‘கனவுச்சிறை’

தேவகாந்தனின்
 ‘கனவுச்சிறை’
-மு.நித்தியானந்தன்

எண்பதுகளிலிருந்து இருபது ஆண்டு கால ஈழத்தமிழரின் உடனடி அரசியல், சமூக வாழ்வு குறித்து மட்டுமல்ல காணி, வளவு, கமம் என்பதற்குமப்பால் விரிந்த சிக்கலான வாழ்வியல் கோலங்களையும் விரிவாகப் பேசும் ‘கனவுச் சிறை’ தேவகாந்தனின் எழுத்து வலிமையின் அசலான சாட்சியமாகும்.

 அறம்சார் வினாக்களும் அரசியல் தீர்மானங்களும் தனிமனிதர் வாழ்விலும் சமூகத்தின் நிலையிலும் நிர்ணயகரமான இடத்தை எடுத்த ஒரு காலப் பகுதியை கூர்மையான விசாரணைக்குட்படுத்துவதற்கான தீவிரமான தேடல்களும் அதற்கு அனுசரணையான ஆழ்ந்த அனுபவச் செறிவும் நாவலின் செழுமைக்கு உதவியிருக்கின்றன.

அமைதியாகத் தோற்றம் தரும் தேவகாந்தனின் சிந்தனை உலைக் களத்தில் கனலும் தணல் கங்குகளின் உக்கிரம் நாவல் முழுதும் விரவிப் படர்ந்திருக்கிறது.

இந்த நாவலில் உலாவரும் மாந்தர்கள் மனிதத்துவத்தின் கம்பீரமான சாட்சிகளாக – வாழ்விற்கு உயர்ந்த அர்ததங்கள் கற்பிக்கும் மனித ஜீவிகளாக – எல்லாத் துயரங்களுக்கும் மத்தியில் சுடர்விடும் தார்மீக நெறி பேணும் பெருமக்களாக நம் மனதில் நிலைபெற்று விடுகிறார்கள். அந்த மக்கள் தங்கள் தங்கள் மண்மீது கொண்டிருக்கும் அபாரமான நேசத்தை வெளிப்படுத்துவதில்  தேவகாந்தன் பெருவெற்றி பெற்றிருக்கிறார். அந்த வாழ்நிலங்கள் அந்த மாந்தரின் வாழ்வை, சிந்தனையை, நெறிகளை நிர்ணயம்செய்தும் அந்த சமூக உறவுகளை – அதன் சூக்குமங்களை பிரதிபலித்தும் எத்தகைய வன்மையான தாக்கங்களை செலுத்தி நிற்கிறது என்பதை நாவல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஈழத்தமிழரின் நெருக்கடி மிகுந்த ஒரு காலப் பகுதியின் மீது ஒளிபாய்ச்சும் நாவலின் சாத்தியப்பாட்டை தேவகாந்தன் இந்த படைப்பிலே செய்நேர்த்தியுடன் எட்டியிருக்கிறார். இந்த நாவலாசிரியருக்கு வாய்த்திருக்கும் திறன் மிகுந்த எழுத்தாளுமை ஒரு பெரும் படுதாவில் பல்வேறு பாத்திரங்களை, சிக்கல் மிக்க சூழல்களில் வித்தியாசமான நிறச் சேர்ககைகளில் வெவ்வேறு தூரிகைக் கோலங்களை சித்திரிப்பதில் நிறையவே கைகொடுத்திருக்கிறது. ஈழத்தமிழரின் போராட்ட கால வாழ்வை அறியவிரும்பும் யாரும் இந்த நாவலைத் தாண்டிச் செல்ல முடியாது.

000

(10.10.2015ல் லண்டன் ட்றினிற்றி சென்ரரில் முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற மூன்று நாவல்கள் அறிமுகம்-விமர்சனம்-கலந்துரையாடலின் மலரில் திரு.மு.நித்தியானந்தன்)

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி