ஊர்கள் அடங்கிய இரவுகள்
- தேவகாந்தன் மனிதகுலம் என்றைக்குமே யுத்தத்தை விரும்பியிருந்ததில்லை . ஆனாலும் யுத்தம் எப்போதும் நடந்தே வந்திருக்கிறது . நேபாம் குண்டுகளாலும் , கனரக வாகனங்களின் ஷெல் வீச்சுகளினாலும் , ஏவுகணைகளாலும் நடத்தப்படும் யுத்தங்களில்போலவே , இறந்த மிருகங்களின் எலும்புகளினாலும் , மரங்களில் செதுக்கியெடுத்த கதாயுதங்களாலும் நடந்த யுத்தங்களிலும் அழிவுகளே நிகழ்ந்தன . யுத்தத்தில் அழிவைத் தவிர வேறெதுவும் எஞ்சுவதில்லை . யுத்தத்தின் தோல்விகளில்போலவே வெற்றிகளிலும்கூட எஞ்சுவது அழிவுதான் . மனித குல வரலாறு முழுக்க பரந்துகிடக்கின்றன யுத்தங்கள் . நிலத்துக்காகவும் , பெண்ணுக்காகவும் , பொன்னுக்காகவும் ஆதி யுத்தங்கள் நடந்தனவெனில் , பொருளதிகாரத்துக்கானதாக இருக்கின்றன நவகால யுத்தங்கள் . பொருளதிகாரமென்ற ஒற்றைச் சொல்லில் அவற்றின் முழுக் காரணமும் தங்கியிருக்கிறது . ஆனால் எழுதப்பட்ட எந்த வரலாற்றின் நெடும்பரப்பிலும் இந்த உண்மை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது . வரலாற்று ...