யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்

என்னுரை வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியலின் விளைவுகள் எனப்படுகிறது . அதனாலேயே காதலும் காமமும் யுத்தங்களின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்பெற்று , அவற்றின் தோல்விகளாலும் வெற்றிகளாலும் அதன் முழுப் பரப்பும் மூடப்படுகின்றது . தோற்றவர் வடுக்களும் , வென்றவர் ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும் , யுத்தத்தின் மூலகாரணம் அதில் முற்றாக நிராகரிக்கப்படுகிறது . பலவேளைகளில் நிஜங்கள் திரித்தும் எழுதப்படுகின்றன . நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே . ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று நிரூபணமாகியுள்ளது . தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப் போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம்தான் . ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள...