நமது முகங்களை நோக்கி... (கனவுச் சிறையின் மதிப்புரை) எஸ்.எல்.எம்.ஹனிபா

 

சென்ற மாதம் நமது ஆளுமை மிக்க படைப்பாளிகளில் ஒருவரான அன்பன் தேவகாந்தனின் கனவுச் சிறை என்ற மகாநாவலை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாவலுக்கான ஒப்புநோக்கும் பணியை என்னிடம் காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் கையளித்த போது, பெரும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும், உள்ளே ஒரு தயக்கம் கண் சிமிட்டியது. காரணம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாவல் இலக்கிய வரலாறும் அதனால் பெற்றுக் கொண்ட ஆக்கினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

அந்த அனுபவங்களின் ஆக்கினைகளுடன்தான் நானும் எனக்கு உதவியாக என் அருமை அன்பன் இரா சிவலிங்கம் (ஆசிரியர், கண்டி திருத்துவ கல்லூரி) அவர்களையும் இணைத்துக் கொண்டு இருவருமாக மாறி மாறி வாசிக்கத் தொடங்கினோம். தேவகாந்தனின் அழகிய மொழியும், கதையை அவர் நகர்த்திச் செல்லும் பாங்கும் ஒரு தீர்க்கதரிசியின் எதிர்வுகூறலும் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புத்தம் புதிய சாளரத்தைத் திறந்து காட்டிற்று.

கனவுச் சிறை 982 பக்கங்களில் 5 பாகங்களாக ஒரு மகா நாவலாக விரிகிறது. 1981-83 ஆகிய கால கட்டங்களின் கதையை "திருப்படையாட்சி" எனும் மகுடத்தில் முதலாம் பாகம் எடுத்தியம்புகிறது. அதேபோல் 1985-87 காலக் களங்களின் ஊடாக இரண்டாம் பாகமான வினாக்காலம் விரிகிறது.

1989,91,93 ஆகிய காலத்தின் கதையை மூன்றாம் பாகமான அக்கினித் திரவமும்... முறையே நான்காம் பாகமாகிய 'உதிர்வின் ஓசை'யும், ஐந்தாம் பாகமாகிய 'ஒரு புதிய காலம்' உம் 2001ம் ஆண்டு வரையிலான தமிழர் தம் துயர வாழ்வை எடுத்துச் சொல்கிறது.

கனவுச் சிறையின் முதலாம் பாகம் 1998ல் வெளிவந்த போது, அதற்கான முன்னுரையில் தேவகாந்தன் இவ்வாறு சொல்கிறார்:

"1996-97ல் ஒரு நிர்ப்பந்த படுக்கையில் நோய் என்னை அழுத்தி விட்ட போது, மன ரீதியான என் சஞ்சாரங்களில் இலங்கைத் தமிழரின் அகதி நிலைமைகள், புலப்பெயர்வுகள், சீரழிவுகள் யாவும் பூதாகாரமாய் வந்து பயமுறுத்தின. அவர்களின் சமூக, சமய, பொருளாதார நிலைமைகளும், சமகால அரசியலும் வாழ்வியல் சத்தியத் தரிசனங்களாய் சித்தித்தன. தரிசனம் என்பது இலக்கியத்தில் ஒரு மகாவாக்கியம்" என்கிறார் தேவகாந்தன்.

அந்த சத்திய தரிசனம் சாமானியர்களுக்கு ஒரு போதும் சித்திக்காது. அவரின் 20 ஆண்டு கால சத்திய தரிசனம் இங்கே கனவுச் சிறை என்ற பெயரில் மகா நாவலாக விரிய, தேவகாந்தன் அத்தகைய சித்தியும் முக்தியும் பெற்ற கலைஞனாகி விஸ்வரூபம் கொள்கிறார்.

1981ன் ஆணி மாதத்து ஒரு அதிகாலையில் நயினை ஆலயத்தில் மணி ஒலிப்பதோடு இந்த நாவல் தொடங்குகிறது. அதே போல், 2001ன் ஒரு வெள்ளாப்பில் நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே எழும் மணி நாதப் பெருக்கோடு அது முடிவடைகிறது. 2001ல் நாவல் முற்றுப் பெற்றாலும் அதன் பின்னரான மூர்க்கம் கொண்டெழுந்த போர்க்கால வாழ்க்கையையும் தொடரும் துயரங்களையும் இன்னும் ஒரு படைப்பாக வேண்டி நிற்கிறது கனவுச் சிறை. சொல்லித் தீராத பெருங் கதையாடலில் சிக்கித் தவிக்கும் தேவகாந்தனை காலந்தான் மீட்டெடுத்துக் கரைசேர்க்க வேண்டும்.

அவ்வப்போது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்த நாவலின் ஐந்து பாகங்களும் ஒன்றாக முழுமை பெற்று ஒரு மகாநாவலாக வெளிவர வேண்டும் என்ற தேவகாந்தனின் பெருங் கனவு, இங்கே காலச்சுவடு கண்ணன் அவர்களால் கைகூடி வந்துள்ளது தமிழ் வாசகர்களாகிய எமது பாக்கியமே. குறிப்பாக ஈழத்து இலக்கிய உலகு திரு கண்ணனை சங்கையோடு நினைவு கூர்கிறது. தமிழகப் படைப்பாளிகளும் வாசகர்களும் நெற்றிப் புருவங்கள் மேலெழு நமது இலக்கிய முகங்களை நோக்கித் திரும்பும் நல்ல தருணமிது. நாமும் தேவகாந்தனைக் கொண்டாடுவோம், வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!

குறிப்பு: நாவல் 2015 சென்னை புத்தகச் சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நாவலைப் பற்றி எழுத நிறையவே விடயங்கள் இருந்தாலும், இவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதுவதில் நாவலைப் படித்ததனால் ஏற்பட்ட எனது பரவச நிலையை சற்று தணித்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி