யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்

என்னுரை

வரலாறெழுதியல் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறும் பிரமாண்டமுமான சூட்சுமங்களில் பின்னப்பட்ட பொய்மைகள் சார்புக் கருத்தியலின் விளைவுகள் எனப்படுகிறது. அதனாலேயே காதலும் காமமும் யுத்தங்களின் அதிபெரும் காரணங்களென அழுத்தப்பெற்று, அவற்றின் தோல்விகளாலும் வெற்றிகளாலும் அதன் முழுப் பரப்பும் மூடப்படுகின்றது. தோற்றவர் வடுக்களும், வென்றவர்  ஆணவங்களும் வரலாறெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும், யுத்தத்தின் மூலகாரணம் அதில் முற்றாக  நிராகரிக்கப்படுகிறது. பலவேளைகளில் நிஜங்கள் திரித்தும் எழுதப்படுகின்றன.
நிலவுகிற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே. ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று  நிரூபணமாகியுள்ளது.

தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப் போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம்தான். ஆனாலும் உண்மையின் உபாசகர்களாக எங்கேயும் எப்போதும் நாலுபேர் இருக்கிறார்களென்ற நம்பிக்கையில், இலங்கையின் சமீபத்திய நெடுயுத்தத்திற்கு சற்றொப்ப  ஒரு தசாப்த காலத்துக்கு முன்பு, எவ்வாறு எதனால் அதன்  அரசியல் பொருளாதார நிலமைகள் ஒரு முரண்நிலையில் கூர்மையடைந்திருந்தன என்பதை ஒரு மூன்றாம் நோக்குநிலையில்  கண்டறிந்து அவற்றை நாவலின் நிகழ்வுகள், உரையாடல்கள், தொடர்ந்துசென்ற கதை விரிப்புக்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன் என்பதே என் நம்பிக்கை.

நாவலாக சிறுகதையாக கவிதையாக அனுபவப் பகிர்வுகளாகவென பல்வேறு வடிவங்களில் சமீபத்திய நெடுயுத்தத்தின் முன் பின்னான சம்பவங்கள் இன்று பதிவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாவலில் அத்தகைய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இது யுத்தம் தோன்றிய காரணத்தில் உருவான கதையைமட்டுமே சொல்கிறது. காலகாலமாக இரண்டு இனங்களுக்குமிடையே உருவாகிய முறுகல்நிலையின் ஆதாரத்திலெழுந்த புனைவு. மேலும் 'கலிங்கு', 'கனவுச் சிறை' ஆகிய நாவல்களின் தொடர்ச்சியும் இதிலிருந்தே விரிவதை  தேர்ந்த வாசகன் ஒருவனால் சுலபத்தில் கண்டறிய முடியும். அந்தவகையில் இது Trilogy நாவலொன்றின் முதலாம் பாகமாகவும் கொள்ளப்படக் கூடியதே.

எதார்த்தமான சில பாத்திரங்களின் உலவுகைக்கு நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணின் பகைப்புலத்தை நாவல் தன் இயங்குதளமாகக் கொண்டிருப்பதே காரணம். அதனாலேயே நான் கண்டு, கேட்டு அறிந்திராத எந்தச் சமூக அரசியல் நிகழ்வும் இந்நாவலில் பதிவாகும் சாத்தியத்தை முற்றுமாய்  அழித்திருக்கிறது.

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்என்ற இதன் தலைப்பை நெடுயுத்தத்தின் முதலாவது அத்தியாயமென்ற அர்த்தத்தில் வாசித்துவிடவே கூடாது. The Prime Cause behind the War என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆம், இது யுத்தத்தின் பிரதம காரணத்தை  இனங்காட்ட மட்டுமே செய்ய முயல்கிறது.

இந்தப் பதிப்புக்காக எனது எல்லா மீள்பதிப்புகளுக்கும்போலவே நாவல்  செம்மையாக்கம் செய்யப்பட்டதென்பதை ஒரு தகவலுக்காக இங்கே சொல்லிவைக்கிறேன்.

இலங்கையில் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக 2004இல் வெளிவந்த இந்த நாவலின் மீள்வருகையது அவசியத்தை  வடலி பதிப்பகம் மூலமாக சாத்தியமாக்கிய நண்பர் த.அகிலனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

-தேவகாந்தன்
மார்க்கம், கனடா

நவம்பர் 2018

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி