லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனா




அதுவரை பக்கத்திலிருந்த நண்பன் முருகவேல் சிறிதுநேரத்திற்கு முன்னர்தான் டான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கவென உள்ளே எழுந்துபோனான்.  அவனுக்குமே அந்த உந்துதல் எழுந்தது.  பின் ஏதோவொரு சலிப்பில்  பேசாமல் இருந்துகொண்டான்.

பகலிலே அந்த இடத்தில் தோன்றியிருக்கக்கூடிய அவசங்கள்,  வெளிச்சம் படராது இருள் விழுந்த முற்றத்தில்  அமர்ந்திருந்த  அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவில்லை. உருவத்தை  இருட்டில் கரைத்துவிட்டு இருப்பதுபோல் ஓர் நிறைவு.

            அவன் வானெறிந்த நட்சத்திரங்களும், அதன் மேலலைந்த மேகங்களும் கவனமின்றிக் கண்டபடி இருந்தான். திடீரென கோவில் வளவு மரக்கூடலிலிருந்து  ஒரு சாக்குருவி  அலறியடித்துப் பறந்தது. அவனது உடம்பு லேசாக ஆடியது. கடந்த சில தினங்களாக  அவ்வாறுதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு ஆத்துமம் அந்தமாதிரித்தான் எந்தவொரு திடீர்ச் சந்தடியிலும் திடுக்காட்டம் அடையுமோ?

கீழ் வான் மூலையிருளினுள் சாக்குருவியின் கதறல் எழுந்து மறைய, சூழல் அவதானத்துக்கு வந்தது. சிறிதுநேரத்தில் தெருவில் நிலந்தீற்றிய  காலடிச் சத்தம் அவன் கேட்டான். அது மெலிந்து மெலிந்து  வந்து வேலிக்கு வெளியே ஓரிடத்தில் சடுதியாய் நிற்கச் செய்ததும் தெரிந்தது.

வேலியின் கீழ்ப் பகுதியிலுள்ள முட்கம்பி வரிகளுக்கு மேலாக  பக்கப்பாட்டில்  தகரங்கள் அடித்திருந்தன. போன மாரியின் கடும் காற்றுக்கு  அதில் நட்டிருந்த காட்டுக்கட்டை சரிந்து தகர இணைப்பு ஊடு விட்டிருந்த இடத்தில்தான் காலடி  அரவம்  அடங்கியிருந்தது.  அவனுக்கு எழுந்து உள்ளே போய்விடுகிற அவதி. ஆனாலும் இருளில் இன்னும் நம்பிக்கைவைத்து அவன் விநாடிகளை விழுங்கிக்கொண்டிருந்தான்.

அந்த அரவம் மறுபடி சத்தமாய் விரிந்தெழாததைக்கொண்டு ஆகிருதி இன்னுமே அந்த இடத்தில் நிலைத்திருப்பதை அவனால் உணரமுடிந்தது. அந்த உருவத்தின்  கண்கள்கூட  அந்த நீக்கலினூடே  தன்மேல் நிலைத்திருப்பதாக ஒரு கணம் தோன்றிற்று. கடந்த சில நாள்களின் பகல்கள் கவனத்தில் விழுத்தியிருந்த சில முகங்களை அவன் நினைவுக்குக் கொண்டுவர முயன்றபோது சில முகங்கள் கலவரத்துடன், சில முகங்கள் எரிச்சலுடன், இன்னும் சில எந்த உணர்வுமற்ற வெறுமையுடனென வரத்தான் செய்தன. ஆனால்  எந்த முகத்தை அந்த உருவத்தில் பொருத்தி அவன் அடையாளம் காண்பது? இல்லை, கண்டுதான் என்ன செய்துவிடப் போகிறான்? தன்னிருப்பை அங்கே ஒழித்து வைத்திருப்பவனால், ‘ஆரங்க நிக்கிற’தென உறுக்கிக் கேட்டுவிடவா முடியும்?

ஒரு எட்டு மணியின் முன்னிரவுக்  காலடிச் சத்தமும் பின் அதுகொண்ட மௌனமும் ஒருவரில் அந்தளவு அச்சத்தைக் கிளர்த்துவது எங்கேயும் சாத்தியமில்லை. முன்பு யுத்த காலத்தில் அதிலொரு திகில் இருந்திருக்கலாம்.  அவ்வாறு  இருந்ததை அந்யோன்யமாய்  அந்த வீடு வந்துசெல்லும் அக்கம்பக்கத்தவர் சிலர் அவனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சந்திராகூட சொல்லியிருக்கிறாள். அவளது அனுபவங்கள் அவர்களதைவிட இன்னும் பயங்கரமானவை.

அவ்வூர்க்காரன் இல்லாததால் அவனுக்கு அந்த அனுபவங்களில்லை.  அப்போது அந்த நாட்டவனாகக்கூட அவன் இல்லையே. ஆனால் என்ன பாதகம் அதனால் நேர்ந்துவிடக்கூடும்? அவன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறான்; மூன்று மாதங்களில் ஒரு மாதம் கழிந்த விசா அதில்  இருக்கிறது. ஆனாலும் அவை எதுவுமே இப்போது முக்கியமில்லையென நிலைமை மாறியிருக்கிறது. முக்கியம் அங்கே அவனது இருப்புப்பற்றியதாக மட்டுமே இருக்கிறது.

தன் பயணத்தில் இலங்கையின் வடபகுதியிலுள்ள அந்த சின்னக் கிராமத்திற்கு வருவதான எந்தத் திட்டமும் அவனிடத்தில் இருந்திருக்கவில்லை. அவன் மிகவும் வசதியாக யாழ் நகர எல்லைக்குள் ஒரு சிறிய வாடகை வீட்டில் தங்கி, திறமான கடையொன்றிலே சாப்பிட்டுக்கொண்டு கொழும்பென்றும் திருகோணமலையென்றும் மட்டக்கிளப்பென்றும் கிளிநொச்சியென்றும் அலைந்தபடி வசதியாகவும் சந்தோஷமாகவும்தான் கடந்த ஒரு மாதத்தைக் கடத்தினான். அரியாலையில் அண்ணன் வீட்டின் புதுப்பித்தல் வேலைகள் முடிந்துவிட்டால் திட்டமிட்டபடி ஏப்ரல் 19இல் அவன் நாடு திரும்பிவிடுவான்.

ஆனால் எதிர்பார்த்திராத நிலைமையொன்று  நாட்டிலே சடுதியில் வந்து விழுந்திருக்கிறது. அவன் கனடாவிலிருந்து ஜனவரி 2020இல் புறப்பட்டபோது  தொற்று நோய் டிசம்பர் 2019இலிருந்து சீனாவிலேதான் பரவத் துவங்கியிருந்தது. மரணங்கள் அங்கேதான் விழுந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று ஆசியாவே ஒரு பதகளிப்பில் இருக்கிறது. எல்லாமும் எல்லாரும் ஒரு முடக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும்படியான அவதியாக நிலைமை மாறியிருக்கிறது. அது அவனது சகல இயக்கங்களையும் குலைத்தது. ஒரு திட்டத்தில் தீவடங்கப் பரந்து திரிந்தவன் ஒரேயடியாக முடங்கிப்போனான். அத்தனை மனிதர்களைக் கொண்டிருந்த  நல்லூர் பூமி  உற்றம் சுற்;றமென யாருமில்லாததால் தரிசு பூமியாய் மாறத் தொடங்கிவிட்டது. அறிந்தவர் தெரிந்தவரில்லாத இடத்தில் அந்தப் புதிய நிலைமை தன்னை ஒரு வனாந்தரத்தில் தூக்கி வீசிவிட்டிருந்ததுபோல் உணர்ந்தான்.

உடனேயே கொழும்பு போய் அடுத்த விமானத்தைப் பிடித்து அவன் கனடா  சென்றுவிடலாம். ஆனால் அண்ணன் சொல்லிவிட்ட வேலையை முடிக்க இன்னும் குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்போலிருந்தது. அண்ணன் தந்த காசில் ரிக்கற் போட்டு வந்தவனுக்கு அது  அவசியமானது. அவன் அண்ணனிடம் பட்டுள்ள வேறு கடப்பாடுகளும்கூட இருந்தன. அவன் அண்ணனிடம் அபிப்பிராயம் கேட்டாவது மேல்நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உடனடியாக கனடாவுக்கு போனெடுத்தான். அண்ணிதான் பதிலளித்தாள். ‘ஒரு கிழமை முந்தி வந்திருக்கலாம். இப்ப இஞ்சயும் அது பரவத் துவங்கியிட்டுது, கணேஷ். ரொறன்ரோவில  முதல் சாவும் விழுந்திட்டுது. இலங்கை தீவாயிருக்கிறதால அங்க பாதுகாப்பாய் இருக்குமெண்டு எல்லாரும் கதைக்கினம்’ என்றாள் அண்ணி.

‘தீவாயிருக்கிற பாதுகாப்பு இனி இஞ்சயில்லை, அண்ணி. இத்தாலியிலயிருந்து வந்த ரூறிஸ்ரால இஞ்சயும் நோய் பரவத் துவங்கியிட்டுது.’

‘எதுக்கும் கவனமாயிரு. அண்ணை இப்பதான் கடைக்குப் போயிருக்கு, வந்தோடன எடுக்கச் சொல்லுறன்…’

அண்ணனும் போனெடுத்து அந்தப் பதிலையே சொன்னான். ‘அவசரப்படாத. எப்பிடியும் இஞ்ச இருக்கிறதவிட அங்க  பாதகாப்பாய்த்தான் இருக்குமெண்டு நினைக்கிறன். இஞ்ச பள்ளிக்குடமெல்லாம் லீவு விட்டிட்டாங்கள்; பக்டரியெல்லாம் பூட்டு. நான் இப்ப ஒரு கிழமையாய் வீட்டிலதான் நிக்கிறன். அண்ணி வீட்டிலயிருந்து வேலைசெய்யிறா. கொஞ்சம் பொறு, பாத்துச் செய்யலாம்.’

‘பாத்துச் செய்யலாமெண்டு அண்ணன் சொல்லியிட்டா, பாத்துத்தான் செய்யவேணும். வேற வழி இல்லை.’ அவன் காத்திருக்கத் தீர்மானித்து அன்றைய இரவைக் கழித்துவிட்டு காலையில் எழும்ப தகவல் தெரிந்தது, பள்ளிகளுக்கு மறு அறிவித்தல்வரை விடுமுறை விட்டிருப்பதாக. பல்கலைக் கழகங்களும் இரண்டு வாரங்களுக்குப் பூட்டப்படுவதாக யாரோ சொன்னார்கள். பலசரக்குக்  கடைகளில் கூடிய கூட்டமே ஓரவதியின் முன்னறிவிப்பாய் கண்களில் விழத் துவங்கிவிட்டது. சிலர் அது கண்டு கேலியாய்ச் சிரித்தனர்; பின்னர் அவர்களுமே கையுறை முகக் கவசங்கள் இல்லாமல்  ஒரு வெக்கறைச் சிரிப்போடு கடை வாசல்களில் மாவும் சீனியும் அரிசியும் பருப்பும்  வாங்க கியூவில் நின்றார்கள்.

அந்தப் பரபரப்பில் ஆழ்ந்துபோயிருக்கையில்  அதை அதிகரிக்கிறமாதிரி அன்று மாலை தகவல் படர்ந்தது, மறுநாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு அரச பஸ்கள் ஓடாவென. சரிதான், நிலைமை மெல்ல மெல்ல  இறுகுகிறதென அவன் எண்ணிக்கொண்டான். அன்று சரியாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை. அன்றைய  காலையில் செய்தியொன்று பரவியது, மாலை ஆறு மணியிலிருந்து திங்கள் காலைவரை நாடளாவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக. 

அவன் கதிகலங்கிப்போனான். அவன் வாடகைக்கெடுத்த வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்தான். ஆளரவம் ஒடுங்கப்போகும் ஊரில் தனிமைக் குகையாக வீடு மாறிவிடுமென்றாலும் சமாளித்துக்கொள்ளலாம். சாப்பாட்டிற்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் கண்ட பழக்கத்தில் இரண்டு வேளைச் சாப்பாட்டிற்கு அருள் சுரக்கும் முகங்களேதாவது தென்படுகின்றதாவென கணேஷானந்தமூர்த்தி அலையாத தெருவில்லை. விபூதி நிறைந்த நெற்றியும் அருள் சுரந்த முகமுமாயிருந்த இருவரைக் கேட்டபோது அவர்கள் பதிலைச் சத்தமாய்ச் சிரித்தார்கள்.  இல்லையென்ற மறுதலிப்பையும் விட மிகக் கொடுமையாகவிருந்தது அவர்களின் அந்தச் சிரிப்பு.

அந்த நிலைமையில்தான்  தனியார் பஸ்கள் கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், ஊரடங்கு விழுவதற்கு இரண்டு மணத்தியாலங்களுக்கு முன்னருமாக பழைய நண்பனொருவனை நல்லூர் கந்தசாமி கோவிலெதிரில் சந்திக்கிற அதிர்ஷ்டம் அவனுக்கு நேர்ந்தது. அவன் அந்தவூர்க்காரனில்லை. அவனும் பஸ்ஸெடுத்துத்தான் வீடு போகவேண்டியவனாய் இருந்தான். அந்த அவசரத்துள்ளும் அவனைக் கண்டு நண்பன் நின்றான்.

கணேஷானந்தமூர்த்திக்கு கண்கலங்கி வந்தது. அவன் தன் அவலம் சொல்லி நண்பனிடமாயினும் அபயம் கேட்கிறான். அப்படியொரு நிலைமை அவனுக்கு எப்போது வாய்த்திருந்தது? நண்பன் இதழ்களால் சிரித்தான்.  பிறகு அவனைத் தன்  வீட்டில் தங்கலாமெனக் கூறி பாய்க்கை எடுத்துவரச் சொன்னான்.

மனிதர்களைவிட்டு மனிதர்களை விலகியிருக்கச் சொன்ன காலமாயிருந்தது அது. யுத்தகாலத்தைவிடவுமே கொடுமையான காலம். இருந்தும்  தம் பழைய நட்பைப் பாராட்டி ஒருவரை வீட்டில் வைத்து யாராவது ஆதரிப்பாரென அவனால் நம்பக்கூட முடியவில்லை. வீட்டில் அவனை தன் மனைவிக்கு நண்பன் அறிமுகப்படுத்தியபோது அவளும் அவன்போலவே இன்முறுவல் காட்டினாள்.

ஆயினும் அங்கேயும் அவதியும் பயமும் நேர்வது சூழ்நிலைக் கனதியின் விளைவாகிவிட்டது.

அந்தளவு அவலம் படாமல் அவற்றையெல்லாம் தாண்டிச்செல்ல அவனால் முடிந்திருக்கும். கொஞ்சம்  சூட்சுமமாக அந்த நிலைமையை அவன் அணுகியிருக்கவேண்டும். அண்ணனின் பதிலுக்கு காத்திராமல் பயணத் திகதியை மாற்றிக்கொண்டு அவன் கொழும்பு சென்று விமானம் எடுத்திருந்தால் அவன் இப்போது கனடாவில் இருந்துகொண்டிருப்பான். அயலவன் எட்டிப்பார்ப்பானென அஞ்சவேண்டியதில்லை ; காலடிச் சத்தம் கேட்கிறதென கலங்கவேண்டியதில்லை. அங்கே நடைமுறைகளும், அது மாறுகையிலான விளைவுகளும் வித்தியாசமானவை.

இனி அனுபவிக்க வேண்டியதுதான்; ஓடிவிட முடியாது.  படுக்க பாய் இருக்கிறது; இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போகாது; சமாளிக்க வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டான். இருந்தும் மேலே பிரச்னை இருக்கிறது. ஓடிவிட முடியாது என்கிறபோதுதானே தரித்திருப்பதில் அந்தரம் பிறக்கிறது. ஆயினும் தரித்திருக்கும் அந்தரம் மட்டுமெனில் அவன் தாங்குவான். இது அதுவல்ல. அதுபோன்ற எதுவும்கூட அல்ல. அது அவனது அடையாளம் சார்ந்தது. அது முதலாம் நாளில் இரண்டாம் நாளிலென மெல்லமெல்லமாகத்தான் விஸ்வரூபமெடுத்தது. ஆனாலும் எடுத்துவிட்டது.

யுத்த காலத்தின் பின் அங்கே வந்த ஒவ்வொரு சமயத்திலும் அந்த நாட்டில் அவன் வெளிநாட்டுப் பிரஜையென்கிற அத்தனை பெருமிதங்களையும் சுமந்தபடி அலைந்து திரிந்தவன். கனடிய பாஸ்போர்ட் அவனது அடையாளம் மட்டுமில்லை, அது அங்கே எழுதப்படாத ஓர் அதிகாரமும் தந்தது. ஆனால் இன்று ஊரவனுக்குள்ள மதிப்பு அந்த கனடிய பாஸ்போர்ட்காரனுக்கு இருக்கவில்லை. அவன் அங்கே ஏன் வந்தானென்று சிலராவது நினைக்கும், எரிச்சல்படும் நிலைமையிலேயே இருந்துகொண்டிருக்கிறான். அது அவனுக்கு பயத்தை அளிக்கிறது. திடீர்ச் சத்தங்களில், சலனங்களில் அவனுக்கு திடுக்காட்டம் பிறக்கிறது. ‘நான் சுவிஸிலிருந்து வந்த மதபோதகரின் அரியாலைக் கூட்டத்திற்குப் போகவில்லை’யென அலறிவிடுகிற அந்தரம்  சிலவேளை கொண்டுவிடுகிறான். நித்திரையில் அவன் வாய்பிதற்றுவதாக அவனது நண்பன் சொன்னான். ஒருவேளை அந்த வார்த்தைகளைக்கூட அவன் பிதற்றியிருக்க முடியும். அவன் தானாக இல்லாத சீணம் அடைந்தாகிவிட்டது. 

அதனால்தான் தெருவிலெழுந்த அந்த தீற்றல் சத்தமும், அது சடுதியில்  ஓரிடத்திலே தங்கிக்கொண்டதும் அவனை அந்தரித்துப்போக வைத்தன. அவனை  இருட்டினுள்ளும் ஊடுருவி நோக்கியதாய்த் தோன்றிய அந்தக் கண்களினுள்ளே திகைந்து திகைந்து வெளிக் கிளம்பிக்கொண்டிருந்த ஒற்றை உணர்வான வெறுப்பினையும்  அவன் கண்டான். அந்த வெறுப்பில், நீயேன் என்னூரில் தங்கியுள்ளாய் என்பதான ஒரு கேள்வியும்கூட தொக்கிநிற்பதாய்த் தெரிந்தது. இனி அதுவே மெல்ல மெல்ல ஒரு கோபத்தின் உக்கிரமாய் மாறி அனல் பிறப்பிக்கும். பொறி சிதறிய அந்த அனலில் அவன் தேகம் வெந்தழியும்.

அதுவொரு அபூர்வமான, மொத்த ஊருமே அவதி கொண்டிருக்கிற தருணம். அதுபோல் அந்த நாடும் ஒரு அவலத்தை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உலகமே அவ்வனுபவத்தில் திணறிக்கொண்டு இருக்கிறது. அவனறிந்து உலக வரலாற்றில் அதுபோல் பதினான்காம் நூற்றாண்டிலே ‘பிளாக் டெத்’ என்ற பற்றீரியாத் தாக்குதல் நோய் இத்தாலியில் பரந்தது. பல லட்சம் மக்களைக் காவு கொண்டது. ‘சில்க் றூட்’ எனவழைக்கப்பட்ட பழைய வர்த்தக வழி ஒன்றினூடாக அது மொங்கோலியாவிலிருந்து பரந்ததாக  வரலாறு சொல்கிறது. இதுவோ சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவியது. ஆனால் அதிவேகமாகப் பரவியது. பரவப்போகிறது என எண்ணுவதன் முன்னால் பல தேசங்களின் வாசல் கடந்துவிட்டிருந்த வைரஸ் நோயது.

ஆரம்பத்தில் சீனாவில் நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்றார்கள்.  அப்போதுதான் அவன் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு விமானமேறினான். இந்தியாவில் அந்த நோயை முதன்முதலில் சந்தித்த மாநிலம் கேரளாவாக இருந்தது. ஸ்பெயினிலே சாவுகள் விழுகின்றதாய்த் தகவல்கள் வெளிவந்தபோதே கேரளாவிலும் மரணம் தொடங்கிவிட்டதை சன் தொலைக்காட்சிச் செய்தி அறிவித்தது. கேரளா எங்கே, சென்னை எங்கே? அவனுக்கு அச்சம்கொள்ளவேண்டி இருக்கவில்லை.  அவன் அங்கிருந்து தப்பிச் செல்லும்  உணர்வு கெழும சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானமேறினான்.  

தடுப்பு மருந்து மட்டுமில்லை, அந்த நோயைக் குணமாக்கும் மருந்துமே  இருக்கவில்லையென்ற பீதி மக்களை ஒரு திரையாய் மூடியிருந்தது. யாரையும் அணுகாதே, யார் தொட்ட எதையுமே தொடாதே, மொத்தத்தில் வீட்டைவிட்டு வெளியே வராதே என தகவலூடகங்கள் மணிக்கு மணி அறிவிப்புகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. பயங்களின் கதைகள் நிஜங்களென சம்பவங்கள் ருசுப்பித்துக்கொண்டிருந்தன. அந்தளவில் உலகின் சில லட்சம் மக்களை அந்நோய் காவுகொண்டிருந்தது.

இலங்கையின் தீவான நிலைமையின் பாதுகாப்புக் கவசம் எப்படிச் சிதறியது? எல்லோருக்கும் ஆச்சரியம். இத்தாலிய உல்லாசப் பயணிகள் காரணமென சில அவதானங்கள் தெரிவித்தன. சுவிஸ் மதபோதகரின் பொதுமக்களுடனான அரியாலைச் சந்திப்பு இன்னொரு காரணமென வேறுசில அவதானிப்புகள் அறிவித்தன. மொத்தத்தில் தீவடங்கலும் நோய்த் தொற்றின் அடையாளங்கள். ஆஸ்பத்திரிகள் நிறைந்தன. நோய்த் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பிலிரந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். வீடுகள் அடங்கிக் கிடக்க, நாட்டின் வெளியில் ஒரே அல்லோலகல்லோலம். அதனால் ஒற்றை முடிவாக ‘வெளியிலிருந்து வந்திருக்கும் உல்லாசப் பயணிகள் நோய்க் காவிகள்’ என்ற பொதுஜன அபிப்பிராயம்   உருவாயிற்று. அது ஒரு பூதத்தினைப்போல மறைந்து திரிந்துகொண்டிருந்தது. நோய்க்காகக்கூட அல்ல, அந்த பூதத்திற்காகவே அனைவரும் அஞ்சிச் செத்தார்கள்.

அந்த அந்தரம் ஒருவரிலிருந்து ஒருவரை ஒதுங்கிப்போகச் செய்துகொண்டிருந்தது. ஒதுங்குவது எரிச்சலைத் தந்தது. அது இறுகியிறுகி கோபமாக வெடித்தது. என்றாற்போல் என்ன செய்துவிட முடியும்? அது உள்ளடங்கி கொதிநிலையடைந்தது. அந்த அவதிக்குள் அவனடங்கியது துரதிர்ஷ்டம். ஆனால் அவனுக்கு அது தெரியும். அதனால்தான் ஆமையைப்போல ஐம்பொறிகளும் அடக்கி அந்த வீட்டுக்குள் தன்னிருப்பை அவன் மறைத்திருந்தான்.

செய்தி அறிக்கை முடிந்திருக்கவேண்டும். திறந்திருந்த கதவினூடு கதிரையில் அமர்ந்திருந்த தன் மனைவியோடு நண்பன் குசுகுசுத்துக்கொண்டு நின்றிருப்பது தெரிந்தது. அந்தக் காட்சியும் மனத்தை அதைத்துக்கொண்டுதான்  உள்ளிறங்கி பாரமாகியது.

அவன் அங்கு வந்த அந்த பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து அன்றைய  மார்ச் 26ஆம் தேதிவரை அவன்மேலான அவர்களின் அன்பு, நட்பு, அபிமானம் அனைத்தையும் கடந்த ஓர் இரகசியத்தின் திருகல் அங்கே எழுந்துகொண்டிருந்ததை அவன் கண்டான்.

நண்பனின் மனைவி மருதிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். வேலைசெய்ய முடியாமல், நடக்கவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தாள். சட்டி பானை கழுவி, வீடு முற்றம் கூட்டி, காய் கறி நறுக்கி, தேங்காய் துருவியென நண்பன் முருகவேல் எல்லாம் செய்துகொடுத்தான். கல்யாணமான நாளிலிருந்து தனக்கு அப்படி நேர்ந்ததில்லையென சொல்லிக்கொண்டு அவன் எல்லாம் செய்தபோது இவன் முன்னாலேதான் இருந்திருந்தான். இவனுக்குச் சொல்ல இருந்தது; ஆனால் வார்த்தைகள் பிறக்கவில்லை. பிறகு மருதி பிரயாசையோடு எழுந்துவந்து கறியை மட்டும் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடக்கூடச் செய்யாமல் போய்ப் படுத்துக்கொண்டாள். எதிர்பாராதவிதமாக அவனது பார்வையை எதிர்ப்படுகிற சமயங்களில் வெறுப்பாய் உமிழ்ந்து தள்ளினாள். அது தன்னில் விழுந்திருந்த நோயின் மேலா அல்லது அவனின் மேலாவென  யாருக்கும் சந்தேகம் வரலாம். ஆனால் கணேஷானந்தமூர்த்திக்கு வரவில்லை.

இருபதாம் தேதி மாலையில் சொல்லாமல் கொள்ளாமல் அவனை  முருகவேல் கூட்டிச் சென்றவேளையில் அங்குள்ள வசதியீனங்களின் சிறிய சிந்தனையுமின்றி சிரித்தபடி தன்னை வரவேற்றவளை கடந்த இரண்டு நாள் காய்ச்சலா அந்த வெறுமையுள் விழுத்தியது? இல்லை. அந்தக் காய்ச்சலுக்கு அவளுக்கு ஒரு காரணத்தின் அனுமானமுண்டு. அவள் கேட்கிற பேச்சுக்களும் செய்திகளும் அதைத்தவிர வேறொரு காரணத்தை நினைக்க அவளைச் செய்வனவாயில்லை. அது அவளை அச்சப்படுத்துகிறது; கலவரப்படுத்துகிறது; அவசரப்பட்டு வீட்டில் ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு இடம் கொடுத்துவிட்ட வருத்தத்தை எழவைக்கிறது. அவளது நிலைமை அவளைவிடவுமே அவனை அதிகம் பாதித்ததென்பது யாருக்குத் தெரியும்?

அப்படித்தான் அவன் அங்கே வந்த மூன்றாம் நாள் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த எதிர்வீட்டு சுந்தரத்திற்கு காய்ச்சல் பிடித்தபோதும் அவனே ஏங்கினான். மறுநாள் படுக்கையில் அவன் விழுந்தபோது துடித்துப்போனான். ‘என்னிலிருந்தா…? இருக்குமா…? கடவுளே….!’ அவனது அந்தராத்மா கூவியது. தான் என்பதைவிட தன்னாலென்ற தாக்குதல் அதிகம் கொண்டான் அவன்.

நல்லவேளையாக மூன்றாம் நாள் காய்ச்சல் சுகமாகி மாலையில் குளித்துவிட்டு சுந்தரம் கோயிலுக்கு போய்விட்டு வந்தான். பின்னர்தான் கணேஷானந்தமூர்த்திக்கு தன் உயிரவலம் தணிந்தது.

அன்று மாலை சுந்தரம் அங்கே வருவதன் முன்னால் அவன் சிதறிப்போய் இருந்தவேளை நண்பன் ரகசியம்போல் காதின் கிட்டக் குனிந்து சொன்னான்: ‘நீ என்னத்துக்காண்டி உப்பிடி இருக்கிறாயெண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேணுமெண்டா சொல்லு எடுத்துத் தாறன். இஞ்ச ரண்டொரு வீட்டில அது விக்கினம்.’

அதுவே காரணமில்லாதபோதும் அவன் சொன்னான்: ‘வீட்டில விக்கிறதெண்டா எனக்கு வேண்டாம். என்னென்ன கலந்திருப்பாங்களோ? அதுவேற பிரச்சினையாய் வந்திடப்போகுது இந்த நேரத்தில.’

‘அப்ப… தெளிவாயிரு. எல்லாருக்கும் பொதுவில வந்த கஷ்ரம்தான. உப்பிடி யோசிச்சுக்கொண்டிருந்து என்ன செய்யிறது?’

‘யோசிக்காமல் என்ன செய்யிறது? சிறீலங்காவுக்கு வாற பிளைட் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லண்டன், கனடா, துபாயெண்டு சில இடங்களுக்குத்தான் இப்ப இஞ்சயிருந்து பிளைற்  ஓடுது. அதையும் கெதியாய் நிப்பாட்டியிடுவாங்கள்…’

‘வாற இருபத்தொண்டிலயிருந்து அதுவும் ஓடாது… ரீவியில சொல்லிச்சுது’ என்றாள் எதிரிலிருந்த மருதி. பிறகு, ‘இஞ்ச இருக்கிறது கொஞ்சம் வசதிக்குறைவாய்த்தான் உங்களுக்கு இருக்குமெண்டு எங்களுக்குத் தெரியும்….’ என்று அவள் இழுக்க, அவன் இடைமறித்தான். ‘ஐயோ… வசதி ஒரு பிரச்சினையே இல்லை. நிர்ப்பந்தமாய் ஒரு இடத்தில இருக்கிறதுதான் பிரச்சினை. எண்டாலும் சமாளிக்கத்தான வேணும். சமாளிப்பம்.’

‘நீங்கள் ஒதுங்கியொதுங்கி இராமல் வாற ஆக்களோட கதைச்சு சிரிச்சுப் பேசிக்கொண்டிருந்தா நேரம் போறது தெரியா. எல்லாச் சனலிலயும் இப்ப படம் போடுறான்; படம் பாருங்கோ. எப்பிடியும் மார்ச் முடியிற அளவிலயெண்டாலும் ஊரடங்கை எடுப்பானெண்டுதான் சனம் கதைக்கிது.’

அவன் ஒதுங்கியொதுங்கிப் போவதின் காரணம் அவளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? நண்பன் சொன்னது சரிதான். இடரென்னவோ எல்லார்க்கும் பொதுவில் வந்ததுபோல்தான் தோன்றுகிறது. ஆனால் அவனுக்கு மட்டும் வந்ததுமாதிரியல்லவா அவனை ஆடிப்போக வைத்துக்கொண்டிருக்கிறது. இன்ன காரணத்தால்தான் தனக்கு அந்த அவதியென்று நண்பனுக்குக்கூட அவனால் சொல்லமுடியாமலிருக்கிறதே!  அது எவ்வளவு பெரிய அவதி. எனக்கு வந்துவிடுமென்று அல்ல, உனக்கு வந்துவிடும், உன் மனைவிக்கு வந்துவிடும், இங்கே வந்துபோய்க்கொண்டு இருக்கிறவர்களுக்கு வந்துவிடுமென்றுதானே நான் கலங்கிக்கொண்டிருக்கிறேன் என்றால் நண்பனே அப்போது என்ன நினைப்பானோ?

எல்லாம் எண்ண அவனுக்கு வேலிக்கு வெளியே ஆள் நின்றிருப்பதான எண்ணம்கூட மறந்துபோயிற்று. அவன்  நினைவுகளை வேறு திசையில் திருப்பத் தீர்மானித்தான். தீர்மானிக்க மட்டும்தான் அவனால் முடியும்; மற்றும்படி நினைவைத் திருப்புவது வேறு யாரோ என்பதுபோல் நினைவு திரும்ப பெரும் சிரமம்பட்டது.

வந்த புதிதில் அவ்வப்போது தலைகாட்டிய சந்திராவின் நினைவுகூட அப்போது தூரமாகிப் போயிருந்தது. முதல்நாளில் கண்டு, இரண்டாம் நாளில் பேசி, மூன்றாம் நாளில் கதையின்றிச் சிரித்த சிரிப்பில் இதயம் திறந்தவள் அவள். ஒரு தொடர்பு, காலமெல்லாம் நீளுமென்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும் மானசீகமாக தன்னை அவள் விரும்பியிருந்ததை அவன் கண்டிருந்தான். அவனது வெளிநாட்டு பாஸ்போர்ட் கண்டல்ல, அவனைக் கண்டதில் தன் உள்ளம் கிறங்கியவள் அவள். தான் உழைப்பாளியானதால் தன் வாழ்வுக்கு ஆதாரமும் நாடவேண்டி இல்லாதவள். அவளது அந்த விருப்பத்தில்  எந்த எதிர்பார்ப்பும் இருந்திருக்கவில்லை. அவனைமட்டுமே அவாவிய நாட்டமது. அது காதலில்லைதான். ஆனாலும் பரிபூரணமான சமர்ப்பணம். நீண்டகாலமாய் மனம் சுமக்கும் வெற்றிடத்தை அவளால் நிறைக்க முடியுமெனில், அந்தச் சமர்ப்பணமே அதற்கான அவளது முதல்  தகுதியாகவிருக்கும். அவனுக்கு அது தெரிந்திருந்தது. ஆனாலும் நெருங்காதிருந்தான். எந்தவிதமான ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த இடறலுமில்லை. நிகழ்விலிருந்த காலமே நினைவின் சுவட்டை பிரயாசையின்றி அழித்துக்கொண்டிருந்தது. டான் மற்றும் வசந்தம் தொலைக்காட்சிச் செய்திகள் அதற்குக் கூடுதலான ஒத்தாசை புரிந்தன. அதனால் அவன் விழிக்கும் ஒவ்வொரு விடியலிலும் அவளது நினைவு சாணாக, முழமாக, பாகமாக எட்டவாய்ச் சென்றுகொண்டிருந்தது.

தெருவிலே மோட்டார் சைக்கிளொன்று  உறுமிக் கேட்டது. கணேஷானந்தமூர்த்தி அவசரமாக எழுந்து வேலியைச் சமீபித்தான். சைக்கிளின் வெளிச்சம் தெருவெங்கும் விளாசியடித்தது. வேலி மேலால் எட்டிப்பார்த்தான். யார் நின்ற தடயமுமில்லை.

மறுபடி கதிரையில் வந்தமர்ந்தவன் நண்பன் சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருப்பது கண்டான். அவன் வர இனி நேரமெடுக்கும். கணேஷானந்தமூர்த்தி சந்திரா அங்கு வந்த அந்த இரண்டாம் நாளை அவதியின்றி நினைத்துப் பார்த்தான்.   

(வளரும்)


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி