Woman in Gold - cinema

  Woman in Gold (2015)


யுத்தம் நிகழ்ந்த நிலங்களின் மனித வாழ்வெல்லாமே பாலை விதைத்த வறட்சியுடனேயே தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாரிய மனித சேதத்தை
விளைத்த இரண்டாவது உலக யுத்தத்தில் அழிக்கப்பட்ட மனித வளம் கணக்கிட முடியாதது. மீட்டெடுக்க முடியாதது. ஆனாலும் கலை மற்றும் உடமைகள் சார்ந்த வி~யத்தில் பறித்ததைத் திரும்பக்கொடுத்தல் என்ற ஒரு சட்டம் பல்வேறு மேற்குலக நாடுகளிலும் நடைமுறையில் வந்ததிலிருந்து பறிக்கப்பட்ட கலைச் செல்வங்களை, முக்கியமாக புகழ்பெற்ற குடும்ப ஓவியங்களை, திரும்பப்பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஓரளவு வெற்றிகரமாக நடந்தேறிவருகிறது.

இதுபற்றி ஓரளவு தொனிப்புக்கொண்ட திரைப்படங்கள் சில வெளிவந்திருப்பினும், இழந்த குடும்ப ஓவியத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பதுபற்றிய Woman in Gold திரைப்படம்போலவொன்று இதுவரை பார்வையாளன் கண்டிராதது.

இரண்டாம் உலக மகாயுத்த சமயத்தில் போலந்தில் நிகழ்ந்த கொடுமைகளும் அழிவுகளும்போல் பாதிக்கப்பட்ட நாடு வேறில்லையெனச் சொல்லமுடியும். ஆனாலும் பறித்ததை மீட்டெடுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அங்கே இல்லாதபடியால் பலரும், குறிப்பாக யூதர்கள், தாங்கள் இழந்தவற்றைத் திரும்பப்பெற முடியாத நிலையே அங்கு தொடர்கின்றது. ஆனால் ஒஸ்ரியா அப்படியல்ல. அதனால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் இழந்தவற்றைத் திரும்பப்பெறுவதற்கான முயற்சிகள் அங்கே அதிகமும் உருவாகியுள்ளன.
நாஜிகள் ஆக்ரமித்தபோது ஒஸ்ரியாவிலிருந்து தப்பியோடிய ஒரு யூத குடும்பம் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளின் பின் தானிழந்த குஸ்தாவ் கிளிம் வரைந்த பிரபலமான குடும்ப ஓவியத்தை எவ்வாறு திரும்பப் பெறுகிறது என்பதுதான் கதை.

கதை சொல்லப்பட்ட நேர்த்தியும், படத்தொகுப்பும், உரையாடலும் மிக அழகாக வாய்த்திருக்கின்றன திரைப்படத்தில். இதையொரு மிக உன்னதமான திரைப்படமெனச் சொல்லமுடியாதபோதிலும், பல்வேறு திரைப்பட அம்சங்களின் அமைவு இதையொரு முக்கியமான திரைப்படமாகவே ஆக்கியிருக்கின்றது. பிபிசி தயாரித்திருக்கும் இத் திரைப்படம் சைமன் கேட்டிஸின் நெறியாழ்கையில் வெளிவந்திருக்கிறது.  சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக உணர்ச்சிகளைத் தூண்டி சராசரி சினிமாவாக தாழ பல்வேறு சமயங்களில் முயன்றிருப்பினும், மரியா அல்ட்மன் பாத்திரத்தில் நடிக்கும் ஹெலன் மிரெனின் அற்புத நடிப்பினால் திரைப்படம் தூக்கிநிறுத்தப்பட்டிருக்கிறது.

உடைமைகளின், உயிர்களின் இழப்பின் வலி தெரிந்தவர்களுக்கு  மனரீதியான ஓர் ஆறுதலை இத்திரைப்படம் தருவதை ஒரு பார்வையாளனால் உணரமுடியும். இளம் வக்கீலாக வரும் ரயன் ரேனால்ட்ஸின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது.

000

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி