நுண்பொருள்: அறம் - பொருள்- காமம் நூலின் என்னுரை

என்னுரை திருக்குறளை சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதை சங்க காலத்ததென எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப் பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப்பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும் மகிழச் செய்திருந்தேன். அப்போது வயது எனக்கு பதினேழுதான். அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர் உரையை முதன்மையாகவும், இளம்பூரணர், பேராசிரியர் உரைகளை உரைக் குறிப்புகளினூடாகவும் அறிய நேர்ந்திருந்தது. பின்னால் டாக்டர் மு.வரதராசன், நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா, கலைஞர் மு...