மேகலை கதாபற்றி...

 

  • . தேவகாந்தனின் ‘மேகலை கதா’


    கலைமுகம் 73இல் எஸ்.கே.விக்னேஸ்வரன்



  • நன்பர் தேவகாந்தன் அவர்களை  நான் கொழும்பில் முதன்முதலாகச் சந்தித்தது 2004 அல்லது 2005இன் ஆரம்பகாலமாக இருக்க வேண்டும். அவரை நான் முதன்முதலாகக் கண்ட காட்சி என் கண்முன் இன்னமும் அப்படியே நிற்கிறது. நேர்த்தியாக எண்ணை வைத்து வகிடெடுத்துச் சீவிய தலை; மடிப்புக் குலையாமல்  மினுக்கப்பட்ட காற்சட்டை, முழுக்கைச் சேட்டு, முகத்தின் அளவுக்கேற்ற விதத்தில் அளவாகக் கத்தரிக்கப்பட்ட மீசையுடன் இணைந்த குறுந்தாடி என்பவற்றுடனான தோற்றப் பொலிவுடன் அவர் நின்றிருந்தார். கொழும்பு  கொட்டாஞ்சேனையில் இருந்த ஈக்குவாலிற்றி அச்சகத்தருகே, அந்த அச்சகத்தில் பணிபுரிந்த நண்பர் ரஞ்சகுமாரைச் சந்திக்கப் போன வேளையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. எனது முதற் பார்வையில் அவரது தோற்றம், அவர் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஒரு அதிகாரியாக இருக்கலாம் என்ற எண்ணத்தையே எனக்கு ஏற்படுத்தியது. நண்பர் றஞ்சகுமார் தான் அவரை எனக்கு ‘இவர்தான் தேவகாந்தன்’ என்று அறிமுகப்படுத்தினார். தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அத்தியாயம் அதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் வெளிவந்திருந்தது.என்பதால் அந்தப் பெயர் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது. அதற்கு முன்வந்த அவரது நூல்கள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. அன்றைய தினத்ததில் நடந்த ஒரு சில நிமிடங்களில் நடந்த உரையாடலின் போதே, அவரது தோற்றத்துக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெளீவாகிவிட்டது. மிக இயல்பாகவும் நகைச்சுவையுடனும் அவர் பேசிக்கொண்ட விதத்துக்கும் அவரது உடைக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  அதன்பின்னான  அடுத்தடுத்த  ஒரு சிலநாட்கள் அவருடன் அதே இடத்தில் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவருடனான அந்த உரையாடல்களின் போது,அவர் ஈழநாடு பத்திரிகையில் கடமையாற்றியது முதல் எழுதிய நூல்கள் வரையும் அவரது அனுபவங்கள் பற்றியும்நிறையப் பேசியதாக நினைவு. அந்தச் சந்திப்பின் போது பொதுவாகவே பெண்கள் நல்ல கதைசொல்லிகள் என்றும், தனது பாட்டிஒருவர் சிறந்த ஒரு கதை சொல்லியாக இருந்தார் என்றும் அவர் மூலமாகவே தனது கதைசொல்லல் ஆர்வம் வளர்ந்ததாக நினைப்பதாகவும் சொன்னதாக நினைவு.  அதன் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அறிந்தேன். 


    2013 இன் நடுப்பகுதியில் நான் கனடாவுக்கு வந்தபின் அங்கு நடந்த ஒரு இலக்கியம் கூட்டத்தில் எதிர்பாராத விதத்தில் அவரைச் சந்தித்த போதுதான் அவர் கனடாவுக்கு வந்துவிட்டது எனக்குத் தெரியவந்தது. (ஆனால் அன்றோ அதற்குப் பிறகோ நாம் சந்தித்துக் கொள்ளும் தருணங்களில் அவர் என்ன உடை அணிந்திருக்கிறார் என்பது எனது கண்களுக்குப் படுவதில்லை!) அன்றிலிருந்து தொடர்ச்சியாக அவரது  பழைய நூல்களை இரவலாகவும் புதியவற்றைச் சொந்தமாகவும் வாங்கிப் படித்திருக்கிறேன். நம்காலத்தின் மிக முக்கியமான ஒரு படைப்பாளி அவர். அவரது எழுத்துப் பணியின் அளவுக்கு அவர் பேசப்படாவிட்டாலும் உலகெங்கும் வாழும் தேர்ந்த வாசகர்கள் அவரை நன்குஅறிவர்.  அவரது ‘கனவுச்சிறை’ நாவல் ஈழத்து எழுத்துக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் ஒரு அற்புதமான படைப்பு என்பது எனது கணிப்பு.

    அவர் தான் செய்துவந்த வேலையில் இருந்து ஓய்வுபெற்ற கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றிக்கொண்டு எழுதிய நூல்கள் ஆறு. அதிலும் கடந்த இரண்டுவருட கால கொரோனாக்காலத்தில்மட்டும் அவர் மூன்று நூல்களையும்  தொகுக்கப்படாத தனது  எழுத்துக்களின் இரண்டு தொகுப்புக்களையும் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியான தேவகாந்தன் அவர்கள் தனது எழுத்துக்களுக்காக பல பாராட்டுக்களையும்  விருதுகளையும் பெற்றுள்ள ஒரு ஈழத்துப் படைப்பாளி என்ற வகையில், நம்காலத்தின் முக்கியமான இலக்கிய நாயகன் என அவரைக் கொண்டாடுவதில் எனக்கு எப்போதும் மிக்க மகிழ்ச்சியே!


    பூபால சிங்கம் பதிப்பக  வெளியீடாக கடந்த ஆண்டு இலங்கையில் வெளிவந்த ‘மேகலை கதா’ என்ற அவரது நாவல் தொடர்பான நிகழ்ந்த  இணையவழி உரையாடல் ஒன்றின் ஒருங்கமைப்பாளராக  இருக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பேராசிரியர் அ. மார்க்ஸ், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞருமான அகிலன், சமூகவியல், வரலாற்றியல், தொல்லியல் போன்ற பல்வேறு துறைகளில் தொடர்ந்து எழுதியும் பேசியும் இயங்கிவருபவரும் பெருமதிப்புக்குரிய அறிஞருமான க.சண்முகலிங்கம் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர். இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்ற காப்பியத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எழுதப்பட்ட இந்த நாவல், கொரோனாக்காலத்தின் கெடுபிடிகளின் காரணமாக அதிகளவில் பேசப்படாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.


    ‘கதாகாலம்’ , ‘லங்காபுரம்’  ஆகிய வரலாறு சார்ந்த நாவல்களின் வரிசையில் எழுதப்பட்ட, மணிமேகலை காப்பியத்தை   நம்காலத்துக்குரிய  ஒரு நாவலாக்கும்  முயற்சியே இந்த நாவல் என்று குறிப்பிடும்  தேவகாந்தன் அவர்கள், இந்த நாவலை காவியத்தின் கதைப் போக்கிற்கு ஊறுசெய்யும் விதத்திலான முயற்சிகளைத் தவிர்த்து, அவை அப்படியே இருக்க மேலதிகமாக தான் புனைந்த பாத்திரங்களூடாக நாவலை நடாத்திச் செல்கிறார். கிட்டத்தட்ட கி.பி  2ஆம் நூற்றாண்டளவில் அல்லது 1ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாகக்  கொள்ளப்படும் ஒரு காவியத்தை  நாவலாக்க முயல்வதில் உள்ள முக்கியமான சிக்கல் அல்லது சவால், அது, அன்றைய காலத்து சமூக வாழ்வு பற்றிய  சிந்தனைகளும் சித்தரிப்புக்களும் ஊறுசெய்யப்படாமல் சொல்லப்படும் அதே வேளை, இன்றைய நாவலுக்குரியவிதத்தில் அதில் பேசப்படும் சம்பவங்களும் உரையாடல்களும் வாசகர்கள் முன் இற்றைப்படுத்தப்பட்ட வடிவில் எழுதுவது எப்படி என்பதை அடையாளம் காண்பதே ஆகும். தேவகாந்தன் அவர்கள், காப்பிய நாயகர்களுக்கு மேலதிகமாக தான் புனைந்த புதிய பாத்திரங்களின் செயல்கள் கேள்விகள், உரையாடல்கள் என்பவற்றினூடாக அதை ஒரு நாவலின் வடிவிற்குக் கொணர்வதன் மூலமாக அந்தச் சவாலை முறியடித்துள்ளார் எனலாம். இதை அவரே சொல்வது போல  துறவியான மணிமேகலைக்குப்  பதிலாக அவளை ‘அந்த நெறியில் சாதுர்யமாகப் புகுத்திய அவளது குலதெய்வமான' மணிபல்லவ தீவகத்தின் மணிமேகலா தெய்வத்திலிருந்தே தன் கதையைத் தொடங்குவதன் மூலமாக அவர் சாதித்திருக்கிறார்.


    மூலக் காப்பியத்தில் வரும் மணிமேகலை, அவள் தாய் மாதவி,மணிமேகலைய மணம் செய்ய விரும்பும் உதய குமாரன், அவனது தாய் சீர்த்திமாதேவி, அரசனான தந்தை கிள்ளிவளவன் என்ற பாத்திரங்களும் அவர்களது காப்பிய கால நடத்தைகளும் அப்படியே நிகழ, அவற்றுக்குச் சமாந்தரமாக காப்பியம் நடந்தகாலத்துச் சூழலில் சஞ்சரிக்கும் புனைவுப் பாத்திரங்களான அஞ்சுகன், கோடன், மாதங்கி, சங்கமின்னாள் ஆகியோரின் உரையாடல்கள்,விவாதங்கள், நடத்தைகள்,பயணங்கள் என்பவற்றூடாக அன்றைய கால நிலை தொடர்பான கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பு வதன் மூலம் அதை ஒரு நிகழ்காலப் பார்வையூடாக சொல்லப்பட்ட நாவல் என்ற இடத்தினை உருவாக்கிவிடுகிறார் தேவகாந்தன். ஊழ்வினைப் பயன் சார்ந்தே பிறப்புகளும் சம்பவங்களும் நிகழ்வதாகக் காப்பியம்  சொல்லும் கருத்துக்களை இந்தப் புனைவுப்  பத்திரங்கள் மூலம் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். கிணற்றிலே போடப்பட்ட அமுதசுரபி பற்றிய உரையாடலின் போது அஞ்சுகன் என்ற பாத்திரம்மூலமாகக ‘உணவு கீழே இருக்கிறது, பசி மேலே இருக்கிறது’ என்பதும், ‘அமுதசுரபி வெளியே வந்தாலும் சமூகத்தில் உணவு கொடுப்போர், அதைப் பெறுவோர் என்ற இரு பிரிவினர் எப்போதுமே இருக்கவே செய்வர்’ என்று கூறுவதும் அக்காலத்தின் பின்னான சிந்தனைகளின் மாற்றம் பற்றிய நாவலின் கவனிப்புக்கான உதாரணங்களாகக் கூறமுடியும்.  நாவலில் வரும் இந்திரவிழாக்கால தர்க்க விவாதங்களும், அவற்றை நடாத்தும் நாகசேனன் என்ற புனைவுப் பாத்திரம்  நடாத்தும் தர்க்க விவாதங்களும் காப்பிய காலத்தின் பின்னால் வந்த, கிரேக்க தத்துவங்களுக்கு நிகரான  தத்துவார்த்த சிந்தனைப் போக்குகள் உருவாகி இங்கும் வளர்ந்திருப்பதை அடையாளம் காட்டுவதாகக் கொள்ளலாம். விவாதத்தின் போது பேசப்படும் யேசு நாதர்பற்றிய பிரஸ்தாபமும் இந்தவகையில் காப்பிய காலத்தின் பின்னான ததுவார்த்த ரீதியான சிந்தனைப் பரம்பலைக் கருத்திற்கொண்டே ஆசிரியர் நூலை எழுதியுள்ளார் என்பதற்கான சிறப்பான ஆதாரங்களெனலாம்.


    நாவலின் பிரதான பாத்திரங்களின் போக்கினைச் சுட்டும் விதத்தில் காப்பியத்தில் வந்த பாடல்களின் சில வரிகளை,  காவியத்தின் விழாவறை காதை, மலர்வனம்புக்க காதை, பாத்திரம்பெற்ற காதை, பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை, உதயகுமாரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை, ஆபுத்திரனாடடைந்த காதை, ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை, வஞ்சி மாநகர்புக்க காதை, கச்சி மாநகர்புக்க காதை, ஆதிரை பிச்சையிட்ட காதை  என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டு அவை சம்பந்தப்பட்ட அத்தியாயங்களின்  தொடக்கத்திற்கு முன்பக்கத்தில் இணைத்துள்ளமை காவியத்தின் பிரதான போக்கை அவற்றினூடு வாசித்தறியவும், நாவல் அவற்றுடன் இணந்தும் விலகியும் செல்வதை அவதானிக்கவும் உதவும் ஒரு அருமையான முயற்சி என்று சொல்லலாம்.


     நீண்டகாலமாக மனதில் அசைபோட்டபடி, இந்நூல் சம்பந்தமாக தொடர்ச்சியாக தேடியும் உரையாடியும் பெற்ற அனுபவத்தினூடாக தனது மனதில் உருவான புனைவு வெளியின் பிரசவமாக இதைக் குறிப்பிடும் தேவகாந்தன் அவர்கள் இதை எழுதவென அவரது வழமையான மொழியினின்றும் பெரிதும் வேறுபட்ட ஒருவகையான புனைவுமொழியைக் கையாண்டிருக்கிறார்.  அந்த மொழியில், இக் காப்பியத்தை  நாவலாக்குவதில் மட்டுமல்ல அதிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பதே எனது  அபிப்பிராயம்.

     183 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறிய புத்தகமாயினும் ஒருமுறைக்கு இரண்டுமுறையாவது வாசிக்கும் போதே அதன் ஆழமும் விரிவும் புரிய ஆரம்பித்தது என்ற எனது அனுபவத்தையும் இவ்விடத்தில் பதிவிட வேண்டும். தத்துவ விவாதங்களும் தர்க்கங்களும்  முழுமையாக உள்வாங்கப்பட இந்த இரண்டாவது வாசிப்பு எனக்குத் தேவைப்பட்டது. மூன்றாவது நாலாவது வாசிப்புக்கள் இன்னமும் உள்ளே பயணிக்க உதவும் என நம்புகிறேன். 


    அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று இந்நூல் என்று சொல்லுவதை விட ‘யான் பெற்ற இன்பம் பெற விரும்புவோர்' இதை அவசியம் வாசிக்க வேண்டும் என்று சொல்லவே விரும்புகிறேன்!


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி