கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு 2)

 

முற்குறிப்பு 2

 

எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆதியனவற்றை ‘சங்கப் பனுவல்கள்’ எனக் குறிப்பிடுவதிலும், ‘பாண் பாட்டு’ என்று குறிப்பிடலே மிக்க பொருத்தமானது என்பார் பேராசிரியர் க.கைலாசபதி. அத்தனைக்கு அவை பாணர் பாடல்களாக – வாய்மொழி இலக்கிய பாரம்பரியம் கொண்டவையாக, இருந்தன.

மேலும் வாய்மொழி இலக்கிய அடையாளங்களாக கீழ்நிலை மக்களின் அழைத்தல், உசாவல் பண்புகளை இப் பாண்பாட்டுக்கள் பொதுவில் கொண்டிருப்பனவாயினும், கலித்தொகையில் அவற்றை கூடிய அளவில் ஒருவரால் கண்டுகொள்ள முடியும்.

கலிப்பாட்டில் இயன்றிருப்பதனால்  கலித்தொகையென ஆகிய இத் தொகை நூல், நேர்நேர் உரையாடலும், நாடகத் தமிழ்ப் பண்பினையும் கொண்டதாய் இருப்பது மிக்க ரசனையினை வாசகர்க்கு அளிக்கின்றது.

கலித்தொகையிலுள்ள முதற் பகுதியான பாலைத் திணை பிரிதல் ஒழுக்கத்தைப் பேசுகிறது. அது பொருள் வயிற் பிரிவு, போர் வயிற் பிரிவு, கல்வி வயிற் பிரிவென்ற காரணங்களில் நிகழுமாயினும், பாலைக் கலியில் அதிகமும் பொருள் வயிற் பிரிவே பேசப்படுகிறது.

இதிலுள்ள முப்பத்தைந்து பாட்டுக்களும் தலைவன் பொருள் தேடும் முகத்தான் பிரிந்துசெல்ல நினைப்புழி, அவனை பல்வேறு காரணங்களையும் கூறி தோழி அல்லது தலைவி தடுப்பதாக இருக்கின்றன. பிரிந்து சென்றிருப்பவன் திரும்பிவர எடுக்கும் காலதாமத்தையும் இப் பிரிவொழுக்கம் சிறிது பேசுகிறது. துன்பச் சுவையே இப் பிரிவொழுக்கத்தில் தேங்கியிருப்பதனால், வாசகனின் இதயத்து அடியாழம்வரை பாடல்களின் அர்த்தம் வியாபகம் கொள்கின்றது.

நான் கலித்தொகையில் மிகுந்த ரசனையுள்ள பல பகுதிகளைக் கண்டிருக்கிறேன். ஒரு தோழி தன் தலைவியின் காதலன்/ கணவன் பொருள் தேடிச் செல்ல முனைகையில் இளமையும் காமமும் என்றுமிருப்பவையல்ல, அவையவையும் உள்ளபோதே அனுபவிக்க வேண்டியவையெனக் கூறி அவனது பிரிவைத் தடுக்க முனைவாள். அவன் அவள் பேச்சை ஒப்பி செலவு தவிர்க்கும்பொழுது அதை ‘நம் காதலர் பிரியாதிருக்க உடன்பட்டார்’ என தலைவியிடம் கூறுவாள். சில பாடல்களில் நம் காதலர் என்பதற்குப் பதிலாக ‘உன் காதலர்’ எனவும் வருகிறதுதான். இன்று பேதமாய்த் தோன்றும் இந்த வித்தியாசம், அக் காலப் பாடல்களின் பொதுவான பண்பாக இருந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

பாண்பாடல்களின் இவ்வாறான விளிப்புகளுக்கும் சுட்டுகைகளுக்கும் வேறு காரணங்கள் பண்பாட்டு ரீதியாகவோ, இலக்கண ரீதியாகவோ சொல்லப்பட்டுள்ளதாக நான் அறியவில்லை.

ஆயினும் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கலியைப் படித்த வேளையில் என்னைச் சிறிய இடைஞ்சல் செய்த இவ் வினா, இப்போதைய வாசிப்பிலும் என்னுள் தோன்றவே செய்தாலும், இன்று தோன்றும் இப் பதிலால் என்னால் அமைதிகொள்ள முடிகிறது.

 

 

 

Comments

Popular posts from this blog

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ