மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:


மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:
மறுமலர்ச்சி இதழ்த் தொகுப்பினை முன்வைத்த நோக்குநிலை

-தேவகாந்தன்-





காலக் குழறுபடிகளால் இயங்கமுடியாத நிலையிலிருந்து மீண்டெழுந்த பின்னால் ‘லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனா’ சிறுகதையை முடித்ததும் நான் வாசிக்கத் தொடங்கிய நூல் ‘மறுமலர்ச்சி’ இதழ்த் தொகுப்பாகவிருந்தது. அத் தொகுப்பிலுள்ள செல்லத்துரை சுதர்சனது ‘ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சிக் காலம்: வரலாறும் மதிப்பீடும்’ என்ற ஆய்வுரையினடியாகத் தொடர்ந்த அவ்வாசிப்பு கிளர்த்திய சிந்திப்புக்களதும் எண்ணங்களதும் பதிவாக உருவானதே இவ்வுரைக் கட்டு.

            ஓர் ஆய்வுக் கட்டுரையின் ஒழுங்கமைவும் தெளிவும் அடர்த்தியும் கொண்டிருந்தது அக்கட்டுரை. முதலில் இருப்பதனால் மட்டுமன்றி, தொகுப்பில் முதன்மையானது என்பதனாலும் அதுபற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிட நேர்ந்தது.

மறுமலர்ச்சி’யின் சில இதழ்களே முன்னர் பார்வைக்குக் கிடைத்திருந்த நிலையில், அவற்றின் ஒட்டுமொத்தமான தொகுப்பின் வாசிப்பு மிக்க  பெறுமதியாக இருந்திருக்குமென்பதை எடுத்துக் கூறவேண்டியதில்லை. மறுமலர்ச்சி இதழ்கள், இறுகிப்போய்க் கிடந்த தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய மற்றும் சிந்தனை நெறிகளை எவ்வளவுக்கு அசைத்துப் பார்த்தது என்பதையும், அக்கால மொழி, உரைநடை ஆகியனவற்றினாலான அதன் இலக்கியப் பயன்பாட்டுத் திறன்  எப்படி இருந்ததென்பதையும், அது தொடர்ந்தேர்ச்சியாக தன் காலத்தின் கண்ணாடியாகவும் பின்னால் விளைந்த இலக்கிய நெறியை வழிகாட்டும் சக்தியாகவும் எங்ஙனம் இயங்கியது என்பதையும் குறித்தே என் நோக்குநிலை அமையும்.

இலங்கையின் முதலாவது தமிழ்ச் சஞ்சிகையொன்றின் தோற்றம் வளர்ச்சி என்பனவற்றையும், அது உருவாக்கிவிட்ட படைப்பாளிகளின் நோக்கம் இயக்கம் திறன்கள் மற்றும் அக் கால இலக்கியச் செல்நெறி, அது முரண்கொண்டு மீறிய சமயங்களும் அதுபோல் அதன் வெற்றி தோல்விகள் என்பனவற்றையும்  அறிதல் எந்தவொரு இலக்கிய மாணவனுக்கும்போல் வாசகனுக்கும் பிரதானமான விஷயமே. சமகால வாசகனொருவனின் ரசனை, மறுமலர்ச்சி இதழ்க் கால மொழிநடையினை எவ்வளவு தூரம் உள்வாங்க முடியுமென்பது கேள்விக்குரியதாயினும், மாணவ நிலையில் அவை கண்டுகொள்ளப்படாமல் தொடரவேண்டிய  தேவை இருக்கிறது.

முந்திய கால இலக்கியத்தை அதே காலத்து ரசனைமுறையில் வைத்து ருசித்தலும் விளங்குதலும் சாத்தியமாகிவிடாது என்பதுமில்லை. விளங்குதல் செயற்பாட்டை மொழி நடந்துவந்த வரலாற்றினடியாக ஒருவரால் மிகச் சுலபமாகச் செய்துவிடவும் கூடும்.  சுவைக்கச் செய்வதுதான்  சுலபத்தில் முடிந்துவிடுவதில்லை. ஆனால் ஒரு காலத்தின் படைப்பை உணர்வதற்கு அது முக்கியம். வாசகனுக்கும் பிரதிக்குமிடையிலான ஒத்திசைவின்றி வாசிப்புச் செயற்பாங்கு சாத்தியமில்லை என்கிறது  பின்அமைப்புவாதம்.

தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, டால்ஸ்டாயின் ‘அன்னா கரினினா’ ஆகியவை இன்றும் சிறந்த உலக நாவல்கள் வரிசையில் நிற்கின்றனவெனில், அதற்கான காரணம் அவை வாழ்வியல் தத்துவங்களை  உணர்வெழுச்சியுடன்  பாத்திரங்களூடாக வெளிப்படுத்துகின்றன என்பதுதான். ஆனால் இன்றைய வாசகனை அவற்றின் மொழியும் நடையும் இடர் செய்யக்கூடியவை. அவற்றைக் கடந்தே வாசகன் அப்பிரதிகளில் பயணிக்கிறான். அந்த அனுஷ்டானமே அவற்றின் இற்றைவரையான சிறந்த நாவல்களென்ற மகுடம். அவன் பயணிப்பதற்கான வெளி இன்றேல் அவை பழம் இலக்கியங்களாகிவிடும் அபாயம் இருக்கிறது.

ஆகவே மறுமலர்ச்சி இதழ்த் தொகுப்பினை வாசகன் கடந்துசெல்ல மொழியின் இந்தவகையான திறன் தெரிந்திருத்தல் அவசியமாகின்றது. தொகுப்பினுள்  புகுவதன் முன் இந்த அவதானங்கள் தேவைப்படுவன.

1943இல் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கதின் தோற்றத்தின் தொடர்விளைவாக 1946 பங்குனியில் ‘மறுமலர்ச்சி’ இதழ் வெளிவரத் தொடங்குகிறது. அதில் முரணாக ஆரம்பத்திலேயே கண்ணுற்ற அம்சம் Marumalarchi – Jaffna என்ற முகப்பு வாசகமாகும். அது அவ்வளவு கவனம் கொள்ளவேண்டிய விஷயமல்லவாயினும், பிரதேசரீதியிலான இலக்கிய முயற்சியாக அடையாளம் காணப்பட அது மிகுந்த வாய்ப்பாகிவிடுகிறது.

மறுமலர்ச்சி அச்சிதழ் வெளிவரு முன்னமே அப்பெயரில் முதலில் அ.ந.கந்தசாமியும், பின்னர் வரதரும் கையெழுத்துப் பிரதிகளாகக் கொண்டுவந்தார்களென்று தெரிகிறது. ஆக, 1943க்கு முன்னரே மறுமலர்ச்சியென்ற பெயரும் அதை முன்னெடுப்பதற்கான உந்துவிசையும் ஏற்பட்டுவிட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.  ஆனால் மேலும் இங்கே சிக்கல் விளைகிறது. 1931இல் டொனமூர் அரசியல் யாப்பு நிறைவேற்றம் இலங்கை இலக்கிய மறுமலர்ச்சியின் ஆரம்பமாகக் கொள்ளும் ஒரு பகுப்புமுறை உண்டு. செல்லத்துரை சுதர்சனே தொகுப்பின் ஆய்வுரையில் (பக்:31) ‘1931 – 1956 காலப் பகுதியே ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்டம் ஆகும்’ என்பார்.

ஆக டொனமூர் அரசியல் யாப்பின் வரவு இலக்கியரீதியாகவும் இலங்கையில் மறுமலர்ச்சியினை உண்டாக்குகின்றதான கருத்து உருவாகியிருந்ததென்பது தெளிவு. இங்கே கவனிக்க வேண்டிய அம்சம், மணிக்கொடிக் காலம், சரஸ்வதி காலம் மற்றும் எழுத்துக் காலம்போல் இதழ்கள் தோன்றி உருவாக்கிய புதியகாலமாக அன்றி, ‘மறுமலர்ச்சி’ இதழானது மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றி அப் பெயரைச் சூடிக்கொண்டது என்பதாகும்.

அதாவது காலம் தோன்றியிருந்தும் இலக்கியத்தில் மறுமலர்ச்சி தோன்றவில்லையென இதைக் கொள்ளமுடியும். மறுமலர்ச்சி இயக்ககாரர்களின் வார்த்தையில் சொல்லப்போனால், அவர்களது முயற்சிகளுக்கு கல்வி சான்ற ஒரு வர்க்கம் இடையூறாக இருந்திருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள், ‘மறுமலர்ச்சி என்ற பெயரையே ஏளனத்துடன் நோக்கும் பண்டிதர்களை எச்சரிக்கை செய்கிறோம்…’ என்றும், ‘இன்று தமிழ்மொழி மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. பிற்போக்காளர்கள் வெறும் கூச்சல் இடுவதனால் இதைத் தடைசெய்துவிட முடியாது’ (இதழ் 2, முகத்துவாரம்) என்றுமாக. மறுமலர்ச்சியாளர்கள் பிற்போக்காளர்களென யாழ்ப்பாண பண்டித வர்க்கத்தினையே குறிப்பிட்டார்கள் என்பது சொல்லாமலே விளங்கக்கூடியது.

இங்கே அரசியல் ஒரு புறக் காரணியாய் அமைந்து இலக்கியச் செல்நெறியை வழிப்படுத்தியிருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறது. சமுதாய மாற்றத்தில் கலை இலக்கிய உள்ளுடன்களும் வடிவங்களும் மாறுகின்றன என்ற சித்தாந்தம் உறுதிப்படுகிறது. இதுபோலவே, 1956க்கு மேலே தனிச்சிங்கள மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து இன்னொரு இலக்கிய வரலாற்றுக் காலம் இலங்கையில் வரைபடுவதையும் நாம் காணவேண்டும். அவ்வாறாயின் அவ்வரசியல் தாக்கத்தின் விளைபொருள்கள் இலக்கியத்தில் தம் அடையாளமற்றிருந்தன என நாம் கொள்வது சாத்தியமாகின்றது. அதை முன்னெடுக்க உருவாகிய ‘மறுமலர்ச்சி’ தான் பிறப்பெடுத்ததின்  நோக்கத்தை  நிறைவேற்ற தன் படைப்புக்களில்  முயன்றே வரும்.

ஆனால் அது சுலபமாக இருக்க முடியாதென்பது வெளிப்படை. இலங்கையில் நவீன காலத்தின் தோற்ற எல்லையை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து ஆரம்பிப்பார் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா. ‘நவீன காலப் பகுதியின் தோற்றத்தைக் குறிக்கும் காலக் கோட்டினைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில் வரைந்துகொள்ளலாம் எனத் தோன்றும்’ என்பார் அவர் (ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, பக்: 111).

இந்த எண்பதாண்டுக் காலப் பெருவெளியில், அதாவது 1850 – 1930 காலத்தில், திடுமென்றோ மெதுவாகவோ இலங்கைத் தமிழிலக்கியத்தில் எந்தப் பாய்ச்சலும் நிகழவில்லை. நவீன காலமென்பது, அச்சு மூலங்களும், கல்வி முறைகளும், ஆங்கில மொழி அறிவும் அதனாலாகும் அகலுலக ஞானமும் மட்டுமில்லை. பழைமைவாத சிந்தனைகளிலிருந்து மனித மனம் விடுபடுதலுமாகும். இலங்கைத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழருக்கு, இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்கவில்லை. மத மாற்றம் மற்றும் கலாசார அணுக்கங்களில் தமது தீவிர எதிர்ப்பை ஆங்கில அரசினர்க்கு காட்டினார்களெனினும், ஆங்கிலக் கல்வி விஷயத்திலும் துரைத்தன உத்தியோகங்கள் பெறுவதிலும் முன்னிற்பவர்களாயே அவர்கள் இருந்திருந்தார்கள். நவீன காலமும், மறுமலர்ச்சிக் காலமும் ஒன்றல்லவெனினும், நன்கு நோக்கும்போது ஒன்றினடியான ஒன்று என்பது, அதாவது முன் பின்னாய்ப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என்றே, இவற்றைக் கொள்ளவேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து நவீன காலம் தோற்றமாகியபோது, அது சிந்தனை மாற்றத்தை உருவாக்குவதாக அமையவில்லை. மாறாக மொழி சார்ந்து உரைநடையின் இறுக்கத்தைத்  தளர்த்துவதாகவும், அவ் உரைநடைகொண்டு மதம் சார்ந்த விஷயங்களில் கிறித்துவ எதிர்ப்பையும், தம் மதம் சார்ந்த போதனைகளையும்  செய்வதென்பதாகவுமே அது இருந்தது. ஆனால் நினையாப் பிரகாரம்  அவர்கள் முயன்று உருவாக்கிய உரைநடை நாவலென்கிற மேனாட்டினரின் புதிய இலக்கிய வகையினத்தின் தோற்றத்தினுக்கு காரணமாய் அமைந்துவிட்டது. அவ்வண்ணம் தோன்றியதுதான் சித்திலெப்பையின் ‘அசன்பே சரித்திரம்’ (1885) என்கிற இலங்கையின் முதலாவது தமிழ் நாவல். இலங்கையின் முதலாவது தமிழ் நாவலான ‘அசன்பே சரித்திர’மும் அதன் முன் பின்னான நாவல்களும் இலங்கைத் தமிழ் அப் புதிய இலக்கிய வகையினத்தைக் கையாள தயாராகிவிட்டதென்பதன் அர்த்தமுமாவது.

ஆனால் அது தயாராயில்லாத  முக்கியமான அம்சங்கள் இருந்தன. சமூகத்தின் சிந்தனை மாற்றத்திற்கும், அதனடியான சமூக மாற்றத்திற்குமான கதவுகள் அடைபட்டு  இருக்கின்றனவென்பதை அது கண்டுகொள்ளவேயில்லை. பழைமையூறிய மரபின்மீதான அதன் பிடி இன்னும் இழகாதிருப்பதின் மேல்  அதன் கவனம் பதியவேயில்லை. இத்தகைய  சமமின்மையை மாற்றாமல் மொழிக்கும் சமூகத்துக்கும் நன்மை கிடையாதென்பது அக்காலத்து சிந்தனைத் தெளிவுள்ளவர்களால் உணரப்பட்டது. அத்தகையவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கமும், அதன் பிரயாசையில் தோன்றிய ‘மறுமலர்ச்சி’யும்.

இனி நாம் காணவேண்டியது, 1946 பங்குனியிலிருந்து 1948 ஐப்பசிவரை வெளியான 23 மறுமலர்ச்சி இதழ்கள், தம் தோற்ற நியாயத்தை எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளன என்பதாகும்.

இவ்விதழ்களில் வெளியானவற்றுள் 25 தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ‘மறுமலர்ச்சிக் கதைகள்’ என்ற பெயரில் செங்கை ஆழியானால் 1997இல் தொகுப்பாகியுள்ளன. அதுபோலவே செல்லத்துரை சுதர்சனால் அவற்றில் வெளிவந்த கவிதைகள் முழுவதும் ‘மறுமலர்ச்சிக் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2006இல் நூலுருப் பெற்றுள்ளன. மறுமலர்ச்சி இதழ்களில் வெளிவந்த கதைகள் கவிதைகளின் தரத்தினை நாம் இவற்றின்மூலம் அறிய ஓரளவு முடியுமாயினும், முழு இதழ்களின் தாரதம்மியத்தையோ, தம் தோற்றப்பாட்டின் நியாயத்தை எவ்வாளவு தூரம் அவை நிறைவேற்றி இருக்கின்றன என்பதையோ நாம் முழுமையாக அறிந்துவிட முடியாதே இருக்கும்.  அதனால் நாம் முழு இதழ்களுக்குள்ளும் பிரவேசிப்பது தவிர்க்கமுடியாததாக ஆகின்றது. அப்போதும் புனைவு வடிவங்களான சிறுகதை கவிதை நாடகம் போன்றவைகளைப்போலவே அபுனைவுகளான ஆசிரிய தலையங்கம், மொழிபெயர்ப்பு, மொழியியல் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைபோன்ற வடிவங்களிலும் கூர்மையாக பார்வை பதிக்கப்பெற வேண்டியன. இவை முழுமையும் நோக்கப்படாவிடினும், முக்கியமான பகுதிகளை இவ்வுரைக் கட்டு தன் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

ஒரு சிற்றிதழின் படைப்புகளளவு அதன் ஆசிரிய தலையங்கம் முக்கியமானது. இக் காலத்தில் சிற்றிதழ், நடுத்தர இதழ்களில் அதிகமான தலையங்கங்கள் தாம் உள்ளே நேரடியாகச் சொல்லிவிட முடியாத விஷயங்கள்பற்றி, குறிப்பாக சமூகம் அரசியல் என்பனபற்றி, தம் கருத்தை வெளியிடுவதற்கான பகுதியாகவே கொண்டிருப்பதைக் காணமுடியும். ஒரு இலக்கியச் சிற்றேடு தன் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் இலக்கியார்த்தமான மாற்றங்கள் அல்லது அவற்றின்  பாதிப்புகள் குறித்து கருத்து வெளியிடும். ஆனால் ‘மறுமலர்ச்சி’ அந்த மாதிரியான விஷயங்களை பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லையென்றே தெரிகிறது.

அது ஏற்கனவே மறுமலர்ச்சி தமிழுலகில் இருப்பதாகவும், அந்த மலர்ச்சிக்கு தமது முயற்சி ஒரு பங்களிப்பாக இருக்குமென்று நம்புவதாகவும்போலவே  கருத்தினை வெளியிட்டிருக்கிறது. ‘தமிழ்ப் பூங்காவிலுள்ள மறுமலர்ச்சி இலக்கியச் செடியிலே இன்று ஒரு புதிய மலர் பூத்திருக்கிறது’ என்பது முகத்துவாரம் என்ற மகுடத்திலான முதலாவது இதழின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது.

முகத்துவாரமென்கிற ஆசிரிய தலையங்கம் பத்தொன்பதாம் இதழிலிருந்து தலைவாசல் என்று பெயரெடுக்கிறது. எனினும் அதை இறுக்கமான இலக்கியக் கருத்தின் வெளிப்பாட்டுக் களமாக ஆக்குவதுபற்றி அது சிந்திக்கவில்லையென்றே தோன்றுகிறது. வாசகர்களுக்கான தகவல் அறிவிப்புப் பலகைபோல அது பல இதழ்களில் இருக்கிறது. ‘மறுமலர்ச்சி’யை இந்த விஷயத்தில் ஒரு வாசகனால் பாராட்டிவிட முடியாது.

‘மறுமலர்ச்சி’ ஆசிரிய குழுவினால் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டிருந்தமை நல்ல விஷயம்.  ‘பூஞ்சோலைக் காவலன்’ என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையொன்று சுவாமி விபுலாநந்த அடிகளின் மொழிபெயர்ப்பில் இருபதாவது இதழில் வெளியாகியிருக்கிறது. மேலும் இவ்விதழை மொழிபெயர்ப்பிதழ் என்று சொல்லுமளவிற்கு மேலும் இரண்டு படைப்புகள் மொழியாக்கமாகியிருக்கின்றன. ஒன்று, ‘பெரிய மாளிகை’ என்ற பெயரிலான சிந்தா தீட்சதலுவின் தெலுங்கு மொழிக் கதையொன்று எம்.எஸ்.கமலாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. மற்றது ‘மெனிக்காவின் ஜாதகம்’ என்ற விஜயதுங்கவின் சிங்கள மொழிக் கதையின் தமிழாக்கம். அது அ.செ.முருகானந்தத்தினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகங்களின் தேவையில் கணிசமான கரிசனம் ‘மறுமலர்ச்சி’க்கு இருந்தது. அதற்காக அதைப் பாராட்டலாம். அதேவேளை ‘வனதேவதை’ என்ற சர்மாவின் குறுநாடகம் உண்மையிலேயே சிந்தனைத் தெளிவுடனும், சமகால நாடக உலகில் தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய வீறுடனும் அமைந்திருந்ததையும் பாராட்டவேண்டும்.

இரட்டையர்கள் என்ற பெயரில் க.இ.சரவணமுத்துவும் ச.பஞ்சாட்சரசர்மாவும் எழுதிய ‘மாறும் இலக்கணம்’, ச.பஞ்சாட்சரசர்மா எழுதிய ‘இலக்கண மாறுபாடு’ மற்றும்  எஸ்.கே.கந்தையாவின் ‘தமிழரின் பொருளாதார வளர்ச்சி’ போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. அவற்றின் விஷயம் சார்ந்து மட்டுமில்லை, உள்ளடக்கத்தினாலும் அது.  குலரத்தினத்தின் ‘சிவனொளிபாத யாத்திரை’, மயில்வாகனத்தின் ‘யாப்பகூவா’, ‘குதிரைமலை’ மற்றும்  அ.வி.மயில்வானனின் ‘உடைப்பு’போன்ற கட்டுரைகள் வரலாறு பூகோளம் ஆகியவை சார்ந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் யாத்திரை ஒன்றினை மிக்க கலைத்துவமாக வெளிப்படுத்தியதனால் ‘சிவனொளிபாத யாத்திரை’  கவனம் பெறுகின்றது.

தமிழின் மறுமலர்ச்சி என்ற பொருள்பற்றி எழுதப்பட்ட ம.கோதண்டராமன் (தமிழ்நாடு), வல்லிக்கண்ணன் (தமிழ்நாடு), யோகி சுத்தானந்தபாரதியார் (தமிழ்நாடு), புரட்சிதாசன் ஆகியோரின் கட்டுரைகள் கவனம் கொள்ளப்படவேண்டிய கருத்துக்கள் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. தமிழின் மறுமலர்ச்சி என்பதுபற்றிய தமது அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் அவர்கள் அதில் வெளியிட்டுள்ளனர். அவற்றால் இதழ் தன் நடை தளராமல் தொடர்வதற்கான உந்துவிசையை நிச்சயமாக அளித்திருக்க முடியும்.

அடுத்து கவிதைகளை எடுத்துக்கொண்டால் மஹாகவி, க.இ.சரவணமுத்து , தில்லைச்சிவன், சோமசுந்தரப் புலவர், நாவற்குழியூர் நடராஜன், வித்தவான் வேந்தனார், யாழ்ப்பாணன், சோ.நடராஜன், தில்லைச்சிவன் போன்றோர் எழுதிய கவிதைகளின் பார்வை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பினும், முன்னேற்றமான சிந்தனைகளின் சுவடுகளைக்  கொண்டனவாய்க் கூறிவிட முடியாது. ‘சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை’யென பாரதி கூவிய கவிதைத் தனங்களின் கீறல்கள் இருக்கின்றவென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சமூகத்தின் குறைபாடுகள் நீக்கப்படுவதன் அவசியம் குறித்த தொனிகள் அவற்றில் இல்லையென்பதையும் அறுதியாகச் சொல்லவே வேண்டும். அவர்கள் எவ்வளவு கடுமையாகிக் கிடந்த இறுக்கத்தைப் பிளந்துகொண்டு தம் கவிதைகளைப் பாட வந்தார்கள் என்பதை இந்த இடத்தில் நினைத்துக்கொள்ள முடியுமாயினும் கவிதையின் சீர்த்த நயங்களும் கவனங்களும் அற்றிருப்பதை  பதிவுசெய்யவே வேண்டும்.

அடுத்து எடுக்கவேண்டிய பகுதி புனைவு எழுத்துகள். அவை சிறுகதை, உருவகக் கதை, தொடர்கதையென்ற பல பெயர்களில் ‘மறுமலர்ச்சி’யில் இடம் பெற்றுள்ளன. கொஞ்சம் விரிவாக நோக்கவேண்டிய பகுதி இதுவாகும். பண்டிதத் தமிழுக்கும் வெகுஜனத் தமிழுக்கும் இடையிலான முரண் கதைகளின் உரையாடல்களில் துலக்கமாகத் தெரியக்கூடுமாயிருக்கும். அவை எடுத்துக்கொண்ட கருவும் தம் காலத்து சிந்தனைப் போக்கினைக் காடட்டுவனவாயிருக்கும். அதனால் இலக்கியமென்று வருகிற இடத்தில் புனைவு எழுத்துக்கள் முன்னிடம் பெற்றுவிடுகின்றன. கடைசியிலேயே இங்கு அவை விசாரணைக்கு எடுக்கப்பட்டிருப்பினும் அவற்றின் முதன்மை நிச்சயமானது.

மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களென அடையாளங் காணப்பட்ட வரதர், அ.செ.முருகானந்தன், சொக்கன், சம்பந்தன், அ.ந.கந்தசாமி உட்பட இராஜநாயகன், சு.வே., கு.பெரியதம்பி, இலங்கையர்கோன், எம்.எஸ்.கமலா, பொ.கதிராயித்தேவியென பலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருப்பினும், தமிழகத்தில் ‘மணிக்கொடிக் கால’ எழுத்துக்களை வைத்துப் பார்க்கின்றபோது இவற்றை வெற்றிகரமான அறுவடையென இலகுவில் சொல்லிவிட  முடியாதிருக்கின்றது.

சுதந்திர காலகட்டமான அது ஒரு விழிப்புணர்வின் அருட்டுணர்வைக் கொண்டிருந்ததென்பது உண்மையே. முக்கியமான சில ஆக்கங்கள் தோன்றினவென்பதையும் மறுக்க முடியாது. ஆனால் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்பதன் அடையாளம் ஆழமாக அப் படைப்புகளில் பதிவாகவில்லை என்பது எனது அபிப்பிராயம்.

சமூகத்தின் சாதி சார்ந்த அநீதிகளுக்கும், பொருளாதாரம் சார்ந்த ஏற்ற இறக்கங்களுக்கும் எதிரான பதிவுகள் பெரும்பாலும் அவற்றில் ஏதுமில்லை என்னும் அளவுக்கு மிக அருந்தலாகவே அவை படைப்பாளிகளால் கையாளப்பட்டு இருக்கின்றன. அதற்கான ஒரு காலவெளி இனிமேல்தான் தோன்றவேண்டி இருந்ததுபோலும்.

கவிதைகளில் இல்லாதபடி சிறுகதைத் துறையில் மூன்று பெண் படைப்பாளிகளின் படைப்புகள் ‘மறுமலர்ச்சி’யில் இடம்பெற்றிருப்பது சிறப்பானது.

மறுமலர்ச்சி இதழ்களின் அறுபத்துநான்கு சிறுகதைகளில் அதன்  சிறுகதைத் தொகுப்பாளர் செங்கை ஆழியானின் தேர்வுகளைவிட இன்றைய ஒரு வாசகனின் தேர்வுகள் வேறாக அமையக்கூடும். எந்தவொரு தொகுப்பாளருடனும்கூட இவ்வித்தியாசங்கள் தவிர்க்கப்பட முடியாமலேதான் இருக்கும். அதற்கொப்ப எனது தேர்வுகளும் வித்தியாசமானவையாகவே இருக்கினன்றன.  என் தேர்வில் அடங்கியவை  தியாகராஜனின் ‘முதலிரவு’, எம்.எஸ்.கமலாவின் ‘நவயுவன்’, முதலியார் குல.சபாநாதனின் ‘சுவர்க்க யாத்திரை’, சம்பந்தனின் ‘அவள்’  மற்றும் இலங்கையர்கோனின் ‘மேனகை’ கதைகளே. இவை கதைகளின் ரசனை சார்ந்தன்றி அவற்றின் கரு, அதை விபரிக்க எடுத்தாண்ட நடை, கதையின் கட்டுமானம், அதில் புதிதாக எதையாவது செய்துவிடவேண்டுமென்ற படைப்பாளியின் ஆர்வம் காரணமாக தேர்வாகியவை. இவற்றுடன் சு.வே.யின் ‘நிலைகேடு’, ‘மேகத்தின் காதல்’  போன்ற சில உருவகக் கதைகளையும் முக்கியமானவையாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

            ‘முதலிரவு’ கதையில், காதலியே மனைவியானபோதும் அவள் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது குறித்த மன விசாரமும், சுய பேதலிப்பும், முதலிரவே நரகமாகிப் போவதும்தான் விபரிக்கப்படுகின்றன. வரன்முறையான தமிழின் உரைநடையை மீறிய மொழியில் கதை நகர்த்தப்பட்டிருப்பதும், அக்கால தமிழ்ச் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ‘ரகசிய’ விஷயத்தினைப் பேசுபொருளாக எடுத்திருப்பதும் சுட்டி இதை வித்தியாசமான கதையாக எடுத்துக்கொள்ளலாம். கு.பெரியதம்பியின் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது’ என்ற கதையும் யாழ்ப்பாணச் சமூகத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த கதைதான். பிற்காலத்தில் எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ நாவலுக்கான உந்துவிசை இங்கிருந்து தொடங்குகிறது எனக் கொண்டாலும் தப்பில்லை.

‘நவயுவன்’ கதை ஏற்கனவே தமிழில் முயற்சிக்கப்பட்ட வடிவமானாலும் எம்.எஸ்.கமலாவின் இக் கதை இலங்கையில் துணிந்து பரீட்சார்த்தமாய்ப் பயிலப்பட்டிருக்கிறது. இவ்வகையான முயற்சிகள் ஒரு பெண் படைப்பாளியிடமிருந்து வெளிப்படுவதும், அதில் அவர் கணிசமான வெற்றியடைவதும் கவனிப்புப் பெறவேண்டியவை. பாத்திரங்கள் வாயிலாகச் சொல்லப்பட்ட சம்பவங்களின் மூலம் கதை கட்டுமானமாகியிருக்கின்றது. அவ்வப் பகுதிகளுக்கு தலைப்புகள் இடப்பட்டவை சுயமான புனைவு முயற்சியின் அடையாளங்கள்.

முதலியார் குல.சபாநாதன் கதாசிரியராக அறியப்பட்டவரில்லை. அவரது ‘சுவர்க்க யாத்திரை’யென்ற இக் கதையோடு பிற நாடோடிக் கதை ஆக்கங்களும் ‘மறுமலர்ச்சி’யில் உண்டு. ஆனால் இது கிராமிய அல்லது நாடோடிக் கதையென எதுவாக இருந்தாலும் அதன் வடிவங்காரணமாக முக்கியமான கதையாகப் படுகிறது எனக்கு. பெரும்பாலும் இவ்வகைக் கதை சொல்லல் முறையானது ரசனையென்கிற ஓரம்சத்தில் மிகவும் இக்கட்டான நிலையை ஒரு படைப்பாளிக்கு ஏற்படுத்தக்கூடியது. மிக நீண்ட பத்திகளில் கதை சொல்லலென்பது ஒரு வடிவ உத்தியாக இருக்கிறவேளையில் அதுவே ரசனைக் குறைவுக்குக் காலாகவும் அமைந்துபோகிற வாய்ப்புண்டு. தன் நடையில் மிகுந்த நம்பிக்கை இல்லாத ஒரு சமயத்தில் படைப்பாளிக்கு இது சோதனையாகிவிடும். ‘சுவர்க்க யாத்திரை’யை அந்த ரசனையில் குறைவுபடாது, சிலவேளை ஒரு பக்கமளவு நீண்டு செல்லும் பத்திகளை அமைத்து, கதையை நகர்த்தியிருக்கிறார் குல.சபாநாதன். சிறிய கதைதான் என்றாலும் மொழியும் நடையும் கட்டமைப்பும் தோற்றுவிடாத படைப்பு.

தமிழ்ப் புனைகதை உலகில் நாவலின் பின் சிறுகதை தோற்றமெடுத்து நாவலைவிடவுமே வீச்சுப் பெற்றதாக ஆகியிருந்த காலப் பகுதி அது. மணிக்கொடி இதழ் தோன்றி அதற்கான களத்தை உருவாக்கிக்கொடுத்தது. தனிமனித அகநிலை உணர்வுகளை அதிகமும் வெளிப்படுத்திய மௌனியின் கதைகள் அதே காலப்பகுதியில்தான் வெளிவந்தன. அந்த வீச்சு இலங்கையில் வெகுவாகப் பரவவில்லையென்றாலும், முயற்சிகள் இருந்திருந்தன. சம்பந்தனின் ‘அவள்’ சிறுகதை அத்தகையது. அது கையாண்ட மொழி இலங்கைத் தமிழ் உரைநடைக்குப் புதியது. இதுவே இனி வரப்போகும் நாவல், சிறுகதைக் காலத்திற்கு செல்நெறியையும் காட்டியது என்பது எனது கருத்து. எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்ற படைப்பாளிகளின் சுயமாகத் தேர்ந்த நடைகளுக்கு முன்னுதாரணம் வகுத்துவைத்த நடையுமாகுமது. இலங்கைத் தமிழிலக்கியத்தில் இனி வரப்போகும் சிறுகதைக் காலத்தின் தொடக்கத்தை இது நுணுக்கமாய்ச் சுட்டியதென்பது மிகையான கூற்றல்ல.

இனி கவனத்தில் வரும் மறுமலர்ச்சிச் சிறுகதை இலங்கையர்கோனின் ‘மேனகை’ ஆகும். ஏற்கனவே கலைமகள், சரஸ்வதி போன்ற தமிழக இலக்கியச் சஞ்சிகைகளில் எழுதி அனுபவம் கொண்டிருந்த இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம் போன்றவர்கள் இலங்கைத் தமிழிலக்கியத்தின் முதல் சால் பிடித்தோராவர். அந்த வகையில் ‘மேனகை’ முக்கியமான கவனிப்புக்கு உரியது.   

அகலிகைபோல மேனகை கதையும் பிரபலமான ஒரு புராணீகக் கதைதான். சைவ இலக்கியங்களில் அகலிகையைவிடவும் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாத்திரமும் அது. அகலிகை பெரும்பாலும் கற்பின் அடையாளத்தோடும், மேனகை பெரும்பாலும் காமத்தின் அடையாளத்தோடும் பயில்வாகியிருக்கிறார்கள். அகலிகை கதையை பல்வேறு எழுத்தாளர்கள் தம் புனைவின் திறம்பொண்டு பல்வேறு விதமாகக் கட்டியெழுப்பியிருந்தபோதும், நவீன தமிழிலக்கியத்தில் அகலிகை பிரபலம்பெற்றது புதுமைப்பித்தனால்தான். ‘சாபவிமோசனம்’ மற்றும் ‘அகலிகை’ என்கிற அவரது இரண்டு கதைகள் அகலிகைபற்றி வெவ்வேறு வாசிப்புக்களைத் தருகின்றன.

அந்த வழியில் இலங்கையர்கோனின் ‘மேனகை’ கதையும் தமிழிலக்கியத்தில் அழியாத தடத்தைப் பதிக்கிறது. அவரது ‘வெள்ளிப் பாதசர’த்தை விடவுமே ‘மேனகை’ கதை அடர்த்தியும் மறுவாசிப்பின் தடங்களும் கொண்டதென்பது முக்கியமானது.

மேனகைமேல் விசுவாமித்திர முனிக்கு தடுக்கலாற்றா விருப்பம் தோன்றிவிடுகிறது.  தானாகவே அவரை நெருங்கியிருப்பினும் அவள் ஒரு தருணத்தில் கர்ப்பமாகி அந்தரித்துப் போகிறாள். காம அனுபவிப்பின் பின் உக்கிரமான தவத்தில் முனி. ஆனாலும் ஒருபோது மேனகையையும் குழந்தையையும் அவருக்கு எதிர்ப்படவே நேர்கிறது. அது மாயையென்று விலகச் சொல்கிறது அவரது தவ வாழ்க்கை. ஆனாலும் மனிதனாய்ச் சில கணங்கள் நின்று உள்ளம் தடுமாறுகிறார் விசுவாமித்திரர். தனியே விடப்பட்ட குழந்தையையும் இறுதியில் அவர் விட்டே செல்கிறாரெனினும் அவரது உள்ளத்தின் தயக்கம், நியாயத்தின் குரல் யாவும் இலங்கையர்கோனால் சிறப்பாக, புதுமைப்பித்தனது அகலிகையளவு இல்லாவிடினும், ஒரு மறுவாசிப்பினளவுக்கான புதுமையோடு படைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின் உச்சபட்ச சாதனையை தன் மொழியாலும், நடையாலும், பார்வைக் கோணத்தினாலும் படைத்துவிட்டிருக்கிற சிறுகதை ‘மேனகை’.

அனேகமாக முப்பத்திரண்டு, நாற்பது பக்கங்களில் முடிந்துபோகிற சிற்றிதழ் ‘மறுமலர்ச்சி’. தன் ஆண்டு மலரை ‘ஆண்டுப் பேரிதழ்’ என அது அடையாளப்படுத்துகிறது. அவ்விதழ் மட்டும் ஐம்பத்து நான்கு பக்கங்களைக் கொண்ட பெரிய இதழாக வெளிவந்துள்ளது. இந்தக் குறைந்த பக்க எண்ணிக்கையில் சிறிய சிறிய சிறுகதைகளாக அது பிரசுரித்திருக்கிறது. சிறுகதைகளுக்கு அச்சிற்றிதழ் பொறுத்தவரை எழுதாத பக்கக் கட்டுப்பாடுகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. கடைசி இதழ்களில்மட்டும்  நீண்ட சிறுகதைகளாக சில வெளிவந்திருக்கின்றன. கு.பெரியதம்பியின் ‘மனமாற்றம்’, வரதரின் ‘தையலம்மா’ ஆகியவை அவ்வாறானவை.  ஆனாலும் இருபத்து மூன்றாம் இதழில் தொடர்ந்திருக்கவேண்டிய தையலம்மா கதையின் பக்கங்கள் தொகுப்பில் இல்லை. காட்சிரூபப்படுத்தும் விஷயத்தில் வெற்றிகொண்ட கதையாக இது அமையமுடியும். வடிவ முழுமையும் தொகுப்பில் இல்லாது போனமை துர்ப்பாக்கியம்.

சு.வே.யின் இரண்டு உருவகக் கதைகளும், சில ஆண்டுகள் பின்னால் கிளர்ந்த உருவகக் கதை எழுச்சியின் முன்னோடிகளாகக் காணப்படமுடியும். வாரப் பத்திரிகைகள் சஞ்சிகைகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அக்காலத்தில் உருவகக் கதைகளைப் பிரசுரித்தன. சஞ்சிகைகளுள் இதனை முதன்மையான இயக்கமாகவே முன்னெடுத்தது ‘இளம்பிறை’.

‘உணர்ச்சி ஓட்டம்’, ‘வென்றுவிட்டாயடி ரத்தினா’ ஆகிய வரதரின் தொடர்கதைகளில் எதுவித முக்கியத்துவத்தையும் நான் காணவில்லை. அக்காலத்தில் வெளிவந்த வேறு பத்திரிகைகளின் தொடர்கள்போல் பத்தோடு பதினொன்றுதான் அவை.

மற்றும்படி தனக்கான எழுத்தாளர் வட்டமொன்றினை உருவாக்கிவிட்டதே ‘மறுமலர்ச்சி’யின் முக்கியமான சாதனையாகக் கொள்ள முடிகிறது. அது பின்வரும் காலகட்டங்களில் முதன்மையாய்க் கொள்ளக்கூடிய படைப்புகளுக்கான ஆதாரத்தைக் கொண்டிருந்ததாயும் நம்புகிறேன். ஓர் எதிர்நீச்சலில் ஒப்பீட்டளவிலான தன் குறுகிய காலத்தில்  ‘மறுமலர்ச்சி’ சாதித்தவை மதிக்கப்படவேண்டியனவாகும்.
0   

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி