பாரதியார் இன்கவித் திரட்டு

 



வயதைச் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. சுமாராக எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கலாம். சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு முன்னாலிருந்த சரஸ்வதி  புத்தகசாலையிலே முதன்முதலாக நான் வாங்கிய பள்ளி சாரா நூல் ‘பாரதியார்இன் கவித்திரட்டு’. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தொகுத்தது. அப்போது அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அந்தப் பெயர் அல்லது அந்தப் பெயர்போல் ஒன்று எனக்குப் பரிச்சயமானதுபோல்தான் தோன்றியிருந்தது. பாரதியாரின் கவிகளின் திரட்டு என்ற பொருள்படும்படியாகவா, பாரதியாரின் இனிய கவிகளின் திரட்டு என்று பொருள்படும்படியாகவா நூலின் பெயர் இருந்ததென்று வெகுநாள் வரையில் எனக்குத் தெளிவில்லை.

நூலின் முதலாம் பகுப்பில் ‘பாரத தேசம்’, ‘பாரத நாடு’ போன்ற தலைப்புகளின் கவிதைகள் என் கண்ணில் பட்டன. படித்தபோதும் அவை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. என் வீட்டுக்கு அயலிலுள்ள வீடுகளில். நேரு, சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மா காந்திபோன்றோரின் சட்டம் போட்ட படங்கள் சுவர்களில் தொங்கியதில் பாரதமென்பதை அந்நியமான தேசமாக என்னால் கணிக்கமுடியாது போனது. அதுபோலவே பள்ளியில் ஒவ்வொரு நாளும் கடவுள் வணக்கத்தின் பின் பாடப்படும் ‘நமோ நமோ மாதா… நம் சிறீலங்கா…!’ என்ற தேசப் பாடலையும் என்னதான பாடலாகவே நான் கொண்டிருந்தேன்.

இடையில் எப்படியோ பாரதியாரின் பாடல்களில் கவனமில்லாது போய்விட்டது. பின்னால் ‘பாஞ்சாலி சபதம்’ பள்ளிப் பாடத்தில் இடம்பெற்றபோது தொடர்ந்து சுயசரிதை, கண்ணன் பாட்டு ஆகியன கவனமாகி வாசிப்புக்கு வந்திருந்தது. அதற்கும் பின்னால் பாரதியார் பாடல் தொகுப்புகள் நிறைய மலிவுவிலைப் பதிப்புககளாக வர, ஆண்டொன்று இரண்டிற்கு ஒரு பாரதியார் தொகுப்பை வாங்கி வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். நிறைய குறிப்புகளையும் அடைப்புக் குறிகளையும் அடிக்கோடிடுதல்களையும் செய்துவிடுவதில் ஒரு புதிய நூலைப் படிக்கிற இன்பத்துக்காகவே புதிய பிரதிகளை வாங்கி வாசிப்பேன். இம்முறை எடுத்த நூல்களில் நான் நண்பர் முரளியிடம் கேட்டிருந்த பாரதி புத்தகாலய வெளியீடான பாரதியார் கவிதைகளும் இருந்திருந்தது. அதை வைத்துக்கொண்டிருந்த பொழுதில்தான் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் ‘பாரதியார் இன்கவித்திரட்டு’ நூல் ஞாபகமாயிற்று.

சும்மா சொல்லக்கூடாது, பாரதியாரின் முழுத் தொகுப்பை வாசிக்கும் இன்பத்தைவிட,’'பாரதியார் இன்கவித் திரட்’டை வாசித்த இன்பம் அலாதியானதாகவே இருந்ததைச் சொல்லவேண்டும். தடித்த அட்டையுடன், பாரதியாரின் ‘தலைப்பா’, மீசையுள்ள படத்துடன் வெளிவந்திருந்த அந்நூல் இன்று யோசிக்கத் தெரிகிறது, ராஜாஜியின் கவிதைத் தேர்வு மிக அருமையாக இருந்திருக்கிறதென்று. அந்தளவிற்கு தேர்விற் சிறந்;த கவிதைகளை நூல் கொண்டிருந்ததெனின், தேர்வு சிறந்தது என்றாகிறது. அது ராஜாஜியின் உள்மனத்தே கிடந்த இலக்கியத் துருத்தியை அடையாளம் காட்டுகிறது.

அன்று தொட்ட ஆதர்ஷம் இன்றுவரை தொடர்வதற்கும் அந்த இன்கவித் திரட்டே காரணமாய் இருந்திருக்கக்கூடும்.


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி