எனக்குப் பிடித்த சிறுகதைகள் 2


இல்ஹாம்
-மெலிஞ்சிமுத்தன்

முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள் நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளே. ஒருநாள் நம்முன்னே எழும்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமானமாய் பதில் சொல்லியபடியே நகர்கிறோம். இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியே எட்டிப்பார்க்கிறேன். கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பி எதுவுமின்றி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் இல்ஹாம்.

‘இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவன் எதற்காக என்னையே பின் தொடர்ந்தபடி இருக்கிறான்?’ என்ற கேள்வியுடனேயே வேலைக்கு வெளிக்கிடுகின்றேன். ‘இல்ஹாம், இல்ஹாம்’ என்று உதடுகள் உச்சரித்தபடியே இருக்கின்றன.

நான் இல்ஹாமை சந்தித்த நாட்களைப்பற்றி பின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றது ஊர்காவற்றுறை என்ற எனது பிரதேசம். சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்னர் இந்தியாவிலிருந்து கள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள் போன்றவை இத்துறையால் இறக்குமதி செய்யப்பட்டன என்றும், மிகப் பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளுக்கும் வியாபாரத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள் என்றும், எங்கெங்கோ சில வரலாற்றுக் குறிப்புகளில் வாசித்திருக்கிறேன். ஆனாலும் நான் வாழ்ந்த காலத்தில் அந்த கப்பலோட்டிய பரம்பரையினரில் மாதக் கூலிக்கு சிறுதோணிகளை வாங்கி சிறுதொழில் செய்பவர்களாகவே அதிகம்பேர் இருந்தார்கள். முருகைக்
கல்லுக்கு பெயர்போன அந்த இடத்தில் எழுந்துநிற்கும் புராதனக்
கடல்கோட்டையின் உள்ளே சென்று பார்க்கும் ஆவல் இருந்தாலும்
ஒருபோதும் என்னால் அதனை நெருங்க முடியவில்லை. ஏனெனில்
அங்குதான் பல காலமாய் இலங்கைக் கடற்படை முகாமிட்டிருந்தது.

கடற்தொழிலுக்குச் சென்று கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட எனது நண்பர்கள் வந்து கையால், மடியால் போட்டுச்சொன்ன கதைகளை வைத்தே அக்கடற்கோட்டைபற்றிய என் கற்பனையையும் வளர்த்துள்ளேன். அத்தோடு பூதத்தம்பி கதை என்றும் அக்கோட்டை சார்ந்த கதைக் கூத்தொன்றிருக்கிறது.
அந்தக் கோட்டையை அண்டி அமைக்கப்பட்டிருந்த கடற்படை முகாமை தாக்கியழிக்க பல இயக்கத்தினரும் முயன்று தோல்வி அடையும்போதெல்லாம் அங்கிருந்து எறிகணைகள் நெருப்புத் துண்டுகளாய் வந்து எங்கள் கிராமங்களில் விழுவதுண்டு. அப்போதெல்லாம் அக்கோட்டையின் நேரே இருக்கும் ஊருண்டிப் பக்கங்களிலிருந்து இரவிரவாக சனங்கள் எங்கள் கிராமத்திற்கு இடம்பெயர்வதுண்டு.

இல்ஹாம்பற்றிச் சொல்லத் தொடங்கிய நான் ஏதோ எனது நகரம்பற்றி கதையளக்கிறேன் என்று நினையாதீர்கள். இத்தகைய  ஊர்காவற்றுறையின் கரையோரக் கிராமம் ஒன்றிலிருந்தே என் இடப்பெயர்வு தொடங்குகிறது.
நாங்கள் வாழ்ந்திருந்த தீவுப்பகுதியிலிருந்து யாழ்நகருக்குச் செல்ல ஒரேயொரு பிரதான வீதியே இருக்கிறது. அந்த வீதியின் பெரிய பாலம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட காலத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பாலத்திலிருந்து சுமார் மூன்று மைல் தூரம் சனங்கள் வெளியேறுவதற்காய் நெருங்கி நின்றனர். அந்த நெரிசலை நோக்கியே நாங்களும் நடந்துகொண்டிருந்தோம். வந்து விழுந்த எறிகணைகளுக்குத் தப்பி கையில் கிடைத்தவற்றை தூக்கிக்கொண்டு சாட்டி என்கிற இடத்துக்கு வந்திருந்தபோது புலி இயக்கத்தினர் பதுங்கு குழி
வெட்டுவதற்கென வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அத்தருணத்தில் கண்ணில் எற்றுப்பட்ட அடியேனையும் பிடித்து ஏற்றிவிட்டார்கள். அப்போது என்னையும் ஒரு இனந்தாரி என்று கணித்து ஏற்றிவிட்டார்களே என்று எனக்குள்ளும் ஒரு பெருமை வந்திருந்தது. ஆனால் என் தந்தையாரோ தருணம் பார்த்து புலிகளின் வாகனத்திலிருந்து என்னை இறக்கி பாலத்தின் அருகில் கூட்டிவந்துவிட்டார். உடைந்த பாலத்தைக் கடக்க தண்டவாளக் கம்பிகள் போட்டிருந்தார்கள். அவசரத்தில் அதன்மேல் ஏறியவர்கள் நடுப்பகுதிக்குச் சென்றதும் கடலில் விழுந்தனர்.
சிலர் தப்பிச் சென்றனர். அருகிலிருந்த கிராமத்து மீனவர்கள் தோணிகளில் சனங்களை ஏற்றிப்பறித்தனர். நாங்களும் ஒரு தோணியில் ஏறிக் கரைசேர்ந்தோம்.

பாலத்தைக் கடந்ததும் தீவுப் பகுதி மக்கள் சாதிகளாய் பிரிந்துபோனார்கள் என்று சிலர் வர்ணிப்பதுண்டு. ஆனால் நாங்களோ சொந்தங்களையும், அறிமுகமானவர்களையும் தேடியே சென்றோம். கொழும்புத்துறையில் இருந்த எங்கள் குடும்ப நண்பர் வீட்டுக்கே முதலில் சென்றோம்.

வீடு இருக்கும் தெருவுக்குச் சென்றபோது அந்த வீட்டில் அழுகுரல்கள் கேட்டபடி இருந்தது. என்ன நடந்தது என்று விசாரித்ததில் யாரோ செத்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார். இன்னொருவரோ கொஞ்சம் விரிவாக, ‘இந்த வீட்டில் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளை படிப்பதற்காக வந்து நின்றது, அந்தப் பிள்ளையின் தம்பியார் இண்டைக்கு செல் விழுந்து செத்துப் போய்ற்றாராம்’ என்று சொன்னதில் அறியக்கூடியதாக இருந்தது. ஒருகணம் விறைத்துப்போய்விட்டேன். ஏனெனில் அங்கு இருந்து படித்துக்கொண்டிருந்தது எனது அக்காள். அப்படியென்றால் செத்துப்போனது…? ஆகா, மிகுந்த கனம் தங்கிய அடியேன்தான்.

என் செத்தவீடு களைகட்டியிருந்த தருணத்தில் நான் உள்நுழைய என் அக்காள் ‘லாசரு’ என்று குழறியபடி ஓடிவந்து கட்டியழ பிறகென்ன செத்தவீடு ‘கான்சல்’. ஆயினும் செத்தவருக்கான மரியாதையோடு முருங்கைக் காய்க் கறியோடு சோறு தின்றுவிட்டு படுக்கை;ககுப் போனேன். இரவிரவாக ஒரே யோசனை. ஒரு நாளிற்குள்ளேதான் எத்தனை விசித்திரமான கணங்கள். (இதன் பின்னரும் இரண்டு முறைகள் செத்திருக்கின்றேன். ஒவ்வொருமுறை செத்தபோதும் எனக்கான மரியாதை உயர்ந்துகொண்டே போனது.)

கொழும்புத் துறையில் அதிக நாட்கள் இருக்கவில்லை. ஒரு கிழமையில் கிளம்பிவிட்டோம். பின் நாட்களில் பல உறவினர்களின் வீடுகளில் ஒதுங்கி வந்த எங்களுக்கு நாவாந்துறை சென் நீக்கிலார் கோவிலுக்கு முன்னால் ஒரு வீடு கிடைத்தது. என் தந்தையாரும் அவருடன் நட்புக்கொண்டிருந்த துரை என்ற மனிதரும் விடுதலைப் புலிகளின் இயக்க அலுவலகங்களுக்குத் திரிந்து விண்ணப்பித்ததன் பயனாகவே அந்த வீடு கிடைத்தது.

சென் நீக்கிலார் கோயிலில் நாட்டிக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தால் தண்ணீர் வருகின்றது என்று சனங்கள் கூடிய ஒருநாளில் மூட்டை முடிச்சுகளுடன் நாங்களும் குடிபுகுந்துகொண்டோம். கோவை வேத சாட்சிகள் காலம்தொட்டு சில்லாலைக் கோவிலுக்கு சம காலத்தில் உண்டாக்கப்பட்டது இந்தக் கோயில் என்பதாலும், இங்கிருந்த சிம்மாசனம் போர்த்துக்கேய கீழைத்தேய மரபுகள் இணைந்துள்ளது என்பதாலும், சிரத்தையான பக்தியோடு வழிபாடுகள் நடந்துவரும் அந்த ஆலயத்தில் அற்புதங்கள் நடப்பது சாத்தியமே என்றும் வீதிகளில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். கொடிமரத்தால் வந்த தண்ணீரை நாக்கில்வைத்து பரிசோதித்தனர். சிலர் சிறிய போத்தல்களில் ஆசிநீர் என்றும் எடுத்துக்கொண்டனர்.

அருங்குறிகள்பற்றி அயலவர்கள் பேசிக்கொண்ட அந்த நாளில் நாங்களும் குடிபுகுந்தோம்.

வாசலில் மல்லிகைப் பந்தலும், வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்ட மதிலும்கொண்ட அந்த வெள்ளை வீட்டில் பஸ்மா என்ற ஒரு முஸ்லிம் கிழவி தன் குடும்பத்தோடு வசதியாக வாழ்ந்திருந்ததாகவும், அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய வியாபார நிலையம் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்களும் அந்த வீட்டைவிட்டுச் சென்றதாகவும் அயல் வீடுகளில் கேட்டு அறிந்துகொண்டோம். நாங்கள் முதல் முதலாய் அந்த விட்டுக்குள் காலடி எடுத்து வைத்தபோது அவசரமான வெளியேற்றத்தில் ஆசைகள் இருந்தும் கொண்டுசெல்ல முடியாதவற்றின் கும்பங்கள் பல கிடந்தன.

உரிமையாளர்கள் பெருமூச்சுடன் விட்டுப்போன அந்த வீடு எத்தனையோ அலைச்சல்களின் பின் எங்களுக்குக் கிடைத்ததே என்ற ஆறுதலில் பெருமூச்சு விட்டபடியே துப்புரவு செய்தார் என் அம்மா. அந்த வீடுமுழுவதும் வித்தியாசமான பெருமூச்சுகள் அமுங்கிக் கிடந்தன. அன்று இரவு நாங்களும் நீக்கலாரை துணைக்கழைத்து படுத்தோம். கொடிமரத்தால் நீர் சர்ர்ர் என்று வந்தபடியே இருந்தது.

மறுநாள் விடிந்தெழும்பி முற்றம் துப்புரவாக்கப் போன அம்மா விளக்குமாத்தை வீசிவிட்டு வந்து அப்பாவை எழுப்பினார். “இங்கே.. இங்கே.. ஆரோ வந்து முன்னால நிக்கிறான். ஒருக்கா வந்து பாருங்களன்.”

அப்பா எழும்பி வரும்போது நெடுத்த பருமனான அந்த மனிதன் நடந்து பிரதான வீதிக்குச் சென்றிருந்தான். மீண்டும் சில நாட்களின் பின்னர ஒருநாள் இரவு நான் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது என் முன்னே வந்து நின்றான் அந்த மனிதன். அவன் தன் பெரிய கண்ணை வெட்டாமல் என்னை முழித்து பார்த்தபடி நின்றான்.

என் முன்னே ஆஜானுபாகுவாக நின்ற அவனது உருவம் எனக்குள்
ஏற்படுத்திய நடுக்கத்தை வெளிக்காட்டாமல் நான் சைக்கிளில் இருந்து
இறங்க, தலையை ஆட்டியபடியே விலகிச் சென்றான். அக்கம்பக்கத்தில்
விசாரித்தபோது அவனது பெயர் இல்ஹாம் என்றும், நாங்கள் இருந்த
வீட்டுக்காரிக்கு மகன்முறை வரக்கூடியவன் என்றும், அறிவு பேதலித்த அவனை கடைசிநேரத்தில் அவர்கள் விட்டுச்சென்றார்கள் என்றும், இயக்கக்காரர் பிடித்து விசாரித்துவிட்டு அவனால் எதுவும் ஆகப்போவதில்லையென்று ஊருக்குள் விட்டுவிட்டார்கள் என்றும் அறியக்கூடியதாக இருந்தது.

ஒருநாள் பின்னேரம் முன் கதவையும் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே
வந்துவிட்டான் இல்ஹாம். வீட்டுக்குள் புறங்கைக் கட்டோடு வந்து
உலாத்தியபடியே ஒவ்வொரு அறையையும் நோட்டம்விட்டான். அம்மாதான் சொன்னார்: “ஆக்கள் இருக்கிற வீட்டுக்குள்ள என்ன… கேட்டுக்கேள்வி
இல்லாமல்…”

இல்ஹாம் சிரித்தான். “பசிக்குது அதுதான்… பஸ்மா உம்மா கிட்ட வந்தனான்.
உம்மா எங்க?”

அம்மா சொன்னார்: “உம்மா இல்ல. அம்மாதான் இருக்கிறன். சாப்பிடப்போறியோ?”

முகம் சிவந்த கோபத்துடன் உரத்த குரலில், “பஸ்மா உம்மா வீட்டில நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உம்மாவும் அம்மாவும் ஒண்ணா…ஆ?” என்று கத்தினான். பின்னர் கதவை பெரிய சத்தமாக அடித்தபடி வெளியேறினான் இல்ஹாம். வீடே அமைதியாகக் கிடந்தது.

எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவை அல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. அலைந்து களைத்திருந்தோம். சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளை எங்கள் நம்பிக்கைகளாகக் கொண்டிருந்தோம். எங்கள் எதிர்காலம் குறித்த ஏக்கங்கள் எங்கள் பெற்றோர்களுக்குள் இருந்தது. அக்காலத்தில் இடம்பெயர்ந்து வௌ;வேறு இடங்களில் உணவுக்கே அவதிப்படும் நிலையில் வாழ்ந்த நாங்கள் கூப்பன் கடைகளில் சந்திக்கும்போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் கூப்பன் கடைகளும் இடம் மாற்றப்பட்டபடியே இருந்த அந்த நாட்களில் கூப்பன் கடைகளைநோக்கி இடம்பெயர்த்தப்பட்ட பல கிராமங்களைக் கண்டேன்.

அப்போது நான் சைக்கிள் பாருக்கு மேலால் காலைப்போட்டு ஓடும் நிலைக்கு வளர்ந்திருந்தேன். அவசரத்துக்கு அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொள்வதும், அம்மாவை ஏற்றிக்கொண்டு கூப்பன் கடைக்குச் செல்வதுமாகக் காலம் கடந்தபடி இருந்தது. ஒருநாள் நான் நிவாரண அரிசியை சைக்கிளில் கட்டிக்கொண்டுவர திடீரென்று என் முன்னே இல்ஹாம் வந்துநிற்க செய்வதறியாத நான் சைக்கிளோடு ஒரு வாய்க்காலிற்குள் விழுந்துபோனேன்.

கொட்டுண்ட அரிசியையும் அள்ளிக் கட்டிக்கொண்டு காலை இழுத்து இழுத்து
வீடு சென்ற நான் இல்ஹாமிற்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென்று
கறுவிக்கொண்டேன்.

மறுநாள் இரவு பஸ்மா உம்மா வீட்டிலிருந்து நாவலர் வீதியால் யாழ்நகருக்கு செல்லும்போது ஒரு சுவரில் இல்ஹாம் கரியால் எவற்றையோ
எழுதிக்கொண்டு நிற்க அவனுக்குத் தெரியாமல் அவன் பின்னே சென்ற நான் கையில் கிடைத்த கல்லொன்றால் அவன் மண்டையை உடைத்துவிட்டுத்
திரும்பினேன். “அல்லா..” என்று அலறியபடி விழுந்த அவனை பின்னர் சில நாட்கள் நான் காணவில்லை.

எங்கள் வீட்டுக்கு என் தந்தையாருடன் துரை அண்ணர் வரும்போதெல்லாம் பூதத்தம்பி கூத்தை பாடும்படி கேட்பேன். அல்லது பஸ்மா உம்மா குடும்பம்பற்றி விசாரிப்பேன். யாழ்;ப்பாணத்தில் கடை வைத்திருந்த முதலாளிகள் பலருக்கு சவாலாக இருந்த மனிசன் வெறும் கையோடுதான் போனார் என்று பெருமூச்சு விடுவார். ஆனாலும் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இடைஞ்சலானவர்களாகவே இருந்தார்கள் எனும் கருத்தை வலியுறுத்துபவராகவே இருந்தார்.

துரை அண்ணர் அடிப்படையில் ஒரு தீவிர புலி ஆதரவாளர். அத்தோடு தென்மோடிக் கூத்தை எழுதிப் பழக்கும் அண்ணாவியாராகவும் இருந்தார்.
புலிகளின் கருத்து நிலைகளை வலுப்படுத்தும் கூத்துகளையும் அவர் மேடை ஏற்றினார். எனது தந்தையார் ஆர்மோனியம் வாசிப்பதில் கெட்டிக்காரராய்
இருந்த காரணத்தால் அவர்களது நட்பும் தொடர்ந்திருந்தது.

பல கூத்துகளை எழுதி இயக்கிய துரை குருநகர் யாகப்பர் ஆலயம் விமானத் தாக்குதலில் அழிக்கப்பட்டபோது அதில் அகப்பட்டு இறந்துபோனார். அவர் இறந்த சில மாதங்களில் மாவீரர் குடும்பத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பஸ்மா உம்மாவின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் முதுகையே பார்த்தபடி காணியின் வாசல்கட்டில் அமர்ந்திருந்தான் இல்ஹாம். அன்று அவன் எழுதிக்கொண்டிருந்த சுவரில் ‘நாம்  எல்லோருமே கடவுளின் பிள்ளைகள்’ என்ற வாசகம் இருந்தது.

இந்தக் கதையை எழுதி முடித்த பின்னர் அவனிடம் கொண்டோடிப்போய், ‘பார் இல்ஹாம், உன்னைப்பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன்’ என்று காட்டலாம். ஆனால் ‘இதை எழுத எதற்கு இத்தனை காலம் எடுத்தாய்?’ என்று அவன் கேட்டால் ‘புலிகளை விமர்சிக்க இது நேரமில்லை என்று பார்த்திருந்தேன்’ என்று சொல்லி தலைகுனிய வேண்டி இருக்கும்.
ஆதலால்…

(இல்ஹாம்-உள்ளுணர்வு. பஸ்மா-புன்முறுவல்.)


-‘பிரண்டையாறு’  சிறுகதைத் தொகுப்பு)

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி