யாருடன் உரையாடி மனமாறல்கூடும்?

எப்படியெல்லாம் தொடர்ந்தேர்ச்சியாக இது நடக்கிறது? வாழ்வின் மீதான தன் அதிகாரத்தை காலதேவன் இப்படித்தான் நிலைநிறுத்துகின்றானா?

நேற்றுப்போல் இருக்கிறது, கவிஞர் திருமாவளவனின் மறைவு. இப்போது… வெ.சா! தாங்குவது சிரமமாகவே இருக்கிறது. வாழ்க்கையை… கழியும் நாட்களை… அவற்றின் கழியும் விதங்களை எண்ண மனது அவாவி நிலைநிற்க மறுத்துச் சலிக்கிறது.

2003இல் நான் தமிழகத்தைவிட்டு இலங்கை புறப்படும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் வெ.சா.வுக்கும் நிறைந்த தொடர்பு இருந்தது. அப்போது அவரது வீட்டுக்கு அண்மையில் மடிப்பாக்கத்தில்தான் நானும் குடியிருந்தேன். கூட்டங்களுக்கு கூடிச் செல்வதிலிருந்து ஓய்வுநேரங்களில் சந்தித்து உரையாற்றுவதுவரை வாரம் தவறாமல் நாங்கள் ஒரு தொடர்பில் இருந்திருந்தோம். நான் இலங்கையிலிருந்து கனடா சென்ற பிறகும் எங்கள் தொடர்பு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் இருந்துகொண்டேயிருந்தது. இறுதியாக முகநூலிலும். 

மடிப்பாக்கத்தில் இருந்த இறுதி நாட்களில் அவரது மனைவியின் பிரிவு அவரை வெகுவாக வாட்டியிருப்பினும், பெங்களூரு சென்றபிறகு அவர் திடமாகவே இருந்ததாகத்தான் தெரிந்தது. 2013ல் கனடாவிலிருந்து நான் இந்தியா சென்;றபோது அவரை அவரது பெங்களூரு கும்பகுரா வீட்டில் சென்று சந்தித்து நீண்டநேரம் உரையிருந்தேன்.

திருமாவளவன் சுகவீனமுற்ற விஷயம் தெரிந்து உடனடியாக என்னுடன் தொடர்புகொண்டு விபரம் விசாரித்தார். அப்போது நான் லண்டனில் நின்றிருந்ததால் விபரம் விசாரித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு கனடா நண்பர்களுடன் தொடர்புமேற்கொண்டிருக்கையில் திருமாவளவன் காலமாகிவிட்டதை அவரே தெரிவித்து மிகவும் துக்கப்பட்டார்.
இலங்கை சென்று இந்தியாதான் வருகிறேன், வீட்டில் வந்து சந்திக்கிறேன் என்றேன். வாருங்கள், பேசினால் மனது சுகமாகவிருக்குமென்றார். 

இன்று அவரில்லை. அவரில்லாத வெறுமையை நான் யாருடன் உரையாடி மனமாறல்கூடும்?

அவரிடமிருந்து பண்புகளாகவும், விஷயங்களாகவும் நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். தனக்கு விரும்பமில்லாதவர்களுடனும் எனக்கிருந்த நட்பு தெரிந்திருந்த வகையிலும் மனம் மாறுபடாமல் என்னோடு பழகியவர் அவர். அவரைப்பற்றி அவருக்கு விருப்பமில்லாத அந்த மனிதர்களுடனும் நான் உரையாட முடியும். ஆனாலும் அவரை இழந்த துக்கத்தைமட்டும் எனக்குள்ளாகவே மறுகிமறுகித்தான் நான் கரைக்க முடியும். அவரது ஆன்மா சமாதானத்தில் வாழ விழைகிறேன்.


தேவகாந்தன்


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி