செந்நதி இப்புனைவை இயல்பாய் நகர்த்திச்செல்கிறது -- கீத்தா சுகுமாரன்






தேவகாந்தனின் படைப்புக்களிலும் இலக்கியவிமர்சனத்திலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இன்றுவரை அவரது படைப்புகளுக்கு கிட்டவேண்டிய கவனம் அவருக்கு கிட்டவில்லை என்பதை இங்குள்ள அனைவருமே ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அவரது கனவுச்சிறை நாவலின் களமும் பரந்துபட்ட அதன் வெளியும் அவருடைய மொழியும் அவர் புனைவாக்கிய அனுபவங்களும் தீவிர வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவை. அதுமட்டுமல்ல விஷ்ணுபுரம் போல, மோகமுள் போல கனவுச்சிறை ஒரு காவியம் (epic), பேரிலக்கியம் (magnum opus) என்றே கருதுகிறேன்

'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' எனும் இப்புனைவுக்கு தேவகாந்தன் என்னை அறிமுகவுரை ஒன்றைக் கேட்டபோதே எனக்குப் புரிந்தது அது அவ்வளவு சுலபமான விடயம் அல்லவென்று - அதனால் மிகவும் தயங்கினேன். அதற்கு காரணம் அறிமுகவுரை என்பது எப்படி அமைய வேண்டும் என்பதற்கான தெளிவு என்னிடம் இல்லை. அதனால் எனக்குத் தெரிந்த அளவில் இந்தப்புனைவுக்கான சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் இக்குறிப்பு வெறும் அறிமுகமாக மட்டுமே பயன்படுகிறது வேறெந்த ஆய்வு நோக்கிலும் இந்த நூல் அணுகப்படவில்லை.

இப்புனைவின் முதல் அத்தியாயத்திலேயே அவர் இக்கதையின் மையப்புள்ளியை சொல்லிவிடுகிறார்:

காலமறிந்த கோடி கோடிக்கதைகளில் அவரது ஒன்று. மனிதர்களின் கதைகளை அசூயைக் கதை, அம்பாயக்கதை, பசிக்கதை, காமக்கதையென அது நான்காக வகுத்து வைத்திருக்கிறது. பின்பசிக்கதை, காமக்கதையென அவற்றை இரண்டாகச் சுருக்கிவிட்டிருக்கிறது. அடக்கப்படாப்பசியும்,அடக்கப்பட்ட காமமுமே உலகின்பெரும்பெரும்புரட்சிகளுக்குக் காரணமாய் இருந்திருக்கின்றன. இந்த இரண்டுக்குள் அந்த நான்குவகையான கோடி கோடிக்கதைகளும் அடங்கியேவிடுகின்றன. இவற்றுள் அவரதுகதை எதுவாகவிருந்தது.”

ஆமாம், அடக்கப்பட்ட காமம் இங்கு இப்புனைவில் முக்கிய பங்காற்றுவது மட்டுமல்லாமல் ஒரு மனிதரின் வாழ்வின் போக்கையும் அதுவே தீர்மானிக்கிறது. ஆனால் இக்காமம் சுருண்டு, அலைக்கழிந்து நொடித்துவீழ்வது ஒரு பெரு நகரத்தில். அது போன்ற நகரம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதற்கான வரையறை ஒன்றாகவே இருக்கிறது என்பதை தேவகாந்தன் ஒற்றை வரியில் சொல்கிறார்: ஒரு நகரம் காமத்தின் வடிகாலின்றி அமைக்கப்பட முடியாதது." அவருடைய புனைவில் நகரவெளியும் காமவெளியும் மானுடஇருப்புடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன


கனடாவின் புலம்பெயர்ந்த மக்கள் மிகுதியாய் வாழும் ஸ்கார்பரொ, மொன்றியல், மார்க்கம் போன்ற பகுதிளில் நடைபெறும் இக்கதை புலம்பெயர்ந்தவரின் அலைந்துழல்வுகளை, அவற்றினூடே அலையாடும் மானுட வேட்கை, ஏக்கம், ஏமாற்றம், அவா, வெறுப்பு இவையனைத்தையும் பதிவு செய்கிறது. அவருடைய எழுத்துக்களில் எப்போதும் தொடரும் ஈழப்போர், புலம்பெயர்வு ஆகியன இந்த நூலினதும் அடிச்சரடாக அமைந்துள்ளது. அதன் பின்புலத்தில் மனித உறவுகள் இயங்கும் பாங்கையும் இப்புனைவு வெளீப்படுத்துகிறது. மிகச்சுருக்கமாக மிகுதியான விவரணைகள் அல்லாமல் புலம்பெயர்ந்த ஒருவரின் வாழ்வையும் அவர் வாழும் நகரையும் அதன் போக்குகளையும் அவை சாத்தியப்படுத்தும் மாற்றங்களையும் குடும்பத்தில் இம்மாற்றங்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும் மிக எளிதாக செந்நதியின் போக்கோடு இப்புனைவு விவரிக்கிறது.

மனித உறவுகளில் விரவும் அன்பும் காதலும் வெறுப்பும் அவற்றையாளும் சிக்கல்களும் அதனோடு ஊடாடும் பாலியலும் ஆழ்மனமும் இந்தப் புனைவின் அடிநாதமாகின்றன. உறவுகளின் தேவையும் அத்தேவை உருவாக்கும் வலியும் அகப்போராட்டமும் காமமும் வெவ்வேறு உட்பாதைகளை இப்புனைவில் திறக்கிறது. அதுபோலவே புலம்பெயர்ந்த வாழ்நிலை பல சமயங்களில் சுயத்தின் அடையாளத்தைக் கட்டமைப்பதிலும், அவ்வாறு கட்டமைக்க இயலாத தருணங்களின் கூட்டாகவும் இயங்குகிறது. புலம்பெயர்ந்த நகரின் இயல்புகள் பெண்களின் சுய அடையாளத்தை உருவாக்குதலும் அதனை அவதானிக்கும் ஆணின் மனோநிலை இவற்றின் விளைவால் உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகளும் பிளவுகளும் கதைக்களனாக அமைகின்றது.

ஈழ வன்முறைக்கும் அதன் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோரிடையே தோன்றும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடையே நிராசையுற்ற மனம் கையாளும் ஆயுதமாக குடும்ப வன்முறை உருக்கொள்கிறது. இங்கே வன்முறை என்பது உடல் சார்ந்த வன்முறை என்ற வரையறையை மீறி மனம் சார்ந்தும் இயங்குகிறது. மனம் சார்ந்த வன்முறை என்பது புலம்பெயர் சூழலில் மனித மனம் விட்டுவந்த மண்ணுக்கும் பெயர்ந்த மண்ணுக்கும் இடையில் ஊசலாடி வதைபடும் மனம்; அதனோடு கூட மீண்டும் மீண்டும் வீடிழந்து நிராதரவான மனம், புகலியாய் எப்போதும் தனிமையில் உழன்றுகொண்டிருக்கும் அகம் எனப் பலவகையான வன்முறைகள் ஒன்றையொன்று சந்திக்கும் வெளியில் இப்புனைவு அமைந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சாட்சியமாய்,    பூர்வகுடிகளின் வாழ்வின் எச்சமாய் ஓடிக்கொண்டிருக்கும் செந்நதி இப்புனைவை இயல்பாய் நகர்த்திச்செல்கிறது.

கனேடிய மண்ணுடனும் பண்பாட்டுடனும் ஒட்டியும் ஒட்டாமலும், விலகியும், இணைந்தும், முடிவற்ற தேடலும், ஏமாற்றமும் இன்றைய புலம்பெயர்ந்த வாழ்வாக மாறிவிட்ட நிலையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த The New Oxford Book of Canadian Short Stories in English எனும் நூலின் முன்னுரையில் கனேடிய இலக்கியத்தைப் பற்றி மார்க்கரெட் ஆட்வுட் Does Canadian mean a story about the country, or a story by one of its citizens, or something else entirely?  என்ற கேள்வியை முன்வைத்தார். ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் வெளிவரும் இலக்கியங்களை அவற்றின் மொழிகளை கனேடிய இலக்கியமாக கருதுவதிலுள்ள எதிர்ப்பையும் தயக்கத்தையும் இந்த நூலின் தலைப்பும் ஆட்வுட் எழுப்பிய இக்கேள்வியும் சுட்டிக்காட்டுகிறது. நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால் எவ்வாறு கனடாவின் பிற மொழி இலக்கியங்களையும் கனேடிய இலக்கியம் எனும் பெருவெளிக்குள் கொண்டு செல்வது என்பதாகும். மொழிபெயர்ப்புக்களினூடாக மட்டுமே இதனை நாம் செயல்படுத்த இயலும். வாசித்தல் மட்டுமின்றி இத்தகைய மொழிபெயர்ப்புகள் செய்யத் தூண்டும் படைப்புகளைத் தேவகாந்தன் தொடர்ந்து அளித்துக்கொண்டே இருக்கிறார். அது தொடர வேண்டும் என நாம் அனைவருமே விரும்புகிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

0
(சென்ற ஆண்டு காலம் சஞ்சிகையின் ஆதரவில் நடைபெற்ற தேவகாந்தனின் 5 நூல்கள் வெளியீட்டில் நதிமேல் தனித்தலையும் சிறுபுள் நாவலின் வெளியீட்டுரை. வாசிக்கப்பட்டது.)

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி