ஊர்கள் அடங்கிய இரவுகள்


-தேவகாந்தன்

மனிதகுலம் என்றைக்குமே யுத்தத்தை விரும்பியிருந்ததில்லை. ஆனாலும் யுத்தம் எப்போதும் நடந்தே வந்திருக்கிறது. நேபாம் குண்டுகளாலும், கனரக வாகனங்களின் ஷெல் வீச்சுகளினாலும், ஏவுகணைகளாலும் நடத்தப்படும் யுத்தங்களில்போலவே, இறந்த மிருகங்களின் எலும்புகளினாலும், மரங்களில் செதுக்கியெடுத்த  கதாயுதங்களாலும் நடந்த யுத்தங்களிலும் அழிவுகளே நிகழ்ந்தன. யுத்தத்தில் அழிவைத் தவிர  வேறெதுவும்  எஞ்சுவதில்லை. யுத்தத்தின் தோல்விகளில்போலவே  வெற்றிகளிலும்கூட  எஞ்சுவது  அழிவுதான்.

மனித குல வரலாறு முழுக்க  பரந்துகிடக்கின்றன யுத்தங்கள். நிலத்துக்காகவும், பெண்ணுக்காகவும், பொன்னுக்காகவும்   ஆதி யுத்தங்கள் நடந்தனவெனில், பொருளதிகாரத்துக்கானதாக  இருக்கின்றன  நவகால யுத்தங்கள். பொருளதிகாரமென்ற ஒற்றைச் சொல்லில் அவற்றின்  முழுக் காரணமும் தங்கியிருக்கிறது. ஆனால் எழுதப்பட்ட எந்த வரலாற்றின்  நெடும்பரப்பிலும்  இந்த உண்மை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. வரலாற்று  உண்மை நிஜமாகவே அதன் சொல்லுதலில் இருக்கிறது எனப்படுகிறது. சொல்லுதல் வரலாறெழுதிகளின் சார்புத் தன்மையில் இருக்கிறது.

அண்மைக் காலத்தில் காஷ்மீர்  மிகப்பரவலாக  செய்திகளில் அடிப்பட்ட தேசம். ஆசியாவின் பூந்தோட்டமெனப்பட்ட அத் தேசம், இன்று தன் செழிப்பெல்லாம் அழிந்து கிடக்கிறது. அங்குள்ள பசுமைவெளிகளின் பூக்களையும், வில்லோ மரங்களில் பாடும் நைற்றிங்கேல் பறவைகளையும் வியந்து கொண்டாடும் பாடல்களின் பல்லவியொன்று, ‘பூக்களிடம் பாடுகிறது  நைற்றிங்கேல் பறவை, ஒரு பூந்தோட்டம் எங்கள் தேசமாய் இருக்கிறதுஎனப் பெருமை பேசுகிறது.

பழங்காலப் படங்களில் ஸ்ரீநகர் மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். மரப்பலகைகளால் ஆன வீடுகள், மசூதிகள், கோயில்கள் முதலானவை ஜீலம் நதிக்கரையில் ஒன்றையொன்று போற்றுவதுபோல் அமைந்திருக்கும். அதன்மீதமைந்த ஏழு பாலங்களின்மீது மக்கள் காலாற நடந்து உணவுக்கான பொருட்களையும், மணப்பொருட்களையும், அழகான  பூவேலை  செய்யப்பட்ட போர்வைகளையும், கம்பளங்களையும், செறிவான பூவேலைகள் மிக்க சமூவார்களையும் விற்பனைசெய்யும் அங்காடிக்குள் செல்வர்’ (ஊரடங்கு இரவு).

 இவ்வாறு அழகும் கலகலப்பும் கொண்டிருந்த  அந்நகரின்  புராதனச் சுவடுகள்  அழிந்து  கிடக்கின்றன. இன்று அது பங்கர்களின்  நகரமாகியிருக்கிறது. ஆங்காங்கே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இரவுகள் பதினைந்து  ஆண்டுகளாக  மாறாச் சோகங்களை அங்கே ஏற்படுத்தியிருக்கின்றன.

என்ன நடந்தது காஷ்மீரின் பௌதிகத் திசுமம் அவ்வாறு உருக்குலைந்து போவதற்கு?  மக்களின் மனங்கள்  ஏன் சேதப்பட்டுப்  போயின? எப்போது தொடங்கியது  இந்த அழிச்சாட்டியத்தின் வரலாறு?  காலம் ஏன்  அதன் விதியை அவ்விதம் எழுதிச்சென்றது?

இவ்வாறான பல்வேறு கேள்விகளுக்கும் சிறந்த பதில்களைத் தன்னுள் அடக்கியிருக்கிறது, பஷரத் பீரின்ஊரடங்கு இரவு’ நூல்.  நவகாலப்  போரின் சீரழிவுகளையெல்லாம் விவரிக்கிறது அது. அதன் உள்ளுள்ளாய் முரண்கொண்டிருக்கும்  உணர்வுகள்  நெஞ்சை அதிர வைக்கின்றன. அச் சேதாரங்களின் காரணம் தேடிச் செய்யும் பயணங்களினூடாக, தன்  மண்ணை நேசிக்கும் ஒரு மனிதன் கண்டடைந்த தகவல்களின் பதிவுகள் அதுமாதிரி நூல்களுக்கான முன்னோடியாகஊரடங்கு இரவுவை  ஆக்கியிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

முதலில் கருதப்படக்கூடியது  நூலின்  கலாபூர்வமான வெளிப்பாட்டு முறைமை. எதையும் மறைக்காத அதன் வெளிப்பாட்டுத்தனம் அடுத்ததாய் முக்கியத்துவம் பெறுகிறது.

.பூரணச்சந்திரனின் மொழிபெயர்ப்பில்  காலச்சுவடு பதிப்பகத்தினூடு 2011இல் வெளிவந்திருக்கும் இந் நூலை அண்மையில்தான்  வாசிக்கக் கிடைத்தது. வாசித்து முடித்த சிறிதுநாளிலேயே  இரண்டாவது  தடவையும் வாசிக்க உந்துதல் எழுந்தது. அப்போதுதான் தெரிய முடிந்தது, காஷ்மீரின் யுத்த காரணங்களும், நிலைமைகளும் ஏறக்குறைய இலங்கையின் யுத்தத்தை ஒத்திருந்தனவென்பது. எந்தவொரு யுத்தமும்கூட ஏதோ ஒருவகையில் சில ஒத்த நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன என்ற ஓருண்மையும் இருக்கிறது.

1947இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையே  காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது  காஷ்மீரின் சோகம் தொடங்கியதென்று கொள்ளலாம்.
 அதே ஆண்டில் சுதந்திரமடையும்  இலங்கையில் இந்திய இலங்கைப் பிரஜைகளின் வாக்குரிமையை இல்லாதொழிக்கும் இனப்பாகுபாடான மசோதாவை  ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதிலிருந்து,  ஒரு பயங்கர உள்நாட்டு யுத்தத்துக்கான  புள்ளி இடப்பட்டதாகக் கொள்ளமுடியும்.

போராட்ட இயக்கங்கள் வளர்ந்த முறைமைகள், ராணுவத்தின் பிரசன்னம், மக்கள்மீதான அதன் தாக்குதல்கள், ஊரடங்கு இரவுகள், இரவுச் சோதனைகள், கைதுகள், வதைமுகாங்களென வைத்துப் பார்க்கையில்,  காஷ்மீருக்கும் இலங்கைக்குமிடையே பெருமளவு விஷயங்கள் ஒற்றுமை உடையனவாய்த் தோன்றுகின்றன.  ஜம்மு பகுதிப் பண்டிட்கள்மீதான போராளிகளின் தாக்குதல் அவர்களை காஷ்மீரைவிட்டு வெளியேறி  இந்தியாவுக்கு பெயர வைத்தது. இலங்கையில்  முஸ்லீம்களை  வடமாகாணத்திலிருந்து புலிகள் விரட்டியமைக்கு  ஏறக்குறைய  ஒத்த  செயலாகத்தான் அது எனக்குத் தோன்றியது.
இலங்கையில் இராணுவ சோதனைக்கு தலையாட்டிகள்போல், காஷ்மீரில் போராளிகளை இனங்காணமுக்பீர்கள்.  இலங்கையின்  பூசா முகாமுக்குச் சமமானது, காஷ்மீரின்பாபா2’ முகாம். இலங்கையில் கோவில்களும் தேவாலயங்களும் குண்டுவீச்சால் தகர்க்கப்பட்டதுபோல்தான், காஷ்மீரில் தர்காக்கள் சேதமாக்கப்பட்டன. கிரார்  நகரின்  அறுநூறு ஆண்டுக்கால தர்காவே  ஒருபோது முற்றாக இடித்து அழிக்கப்பட்டது . இலங்கையிலும் நவாலி தேவாலயம்போல் பல இந்துக் கோவில்கள்  குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. இலங்கையில் யுத்தம் நடந்த பகுதியின்  மொத்த  முகமுமே  மாறியது. அதுபோலவே  காஷ்மீரிலும்  ஆனது.

இதில் ஒன்றேயொன்று வித்தியாசமாக நிகழ்ந்தது. காஷ்மீரிகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உயிரபயம் கேட்டு ஓட, இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கும், மிகப்பெருமளவில் ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களுக்கும் ஓடினார்கள்.  காஷ்மீரிகள்  ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் தம் மண்ணுக்குத் திரும்பக்கூடும். ஆனால் இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை  அப்படியொரு நிலைமை என்றைக்கும் நிகழப்போவதில்லை. அது அதன் இடைத்தூரத்தினாலல்ல, எழுந்துள்ள புதிய வாழ்நிலைமைகளின் மாற்றத்தால் விளைந்த மனத்தூரத்தால்  ஏற்பட்டிருக்கிறது.

1947இன் பின் காஷ்மீரில் நடந்த  அனைத்து யுத்தங்களிலும்  எதிரியின்  முகங்களும், காரணங்களும்  மாறினவே தவிர,  யுத்தம் தொடர்ந்துகொண்டு இருக்கவே செய்தது. சுருங்கிய வரிகளிலெனினும்  நூல் காஷ்மீர் தேசமொன்று உருவாகிய ஐதீகத்திலிருந்து,  பஞ்சாபியர்  மொகலாயர்   ஆப்கானியரென்று  பல்வேறு  நாட்டினரால்  அது ஆளப்பட்ட விவரங்கள்வரை  வரலாற்றுத்  தொடர்ச்சி இடையறுந்துவிடாத சாதுர்யத்துடன்  சொல்லியிருக்கிறது.

ஊரடங்கு இரவுவின்  விசேஷம்  இது.  மட்டுமில்லை.  தன் இளமைக் காலத்தில் நிலவிய காஷ்மீரின் அமைதி நிறைந்த  வாழ்க்கை ஏன் ஒரு தருணத்தில்  நண்பர்கள், உறவினர்களின் கொலைகளென்றும், விடுதலைக்கான போராட்டமென்றும், வீடுகள் ஊர்களைவிட்டு மக்கள் இடம்பெயர்தலென்றும் ஆகியது என்பதை அறியும் தேடலோடு  நூலாசிரியனின்  நினைவு  மீட்டல்களிருப்பது  மிகுந்த  கவனிப்பையும்  பெறுகிறது.  இலங்கை குறித்து இதை ஒருஈழப் போராட்டத்தில் எனது சாட்சியமோ, ஒருஈழப் போராட்டத்தில் எனது பதிவுகளோ, ஒருஅகாலமோ  செய்திருக்கவில்லை.

படிப்பதற்காக இந்தியா சென்றிருந்தபோதும், பஷரத் பீரது பாதங்கள் தாய்மண் தேடிவந்து யுத்தநிலைமையெல்லாம் கண்டது. தன் மண்ணின் மாட்சியெல்லாம் தேடியது. தன் உறவுகள்  நட்புகளையெல்லாம்  கண்டு அவற்றின் அனுபவங்களைச் சேகரித்தது. நியாயப்பாட்டின் மீதாகவெனினும்  யுத்தம் அவலமென்பதை அது சிதைக்கப்பட்ட வாழ்வுகளின்  கண்ணீரின்மீது நின்று ஓங்கியுரைத்தது. பஷரத் பீரே மாணவப்  பருவத்தில் போராட்ட இயக்கங்களில் வெகு ஆகர்ஷம் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் அவர் வளர்ந்து ஒரு செய்தி நிறுவனத்தில் ஊடகவியலாளனாகக் கடமையாற்றுகையில் அந்த ஆகர்ஷம் போராட்டத்தின்மீதானதாக அன்றி,  மனிதர்களின்  வாழ்க்கைமீதான அக்கறையாக மாறிப்போகிறது.

அவற்றின் தெளிவான பதிவுகளினாலேயே இந்நூலிற்கான முகங்கள் பலவாயின. அது அழிவுகளின் காரணத்தைக் கண்டிருந்தாலும் அவற்றை வெளிவெளியாகவன்றி, தன் வரிகளின் ஊடுகளிலேயே  வைத்திருந்தது. அத்தனை அழிவுகளையும் தவிர்த்திருக்கக்கூடிய சாத்தியத்தை அது உள்ளுள்ளாய் ஆராய்ந்தது என்பதாய்  நான் அந்த ஊடுகளை அர்தப்படுத்திக்கொண்டேன்தன் தேசத் தோற்றுவாயின் ஐதிகங்களையும், அதன் மதிப்புமிக்க செல்வங்களான பாரூக் நஜாகிபோன்ற கவிஞர்களையும், நூருதீன் போன்ற ரிஷிகளையும்பற்றி அது சொன்னது. நியாயத்துக்காகக்கூட யுத்தம் எவ்வளவு கொடிது என்பதை மொத்தத்தில் அது சகலரின் பார்வைக்காகவும் விரித்துவைத்தது.

மக்களின் மனங்கள் அக்காலப் பகுதியில் எவ்வாறிருந்தன என்பதை பஷரத் பீர் விளக்குகின்றார்: ‘தந்தைமார்கள் தங்களுக்கு மகன்களுக்குப் பதிலாக மகள்கள் பிறந்திருக்கலாகாதா என்று நொந்துகொண்டார்கள். ஒவ்வொரு நாளும் மகன்கள் சிலர் கொல்லப்பட்டார்கள். தங்கள் மகள்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்று தாயார்கள் பிரார்த்தனை செய்தார்கள். இரவில் கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு யாவரும் பயந்தார்கள். ஆண்களும் பெண்களும் திரும்பி வருவோமென்ற நிச்சயமின்றி வேலைக்குச் சென்றார்கள். ஆயிரக்கணக்கானோர் திரும்பவில்லை. எங்கு பார்த்தாலும் இடுகாடுகள் முளைக்கத் தொடங்கின.’ இவை அச்சொட்டாக எண்பதுகளில்  இலங்கையின் வடபகுதியிருந்த  நிலைமையின்  விவரிப்புதான்.

ஊரடங்குகளுக்குப் பயந்தவர்களைத் தப்பியோடவும், அதை எதிர்த்தவர்களைப் போராடவும் அந்த இரவுகள் செய்தன. அந்த அந்தகாரங்களை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இறுகிய வக்கிரங்களும் கொடுமைகளும் தெரியும். ஓடுவதற்கும் போராடுவதற்குமான நியாயங்கள் அந்த இரவுகளிலிருந்து பிறக்கின்றன.

இலங்கையின் முப்பது  வருஷ கால யுத்தத்தின் அத்தனை கொடுமைகளையும் மிகத் துல்லியமாக என்னில் மீள்நினைவாக்கிய  நூல்ஊரடங்கு இரவு’. எங்கோ எப்போதோ ஒரு நூல்தான் நனவில் நடந்தவற்றையெல்லாம் கனவில்போல் நாளும் கண்டு கலங்கியிடும்படி செய்கிறது.  பயம், அவலம், ஆதங்கமென பல்வேறு  உணர்வுகளையும் பீரிட்டெழ வைத்துவிட்டது  நூல். யுத்தம் இலங்கையில் சரி, காஷ்மீரில் சரி தவிர்க்கப்பட்டிருக்க முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமென்றுதான் என் உள்மனம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்போது எனக்கு ஞாபகமாகிறதுபொயின்ற் எலியட் ஒப்பந்தம்’. வடஅமெரிக்காவின் இகுவாமிஷ்  இனத்தின் தலைவரான சியாட்டில், புதிய வெள்ளையினக் குடியேறிகளின்  தொடர்ந்தேர்ச்சியான தாக்குதலுக்கு தன் மக்களை ஆயிரமாயிரமாய்  இழக்க விரும்பாமல்புதிய வெள்ளையரசு அளித்த  1855இன்  ‘பொயின்ற்  எலியட்  ஒப்பந்தத்துக்குச்  சம்மதிக்கிறார். காலகாலமாய் வாழ்ந்து வந்த  தம் பூர்வீக நிலத்தை  வெள்ளைக் குடியேறிகளிடம் கையளித்துவிட்டு, அவர்கள் ஒதுக்கிய  புதியநிலத்துக்கு  அப்பழங்குடியினம் பெயர்ந்து செல்வதற்கான ஒப்பந்தம்  அது. அப்போது அச் செங்குடித் தலைமகன் ஆற்றிய  உரை  புகழ்பெற்ற  உலகப்  பேருரைகளுள்  ஒன்றாக  இன்றுவரையும் இருந்துவருகின்றது. நிலத்தைக் கொடுத்து மனிதரைக் காத்த மகத்தான சம்பவம் அது. கண்ணீரின் ருசியும், விசும்பலின் ஒலியும் அந்த உரையில் காலத்துக்குமாய் நிலைத்துநிற்கும்.

நிலம் மனிதருக்குச் சொந்தமில்லை. மனிதரே நிலத்துக்குச் சொந்தம். ஒரே குருதியால் இணைக்கப்பட்ட குடும்பத்தைப்போல, எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும். வாழ்க்கை வலையை மனிதர் பின்னவில்லை. அந்த வலையில் மனிதர் ஓர் இழைமட்டுமே. அந்த வலைக்கு அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே அவர்கள் தமக்குச் செய்கிறார்கள். அதனால் எனது மக்களுக்கு நீங்கள் ஒதுக்கிய புலத்துக்கு நாங்கள் செல்லலாமென்று   நீங்கள்  முன்வைத்த யோசனையை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். நாங்கள் புறம்பாகவும், அமைதியாகவும் வாழ்வோம். எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லைஎன்பது அந்த மகத்தான தலைவரது உரையின் முக்கிய வாசகங்கள்.

கமன் ராணுவ நிலையத்துக்கு அருகில்தான் இந்திய பாகிஸ்தானிய காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கிறது. இந்தக் கோட்டை  இங்கிருந்து  அங்குமோ, அங்கிருந்து  இங்குமோ கடப்பதுதான் காஷ்மீரிகள்  பலரின் கனவாக இருக்கிறது. ஸ்ரிப்  ஹ்சேன்  புகாரி லாகூர் உயர்நீதிமன்ற  நீதிபதியாக,  பின்னால் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியராக,  இருந்தவர்.  அவர், ‘கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கும்போது கைதுசெய்யப்பட்டு திரும்ப அனுப்பப் படுவதாகத்தான்  கனவு கண்டேன்என்று  கனவுகளிலும் கட்டுப்பாட்டுக் கோடே வருவதுபற்றிக்  கூறுகிறார்.

நூலின் பின்னுரையில் பஷரத் பீர் சொல்லுவார்,  ‘ ராணுவம் நிறைந்த மலைப்பகுதிகளின் குறுக்கே ஓடும் 576 கி.மீ. தூர வேலியல்ல கட்டுப்பாட்டுக் கோடு. அது நம் ஆன்மாக்களில், இதயங்களில், மனங்களில்  ஓடுகிறது. ஒரு காஷ்மீரி, ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி  எழுதிய, செய்த எல்லாவற்றின் ஊடாகவும் அது ஓடுகிறதுஎன்று.

ஆம், எல்லைக்கோடு அழிக்கப்படக்கூடியது என்கிறார்  பஷரத் பீர். அது நிலவெல்லையாகமட்டும் இருக்கவேண்டியது.

ஊரடங்கு இரவுகளின் அந்தகாரங்களும், அவற்றின் கொடுமைகளும், பயங்களும் அழிக்கப்படக் கூடியவையே. நியாயங்களைவிட எப்போதும் மனிதர்கள் முக்கியமானவர்கள். யுத்தங்கள் இல்லாதுபோகாதென்றாலும் அந்தப் புரிதலோடு அவற்றின்  அணுகுமுறைகள்  மாற்றப்படவேண்டியவை  என்பதைஊரடங்கு இரவு  தன்  மௌன  மொழியில்  சொல்லிக்கொண்டிருக்கிறது.
0

 ஏப். 12, 2017







Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி