கதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல் - த.அகிலன்

பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம் அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம் அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும் , தெரியாத சூழலில் , புதிய நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம். பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின் பேரன்பை நாம் தரிசிக்கக் காரணமாயிருக்கிறது. எல்லைகளின் விரிவென்பது நமக்களிக்கும் கிளர்ச்சியும் , தீர்ந்துவிடாமல் நம் முன்னே நீண்டு செல்லும் பாதைகள் நமக்களிக்கும் மகிழ்வும் , அதனுள் பொதிந்திருக்கும் சாகசவுணர்வும்தான் பயணம் பற்றிய உயர்வு நவில்தல்களின் பிரதான காரணியாக இருக்கிறது. ஆனால் பயணத்தை தொழிலாகக் கொள்வது இவற்றினின்றும் வேறுபட்டது. சேருமிடங்களை உறுதியாக அறிந்த திரும்புதலின் நிச்சயத்தோடு நிகழ்த்தப்படும் பயணங்களுக்கும் திரும்புதலில் நிச்சயமின்மையோடு நிகழும் பயணங்களுக்குமான வேறுபாடு அளப்பரியது. முன்னையதில் பெருமகிழ்வும் குறைந்த அனுப...