'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)

“கனவுச்சிறை”

******

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஒன்றே போதும் அவரைத் தலையில்வைத்துக் கொண்டாட.

இதுவரை வெளிவந்த ஈழப்போரட்டம் பற்றிய புனைவுகளில் இது உச்சம் என்றால் அது மிகையேயில்லை. One and Only!

இந்த நாவல், இன்றுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை, ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு துன்பியல்.

ஈழப்போராட்டத்தையும், அது கருக்கொண்ட நாளில் இருந்து வளர்ந்து, பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து, அதிர்ந்து ஓய்ந்த காலம்வரை நாம் கடந்துகொண்ட வாழ்வையும், பிரளயங்களையும், வலிகளையும், இழப்புக்களையும், கனவுகளையும் இத்தனை ஆழமாக, அழகுற, சரித்திரச் சான்றுகளைப் பிசைந்து, உயிரூட்ட தேவகாந்தனால் மட்டும்தான் இதுவரை முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இது 200 - 300 பக்க நாவல் அல்ல. ஆயிரத்திற்கு ஒரே ஒரு பக்கம் குறைவான ஈழப்போராட்டத்தின் சாட்சியம்.

அத்தனையும் இரத்தமும், எலும்பும் கலந்த சதை. குருதியின் வெடில் மூக்கில் ஒட்டிக்கொண்டு நாட்கணக்கில் மனதை அலைக்கழிக்கிறது. பல காதாபாத்திரங்களுடன் பெரு நட்புப் பூண்டிருக்கிறேன். பலரது நாட்குறிப்புகளை இரகசியமாக வாசித்து இந்த நாவலை எழுதினாரா தேவகாந்தன்?

சாதாரணமான நனைநாதீவு வாழ்க்கையில் தொடங்கி, இந்தியா, தென்னிந்திய இயக்க/அகதி வாழ்வு, இயக்கப் பிளவுகள், ஐரோப்பா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பாங்கொக் என்ற எம்மவர்களது புலப்பெயர்வின் பெருந் துன்பியற் காதைகள், இலங்கை அரசியலில் புத்த சங்கங்களின் தாக்கம், புத்த சங்கங்களை கடந்தும் புத்தபெருமானின் சிந்தனைகளைத் தேடும் பௌத்தத்தின்வேர்களைத் தேடும் நனாதீவு விகாராதிபதி, இலங்கையின் பழஞ்சரித்திரம், இந்து சமயத்திற்கும் புத்த சமயத்திற்குமான தொடர்பு, மக்களுக்காய் தன்னையும் வாழ்கையையும், இழக்கும் (தமிழ், சிங்கள) மனித மனங்கள், இனம் மதம் கடந்த காதல், போராட்டத்தினால் சிதைவுற்ற வாழ்வும் கனவுகளும், அழிவுறும் சமூகம், ஜெ.வீ.பி கலகம், இலங்கையின் பிற்கால அரசியல், இன்னும் பல என்று கடந்த 40 ஆண்டுகாலத்தை புனைவுகளின் ஊடாக சொல்வதே கனவுச்சிறை.

உண்மையில் இது புனைவே அல்ல.

இதுவரை வாசித்த ஈழப்போராட்டம்பற்றிய நாவல்களில் மிகவும் தனித்துவமானது, கனவுச்சிறை.

வாழ்நாளில் தவறவிடக்கூடாத, ஈழத்துப்போராட்டம்பற்றிய மிக முக்கிய நாவல்.

மிக முக்கியமாக, தமிழ்நாட்டுத் தோழர்கள் அறிந்திராத பலவிடயங்களை நாவல் பேசுகிறது.

தேவகாந்தனை இறுக இறுகத் தோளணைத்துக்கொள்கிறேன். கனடாவில், சந்தித்து நன்றி நவிலவேண்டியவர்கள் பட்டியலில் இன்னுமொருவர் இணைந்திருக்கிறார்.

'கனவுச்சிறை'யைத் தேடி வாசியுங்கள் நண்பர்களே!

***


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி