கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ



.............................................................................
கடல் பயணங்கள் பற்றி தமிழில் விரிவாக எழுதப்பட்ட படைப்புக்கள் அரிதென்றே கூறிவிடலாம். அருளரின் 'லங்காராணி', 1977இல் தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்ந்தபோது கொழும்பிலிருந்து தப்பி வந்த அகதிகளின் கடல்பயணத்தை விபரிக்கின்றது.. தேவகாந்தனின் 'கலாபன் கதை'யின் கதைசொல்லி 1973 இல் கப்பலில் வேலை செய்யப்போவதில் தொடங்கி, இலங்கையில் இனப்படுகொலை காடையர்களால் மீண்டும் நடத்தப்படுகின்ற 1983வரை நிகழ்கின்றது.
கலாபன் மனோகரியைத் திருமணஞ் செய்து, முதல் குழந்தை பிறந்தவேளையில் குடும்ப நிலைமையின் காரணமாகக் கப்பலுக்கு வேலை செய்யப் போகின்றார். ஒரு சாதாரண தொழிலாளியாகப் போகும் கலாபன், அடுத்த பத்தாண்டுகளில் மூன்றாம் நிலை பொறியியலாளாகப் பதவி உயர்வுபெறும் வரை, அவரின் கப்பல் பயணங்களின் அனுபவத் தொகுப்பெனவும் இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம்.
அகன்று விரித்திருக்கும் கடல், பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை ஏற்றியிறக்குவதற்காய்ச் செல்லல், குடும்பத்தை பிரிந்திருப்பதால் பெண்ணுடல் மீது வரும் 'தவனம்', மனைவி/பிள்ளைகள் இருந்தாலும் அந்தக் குற்றவுணர்வு அவ்வளவு தீண்டாமல் வெவ்வேறுநாடுகளில் பெண்களுடனான சரசமென இந்த நாவல் விபரித்துக்கொண்டே செல்கின்றது. கடல் பயணங்கள் பற்றிய பயணம் என்றாலும், கடலை விட நிலப்பரப்புக்களும், அங்கு நிகழும் சம்பவங்களுமே அதிகம் விபரிக்கப்படுகின்றன.
கப்பல் எந்த நிலப்பரப்பைத் தொட்டாலும், உடனே குடியும், பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்லலுமே மறவாது நாவலில் வந்துவிடுவது சிலவேளைகளில் அலுப்பைத் தந்தாலும், அதை மீறி அறிமுகப்படுத்தும் மனிதர்களினூடு புதிய கதைகள் சொல்லப்படுவதால் இந்த நாவலை வாசிப்பது சுவாரசியமாக இருக்கின்றது.
கலாபன் இந்தக் கதையைச் சொல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்ததென இந்த நாவலில் குறிப்பிடுவது , அவர் பம்பாயில் தனது உடல்தேவைக்காய்ச் சந்திக்கும் ஷெரின் என்ற பெண்ணாகும். அடிக்கடி அந்தப் பெண்ணைச் சந்தித்து, அது உடல்தேவையைத்தாண்டி, காதலாக மாறப்போகின்றது என்ற அச்சம்வருகின்றபோது ஷெரினையும் கலாபன் உதறித்தள்ளுகின்றார்.
அதே போல ஜூலை 83 கலவரம் முடிந்து, கொழும்பில் நிற்கும் கப்பலொன்றில் 84களில் வேலை செய்யும்போது, கம்பஹாவில் இருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியோடு கலாபனோடு உறவு வருகின்றது. வெளிச்சூழல் பதற்றமாக இருக்கும்போதும் சுமித்ராவைத் தொடர்ந்து சந்திக்கும் கலாபனை, அந்தப் பெண்ணும், வயதுமுதிர்ந்த தாயாரும், இவரைத் தாக்க வரும் ஒரு சிங்களக்காடைக் கூட்டத்திலிருந்து காப்பாற்றுகின்ற இடம் மிகுந்த நெகிழ்வைத் தருவதாகும். தமிழனான தன்னைக் காப்பாற்றி அனுப்பியதன் மூலம் அவர்களின் உயிர்க்கே உத்தரவாதமிருக்காதென்று தெரிந்தும், அந்த இரு பெண்களும் மனிதாபிமானத்துக்காய் இதைச் செய்தார்கள் என நினைத்து கலாபன் விடுகின்ற கண்ணீர்த்துளிகள் மூலம் அந்த நிகழ்வுகள் அனைத்தும் புனிதமடைந்துவிடுகின்றன. அவ்வாறே கொலம்பியாவில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் 40 டொலர்களைக் கொடுத்து, அந்தப் பெண் மார்க்வெஸ்ஸைப் பற்றி இரவிரவாய்க் கதைக்க, அதைக் கேட்டபடி 'காரியம்'முடிக்காமல் வந்த நகைச்சுவையான பகுதியும் நாவலில் இருக்கிறது.
இவ்வாறு கப்பலில் வேலை செய்தபோதும், இடையிடையே மனைவி மனோகரியைச் சந்திக்கின்றவராகவும், அதன் நிமித்தம் மனோகரி 4 பிள்ளைகள் பெற்றுக் கொள்பவராகவும் இருக்கின்றார். எனினும் இரண்டு பேருக்குமிடையில் உறவில் இடைவெளி வருகின்றது. அலைச்சலுக்கும், பணத்துக்கான விருப்புக்கும் இடையில் காலங்காலமாய் இருந்து வருகின்ற முரணென இதை எடுத்துக்கொள்ளலாம்.
மனைவி இருந்தும், பிள்ளைகள் தொடர்ச்சியாகப் பிறந்தும், உடல் தவனத்தைத் தணிக்கமுடியாது கலாபன் இருப்பது விளங்கிக்கொள்வது அவ்வளவு கடினமல்ல. ஆனால் உடல் தவனத்தைத் தேடிச் செல்கின்ற பெண்கள் காதலுடன் அதைத் தர விரும்புகின்ற சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஏன் கலாபன் இவ்வளவு பதற்றம் கொள்கின்றார் என்பதுதான் புரியவில்லை. ஏனெனில் அவருக்குத் துணையிருந்தும், அது குறித்த அவ்வளவு குற்றவுணர்வும் இல்லாதுதான் 'உடல் தவன'த்துக்காய்ப் பெண்களைத் தேடிப்போகின்றவருக்கு, காமத்தைத் தருகின்ற பெண்கள் கூடவே காதலையும் தருகின்றபோது மறுக்கத் தேவையில்லை போல வாசிக்கும் நமக்குத் தோன்றுகின்றது.
எனினும், இந்த நாவல் வாசிக்கச் சுவாரசியமாவதற்கு 70/80களில் ஒரு தமிழ் மனம் எப்படிக் கடல்களில் பயணிக்கின்றது என்பதை விரித்துச் சொல்வதால் ஆகும். பிரபல்யம் வாய்ந்த சுயஸ்/பனாமாக் கால்வாய்களைக் கப்பல்கள் தாண்டுகின்ற விபரிப்புக்கள் தமிழ்ச்சூழலுக்கு முக்கியமானவை. பனாமாவைக் கால்வாயைக் கப்பல்கள் தாண்டுகின்ற தொழில்நுட்ப அறிவின் விஸ்தாரத்தை நேரில் கண்டவன் என்பதால் இந்தப் பகுதிகள் எனக்கு மிக உவப்பானவையாக இருக்கின்றது. 80களின் தொடக்கத்தில் அதிகமும் கம்யூனிச நாடுகளுக்குக் கலாபன் பயணிக்கின்ற வேளையில் அவர் ரூமேனியா, சீனாவின் மேற்குலகம் முன்வைத்த மதிப்பீடுகளுக்கு மாற்றாக வேறு பார்வைகளை அங்கே சந்திக்கும் மனிதர்களினூடாக முன்வைப்பதும் கவனிக்கவேண்டியது.
நாவல் 83களை அண்மைக்கின்றபோது, வேறு பரிணாமங்களை அடைகின்றது. கப்பலில் வேலை செய்கின்றவர்கள் குறைந்து போகின்றனர்., தொழில்நுட்பத்தால் மனிதவளம் வலுவிழக்கின்ற காலம் அது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலங்கையின் அரசியல் பதற்றங்களால் பல இளைஞர்கள் கப்பலில் வேலை செய்கின்றவர்களாக, கப்பல் வேலையைக் காரணங்காட்டி வேறு நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்கின்றதும் தொடங்குகின்றது. அந்தக் காலத்தை இறுதியில் சுட்டிக்காட்டியபடி நாவல் முடிந்தாலும், அதன் பிறகான காலங்களில் உக்கிரமான கதைகளைச் சொல்வதற்கான களம் ஈழத்தமிழர்களான நமக்கு விரிகின்றது.
கப்பல் பயணங்களில் தப்புதல், கப்பல் பயணங்களை வைத்து போராட்டங்களுக்கான நிதியைத் திரட்டல், கப்பல் படையை வளர்த்தல், படகுப் பயணங்களில் மரணித்தல், இறுதியில் கப்பல்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து கனடாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் அகதிகளாக பல மாதக்கணக்காய் கடலில் பயணித்து அடைதல் என எண்ணற்ற கதைகள் நம்மிடையே இன்னும் விரிவாகச் சொல்லப்படாமல் புதைந்திருக்கின்றன.
அந்தவகையில் 'லங்காராணி'க்குப் பிறகு கப்பல் பயணங்களை வேறொரு தளத்தில் முன்வைத்துக் கதை சொன்னதில் 'கலாபன் கதை' முக்கியமாகின்றது. தேவகாந்தன் எழுதிய அண்மைய நாவல்களில் முதன்மையாக வைக்கவேண்டிய ஒரு படைப்பு என்பேன். இங்குள்ள பத்திரிகையில் இது தொடராக வந்தபோது ஒரளவு தொடர்ச்சியாக வாசித்தவன் என்றபோதும், முழுநாவலாக வந்ததன்பிறகு வாசித்தபோதும் என் வாசிப்பில் முதன்மையாகக் 'கலாபன் கதை' இருக்கின்றது.
00

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி