எனக்குப் பிடித்த சிறுகதைகள்:4



பாலன் பிறப்பு
-முல்லை யேசுதாசன்-

அருளர் கள்ளுக்கு போய்ட்டு வாறாரெண்டால், வளிச்சலில் நல்ல மீன் பட்டிருக்கும். அதில்லெயெண்டால் அண்டைக்கு நேவியடிச்சு, வளிச்சல் தொழிலாளர் ஆரும் வலையை வெட்டிப்போட்டு வர, இவர் தேடிப்போய் வலைகளைக்கொண்டு வந்திருப்பார். அதுவுமில்லையெண்டால் கடலில நல்ல சண்டை நடந்திருக்கவேணும். இயக்கம் நல்ல அடி குடுத்திருக்கவேணும்.

கடலைப்பற்றியோ அல்லது கடல் தொழிலைப்பற்றியோ ஏதேனும் கேக்கவேணும் எண்டால் அந்தாளைக் கேட்டா அச்சொட்டா பதில் சொல்லும். காலமை விடிய மூண்டு மூண்டரைக்கு எழும்பி, மண்டானுக்க நிண்டு சூடவலை, அறக்கொட்டியான் போகிற குல்லாக்களை இறக்கிக் குடுத்து… வளிச்சல் வள்ளங்கள் வந்தால் மீன் வெட்டிக் குடுத்து… கருவாடு போட்டு… இப்ப அதுதான் அவரின்ர தொழில்.

எப்படியும் நூறு ரூபா உழைச்சுப் போடுவார். சில நாள் கறிமீனோட காலம் போகும். அண்டைக்கு ஆரோடையும் கதைக்கமாட்டார். ‘ஏனப்பா, இண்டைக்கொண்டும் வாய்க்கேல்ல. ஏதேனும் பாரன்’ எண்டு மனிசியிட்டை சரணடைஞ்சு போடுவார். அன்றைக்கு மனிசி என்ன பேசினாலும் கேட்பார். ‘ஏனப்பா, உந்த குடிக்கிற காசுக்கு ஏதேனும் நல்ல சாப்பாட்டை சாப்பிடலாம்தானே’ என்று மனிசி கேட்டால், ‘எனக்கு கள்ளுத்தான் சத்தான சாப்பாடு. எப்பாலும் குடிச்சிட்டு வந்து உன்னிட்டை சாப்பாடு கேட்கிறனே? கதையை விடு’ என்பார்.

குடிக்காத நாளில் பசிக்குதெண்டு கொஞ்சம் கூடச் சாப்பாடு கேட்கார். மனிசி குடுக்காது. ஒரு பார்வை பாப்பா. ‘இப்ப பசியெண்டால் என்னண்டு விளங்குதல்லோ?’ அவ இளகிக் கதைப்பா. அவர் கணக்கெடுக்கார். சிலவேளை வெறியோட வந்தா, பாவமெண்டு பாப்பா. ‘குடிச்சுப் போட்டு வந்தா கொஞ்சம் சாப்பிடுங்கோ. சாப்பிடாமக் கிடந்து சாகப் போறீங்களோ?’ என்று சொன்னால், ‘நான் பசிக்குதெண்டு கெஞ்சிக் கேட்டும், நீ அண்டைக்கு தரேல்ல. நீ சொல்லி நான் சாப்பிடோணுமோ? நான்தான் புருசன் எண்ட ஞாபகம் இருந்தாச் சரி’ என்பார். இப்படியே நாள் போகும் ரெண்டு பேருக்கும்.
அண்டைக்கு குட்டிச் சம்மாட்டீன்ர வள்ளம் தொழிலுக்கு வெளிக்கிட்டுது. தொழிலுக்கு போக தொழிலாளி ஒருத்தன் வரேல்ல. சம்மாட்டி அவனைத் தேடிக்கொண்டு திரிய, அருளரும் பார்த்தார், கையில காசும் இல்ல, தற்சேலா மீன்பட்டுதெண்டா ஆயிரம் ரெண்டாயிரம் வரும், நான் கடலுக்கு வரெட்டோ என்று கேட்டு தொழிலுக்கு ஏறிட்டார். இயக்கத்தின்ர போட்டுகள் கடலில் நிக்கிறது அவருக்குச் சாடையான துணிவு.

வளிச்சல் தொழிலுக்கு வள்ளங்கள் போகுதெண்டால், கரும்புலி போட்டு போகுதெண்டு கடற்கரையில சொல்லுங்கள். நேவி வந்திட்டா கடலில பாஞ்சு நீந்தினாலும் ‘போக்கஸ்’ அடிச்சுப் பார்த்துச் சுடுவாங்கள். தப்பவே ஏலாது. தப்பினாலும் நீர்ப்பாடு வாடை நேராய் ஓடினால் எப்பிடி நீந்தினாலும் புல்மோட்டை, திருகோணமலை எண்டுதான் கரையேறலாம். அப்பவும் சாவுதான்.

சோளக நீர் உரமென்றால் காங்கேசன்துறை, பருத்தித்துறைப் பக்கம்தான். உலர்ந்த நீர் (உயர இழுத்த நீர்) என்றால் உயிரில்லை. ஆரும் வந்து காப்பாத்தினாச் சரி. ஆர் வருவாங்கள் உந்த நேவியுக்கை? நல்ல காலம் இருக்குதெண்டால் கடற்புலி போட்டுத்தான் வரும்.

‘ஓயாத அலை ஒண்டு’க்குப் பிறகு இந்த ஊரில குடியேறி இந்தக் கடலில தொழில் செய்ய வெளிக்கிட்ட பிறகு, கடலில காணாமல் போனவரை காத்திருந்த நாளுகள் எத்தினை? கைகால் இல்லாம கரையில ஒதுங்கின பிரேதங்கள் எத்தினை? எத்தின உயிர் போட்டுது? எவ்வளவத்தை அள்ளிக் கொட்டின இடம். தைப் பூசத்திற்கு பனி விழுந்த காலமை தொடங்கி இரவுவரை ஒரே ‘இஞ்சின்’ சத்தம்தான். ‘இஞ்சின்’ வேகம் காணாதெண்டு இருபத்தைந்து முப்பது கோசிலயும் ரெண்டு இஞ்சின் பூட்டித் தொழில் போகும்.

தை மாசி மாதமெண்டால் உந்த றாலை ஆர் சாப்பிடுறது, இறைச்சி வேணும். சாவாளையும், காரலும், பன்னாவும், சோளாக்கட்டா சின்னட்டியும் கருவாடு வெட்டிப்போட நேரமில்லாமல் கடலில கொட்டுற மீன்.
முன்பு வலை தெரிக்கவாற பெண்டுகள் ஒளிச்சுக்கொண்டு போகிற றால், ரெண்டு நாள் சீவியம் போக்காட்டும். முற்பணமா காசு தந்து றால் எடுக்க எத்தின வியாபாரியள்? காசை மதிக்காத… கணக்குப் பாக்காத… வாழ்க்கை. எது தரமெண்டு பாக்காம, எது விலையெண்டு பாக்கிற சனம். றாலில உழைச்சு நகை நட்டைத் தேடி, கடலடி வர வித்து… உழைக்கிறதும் செலவழிக்கிறதும்தான், சேத்துவைக்க நினைப்பில்லாத ஊர்.

கடைசி காலத்துக்கு…? கடைசிக் காலம்வரை கடலிருக்கும்தானே. வலை படுக்கிறதுதான் ஒரே வேலை. கையில காசு.

ஆர் நினைச்சது, இப்ப காஞ்சு கருவாடுமாதிரி உடைஞ்ச ஐஸ்வாடியும், கடலரிச்ச ரோட்டும், கறள்கட்டின கம்பிவலையும், செல் துண்டு வெட்டின கிடங்குமாய் எருக்கலை பரவிக் கிடந்தது. கடற்கரை ரோட்டெல்லாம் காடுபத்தி.

தொழிலுக்கு வள்ளம் இல்லாமல் களத்தில தொழில் செய்யிற குலாக்களோட வலிச்சு மாஞ்சுபோய்… நேவியட்டை அடிவாங்கி செத்து… கைம்பெண்கள் ஊரில் கனத்து… காஞ்சுபோய்க் கிடக்குது ஊர். இப்ப கடற்தொழிலும் மறந்துபோய், வலை தெரிஞ்சு சீவியம் போக்காட்டுற காலம்.

அண்டைக்குக் குட்டிச் சம்மாட்டிக்கு நல்ல புழுகம். ஐநூறு கிலோவுக்கு மேல மீன் பட்டுப்போச்சு. அருளர் வளிச்சலுக்கு ஏறிப் போனா தொழில்தான். அந்தாளோட ஆர் மீன் பிடிக்கிறது. குட்டிச் சம்மாட்டி சொல்லச் சொல்ல அருளருக்கு நல்ல ஏத்தம். ஆனால் இண்டைக்கும் தொழிலுக்குப் போகச் சொல்லி குட்டிச் சம்மாட்டி சொல்லிட்டா, அவருக்கு இனி தொழிலுக்குப் போக விருப்பமில்லை. பயந்தபடியே குட்டிச் சம்மாட்டி கேட்டிட்டான்.

‘அருளண்ண பட்டதோட பட்டதா இன்னும் ரெண்டு மூண்டு கடல் ஓடினா உழைச்சுப் போடுவியள்.’

‘எதுக்கும் வீட்ட போனாத்தான் சொல்லலாம். வழமையாப் போற தொழிலாளியை விட்டுட்டு என்னை ஏத்திறதும் சரியில்லை’ என்று சொல்லிப் போட்டார். குட்டிச் சம்மாட்டிக்கு முகம் சரியில்லை.
அருளருக்குத் தெரியும், ஆரும் இப்ப வீட்ட போய் மங்களாவிட்டைச் சொல்லிப் போடுவாங்கள் என்று. வீட்ட போக ஒரு பிரளயம் இருக்கும். மங்களாவைச் சமாளிக்க இப்பவே திட்டம் போட்டிட்டார்.

குட்டிச் சம்மாட்டியிட்ட பங்குக் காசில ஆயிரம் ரூபாவும் வாங்கிக்கொண்டு மங்களா மாட்டிறைச்சி தின்ன மாட்டாள் எண்டு ரெண்டு கிலோ ஆட்டிறைச்சியும் வாங்கி கோப்பிறேசனையும் மறக்காமல் வீட்டபோக, மங்களா கதைக்கேல்ல. சமாதானப் பாடுத்திப் பார்த்தார். சரியே வரவில்லை.

‘உயிரைக் குடுத்து உந்த வளிச்சல் தொழில் செய்யத் தேவையில்லை. நாங்கள் பட்டினி கிடந்தா கிடக்கிறம். நானோ பிள்ளையளோ அதைக்கொண்டாங்கோ இதைக்கொண்டாங்கோ எண்டு கேட்டதே? நாலுநாள் நல்லா சாப்பிடோணும் எண்டதுக்காக காலம் பூராவும் கண்ணீரோட கிடக்கோணுமே. சத்தியம் பண்ணுங்கோ, இனிப் போகனெண்டு.’

‘அதடி கடலில இயக்கத்தின்ர போட்டுகள் இறங்கி நிண்டது. நேவி வரான். பயமில்லை எண்டுதான்…’

எப்பிடிச் சமாளிச்சும் சரிவரேல்ல. அருளர் கொண்டுவந்த சாமானெல்லாம் தூக்கியெறிஞ்சு சத்தம்போட்டு ஊரைக் கூட்டிப் போட்டுது மங்களா. தொழிலுக்கு கூட்டிக்கொண்டு போகவந்த குட்டிச் சம்மாட்டிக்கும் நல்ல பேச்சு. அண்டையோட அருளர் வளிச்சல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். பழையபடி வேதாளம் மரமேறிய கதைதான். மண்டான்… மீன்வெட்டு… அரைப் பட்டினி… காப் பட்டினி.

மங்களாவுக்கு அருளர் பயம்தான். நல்லாக் கதைக்கத் தெரிஞ்ச ஆள். ‘நாட்டின்ர பொருளாதாரம் வீழ்ச்சி அடைஞ்சு போட்டுதெண்டு இவளுக்கு என்னண்டடா விளங்கப்படுத்திறது?’ அவர் சொல்லேக்க சிரிப்புத்தான் வரும்.

அந்தாள் படிச்சதென்றால் எட்டாம் வகுப்புத்தான். ஆனால் உலகப் புதினமெல்லாம் அந்தாளின்ர கையுக்குள்ள. ஆரும் படிக்கிற பெடியள் கூட்டாயிருந்து அவரிட்டை கதை கேட்பாங்கள். வால்வு ரேடியோவில் இருந்து, கம்பியூட்டர் என்று போய், நெற்வேக்குக்கு தமிழ் சொல்லி மூலகமெண்டு தொடங்கி, ஐதரசன் ஒட்சிசன் துகள்கள், இலத்திரன்கள், மின்காந்தம் எண்டு அணுவாயுதம் வரைக்கும்போய், குரோமோசோம்கள் டீஎன்ஏ ஏனிப்படி  இதுதானெண்டு கீறிக்காட்டி… நம்ப மாட்டாமலும் பெடியள் இருப்பான்கள். இப்படியிருந்து கதைக்கிறது மங்களாவுக்கு கொஞ்சமும் பிடிக்கிறதேயில்லை.

‘உப்பிடியே கதைச்சு காலம் போக்காட்டுற நேரம் நாலு தென்னைய நட்டிருந்தாலும் இந்த நாலு வருசத்தில காச்சிருக்கும். ஆளுக்காள் தென்னை நட, தேங்காய் விலையும் குறையுமல்லே. இப்படியே எல்லாத்திலையும் எல்லாரும் கஸ்ரப்பட எல்லாச் சாமான்களும் விலைகுறைய பட்டினி ஏன் வருகுது?’ ஒரு லெக்சரே வைப்பா. ஞாயமாய்தான்படும் எல்லோருக்கும்.

‘இப்பத்தான் பொருளாதாரப் பிரச்சனையின்ர அரைவாசிக்கு வந்திருக்கிறாய். சரி, நீ சொல்லிறமாதிரியும் செய்வம்’ என்பார். அண்டைக்கு காசிருந்தாலும் அருளர் பட்டினிதான்.

அருளர் ஒண்டும் கஸ்ரப்படாத ஆளில்லை. வாழ்க்கையில நல்லா அடிபட்ட ஆள்தான். சின்ன வயசில இருந்தே வீச்சு வலையடிச்சு உழைச்சு சகோதரங்களை கரைசேர்த்து… காதலில தோத்து… வயதுபோய் கலியாணம்கட்டி… இப்ப மூத்தவளுக்கு பதினாலு வயது. போட் எஞ்சின், வளிச்சல் வலை, அறக்கொட்டியான், சூடவலை நகைநட்டெண்டு மனிசி பிள்ளையள நல்லாத்தான் வச்சிருந்தவர். தொண்ணூறோடதான் எல்லாம் துலைஞ்சுபோனது.

அகதி வாழ்க்கையை சமாளிச்சு முல்லைத்தீவில தாட்டு வச்ச வலைகளும் போட்டும் அந்த தென்னந்தோட்டமும் இருந்தாக்காணுமெண்டு நினைச்சு முல்லைத்தீவு பெடியளிட்ட பிடிபட்ட பிறகு வந்து பாத்தா, ஆமி அடுக்கி வைச்ச தென்னங்குத்தியளுக்குக் கீழ உடைஞ்சு போய்க் கிடந்தது அவரின்ர போட்டு. கடற்கரைக் காணியெல்லாம் அடம்பனும் எருக்லையும். மனம் விட்டேபோச்சு.
பழையபடி மிச்சமாய்க் கிடந்த கிணத்தை இறைச்சு, சுத்திவர வேலியடைச்சு, பத்துத் தென்னையும் மரவள்ளியும் வச்சு தொட்டுத் தொட்டுப் பார்த்துத் தண்ணியூத்துவார்.

மங்களா சொன்னதுபோல ஒரு நாலு வருசக் கஸ்ரம். தேங்காய் மலியும்தான். மீன் விலையும் குறையும். அரிசியும் மலியும். எல்லாரும் வடிவாய் சாப்பிடலாம்தான். ஆனால் எல்லாரும் சேர்ந்து கஸ்ரப்படவேணுமெல்லோ.

இந்தமுறை காலத்துக்கு முன்னமே கடலடிக்கத் தொடங்கினதால இடைக்கிடை கடல் சீராப் போகுது. கல்லுவலை படுகிறதாலயும், வளிச்சல்  தொழில் போறதாலயும், பங்குக் கரைவலை வளைக்கிறதாலயும் மாரிச் சீவியம் பரவாயில்லாமல் போகும். கடலில இயக்கம் போட்டு இறக்கினா, வளிச்சல் தொழில் பயமில்லாமல் ஓடும். அருளர் கரவலையும், வளிச்சலும் மாறிமாறிப் பாக்கிறதால அவரின்ர பாடும் பரவாயில்லை.

காலமை விடிய அருளர் மங்களாவிட்ட தேத்தண்ணி கேக்கப்போக ‘சீனி இல்லை’ எண்டு தொடங்கி, இந்தமுறை நத்தார் கொண்டாடுறதில்லையோ என்று கேட்டு, குடிக்கக் கூடாதென்று சத்தியம் வாங்கி, இந்தமுறை பிள்ளையளுக்கு உடுப்பெடுக்கோணும், இந்தமுறை பெரிசா நத்தார் கொண்டாடோணும் எண்டு முடிச்சிட்டா.

“எத்தினை வருசம் நத்தார் பட்டினியோட போச்சுது? மற்ற நாளில பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. நத்தாருக்காவது நல்ல கறி சோறு சமைக்கோணும், அப்பா. இந்தமுறை ராப்பூசை கள்ளப்பாடு அந்தோனியார் கோவிலிலயாம்.”

அருளர் வருசப் பிறப்பை பெரிசாக் கொண்டாடுறதில்லை. நத்தார்தான் கொண்டாட்டம். கடைசியில தொண்ணூறில நத்தார் கொண்டாடினதை நினைச்சுப் பார்த்தார். எத்தின கிலோ கேக்கு! இரவு பாலப்பம் சுட்டு… ராப்பூசைக்கு மழையில நனைஞ்சு…

அந்த வருசம் நத்தாருக்கும் கடல் சீர் போட்டுட்டுது. றாலும் பட்டது. தொழிலாளிகள் தொழிலுக்கு வெளிக்கிட பிளக் சுங்கானுக்க கடதாசி அடைஞ்சு எஞ்சின் இஸ்ராட் வராமல் செய்து, தொழிலை நிப்பாட்டி எத்தினை பி.எஸ்.ஓ.ஏ., எத்தின பியர் போத்தல் கொக்கோ கோலா எண்டு தொழிலாளியளை தவழவைச்சது? ஆட்டுக்காரனுக்கு ஆடு, மாட்டுக்காரனுக்கு மாடு, கோழியும் பிறிம்பா. இரவு வீடியோப் படம்.
‘இந்தமுறை கடவுள் மனம் வச்சாரெண்டா நத்தார் கொண்டாடுறதுதான்.’ ரெண்டுபேரும் சேர்ந்து திட்டம் தீட்டியாச்சு.
“நாலு சாவல் நிக்குதெல்லோ ரெண்டை வித்துவிடு. ரெண்டு நத்தார்க் கறிக்கு. மூன்று கிலோ அரிசி வேண்டோணும். பக்கத்தில இருக்கிற சின்னப் பிள்ளையளுக்கு சாப்பாடு குடுக்கோணும்.”
“பெரிய திட்டங்கள் போடாதைங்கோ. இவ்வளவுக்கும் காசு எங்க இருக்கு? முதல்ல நீங்க குடிக்கமாட்டன் எண்டு சத்தியம் பண்ணுங்கோ.”
“நத்தார் மட்டும் குடிக்கமாட்டன்.” சத்தியம் பண்ணியாச்சு. 

கதைச்சுக்கொண்டிருக்க குஞ்சுக்கிளி சம்மாட்டியின்ர பெடியன் ஒருத்தன் ஓடிவாறான்.

“அருளண்ண கரவலைச் சல்வாய்மடி கட்டையில விழுந்து கிழிஞ்சுபோச்சு. சம்மட்டியார் உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்.”

கோரிக்கு நேர ஆறு பாகத்தில ஒரு கப்பல் தட்டு. அதுதான் ஒரு கொழுவல். அதுலதான் வலையள் விழுந்து கிழிஞ்சு போறது. அது சோழர் காலத்தில கொள்ளைக்காரர் மாத்தளனில கதிரைகளை கொள்ளையடிச்சுக்கொண்டு போகேக்க சண்டை நடந்து தாண்டுபோன கப்பலெண்டு பொன்னியின் செல்வன் புத்தகத்தில் படிச்ச ஞாபகம்.

இப்ப ஆமியின்ர டோராக்களும், கப்பல்களும் சனம் விட்டுட்டுப் போய் ஆமி கடலில தள்ளிவிட்ட போட்டுகளும் கடல் முழுக்க கட்டைதான். இப்ப அந்தக் கட்டையள வச்சுத்தான், “நத்தாருக்கு காசு வரப்போகுது. மாதா தருவாவா, மங்களா?” மனிசியைப் பார்த்து கண் சிமிட்டினார் அருளர்.

அருளர் வலையடிக்குப் போயிட்டார். இன்றைக்கு இருநூறை முந்நூறைக்கொண்டு வருவார் எண்டு பக்கத்து வீட்டில அரிசியும் கடன் வாங்கிப்போட்டு, கருவாடும் எடுத்து முருங்கையிலையும் சுண்டிக் கொண்டிருக்க அருளற்ற சத்தம் கேட்டுப் பதறிப்போனாள் மங்களா. ‘சரி, எல்லாம் சரி. குடிக்கிறேல்ல எண்ட மனிசன் இப்ப குடிச்சுப்போட்டு வந்திருக்குது. காசெல்லாம் முடிஞ்சுதோ தெரியாது. கடவுளே நல்ல புளுகத்தில வாறவர் போறவர் எல்லாருக்கும் கதை சொல்லிக்கொண்டு வாறார். வரட்டும் இண்டைக்கு.’

வாசலுக்க வரேக்க, “யேய், மங்களா! பெடியள் டோரா ஒண்டை அடிச்சுப் போட்டாங்களாம்” என்றார் அருளர்.

நல்லா பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த மங்களாவுக்கு இப்ப எல்லமே விளங்கிவிட்டது.

எண்டாலும் இன்னும் எவ்வளவு மிச்சம் வச்சிருக்கிறாரென்று பொக்கற்றைத் தேடிப் பாக்க … இருநூறு ரூபா அகப்பட்டுது. எவ்வளவு எடுத்தவர் என்று கணக்குப் பார்க்க “சம்மட்டியார் எவ்வளவப்பா தந்தவர்” என்று கனதரம் திருப்பித் திருப்பிக் கேட்டாச்சு. அவருக்கு அதைப்பற்றிக் கவலையே இல்லை. டோரா அடிச்சதும் தாட்டதும்தான் கதை. ஒரே புளுகம்.
பழையபடி அருளர் குடி விடுறதுக்கு சத்தியம் பண்ணியாச்சு. பிள்ளையளுக்கு உடுப்புகள் தேடியாச்சு. ரெண்டு கோழியும் வித்து அரிசி மூன்று கிலோ, அப்பத்துக்கும் மாவிடிச்சு இறைச்சிக்கும் பிரச்சினையில்லை. கோழி ரெண்டும் நிற்குது. நூறு கிராம் நூறு கிராமா சில்லறைச் சாமானும் வேண்டி தூள் இடிச்சாச்சு.

இரவு பாலன் பிறப்பு. பகல் சோத்துக்கு என்ன செய்யிறதெண்டு மங்களா யோசிச்சுக்கொண்டிருக்க, அருளர் பத்து நண்டு கொண்டுவந்தார். ஐடியா வந்திட்டுது. இரவுக்கு அப்பம் சுடுகிறதுதானே. அப்ப மத்தியானம் கூழ். இருந்த பனி அவரை கொஞ்சம் பிடுங்கியாச்சு. அப்பதான் கிழங்கு வச்ச மரவள்ளி ஒன்றை இழுத்தாச்சு. பழைய காரல் கருவாடு, கொஞ்சம் முசுட்டைஇலை, கொஞ்சம் முருங்கைஇலை, புளிக்கொரு மாங்காய்… காசில்லாத கூழ். ரொட்டி.

“கையை நீட்டடி… வலக்கையை நீட்டடியாத்தை.” அருளர் மனிசியின்ர கையைப் பிடிச்சுக் குலுக்க அவ ஆச்சரியமாய்ப் பாத்தா.
“உலகமே வந்து எங்களுக்கு பொருளாதாரத் தடை போட்டாலும் கடைசிவரைக்கும் ஒன்றும் செய்யேலாது.”

“பொருளாதாரத் தடையெண்டா என்னப்பா?”

அருளர் ஓடியேவிட்டார் கூழோடை.

இரவு நத்தார். ராப்பூசை கள்ளப்பாடு அந்தோனியார் கோவிலில ஆரவாரத்தோட தொடங்கிட்டுது. தொண்ணூறுக்குப் பிறகு அந்தோனியார் கோவிலில நடக்கிற ராப்பூசை. சனம் குறைவெண்டாலும் சந்தோசம் கூட. பாலன் பிறக்க முந்தியே அரியதுரை ‘பப்பா’ ஆடத் தொடங்கிவிட்டார். பக்கத்து கடற்புலிப் பெடியளும் பூசைக்கு வந்து வேட்டுத் தீர்த்து ‘றேசர் ரவுண்’சும் அடிச்சு சிறப்பித்தார்கள். பாலன் பிறந்திட்டார். அருளர் வீட்டிலயும் நத்தார்!

நித்திரை எண்டாலும் அருளர் வெள்ளனவே அருண்டுவிட்டார்.
“மங்களா, என்னடி பெடியள் இன்னமும் நத்தார் வெடி கொளுத்திறாங்களோ?”

“இல்லையப்பா, கடலிலதான் சத்தம். ஆரும் வளிச்சலுக்குப் போனவங்களோ?”

“இல்லை. ரெண்டு மூண்டு வள்ளம்தான் போனது.”

“அவங்கள் இவ்வளவு நேரமும் கடலில கிடக்கிறாங்களோ?”

“அப்ப சண்டை நடக்குதோ? விடியத் தெரியும்தான. தேத்தண்ணி வையன். நானொருக்கா கடற்கரைக்குப் போட்டு வாறன்.”

அண்டைக்குச் சீனியிருந்தது. அவ எழும்பி தேத்தண்ணி போட குடிச்சிட்டு கடற்கரைக்கு வெளிக்கிட்டார். 

கிபிர் சத்தம் கேட்கவே மங்களா சொல்லியிட்டுது, “அவன் எங்களைத் தாண்டி போட்டான்” எண்டு. ‘கடலுக்க ஏதோ நடக்குதுபோல. அவன் நேர கடலுக்குப் போறான்’ என நினைத்தாலும் மங்களா அதையெல்லாம் கணக்கெடுக்காமல் நத்தார் மத்தியானச் சாப்பாடு செய்ய வந்திட்டார்.

மூத்தவளை கோழியை உரிக்கச் சொல்லிவிட்டா. அவள்தான் உரிப்பாள். பிள்ளையளக்கு காலமைச் சாப்பாடு குடுத்தாச்சு. அதுகள் நத்தார் கொண்டாட சிநேகிதப் பிள்ளைகள் வீட்ட போட்டுதுகள். கறியும் மணக்க இறக்கியாச்சு. ரோட்டால போறவையும், “என்ன மங்களக்கா, நத்தார் விசேசமோ?” என்றனர். சந்தோசமாயிருந்தது அவவுக்கு.

கோழியெண்டா கிழவர் மூண்டுதரம் சாப்பிடுவார். சந்தோசம் வந்தா மங்களா அருளரை கிழவர் எண்டுதான் சொல்லுவா. ‘இண்டைக்கு கேக்கேக்க சாப்பாடு போட்டுக் கொடுக்கோணும். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இவரோட வைச்சு சாப்பாடு கொடுக்கோணும்.’

ரெண்டு மணியாச்சு. படலேல நிண்டு பாத்தா. நின்று பார்த்தும் அந்தாள் இன்னும் வரேல்லை. ‘எங்க போட்டுது உந்த மனுசன்?’

வேலி ஒழுங்கையால கள்ளுப் பையோட வந்த மாசிலாமணியண்ண, “என்னடி மங்களா, மனிசனைப் பார்த்துக்கொண்டு நிக்கிறியோ? புதினம் தெரியுமோ? பெடியள் கடலில டோராவை அடிச்சு தாட்டுப்போட்டாங்களாம். கரையுக்குள்ள வாட்ட ஜெற் எல்லாம் கொணந்து கட்டிப்போட்டு நிக்கிறாங்கள். அவங்கள்தான் டோறா தாட்டதைச் சொன்னது” என்றார்.

“அப்ப அவர் அங்கயே நிக்கிறார்?”

“ஓமடி. நந்தசேன மல்லி வந்ததேனோ துள்ளி எண்டு பெரல்ல அடிச்சு ஆட்டமும் பாட்டமும் நடக்குது. கொண்டாட்டம்தான்.”

‘அப்ப… அங்க அந்தாள் நத்தார் கொண்டாடுது. அவருக்கு இண்டைக்கு ரெண்டு நத்தார். என்னை இண்டைக்கு மறந்து போடும். என்னோட நத்தாரைக் கொண்டாட ஆக்களில்லை. உந்த சின்னப் பெடியளை சாப்பிடக் கூப்பிடுவம். அதுகளோடயாவது சந்தோசமாக் கொண்டாடுவம்’ எண்டு மனதுக்க நினைச்சுக்கொண்டு திரும்ப…

“மங்களாக்கா.”

அவவுக்குத் தெரிஞ்ச கடற்புலிப் பெட்டை. ‘கடலில பொம்பிளையளும் நீந்தலாமோ?’ எண்டு ஆச்சரியப்படேக்க சந்திச்ச சிநேகிதம்.
“எங்கயடி காத்திகா வந்தனீ?”

“அது… கடலில இரவு சண்டை. இப்ப கரைக்குள்ள வண்டியைக் கொணர்ந்து கட்டிப்போட்டு நிக்கிறம். என்ன நத்தார் விசேசமில்லையோ?”

“என்னைவிட அவருக்குத்தான் விசேசம். அது சரி, நீங்கள் கடலில டோரா தாட்டுப் போட்டீங்களாம். உண்மையோ?”

“அது நாங்கள் அடிக்கேல்ல. அண்ணையாக்கள்தான் அடிச்சவங்கள். எங்கட போட் சப்போட்தான். அதிருக்கட்டும், எங்க அருளண்ண கோப்பிறேசனுக்கோ?”

“அவர் வரார். அவருக்கு இண்டைக்கு பாலன் பிறப்பும் நத்தாரும். நீங்கள் வாருங்கோ உள்ளுக்குள்ள. சாப்பிட்டுப் போங்கோ.” கார்த்திகாவோட வந்த பிள்ளையளையும் உள்ளுக்குள்ள கூட்டிக்கொண்டு போனா, அவவுக்கு நத்தார் கொண்டாட ஆக்கள் வந்திட்டுதெண்ட சந்தோசம்.

“இருந்து சாப்பிடேலாதக்கா. நாங்கள் போகோணும். சாப்பாட்டைக் கட்டித் தாங்கோ.” சாப்பாடு கட்ட மங்களாக்கா குசினிக்குள்ள போட்டா. அவவுக்கு இயக்கப்பிள்ளையள் தன்ர வீட்டிலிருந்து சாப்பிடாம போகப்போகுதுகள் எண்ட கவலை.

“சாப்பாட்டை இஞ்சவச்சு சாப்பிடுங்கோவன். கட்டித்தர ஒன்றும் இல்லை.”
“சொப்பிங் பாக்கில கட்டக்கா.”

மற்றப் பிள்ளையளுக்கு பலகாரம் தேத்தண்ணியும் குடுத்திட்டு கார்த்திகாவை சொப்பிங் பாக்கைப் பிடிக்க சொல்லியிட்டு பானைச் சோறு முழுவதையும் போட்டு மற்ற சொப்பிங் பாக்கில் கறிமுழுவதையும் ஊத்திக் கட்டத்தான் கார்த்திகா கேட்டுது, “ என்ன மங்களாக்கா கறியெல்லாம் ஒண்டும் மிச்சமில்லாமல் ஊத்திறீங்கள். அப்ப உங்களுக்கு வேண்டாமோ?” எண்டு.

மங்களக்கா ஒண்டும் கதைக்கேல்ல. எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு வந்து கட்டில்ல வச்சிட்டு வீட்டுத் தட்டிக் கதவெல்லாம் இறுக்கிக் கட்டினா. அவவுக்குத் தெரியும், கடலில சண்டை நடந்து பெடியளுக்குத்தான் வெற்றியெண்டு. அப்ப அவருக்கு இண்டைக்கு பாலன்பிறந்த சந்தோசம். அவர் இனி வீட்ட வரமாட்டார். என்னையும் விட்டிட்டு கோப்பிறேசனில தனிய நிண்டு, இல்ல தன்ர சிநேகிதரோட நிண்டு நத்தார் கொண்டாடுவார். இனி அவருக்கு சாப்பாடும் தேவையில்லை.

நாளைக்கு குடிக்கமாட்டன் என்று இன்னொருக்கா சத்தியம் பண்ணுவார். நாளயிண்டைக்கு கடலில ஒரு சண்டை நடக்கும். பெடியள் வெண்டு வருவாங்கள். பேந்து இனி புருவருசம், அல்லாட்டி ஒரு பொங்கல், ஒரு உயிர்த்த ஞாயிறு, தீபாவளி எண்டு கொண்டாடிக்கொண்டே இருப்பார். அது அவவுக்கும் சந்தோசம்தான். கார்த்திகா கேட்டாள்: “எங்க மங்களக்கா வீடெல்லாம் கட்டி வெளிக்கிடுறியள்?”

“வேற எங்க, உங்களோட வரத்தான்.”

கார்த்திகா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்னோட நத்தார் கொண்டாட ஒருத்தரும் இல்லை. இண்டைக்கு உங்களோடதான் நத்தார் கொண்டாடப் போறன்”

0

(‘நீலமாகி வரும் கடல்’ சிறுகதைத் தொகுப்பு, விடியல் வெளியீடு, 2014)

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி