நற்றிணையின் வெளியீடாக 2019 சென்னை புத்தக கண்காட்சியில்...


என்னுரை

என்னுடையவற்றில் ஆகக் குறைந்த பக்கங்களைக் கொண்ட இந்த 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' நாவலுக்கும் வழமையான பக்கங்களில் நீள என்னுரைக்கான விஷயங்கள் என்னிடத்தில் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் வேறு களமும் குணமும் பாத்திரங்களும்கொண்ட இந்நாவலுக்கான என்னுரையை குறுவடிவில் அமைத்துவிடுவதே என் தீர்மானம். குறுமுனிபோல் தன் பெருவிகாசம் அடக்கியே இந்நாவலும் தன்னுள் சுருங்கிச் சுருங்கி இந்த வடிவத்தை இறுதியாக எடுத்திருப்பதில் இந்த முடிவு பொருத்தமானதுதான்.

மூதினங்கள் பலவற்றின் ஐதீகங்களிலும் உள்ளோடியுள்ள ஆன்மீக ஒருமையே இந்நாவலின் ஆதாரமாய் நான் கருதுகிறேன். நைல் ஆரஸ் தைகிரிஸ் நதிதீர இனக் குழுமங்களினதைப் போலவே, நீர்வளமேயற்ற இலங்கை வடபகுதியிலுள்ள தமிழ்க் குமுகாயத்தின் ஐதீகங்களும் ரத்தமும் சோகமுமான நீள் வரலாறுகொண்ட கனடாவின் செந்நதிதீரத்தில் கொள்ளும் உறவு தமிழ் நாவல் பரப்பின் புதிய பிரதேசம்.

சிவப்பிரகாசமும் மங்களநாயகியும் வின்ஸியும் ஒரே சமூகத்தினதும்  கலாசாரத்தினதும் பிரதிநிதிகள்தான். ஆயினும் புத்துலகின் இறுகும் கண்ணிகளிடையே ஒரு புள்ளியில் எவ்வாறு அவர்கள் இணங்கியும் பிணங்கியும் சேர்ந்தும் பிரிந்தும் மகிழ்ந்தும் துயருற்றுமான நொருங்கிய மனநிலைகளுக்கு உள்ளாகிறார்களென்பதையே நாவலின் மய்யம் உணர்த்துகிறது. இத்துடன் ஒப்புநோக்குகையில் வெவ்வேறு கலாசார பின்னணிகொண்ட சிவப்பிரகாசமும் கிநாரியும் கொள்ளும் உறவுச் சிக்கல்கள் பெரிய அதிர்ச்சியைத் தருவதில்லை. ஆனால் அவற்றின் மூலமாக மனித உறவின் விழுமியங்களே இருப்பது பேரதிசயமாக நாவலில் விரிகின்றது.

புலப்பெயர்வின் சோகம் பெருமளவு கரைந்தாயிற்று. இன்றைய புதிய உலகச் சூழ்நிலையில் ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் கொள்ளும் புதிய பிரச்னைகள் படைப்புலகின் பேசுபொருளாயிருக்கின்றன. ஆங்கில புலம்பெயர் நாவல் இலக்கியத்தில் இவை ஏற்கனவே பேசப்பட்ட பொருள். தமிழ் இப்போதுதான் இப்புதிய பிரதேசத்தைச் சென்றடைந்திருக்கிறது. ஆனாலும் தமிழினத்தின் ஆயிரமாயிரமாண்டுக் கலாசார பின்னணியில் இவைகொள்ளும் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான சங்காத்தங்கள் துல்லியமான பிரிகோடுடையவை. மேற்குலகும் கீழ்த்திசையும் வெகு கவனம் கொண்டிருக்கிற விமர்சனப் பக்கமிது. 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' இவற்றை ஒரு ஒழுங்கிலும் சமகால வரலாற்றிலும் வைத்து புரிய முயல்கிறது. இப் புரிதல் இச்சமூகங்களது இருத்தலின் தன்மையை இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்போகின்ற அளவு முதன்மை கொண்டிருக்கிறது. கலையை முதன்மைப் படுத்தினாலும் இதைப் பேசுகிற அக்கறையை இப்படைப்பு தன் அறமாகக் கொண்டிருக்கிறது.

வெகு நேர்த்தியிலும் விரைவிலும் இந்நாவலின் வெளியீட்டினைச் சாத்தியமாக்கிய 'நற்றிணை' யுகனுக்கும் அலுவலக அச்சக நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும் என்றும் உரித்து. இந் நாவலின் கரு விளையக் காரணமாயிருந்த நண்பர் திலிப்குமாருக்கு என்றென்றும் என் நன்றி.

அன்புடன்,
தேவகாந்தன்

டிசம்பர் 2018 

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி