனடாவின் இலக்கிய வளத்தினுக்கு ஆசியா ஆபிரிக்கா தென்னமெரிக்கா மற்றும் ஐரோப்பாவென பல கண்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்த மக்களிடையே தோன்றிய படைப்பாளிகளின் பங்களிப்புகள் கனடிய இலக்கியத்தின் இன்றைய உன்னதத்தின் பிரதம காரணங்களாக இருக்கின்றன. கனடிய ஆங்கில மொழி, கனடிய பிரெஞ்சு மொழி, கனடிய காலிக் (Canadian Gaelic) மொழியில் மட்டுமன்றி கனடிய பூர்வீக மக்களின் மொழிகளிலும் இன...