யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை)




வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியல் கொண்டவையெனச் சொல்லப்படுகிறது. யுத்தங்களும் தோல்விகளும் வெற்றிகளும் அதன் முழுஇடத்தையும் மூடிநிற்கின்றன. காதலும் காமமும் இவற்றின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்படுகின்றன. தோற்றவர் வடுக்களும், ஜெயித்தவர்  ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும், யுத்த ஆதிமூல காரணத்தின் தேடல் முற்றாக அதில் நிராகரிக்கப்படுகிறது அல்லது மாற்றி எழுதப்படுகிறது.

நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே. ஆயினும் வென்றவர் தோற்றவர்கள் பார்வைகளுக்கும் மேலான ஒரு கருத்துநிலையில் நின்று, விடுபட்னவற்றையும் மாற்றி எழுதப்பட்டனவற்றையும் மாற்றீடு செய்ய முடியுமென இன்று  கண்டறியப்பட்டுள்ளது.

இரு பகுதி மனிதரும் இதை இலேசுவில் கண்டுகொள்வதில்லை என்பது சோர்வு தருகிற விஷயமே. ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்களென்ற நம்பிக்கையோடு, இலங்கையின் சமீபத்திய நெடு யுத்தத்திற்கு சற்றொப்ப  பத்து வருஷங்களுக்கு முன்பான காலத்தில் எப்படி அதன் சமூக அரசியல் பொருளாதார நிலமைகள் முரண்நிலையில் கூர்மையடைந்து வந்தனவென்பதை தன் மூன்றாம் நோக்குநிலையில் கண்டறிந்தனவற்றை  தன் வாசகர் முன் வைப்பதை ஒரு தார்மீகக் கடமையாகக் கருதுகிறான் இந்த நாவலை ஆக்கியோன்.

நாவலாக சிறுகதையாக கவிதையாக கட்டுரையாகவென பல்வேறு வடிவங்களில் சமீபத்திய நெடுயுத்தத்தின் முன் பின்னான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நாவலில் அத்தகைய எந்த முயற்சியும் இல்லையென்பதை முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். இது யுத்தத்தினது அல்ல, யுத்தம் தோன்றியதின் கதை. காலகாலமாக இனங்களுக்கிடையில் முறுகல்நிலை உருவாகியதின் மூலக்கதை. 'கலிங்கு' 'கனவுச்சிறை' ஆகிய நாவல்களின் தொடர்ச்சியை ஒரு வாசகன் இங்கிருந்து காணமுடியும். அந்த ஒற்றை நெடுங்கதையின் ஒரு பாகம்தான் இது.
அதை  இவன்  பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஒரு கிராமத்து மண்ணின் பின்னணியில் சொல்லியிருப்பது  நிஜங்களின் தரிசனத்தில் நிகழ்ந்தது. எதார்த்தமான பாத்திரங்கள் சில உயிர்பெற்றமையும் இதனாலேயே  கூடிற்று.

‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ என்ற இதன் தலைப்பை நெடுயுத்தத்தின் முதலாவது அத்தியாயமென்ற அர்த்தத்தில் வாசித்துவிடவே கூடாது. The Prime Cause behind the War என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆம், இது யுத்தத்தின் பிரதான காரணத்தை  இனங்காட்ட முயலுகிற நாவல் மட்டுமே. ஆயினும் இதன் உரு வார்ப்பில் எத்தகைய சமரசமும் செய்துகொள்ளப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.
வாசியுங்கள். விமர்சனங்களுக்குக் காத்திருக்கிறேன்.

இலங்கையில் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக 2004இல் வெளிவந்த இந்த நாவலின் மீள்வருகையது அவசியத்தை உணர்ந்து ஆதி பதிப்பகம் மூலமாக முன்வந்த நண்பர் தில்லைமுரளிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தேவகாந்தன்
ரொறன்ரோ, கனடா
நவம்பர் 2018

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி