புகையில் விழுந்த விருப்பம்



இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு ஆகிய இரண்டு அலைவரிசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐம்பதுகளின் இறுதியில் இயங்கியதென ஞாபகம். தேசிய ஒலிபரப்பு காலை எட்டு மணிக்கு முடிய வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து பத்து மணிவரை தொடர்ந்தது. மாலையில் மூன்று மணிக்கு வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடிய மேலே இரவு பத்தரை மணிவரை தேசிய ஒலிபரப்புத் தொடரும்.

தேசிய ஒலிபரப்பில் செய்திகளும், வர்த்தக ஒலிபரப்பில் நீங்கள் கேட்டவையிலிருந்து, இசையும் கதையும், திரைப் படங்களின் ஒலிச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகள் அனேகமாக எல்லார்க்கும் பிடித்தமான நிகழ்ச்சிகளாக இருந்தன. நான் கேட்டது வர்த்தக ஒலிபரப்பு. ரசித்தது சினிமாப் பாடல்கள். அந்த வயதில் எனது ரசனை வேறுவாக இருக்கவில்லை. வசதியாக பெரி றேடியோ பற்றியில் இயங்கிய வானொலி ஊரிலிருந்த மூன்று வீடுகளுள் எங்களதும் ஒன்று.
பள்ளி நாட்களில் தாமதமானாலும் நான் வீடு வந்த நேரத்திலிருந்து ஆறுமணிவரை உச்சத் தொனியில் றேடியோ அலறுகிற ஒரு வீடாகவும் இருந்தது எங்களது.

அக்காலத்தில் ஒலிபரப்பாகிய சினிமாப் பாடல்களைக்கூட என்னால் இன்றும் ஞாபகம்கொள்ள முடிகிறது. வர்த்தக ஒலிபரப்பில் விளம்பரங்களை ஒலிபரப்புச் செய்த குரலையும்கூட. சினிமாப் பாடகர்களின் குரலுக்கு இணையான அத்தனை வசீகரம் கொண்டிருந்தது அப்போதைய அறிப்பாளர்களின் குரல்கள். இலங்கை வானொலி புகழ் மயில்வாகனத்தின் குரல் இன்றும் என் காதுகளில், இலங்கை வானொலியை நினைக்கிறபோது வந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அக் குரல் செய்த விளம்பரங்களில் இன்றும் நான் மறவாமலிருப்பவற்றில் முக்கியமானவை சேலம் பீடிகள், செய்யது பீடிகள், கோபால் பற்பொடி போன்றவை.

‘புகைக்க புகைக்க இறுதிவரை இன்பம் தருவது… செய்யது பீடிகளே’ என்ற வார்த்தைகள் மயில்வாகனத்தின் கம்பீரமான குரலில் ஏறி இலங்கை முழுக்க வலம்வந்தபோது, அதைக் கேட்டு மயங்கிய பதின்ம வயதின் ஆரம்ப காலத்து இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

புகைக்கப் புகைக்க இறுதிவரை தொடர்ந்த இன்பத்தின் தேடலிலிருந்துதான் பிற எல்லா இன்பத் தேடல்களும் தொடங்கியிருந்தன என்று இப்போது யோசிக்கத் தெரிகிறது. இன்றைக்கு மேலை நாடுகளில் மட்டுமில்லை, இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் பொதுவிடங்களில் புகைத்தல் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. வீதியிலேகூட புகைத்துவிட முடியாது. ஆனால் அன்றைக்கு எந்த இடத்திலும், பஸ்களிலும்கூட, புகைத்துவிட முடியும். ஐம்பத்தைந்து சத நுழைவுக் கட்டணம் செலுத்தி தியேட்டருள்ளே சென்று பத்து சதத்துக்கு பீடி புகைத்து மண்டபத்தையே புகை மண்டலமாக்கிவிடுகிற புகைஞர்கள் இருந்தார்கள். புரஜெக்ரரிலிருந்து நீல ஒளியாகப் புறப்பட்டுத்தான் வெண்திரையில் கறுப்பு வெள்ளைப் படமோ கேவா கலர் படமோ பாயும். என் பங்கும் அதிலிருந்த காலத்தை எண்ண  இப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறது.

புகைத்தல் உடல்நலத்துக்கு கேடு என இன்று விளம்பரங்களும், புகைத்தல் பொருட்களில் அதனாலான கேடுகளை தெரிவிக்கும் எச்சரிக்கை வாசகங்களும் வருகின்றன. புகைத்தல் கெடுதியாகவே இருக்கட்டும். ஆனால் அன்றைக்கு அந்தப் பயமின்றி புகைக்க முடிந்திருந்தது. இன்றைக்கு அந்த விளம்பரங்களினால் பழகிய பழக்கத்தை பயந்துகொண்டுதான் செய்ய முடிகிறது. மட்டுமில்லை. விட்டுத் தொலைக்கலாமென்றால் முடியாமலும் இருக்கிறது.

புகைத்தலினால் நோய் எதுவும் வருகிறபோது, அன்றைய விளம்பரங்களினால் புகைத்தல் பழக்கத்தை துவங்கிய ஒருவர், அந்த விளம்பரக் கொம்பனிகள்மேலும், அதை வெளியிட்ட இலங்கை வானொலிமீதும் நஷ்ட ஈட்டு வழக்கு தொடரலாமாவென நகைச்சுவையாய் ஒரு யோசனை வந்தது. இன்னும், அந்த விளம்பரத்தை தன் வசீகரமான குரலால் ஒலிபரப்பிய மயில்வாகனத்தின்மீதும்கூட வழக்குப் போட காரணமிருப்பதாய் சிரிப்போடு எண்ணிக்கொண்டேன்.

முருகபூபதியின் ‘நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிந்த சாதனையை வானொலியில் பரவச் செய்த ‘அப்பல்லோ’ சுந்தா’ என்ற கட்டுரையை திண்ணை வலைத் தளத்தில் அண்மையில் பார்த்தபோது இந்த யோசனை என்னில் வந்தது.

‘மன ஓசை’ என்ற ‘அப்பல்லோ’ சுந்தா எனப்பட்ட வீ.சுந்தரலிங்கத்தின் நூலையும், சுந்தாவையும் குறித்து முருகபூபதி அதில் எழுதியிருந்தார். சுந்தா எனப்பட்ட வீ.சுந்தரலிங்கத்தின் வரிகளுடனுடனான அந்தக் கட்டுரை இதுபோல தொடங்கியிருந்தது: ‘நான் எப்போதும் புகைப் பிடிப்பதில்லை, ஆனால் திறீ றோசஸ் சிகரெட் விளம்பரங்களில் புகையை அனுபவித்துப் புகைப்பதுபோல நடித்திருக்கிறேன்.’

நல்லது. எனக்கு இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது: ‘நான் புகைப்பதுபோல் என்றும் நடித்ததேயில்லை.’

000

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி