எனக்குப் பிடித்த சிறுகதைகள்:4
பாலன் பிறப்பு -முல்லை யேசுதாசன்- அருளர் கள்ளுக்கு போய்ட்டு வாறாரெண்டால், வளிச்சலில் நல்ல மீன் பட்டிருக்கும். அதில்லெயெண்டால் அண்டைக்கு நேவியடிச்சு, வளிச்சல் தொழிலாளர் ஆரும் வலையை வெட்டிப்போட்டு வர, இவர் தேடிப்போய் வலைகளைக்கொண்டு வந்திருப்பார். அதுவுமில்லையெண்டால் கடலில நல்ல சண்டை நடந்திருக்கவேணும். இயக்கம் நல்ல அடி குடுத்திருக்கவேணும். கடலைப்பற்றியோ அல்லது கடல் தொழிலைப்பற்றியோ ஏதேனும் கேக்கவேணும் எண்டால் அந்தாளைக் கேட்டா அச்சொட்டா பதில் சொல்லும். காலமை விடிய மூண்டு மூண்டரைக்கு எழும்பி, மண்டானுக்க நிண்டு சூடவலை, அறக்கொட்டியான் போகிற குல்லாக்களை இறக்கிக் குடுத்து… வளிச்சல் வள்ளங்கள் வந்தால் மீன் வெட்டிக் குடுத்து… கருவாடு போட்டு… இப்ப அதுதான் அவரின்ர தொழில். எப்படியும் நூறு ரூபா உழைச்சுப் போடுவார். சில நாள் கறிமீனோட காலம் போகும். அண்டைக்கு ஆரோடையும் கதைக்கமாட்டார். ‘ஏனப்பா, இண்டைக்கொண்டும் வாய்க்கேல்ல. ஏதேனும் பாரன்’ எண்டு மனிசியிட்டை சரணடைஞ்சு போடுவார். அன்றைக்கு மனிசி என்ன பேசினாலும் கேட்பார். ‘ஏனப்பா, உந்த குடிக்கிற காசுக்கு ஏதேனும் நல்ல சாப்பாட்டை சாப்பிடலாம்தானே’...