எனக்குப் பிடித்த சிறுகதைகள் 2
இல்ஹாம் -மெலிஞ்சிமுத்தன் முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள் நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளே. ஒருநாள் நம்முன்னே எழும்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமானமாய் பதில் சொல்லியபடியே நகர்கிறோம். இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியே எட்டிப்பார்க்கிறேன். கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பி எதுவுமின்றி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் இல்ஹாம். ‘இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவன் எதற்காக என்னையே பின் தொடர்ந்தபடி இருக்கிறான்?’ என்ற கேள்வியுடனேயே வேலைக்கு வெளிக்கிடுகின்றேன். ‘இல்ஹாம், இல்ஹாம்’ என்று உதடுகள் உச்சரித்தபடியே இருக்கின்றன. நான் இல்ஹாமை சந்தித்த நாட்களைப்பற்றி பின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றது ஊர்காவற்றுறை என்ற எனது பிரதேசம். சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் இந்தியாவிலிருந்து கள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள் போன்றவை இத்துறையால் இறக்குமதி செய்யப்பட்டன என்றும், மிகப் பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளுக்கும் வியாபாரத்திற்குச் செல்பவர்களாக ...