கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் 3

 

ரசனைக் குறிப்பு; 1

 

மரையா மரை கவர மாரி வறப்ப

வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடை செல்வோர்

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்

உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்கு

தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந் துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்

என்னீர் அறியாதீர்போல இவை கூறல்?

நின்னீரல்ல, நெடுந்தகாய்! எம்மையும்

அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு.

துன்பம் துணையாக நாடின் அதவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?

(பாலைக் கலி 5)

 

மாரி பொய்த்துப் போயிற்று.                                                                                                                   

கற்றாழை தவிர வேறு தாவர வகை கண்ணிலும் காணவில்லை.

தாகம் மேலிட்ட காட்டுப் பசு அந்த கற்றாழையைத்தான் சப்பி நாக்கு நனைக்கிறது.

அவ்வாறானது பாலை நிலக் கடு வழி.

அந்த வழியில் ஓங்கிய மலைகள் இருக்கின்றன.

அதிலுறைந்திருக்கும் ஆறலை கள்வர்,

அவ்வழிச் செல்வோரை அம்புகளால் தாக்குவர்.

அவ்வாறு தாக்குண்டவரின் காய்ந்துபோன தொண்டைக்கு

ஒரு சொட்டு நீர்கூட அங்கே கிடைப்பதில்லை.

அத் துயரில் வடியும் கண்ணீரே கடைசியில் நாக்கை நனைக்க அங்கே கிடைக்கக்கூடிய தண்ணீராய் இருக்கும்.

 

என,

என்னை அறியாதீர்போல இவையெல்லாம்

எவ்வாறு நீர் கூறமுடியும்?

அது உமக்குரிய பேச்சு அல்லவே.

எம்மையும் உடனழைத்துச் செல்லும்.

துன்பத்தில் பங்கு கொள்வதிலும் பார்க்க

வேறு இன்பம் எமக்கு என்ன இருக்கிறது?

 

000

Comments

Popular posts from this blog

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ