கனடிய இலக்கியத்தின் வரைபடத்தில் கனடிய நாவல்கள் - தேவகாந்தன்




தனது பல்வேறு நாட்டினங்களது இலக்கிய முயற்சிகளுக்கும் களமாக இருக்கிற ஒரு தேசம் கனடாவென்றே  தோன்றுகிறது. அதன் பல்லின, பல் கலாச்சார கொள்கைக் கூறுகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு மேலேதான் வலிவுபெறத் தொடங்கினவென்றாலும், அது சார்ந்த அதன் இன்றைய இலக்கிய வளம்  மிகுந்த கூர்மை பெற்றிருக்கிறது.

கல்விமுறை சார் ஆங்கில இலக்கியப் பரிச்சயமுள்ள பலருக்கு அதன் இன்றைய நவீன இலக்கியத்தின் வீச்சு காணப்படாதது. ஆங்கில  இலக்கியமென்று பொதுப்படச் சொல்வதனாலேயே அதன் தனித்துவமும் காணாமல் போய்விடுகிறது. அதனால் கனடிய ஆங்கில இலக்கியமென்ற பதச் சேர்க்கை அதன் தனித்துவத்தை நிலைநிறுத்துவதாய் இருக்கமுடியும்.

கனடாவின் இலக்கிய வளத்தினுக்கு   ஆசியா ஆபிரிக்கா தென்னமெரிக்கா மற்றும் ஐரோப்பாவென பல கண்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்த மக்களிடையே தோன்றிய படைப்பாளிகளின் பங்களிப்புகள் கனடிய இலக்கியத்தின் இன்றைய உன்னதத்தின் பிரதம காரணங்களாக இருக்கின்றன.

கனடிய ஆங்கில மொழி, கனடிய பிரெஞ்சு மொழி, கனடிய காலிக் (Canadian Gaelic) மொழியில் மட்டுமன்றி கனடிய பூர்வீக மக்களின் மொழிகளிலும் இன்று கனடாவில் இலக்கியம் புனையப்படுகின்றது.  அதில் வீறுகொண்டிருக்கும் இலக்கிய வகையினம் நாவலாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவைபற்றிய மேலெழுந்தவாரியான சில தகவல்களைக் கூறி கனடிய நாவல் இலக்கியத்தில் உச்சந்தொடும் சில படைப்புக்களை அறிமுகப்படுத்துவதே ‘கனடிய ஆங்கில இலக்கியத்தின் வரைபடத்தில் கனடிய நாவல்கள்’ என்ற  தலைப்பிலான இந்த இடுகையின் நோக்கம். கனடிய ஆங்கில நாவல்களெனப்படும்போது, கனடியர்களின் ஆங்கிலம் பிரெஞ்சு காலிக் மற்றும் பூர்வீக மக்களின் மொழிகளிலான  படைப்புகளையும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களினூடாக உள்வாங்கியே இப்பகுதி விரிவு பெறுகிறது.

கனடிய இலக்கிய வரைபடத்தினை உற்றுநோக்கின், அதன் எழுத்தினுக்கு சற்றொப்ப இருநூறாண்டுக் கால வரலாறிருப்பது தெரியவரும். அது 1832இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஆங்கிலச் சகோதரிகள் சுசானா மூடி (Susanna Moodie) மற்றும் கதரீன் பர்   ட்ரெயில் (Catherine Parr Trail )  ஆகியோரின் படைப்புக்களிலிருந்து தொடங்குவதாகக் கூறுவது மரபு . இச் சகோதரிகளின், குறிப்பாக கதரீன் பர் டரெயிலின் படைப்புகளான The Backwood Canada (1836), Canadian Crusoes (1852), Life in the Clearing (1853) ஆகியவை, கனடிய இலக்கியத்திற்கு முன்னோடிகள் என்பார்கள் அவர்கள்.

அது குடியேற்ற நாடொன்றின் இலக்கியமாகவே இருக்கமுடியுமென்றும், கனடாவெனும் தேசத்தின் உருவாக்கம் நிகழ்ந்த ஜுலை 01, 1867இன் பின்னராகவே கனடிய இலக்கியத்தின் எல்லைக் கோட்டை வரையறை செய்வது தர்க்கரீதியானது எனவும் இன்றைய விமர்சகர்கள் மரபுவழியான அக்கூற்றை  நிராகரிப்பார்கள். அந்த நியாயபூர்வமான எல்லைக்கோட்டை ஒப்புக்கொள்ளும் அதேவேளை அங்கிருந்தே கனடிய இலக்கியத்தின் புத்தாக்கம் உருவாகிற்றென்று கொள்வதிலும் மாறுபட்ட கருத்துக் கிடையாது.

சகல தேசங்களின் இலக்கிய உருவாக்கம் போல்தான் கனடாவின் இலக்கியத் தோற்றமும் ஆரம்பத்தில் கவிதை முயற்சியாகவே இருந்திருக்கிறது. அதிலிருந்துதான் கனடாவின் இலக்கியச் சாதனைகளெனக் கருதப்படக்கூடிய உரைநடையின் நவீன இலக்கிய வடிவங்களான நாவல் மற்றும் சிறுகதைகள் உருவெடுக்கின்றன.

இந்தவகையில் முக்கியமான ஆரம்ப கால எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுபவர் எல்.எம்.மொன்ற்கோமெரி. Anne of Green Gables (1908) என்ற அவரது நாவல் மிகப் பிரபலம் வாய்ந்தது. ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் இன்றும் பதிப்பில் இருப்பது. 50 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் 36 மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டும் இருக்கிறது. லூயிசா மே அல்கொட்டின் Little Women (முதல் பாகம் 1868; இரண்டாம் பாகம் 1869), லூயி கரோலின் Alice in Wonderland  (1865) ஆகிய சிறுவர் நூல்களுக்கு அது உந்துவிசை அளித்திருக்கலாமெனக் கருதுகிறார்கள் விமர்சகர்கள். இந் நூலுமே இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை சிறுவர் நூலாகவே கணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு தொடங்கிய கனடிய ஆங்கில இலக்கியமானது அமெரிக்கா இங்கிலாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆங்கில இலக்கியத்திலிருந்து தனித்துவமான வரையறையினை நீண்டகாலமாக பட்டுக்கொள்ளவில்லை. பொத்தம்பொதுவில் ஆங்கில இலக்கியமென்றே கருதப்பட்டிருந்தது.

ஆனால் 1940இல் Clara Thomson   தனது முதுகலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வுத் தலைப்பாக ‘கனடிய நவீன இலக்கியத்தைத் தேர்ந்துகொண்ட பொழுது கனடிய இலக்கியத்தின் தனித் தன்மைகள் துலக்கமாகத்  தம்மை இனங்காட்டிக்கொண்டன. அதிலிருந்து கனடிய இலக்கியமென்பது இன்னும் கூடுதலான அழுத்தம் பெற்று தனக்கான தனி அடையாளத்தைப் பெற்றுக்கொண்டது.

கனடாவானது பல்கலாச்சார பல்லின நாடாக இருந்தவகையில் அவ்வவ் இனங்களின்  வாழ்முறைகள், தம் முந்தைய நாட்டின் அனுபவங்கள், தமது மாந்திரீக நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள் யாவும்  கனடாவில் இலக்கியமேறியபொழுது அது மிகுந்த  அர்த்தமும் அழுத்தமும் கொண்டனவாய் வெகு கவனம் பெற்றுப்போயின. கனடாவை பூர்விகமாய்க் கொண்டவர்களிடத்திலும் ‘நிலத்தினைப் பேசுதல்’ என்ற இயக்கமாகவே அது அப்போது மாறியிருந்தது.

அவ்வாறு தோன்றிய நாவல்களுள் ஒன்றாக லியனார்ட்  கொஹென் (Leonard Cohen) எழுதிய Beautiful Losers (1966) ஐச் சொல்லமுடியும். இன்னொரு நாவல் ஃபார்லெ மொவட்(Farley Mowat)டின் Never Cry Wolf (1963) ஆகும்.  உலகமளாவி வாசக கவனம் பெற்ற நாவல் இது. இவர்களோடு றொபேர்ட்சன் டேவிஸ், மோர்டிகய் றிச்லேர்ஸ், மார்கரட் அற்வுட், மார்க்கரட் லோறன்ஸ், மைக்கல் ஒண்டாற்ஜி, கப்ரியேல் ராய் மற்றும் அலிஸ் மொன்றோ ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கனடிய நாவலாசிரியர்களில் பலர் கொமன்வெல்த் எழுத்தாளர் பரிசு, புலிற்சர் பரிசு, மான் புக்கர் பரிசு உட்பட பற்பல  பரிசுகளையும் விருதுகளையும் பெற்று கனடிய இலக்கியத்திற்கான உன்னதமான இடமொன்றை உலகளவில் ஏற்படுத்தினார்கள். 2013இல் அலிஸ் மொன்றோவுக்குக் கிடைத்த அவரது சிறுகதைகளுக்கான நோபல் பரிசானது அந்த இடத்தை மேலும் உயர்த்தியே நிற்கிறது.

இவ்வாறு கனடிய இலக்கியத்திற்கு குறிப்பிட்டளவு பங்களிப்புச் செய்த நாவல்களில் சிலவற்றையேனும் மீள வாசிக்கிற விருப்பம் இப்போது என்னுள் எழுந்திருக்கிறது. தமிழிலேயே இன்னும் வாசிக்கவேண்டிய நூல்கள் பட்டியலாய் நீண்டுள்ள இந்தநேரத்தில் இந்த விருப்பம் கொஞ்சம் அதிகமானதுதான். என்றாலும் நேரம் அனுமதியளித்தால்  அதைச் செய்யவே செய்வேன்.  அப்போது என் விமர்சனக் குறிப்புக்களையும், அபிப்பிராயங்களையும் நிச்சயம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்வேன்.

0

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி