நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்
(சென்ற ஆண்டு (2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. நடையிலும் கருத்திலும் பெரிதான மாற்றமெதையும் நான் இதில் செய்துவிடவில்லை. தகவல்கள் சற்று கூடியிருக்கின்றன.) 'நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களில் தனிமனித அறம்' என்ற தலைப்பில் நான் பேசவிருந்தாலும் அவரது நாவல்களை முன்வைத்தே என் கருத்துக்களை பதிவாக்க விரும்புகிறேன். இதற்கு தமிழ் நாவலின் தோற்றத்தையும், அது எவ்வாறு ஒரு இரட்டைத் தடத்தில் ஆரம்பம் முதல் வளர்ந்து வந்ததென்பதையும் காணவேண்டி இருக்கிறது. 1879இல் வேதநாயகம்பிள்ளை எழுதிய 'பிரதாபமுதலியார் சரித்திரம்', 1896இல் வெளிவந்த ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம்' இரண்டையும், இவற்றிற்கிடையே பதினேழாண்டுக் கால இடைவெளி இருக்கிறபோதும், இரட்டைத் தட ஆரம்பத்தின் உதாரணமாகக் கொள்ளலாமென நம்புகிறேன். வேதநாயகம்பிள்ளையின் நாவல் டொன் குவிசோட்டை அடியாகக்கொண்ட வீரப்பிரதாப, அற விழுமியங்களை உள்ளடக்கிய கதை கூறல் கலையை முதன்மைப்படுத்தியது எனவும், ராஜமையரின் எழுத்து கலையை...