கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு)
முற்குறிப்பு 1
எட்டுத் தொகை நூல்களுள் 'கற்றறிந்தார் ஏற்றும் கலி'யென உரைக்கப்படுவது கலித்தொகையாகும்.
முல்லை குறிஞ்சி மருதம் என்ற ஒழுங்கில் சொல்லப்படும் மரபானது மீறப்பட்டு, பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என்ற திணை ஒழுங்கில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
பாலைக் கலியை பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியை கபிலரும், மருதக் கலியை இளநாகனும், முல்லைக் கலியை நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர் என்பது பொது வழக்கு. ஆனால் புலவர் நல்லந்துவனாரே இவ்வைந்து திணைகளையும் பாடினாரென்பார் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை (1887). இதை கே.என்.சிவராஜபிள்ளையும் எஸ்.வையாபுரிப் பிள்ளையும் ஆதரிப்பர்.
இது எப்படியாயினும், கலித்தொகையின் ஒவ்வொரு திணையையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் பாடினர் என்பதும், அதில் நெய்தற் கலியைப் பாடிய நல்லந்துவனாரே இவ் ஐந்து திணைகளையும் தொகுத்தாரென்பதுமே அதிக வழக்காறாய் உள்ளது.
இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதென்பதே தமிழறிஞர் பலரது கருத்தாக இருக்கிறது.
கலித்தொகைப் பாடல்களின் கற்கை மிக இனிய அனுபவங்களைக் கொடுக்கக் கூடியது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் பாலைக் கலியை ஊன்றிக் கற்ற நேரத்தில் அதில் என்னை ஈர்த்த பாடல்களில் முக்கியமானவற்றிற்கு ரசனைக் குறிப்பு 'ஈழநாடு' வாரமலரில் எழுதியிருக்கிறேன்.
சேர்த்து வைத்தவை போரால் தொலைந்துபோக மிக்க பிரயாசைப்பட்டுத் தேடியதில் சில ரசனைக் குறிப்புகளைக் கண்டெடுக்க முடிந்தது. அவை என் வலைப் பூவில் பதிவேற்றம் கண்டுள்ளன.
இப்போது கலித்தொகை மீண்டும் என் கையில் கிடைத்துள்ளது. வேளையுள்ள போதுகளில் என் கலித்தொகைக் கற்கை தொடரவே செய்யும். அப்போது என் ரசனையில் படும் பாடல்களுக்கு நிச்சயமாக என் வலைப்பூவில் ரசனைக் குறிப்புரைகள், விளக்கக் குறிப்புகள் எழுதவே செய்வேன்.
எந்த ஒழுங்கில் என்பதை காலமே நிர்ணயிக்கும்.
Comments