கனவுச் சிறைபற்றி



(கனவுச் சிறை நாவல்பற்றி வாசகரொருவர் 2015இல் எழுதி அனுப்பிய மதிப்புரை இது. எழுதிய வாசகர் பெயர் சேகரமாகவில்லை. தேடிக்கொண்டிருந்தேன். இன்று பதிவிடுவது அந்த வாசகருடனான தொடர்பினை அடைய. தேவகாந்தன்) 

இலங்கை அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம் திருப்பதி மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு செல்வது ஏன்? ஸ்டண்டாக இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. நான் நினைத்தது தவறு. இலங்கை பௌத்தத்தில் விஷ்ணு வழிபாடு இருக்கிறது.
எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலை வாசித்த போதுதான் எனக்கு இது தெரிய வந்தது. ஈழப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான காலவோட்டத்தை ஒரு குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வின் நோக்கில் காப்பியமாக படைத்திருக்கிறார் தேவகாந்தன். சங்கரானந்தர் என்கிற ஒரு அருமையான பாத்திரத்தை நாவலில் உருவாக்கியிருப்பார் தேவகாந்தன். அந்தப் பாத்திரம் அவருக்கு நேரெதிரான எண்ணங்களைக் கொண்ட இன்னொரு புத்தபிக்குவுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்.
+++++
நிகழ்வின் சாத்தியம்தான் வரலாறு. இரண்டு காலங்களைஇரண்டு எல்லைகளைஇரண்டு நிகழ்வுகளை வெகு அநாயாசமாய் இணைக்கக்கூடிய காரணங்களின் சாத்தியம் அது. இந்தச் சாத்தியத்தினூடாக வரலாற்றில் முன்னனுமானமே நிகழ்ந்திருக்கிறது. எழுதிய வரலாற்றின் ஓரங்களில் இதுபோல மறைக்கப்பட்ட சம்பவங்களுக்கான ஆதாரத் துணுக்குகள், எச்சங்கள் ஒட்டியிருக்கின்றது, உண்மையில் கண்டடையப்பட்டிருக்கிறது.
எக்காலகட்டத்தில் நிகழ்ந்தது அது?
கிறித்து சகாப்தம். புத்த காலத்தின் ஐந்நூறு வருஷங்கள் கழிந்து. தென்பகுதியில் கல்யாணி ஆறு தொடங்கி மாணிக்க கங்கை ஈறாகவும், வடபகுதியில் நயினாதீவிலும் வல்லிபுரப் பகுதியிலும் தமிழர்கள் புத்தசமயிகளாக இருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய தமிழ்நாட்டு நிலைமையை இலங்கை பிரதிபலித்தது. ஆனால் பிற்காலத்தில் அனுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிய நம் நகர்வு வடபகுதிப் புத்த சமயத் தமிழர்களைத் தனிமைப் படுத்திற்று. மேற் கொண்டு எமது அரசியல் நடப்புகள் தமிழ்ப் பவுத்தர்களை இழக்கச் செய்தன.
தெற்கிலுள்ள தமிழ்ப் பவுத்தர்களுக்கு என்ன ஆனது?
அவர்கள் சிங்கள் பவுத்தர்களாக மாறியது நடந்தது. அதனால்தான் இந்துசமய சடங்காசாரங்கள், நம்பிக்கைகள் புத்தசமயத்திலே வந்து கலந்தன மிகுதியாகவும்.
……….
அது அவர்கள் தவறல்ல
….
நமது தவறுதான். அனாத்மவாதமென்று சொல்லிக் கொண்டோம். வேதங்களை மறுதலித்தோம். ஆனாலும் பிரம்மென்ற அம்சத்தின் அடையாளமாய் நின்றிருந்த விஷ்ணுவை புத்தரின் அவதாரமென்று சொல்லிக் கொண்டோம்
+++++
சுவையான, ஆனால் தீவிரமான உரையாடல். ஒரு கட்டத்தில் குரூரமான பிக்கு குணாநந்த, சங்கரானந்தரிடம் தன் நிலைப்பாட்டிலிருந்து எழுந்த கருத்தை வரலாற்றுக் கூற்றின் பாவனையில் வெளிப்படுத்துவான்.
+++++
விஷ்ணு அவதாரமான புத்தர் பற்றிய கற்பனை அவசியமான அரசியல் காரணம் பற்றியது. தேரவாதம் மதத்தில் சீலத்தையும் போதனைகளையும் கட்டிறுக்கத்துக்கு வற்புறுத்திய அதே வேளையில், சாந்தியும் அஹிம்சையும் பிரதானப்படுத்தப்பட்ட பௌத்த கிளையாகிப் போனது. அது வெகுஜன செல்வாக்குப் பெறப்பெற சிங்கள இனத்தின் மீது ஒரு மந்தமே வந்து கவிந்துவிட்டது. அந்த மந்த குணத்தைப் போக்கி அவர்களைப் போர்க்குணமுள்ள ஒரு இனமாக மாற்றுகிற ஒரு எத்தனத்தின் விளைச்சல்தான் விஷ்ணு கதை. விஷ்ணு அவதாரி. ஒன்பது அவதாரங்களை எடுத்தவர். மீதி ஒரு அவதாரத்துக்காய்க் காத்திருப்பவர். அந்த ஒன்பது அவதாரங்களும் பெரும்பாலும் அரசியல் காரணம் பற்றியவையே. ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், நரசிம்மாவதாரம், வராகவதாரம் யாவுமே மூலத்தில் ருத்திரம் நிறைந்தவை. மூர்க்கமும் குயுக்தித்தனமும் உடையவை. அரச ஸ்தாபகங்கள் அவற்றில் நிகழ்ந்துள்ளன. அதனால் தான் விஷ்ணு வணக்கம் பவுத்தத்தில் புகுத்தப்பட்டுள்ளது. வடக்கே வல்லிபுரத்தில் மகா கலைச் செழுமையுள்ள பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்ததை அகழ்வாராய்ச்சி கூறுகிறது..
+++++
குணாநந்தரின் வாதம் மெள்ள மெள்ள சிங்களப் பேரின வாதத்தின் திசையில் சென்று விடும்.
+++++
விஷ்ணு வழிபாடு இந்து சமயத்தில் வேதங்களிலிருந்து பெறப்பட்டது. வேதங்களில் இந்திரனே அதிகம் குறிப்பிடப்படுகின்றான். மழையின் அதிபதி என்கிற ஸ்தானம் உடையவனாதலால் இது இருக்கலாம். சுவர்க்கத்தின் அதிபதியாகவும் இந்திரன் பேசப்படுகின்றான். ரிக் வேதத்தில் விஷ்ணுவும் வருகிறார். ஆனால் இந்திரனைப் போன்ற பெரிய கடவுள் தகுதி அவருக்களிக்கப்படுவதில்லை. விஷ்ணுவின் பெயராக வேதத்தில் உபேந்திரன் என்ற பெயரும் வருகிறது. இதன் பொருள் இந்திரனின் துணை. பின்னர் இந்து சமயக் கடவுளர் கூட்டம் பல மாறுதல்களுக்குள்ளாகிறது. ஸ்ருதிகளுக்குப் பின்னர் வந்த ஸ்மிருதிகளில் விஷ்ணு மும்மூர்த்திகளுள் ஒருவர். இந்திரன் தன் ஆணவத்தின் காரணமாக அசுரர்களிடம் அடிமைப்பட நேரிடும்போதெல்லாம் அசுரர்களை அழித்து இந்திரனின் சங்கடத்தை தீர்ப்பது விஷ்ணு தான்.
ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இலங்கையின் நாளாகம நூலான மகாவம்சத்தில் உபுல்வன் என்ற பெயரில் ஒரு கடவுள் வருகிறார். மகாவம்சத்தின் ஆரம்பத்தில் கலிங்க இளவரசன் விஜயன் தன் நாட்டிலிருந்து விலகி இலங்கை வந்தடைகிறான். விஜயன் இலங்கை வந்தடைந்தவுடன் உபுல்வன் என்னும் கடவுள் அவனை ஆசீர்வதிக்கிறார். நான் இலங்கையின் காவல் தெய்வம் ; என் பெயர் உபுல்வன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு விஜயனுக்கும் அவனுடன் இலங்கை வந்தடைந்தோருக்கும் அவர்கள் கைகளில் பாதுகாப்பாக சரடுகளைக் கட்டிவிடுகிறார். குவெணி என்ற நாகர்களின் அரசியுடன் நடைபெறும் மோதலில் உபுல்வன் கட்டிய சரடு விஜயனையும் அவனது படைகளையும் காக்கிறது. இலக்கியச் சான்றுகளில் இந்த உபுல்வன் என்கிற கடவுள் ஏழாம் நூற்றாண்டுக் குறிப்புகளில் பின்னர் மீண்டும் வருகிறார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 13ம் நூற்றாண்டுக் குறிப்புகளில் உயர்ந்த கடவுள் என்று உபுல்வன் குறிப்பிடப்படுகிறார்.
உபுல்வன் என்ற சொல் உப்பலவண்ணா என்கிற பாலி சொல்லில் இருந்து மருவியது. அல்லி போன்ற நீல நிறமுடையவன் என்பது அதன் பொருள்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், உபுல்வன் இந்து சமயக்கடவுள் விஷ்ணுவாக அடையாளம் காணப்பட்டார். இரு தெய்வங்களின் வடிவ ஒற்றுமை இதற்கு காரணமாய் இருக்கலாம். கண்டி சாம்ராஜ்யத்தின் போது நிலவிய இந்து சமயத் தாக்கமும் இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் புத்தரின் அருகே நிற்பது மாதிரியாக புத்தர் கோயில்களில் விஷ்ணு சித்தரிக்கப்படலானார்.
இலங்கையில் விஷ்ணு வழிபாடு மரபு பற்றி இன்றைய வரலாற்றாளர்களுக்கிடையே பல வித கருத்துகள் நிலவுகின்றன. உபுல்வனும் விஷ்ணுவும் ஒன்றல்ல என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். சில ஆதாரங்களில் உபுல்வன் வைதீகக் கடவுள் வருணனாக சுட்டப்படுகிறார். அதனாலேயே உபுல்வன் இலங்கையின் பாதுகாவல் தெய்வமாக இருக்கிறார் என்கிற ஐதீகம் தோன்றியதாகக் கருத இடமிருக்கிறது.
மகாவம்சம் போன்று தீபவம்சம் என்னும் நூலிலும் உபுல்வன் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னரே விஜயன் என்னும் க்‌ஷத்திரியன் ஜம்புதீவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தடைவான் என்றும் அவன் இலங்கையை ஆள்வான் என்ற கணிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இலங்கையின் வெற்றிகரமான, பாதுகாப்பான நிறுவுதலைப் பற்றிய கரிசனத்துடன் புத்தர் சக்கரனை அழைத்து (வேதங்களில் வரும் இந்திரன்!) உடன் அதற்காவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். சக்கரன் உப்பலவண்ணனை அழைத்து இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்கிறான்.  சக்கரனின் ஆணையை ஏற்றுக்கொண்டு உப்பலவண்ணன் இலங்கை வந்தடைவதாக தீபவம்சம் சொல்கிறது. தீபவம்சம் சொல்லும் இதே தொன்மத்தகவலை மகாவம்சமும் வலியுறுத்துகிறது. பின்வேத கால இந்தியத் தொன்மங்களில் காணப்படும் விஷ்ணு இந்திரன் இருவருக்கிடையிலான நெருங்கிய நட்பு என்ற கருப்பொருளை பௌத்த தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இதைக் கொள்ளலாம்.
+++++

Upulvan Devale in Devinuruwa, Matara
தேவிநுவாரா
இலங்கையின் தென்மூலையில் இருக்கும் நகரம் மாத்தரை. மாத்தரைக்கு தென்கிழக்கில் ஆறு கி மீ தொலைவில் தேவிநுவாரா இருக்கிறது. 13ம் நூற்றாண்டு வாக்கில் முக்கியமான துறைமுகமாக தேவிநுவாரா திகழ்ந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்தகடுகள் மூடிய கூரை கொண்ட புகழ்பெற்ற கோவிலொன்றும் அங்கிருந்தது. இராமாயணத்தில் வரும் ராவணனின் காலத்தில் மலர்ச்சியுடன் விளங்கிய நகரம் இது என்றும் நம்பப்படுகிறது. பாரவி சந்தேஷாயா என்னும் பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிதைப் படைப்பு தேவினுவாராவில் இருக்கும் தெய்வத்தை அசுரர்களின் சம்ஹாரி என்று வர்ணிக்கிறது. இராமாயணத்துடனான இந்நகரத்தின் தொடர்பை குறிக்கும் முகமாக கவிஞர் இதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்றுத் தகவலின் படி முதலாம் தப்புல என்னும் அரசனால் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1587இல் மாத்தரையைத் தாக்கிய போர்ச்சுகீசியப்படை கோயிலைத் தரைமட்டமாக்கி கொள்ளையடித்தது. ஆனால் இரண்டாம் ராஜசிங்கன் என்னும் கண்டி மன்னன் மாத்தரையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து மீட்டு தேவிநுவாராவில் விஷ்ணு தேவாலயத்தை மீண்டும் கட்டினான்.

Vallipuram Aazhvar Temple, Valli Puram
வல்லிபுரம்
யாழ் குடா பிராந்தியத்தில் கிழக்கு வடமராச்சிப் பகுதியில் அமைந்துள்ளது வல்லிபுரம். அங்கு பவுத்தர்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு ஒரு பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றாளர்கள் சொல்கின்றனர். இதை வைத்துக் கொண்டு இலங்கை முழுதும் சிங்களர்கள் தான் ஆதியில் வசித்தார்கள் என்ற தவறான பொருள்விளக்கம் கொடுத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதம் அரசியல் செய்தது வேறு கதை.
காஞ்சிபுரத்திலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் ஓர் ஊரின் பெயர் வல்லி புரம். திருக்கழுக்குன்றம் மற்றும் காஞ்சிபுரம் போல வல்லி புரமும் பல்லவர் காலத்தில் பௌத்தம் தழைத்த இடமாக இருந்திருக்கலாம். பல்லவர் காலத்தில் தமிழகத்துக்கும் இலங்கைக்குமிடையே நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு இருந்தது. வடமராச்சியில் இருந்த வல்லி புரத்திலும் பௌத்தம் தழைத்திருக்கலாம். பௌத்த மடாலயங்கள் நிரம்பியிருந்த நாகைப்பட்டினம் கரை வல்லி புரத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். வல்லி புரத்திலிருந்து ஆந்திரக் கரையை அடைதல் எளிது. வல்லி புரம் ஆழ்வார் கோயிலுக்கு அருகே அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆளுயர புத்தர் சிலையை சர் ஹென்றி ப்ளேக் என்கிற ஆங்கில அதிகாரி தாய்லாந்து நாட்டு மன்னருக்கு அன்பளிப்பாக 1906ல் அளித்தார். புத்தர் சிலை கிடைத்த விதம் காஞ்சி கோயில்களில் கிடைத்த புத்தர் சிலைகளையும் சின்னங்களையும் நினைவு படுத்துகிறது. அந்த சிலை பாங்காக்கில் உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வல்லிபுர புத்தர் சிலை ஆந்திராவின் புராதன அமராவதி நகரில் தழைத்த பௌத்த சிற்பக்கலை பாணியில் செதுக்கப்பட்டது என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு நடுவே ஒருமித்த கருத்து உண்டு. ஆனால் வல்லிபுரத்தில் கிடைத்த தங்கத் தகட்டில் பொறித்த வரிகளை இலங்கை வரலாற்று வல்லுனர் பரணவிதன வேறு விதமாகப் பொருள் கொண்டமை பேரினவாதிகளின் யாழ்ப்பாணப் பிரதேசம் சிங்களவர்களின் கீழ்தான் இருந்தது என்ற தியரியை வலுப்படுத்தியது. ஆனால் பரணவிதனவின் அனுமானங்களை பாகிஸ்தானிய வரலாற்று வல்லுனர் ஹெச் தானி மறுத்தார். தகட்டில் இருந்த எழுத்து வடிவங்களை வைத்து தகடு நான்காம் நூற்றாண்டுக்கு முன்னதானதாக இருக்க முடியாது என்று சொன்னார். பரணவிதன அந்தத் தகடு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தார். வல்லிபுர தகட்டின் பிராகிருத எழுத்துப் பொறிப்பு திராவிடப் பாணியைப் பின்பற்றியதாகவே இருக்கிறது என்றும் ஹெச் தானி சொன்னார். வல்லி புரத் தகட்டில் பொறிக்கப்பட்டிருப்பது ஒன்றரை அடிகள் மட்டுமே கொண்ட சிறிய வாக்கியம் என்பதால் உறுதியான, தெளிவான முடிவுக்கு வருதல் மிகக் கடினம்.


மகுடா நாட்டில் இருந்த தமிழ்ப்  பௌத்தர்கள்  என்னவானார்கள்? தமிழ்நாட்டில் வல்லி புரம் மற்றும் காஞ்சியில் இருந்த பௌத்தர்கள் போன்று அவர்களும் பிற்காலத்தில் தம் அடையாளத்தை தொலைத்து விட்டு இந்து சமயத்தாராகியிருக்கலாம்.
உதவிய கட்டுரைகள் :
Upulvan or Uppalavanna
the guardian deity of sri lanka Professor Dhammavihari Thera www.sobhana.net/contact/english/dhammavihari/dv088.doc
நூல்கள் :
Buddhism among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam Part 1 – Edited by Peter Schalk – Uppsala University
கனவுச்சிறை நாவல் எழுத்தாளர் தேவகாந்தன் காலச்சுவடு பதிப்பகம்

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி