எனக்குப் பிடித்த சிறுகதைகள்


(இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்)

புலப்பெயர்வு, இடப்பெயர்வு, போரினதும் அது முடிந்த அழிவுகளின் மத்தியிலுமென பல்வேறுபட்ட கனத்த சூழ்நிலைமைகளிலிருந்து பெரிதாக நம்மிடையே இலக்கியம் பிறக்கவில்லையென பொதுவான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. இலக்கியப் பரப்பளவில் ஓரளவு இது உண்மையேயானாலும், ஆழமான பல சிறுகதைகளும், கவிதைகளும், எழுத்துகளும் இக் கடினங்களைப் பிளந்து பிறந்திருக்கின்றன என்பதை பெருமையாகச் சொல்லமுடியும். என் வாசிப்பில் அவ்வப்போது நான் எதிர்ப்பட்ட இவ்வகையான சிறுகதைகளை முதல்கட்ட முயற்சியாக எனது வலைப்பூவில் பதிவேற்ற எண்ணியதின் விளைவே ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள் (இலங்கையும் புலம்பெயர் நாடுகளும்)’ என்ற இந்தப் பகுதி.
தோசை வட்டமாக இருப்பதே இசைவும் இணக்கமும் கொண்டது போலவே சிறுகதைக்கும் அதன் வடிவம் முக்கியம். அதை மட்டுமே முதன்மைப்படுத்தி எனது தேர்வுகள் இருக்காதபோதும், படைப்பாளியோ பதிப்பகமோ செய்த வகைமைப்பாட்டினை ஒதுக்கி என் தேர்வு அமைவதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற சிறகதையின் புராதன வரையறைவுகளில் பெரிய உடன்பாடு எனக்கில்லை. அதுபோல் அவை முற்றுமுழுதாக ஒதுக்கப்படவேண்டியதில்லை என்பதிலும் எனக்கு உடன்பாடுண்டு. உள்மன உரையாடல், புறமன உரையாடல், கடித விவரிப்பு, நாட்குறிப்பு விவரிப்பு, சுயசரிதையின் துண்டு, அனுபவ பகிர்வு என ஆங்கில இலக்கியம் சிறுகதையின் பல்வேறு வகைமைகளைச் சொல்லுகிறது. இவற்றோடெல்லாம்கூட என்னால் உடன்பட்டுச் செல்லமுடியும். அனுபவப் பகிர்வினை சிறுகதையெனச் சொல்ல தமிழிலே தயக்கமிருக்கிறது. எல்லாவகைமைகளையும் உடன்பட்டே என் தேர்வு இங்கே அமையும்.

முதலில் நீண்ட நாட்களாக என் மனப்பரப்பில் இணைவான சந்தர்ப்பங்களிலெல்லாம் ஞாபகமாகிக்கொண்டிருக்கும் சிறுகதைகளிலிருந்து இதை ஆரம்பிப்பேன்.
1.
இறுதி அத்தியாயம்
-குமார் மூர்த்தி

நிலைக் கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை பார்த்தாள் சுமதி. முகம் லேசாகஉப்பி, கண்களுக்குக் கீழாகக் கருவளையமிட்டுக் கறுத்திருந்தது.முகத்தைப் பார்க்க சகிக்க முடியாமல் வெடுக்கென்று திரும்பிவிட்டாள். என்னவென்று விளங்கவைக்க முடியாத ஒரு சோகமும் படபடப்பும் முகிலின் நிழல்போல்கடந்து போனதை அவளால் உணர முடிந்தது. இரவுநெடுநேரம்வரையில் கண் முழித்திருந்தது காரணமாயிருக்கலாம் என மனதுக்குள் சமாதானப்படுத்திக்கொண்டாள்.

இரவு முழுவதும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வேட்டுச் சத்தங்கள் ஓய்ந்து காலைச் சூரியனின் கணகணப்புடன், வெறும் காக்கை குருவிகளின் கீச்சிடல் மட்டும் கேட்டது. இந்த அமைதி ஒரு வித்தியாசமான பிரக்ஞையை மனதில் ஏற்படுத்தியதும், பழக்கபட்டுப்போன வாழ்க்கையில் இருந்து விலகி வந்துவிட்டதுமாதிரி ஒரு உணர்வு வந்து உடல் சிலிர்த்துக்கொண்டது.‘சே! என்ன விபரீதம் இது? இடையில் வந்த இந்தச் சம்பவம் உணர்வோடும் உடலோடும் ஒட்டிக்கொண்டுவிட்டதா? மனிதன் ஒரு இசைவாக்கப் பிராணி என்பது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கிறது? திணிக்கப்படும் சம்பவங்களே பின் நியதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? சூழல் மனிதனுக்காகவா அல்லது மனிதன் சூழலுக்காகவா?’ உற்சாகமான காலைப்பொழுதேகளைப்பாக இருந்தது அவளுக்கு.

நேற்றிரவு வந்த நினைவு திடீரென மறுபடியும் வந்து மையமிட்டது. எதன்
அடிப்படையில் அந்தக்கருத்து தோன்றியிருக்கக்கூடும் என்பதைப் பலமுறையோசித்துப் பார்த்தும் பதில் குழப்பமாகவே இருந்தது. ஆனால் காரணகாரியமில்லாமல்  அந்த நினைவு உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் பதிந்து கிடந்ததை மட்டும் அவளால் தட்டிக் கழித்துவிட முடியவில்லை‘ஒருவேளை வீதியில் கிடந்த அந்த உடலைக் கண்ட நாளிலிருந்து வந்ததாகஇருக்கலாம். இல்லை அதை வீசிவிட்டுப் போன மனிதர்களைப் பார்த்ததில்இருந்து இருக்கலாம். அல்லது எந்த உணர்ச்சி பாவமும் இல்லாமல் அந்தஉடலைக் கடந்துபோன மனிதர்களைப் பார்த்ததிலிருந்து இருக்கலாம். அல்லது அதை வீசிவிட்டுப் போன மனிதர்களின் உணர்வுகளைப் பற்றியதாக இருக்கலாம். எது எப்படியோ,மரணமென்பது நிச்சயமானது.உண்மையானது. இறுதியானது. முடிவானதும் அதுதான். பஞ்சுப் பெட்டியில் வைத்துப் பூட்டினாலென்ன, புழுதியில் வீசியெறிந்தாலென்ன? இதயத் துடிப்பு நிற்பதுதான் இறுதியானது.’ அவளையும் அறியாமல் அவளது உள்ளங்கைநெஞ்சை அழுத்தியது. நெஞ்சக்கூடு லேசாகப் படபடத்தது. மறுபடியும்மனதின் உள்ளார்ந்த மூலையில் இருந்து ஏதோ ஒரு அழுத்த உணர்வு படிப்படியாகப் பெருகி, சர்வாங்கமும் வியாபித்தது. மயிர்க்கால்களைக்குத்திடவைத்து திடீரெனசுருங்கிக்கொண்டது. இவையெல்லாம் மருத்துவப் பட்டதாரியான அவள் ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாது முரண்பாடாகி, முறிந்து,பின்தொடர்ந்தது.

‘மரணம் என்பது உடலின் இறுதி வடிவமாக இருக்கலாம்.அல்லது எண்ணத்தின் முற்றுப்புள்ளியாக இருக்கலாம். ஆனால் இது நிகழ்வதுஒன்றுதான் சாத்தியமானது, நிச்சயமானது. அது இன்றாகவும் இருக்கலாம்.என்றாகவும் இருக்கலாம். ஆனால் இல்லாமல் இருக்க முடியாது. அதைநிர்ணயிப்பது யார்? அருவமான அப்பாற்பட்ட சக்தியா? உருவமானகண்ணுக்குத் தெரிந்த…’

திடீரென குழந்தை வீரிட்டுக் கத்தியது. அரக்கப் பரக்க எழுந்து குழந்தையைவாரி அணைத்துக் கொண்டாள். குழந்தைக்கு லேசாகஉடம்புதகித்துக்கொண்டிருந்தது.‘வேண்டாம்,இன்றுஎங்கும்போக வேண்டாம். குழந்தைகளுடனேயேஇருக்கவேண்டும். என் குழந்தைகள், என் செல்வங்கள் .’ அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்து கண்களில் பனித்தது. குழந்தைகளைக் கவனித்து எத்தனை நாளாகிவிட்டது! நினைத்துப் பார்த்தாள். ஏக்கம் பெருமூச்சாக வெளிவந்தது. இந்தப் பொறுப்பைஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இப்படி என்பதுமட்டும்அழியாமல் நினைவில் வந்தது. அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது கூட ஒரு தற்செயல் சம்பவம்தான்.

‘இன்று எமது சமூகம் குழம்பிப் போயுள்ளது. சரி எது, தவறு எது என்றுபிரித்துணர முடியாதபடி சகலதும் தாறுமாறாக்கப்பட்டுள்ளது. நாங்களும்அப்படித்தான். இப்போது நம்முள் உள்ள முக்கிய கடமை நிகழ்வுகளை உள்ளபடி பதியவைத்து அடுத்த தலைமுறைக்கு அறியத் தருவதுதான்’ என்று அவள் கூறிய கருத்தை சக ஆசிரியர்களில் சிலர் ஏற்றுக்கொண்டு அவளையே பொறுப்பேற்க வைத்துச் செயல்பட்டனர். இப்போது அது இறுதிஅத்தியாயத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் தயாரிப்பில்தான் இரவு நெடுநேரம்வரையில் இருந்தாள். அந்த முக்கியத்துவமெல்லாம் இப்போது குழந்தையின் அழுகையில் கரைந்து போயிற்று.

அவளின் அணைப்பில் குழந்தை மீண்டும் தூங்கத் தொடங்கியதும் மகன் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அது காலியாக இருந்தது. ‘எங்கு போயிருப்பான்?’ கூப்பிட்டபடியே வெளியில் வந்து பார்த்தாள். முற்றத்துப்பதுங்கு குழிக்குள் கையில் ஒரு பொம்மைத் துப்பாக்கியை வைத்து கவனமாக விளையாடிக்கொண்டிருந்தான் அவன். முதலில் அதைப் பறித்து முறித்து எறிந்துவிடவேண்டும் என்று கைகள் குறுகுறுத்தன. பின்நிதானித்துக்கொண்டாள். ‘இது ஒரு சூழ்நிலையின் தாக்கம். வெளிப்புறக் கவர்ச்சி. இவனைக் கண்டிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வந்துவிடப் போவதில்லை. இன்று இது இளம் சமுதாயத்தின் மனதில் ஆழப் பதிந்துவிட்ட நோயாகிவிட்டது. ஆண்டவனே! இது எங்கு போய் முடியப் போகிறது?’ ஒரு கணம் கண்களை இறுக மூடிக்கொண்டாள். உலகம் தலைகீழாகச் சுற்றியது.

அவனை மெதுவாக அணைத்துவந்து படிப்பு மேசையின் முன் இருத்தி புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். அவளுக்கு தலை, பெரும் பாரமாய்க் கனத்தது. புருவத்தை மேலும் கீழும் நீவி விட்டுக்கொண்டாள். சுற்றிவர எரியும் நெருப்புக்கு நடுவில் நிற்பதுபோன்ற தவிப்பு அவள் உணர்வில்இருந்தது. தாய் கொண்டுவந்து கொடுத்த தேநீரை ‘சடக்’கென்று வாங்கி ஒரு வாய் உறுஞ்சியதும் எல்லாமே நிதானத்துக்கு வந்தது மாதிரியிருந்தது. தனது தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது நிர்மலமாக பளிச்சென்றிருந்தது. ‘என்னை உருவாக்க இவள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள்! இவளின் சொல்லமுடியாத தியாகமும் அர்ப்பணிப்பும் வெற்றி பெற்றுவிட்டதென்ற இறுமாப்பில் நிமிர்ந்து நிற்கிறாள். தனது கடமை முற்றுப்பெற்று விட்டதென்று சொல்லாமல் சொல்கிறது அவள் முகம். ஆனால் நான்…?’ மகனைப் பார்த்தாள். அவனின் பார்வை பதுங்குகுழிப் பக்கமாக வெறித்துக் கிடந்தது. அவளுக்கு சுரீர் என்று நெஞ்சில் குத்தியது மாதிரி இருந்தது. ‘என்னுடைய தியாகமும் அர்ப்பணிப்பும் இவனை எந்தளவுக்கு மனிதனாக்கப் போகிறது?’ அவள் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது. ‘எல்லாவற்றிற்கும் மேலாக சமூகம் நலமாக இருந்தால்தான் என் பிள்ளைகளும் நலமாக இருப்பார்கள். இதில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சமுதாயம் எனக்குத் தேவையானது. நான் சமுதாயத்துக்குத்தேவையானவள்.’

இப்போது அவளுக்குக் கல்லூரிக்குப் போகவேண்டும், இறுதி அத்தியாயத்தைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்து விட்டது. அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு வாசல்வரைநடந்தவள், ஏதோ சிந்தித்தவளாய் லேசாக கால்கள் தளர திரும்பிவந்தாள். இந்தச் செய்கை தாய்க்கு வழக்கத்துக்கு மாறாக இருந்தது. மகளைக் கலக்கத்தோடு பார்த்தது அந்தத் தாயுள்ளம். சுமதியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. முகத்திலும் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. மிகவும் சிரமப்பட்டு, ‘குழந்தைகள் கவனம்’ என்று சொல்லும்போதே குரல் கரகரத்து தொண்டையை அடைத்துக்கொண்டு விட்டது அவளுக்கு.

கல்லூரியை விட்டு வெளியில் வரும்போதே சூரியன் களைத்து தென்னை மரங்களுக்குள் இறங்கியிருந்தான். வீதிகளெல்லாம் ஆள் அரவமற்று சூனியமாகி இருந்தது. தூரத்தில் கேட்கும் வேட்டுச் சத்தத்துக்கு நாய்கள் மட்டும் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. ‘அந்தியும் தனிமையும் ஒரு பயத்தைக் கொடுத்தாலும், குழந்தைகளைக் காணவேண்டும் என்ற ஆவல் அவளை எட்டி நடைபோட வைத்தது. வீதியோரங்களில் நிற்கும் மரங்கள் அசைவதுகூட ஒரு கணம் மனத்தின் தைரியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. அரக்கத்தனமாக இருட்டு சர்வமும் வியாபித்து அவளை முந்திவிடத் துடித்தது. இல்லை, தான் முந்தவேண்டும் என எண்ணம் துடித்தது. காலடி அரவம் கேட்டுத் திரும்பிப் பார்தாள். இரண்டு சிறுவர்கள் அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் மெலிந்த தோற்றமும், இறுகிப்போன முகமும் அவளுக்குச் சொல்லமுடியாத வேதனையாக இருந்தது. ‘இன்னும் ஓரிரண்டு வருடங்களில் என் மகனும் இவர்களைப்போல் வளர்ந்துவிடுவான்.’ மகனின் உருவத்தை அவர்களோடு நிறுத்திப் பார்தாள். நீள மூக்கும், சுருள் முடியும் நிழலாகத் தோன்றி மறைந்தது. ‘பாவம்! இந்தப் பிள்ளைகளுக்கு என்ன துன்பமோ? சே… சின்னஞ் சிறுசுகள்கூட எவ்வளவு துயரங்களைத் தாங்கிகொள்ள வேண்டியிருக்கிறது? முடிவில்லாத துயரங்களுக்கு எப்போழுதுதான்  முடிவு வரப்போகின்றதோ? இந்த நேரத்தில் படையினர் வந்தால்…?’ நினைத்தவுடன் நெஞ்சு பகீரென்றது. அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாதே என்று மனம் பிரார்த்தித்துக்கொண்டது. பிள்ளைகளே சீக்கிரமாக வீட்டுக்கு போய்ச் சேருங்கள் என்று சொல்லவேண்டும் என எண்ணியவளாய் நடையைத் தளர்த்தி, அவர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தாள்.

அவர்கள் அண்மித்ததும், சினேகமான புன்சிரிப்போடு சொல்லவேண்டியதைச் சொல்ல வாயெடுத்தவள், மிரண்டு போனவளாய் வார்த்தைகள் வெளிவராமலே துவண்டு நிலத்தில் விழுந்தாள். பிடரித் துவாரத்தினூடாககுருதி கூந்தலை நனைத்து மண்ணில் இறங்கியது. குண்கள் அவர்கள் போகும் திசையைப் பார்க்க எத்தனித்தன. ஆனால் பார்க்க முடியாமல் இருள் முழுவதுமாக அவளை முந்திக்கொண்டது.

(குமார்மூர்த்தி கதைகள், தொகுப்பு)

000

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி