விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி

 

விடுதலைத் திணை அரசியலின் படைப்பியல் நீட்சி


- ந. இரவீந்திரன்.



“ஜீவந தி” இன் ஈழத்து நாவலிலக்கியச் சிறப்பிதழுக்கு ஒரு படைப்பாளியின் புதிய மிலேனியத்துக்கான படைப்புகளைப் பேசுபொருளாக்க வேண்டும் என்ற பொழுது எந்தத் தயக்கமுமின்றித் தெரிவு செயதாக வேண்டிய படைப்பாளியாக முற்பட்டு நின்றவர் தேவகாந்தன். அவரது படைப்புகளது விரிந்த தளங்களும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான வீச்சான அவருடைய கருத்தியல் புலமும் கள அனுபவங்களை உள்வாங்கி வடிவப்படுத்திய பாங்கும் எனப் பல காரணங்களால் இந்தத் தெரிவு அவசியப்பட்டது.

அதனை ஒரு கட்டுரைக்குள் அடக்குவது என்பது மிகுந்த சிரமத்துக்கு உரியது. ஒரு தனி நூலுக்கு உரிய களம் அது. விரித்துப் பேச அவசியப்படுகிற விடயப்பொருளுக்கான முன்னுரைக் குறிப்பாக இக்கட்டுரை அமைகிறது. இங்கு கவனங்கொள்ள வேண்டியுள்ள காலப் பரப்புக்கான தேவகாந்தனின் நாவல்கள் (ஜூலை 2019 இல் காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘கலாபன்’ நாவலில் இடம் பெற்ற ஒழுங்குப் பிரகாரம்): 1. லங்காபுரம், 2. கதாகாலம் (மகாபாரத த்தின் மறுவாசிப்பு), 3. யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 4. நிலாச் சமுத்திரம், 5. கனவுச் சிறை, 6. கந்தில் பாவை, 7. கலிங்கு, 8. ந திமேல் தனித்தலையும் சிறுபுள். 9. கலாபன். 10. மேகலா கதா.

அனைத்து நாவல்களையும் ஒருமுகமாகப் படிக்கும் வேளையில் புதிய அரசியல் நோக்கு நிலை நின்று பார்க்கவல்ல உள்ளடக்கப் பாங்கு இந்த நாவல்களின் ஊடாக இழையோடி இருப்பதனை உணர இயலுமாயிருந்தது. எமது வாழ்வியலை இலக்கியமயப்படுத்தி இருப்பவை இந்த நாவல்கள்; அவற்றின் கலைத்துவத் தாரதம்மியத்தைப் பற்றிப் பேசுவதைவிட்டு அரசியல் நோக்குக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழ இடமுண்டு. பொதுவாக நவீன தமிழிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது வர்க்க அரசியல், அடையாள அரசியல் எனும் வகை மாதிரிகளில் எவை சார்ந்து அவை வடிவம் பெற்றிருக்கின்றன என்பதாகப் பார்க்கும் நிலை நிலவுகிறது. எழுபதாம் ஆண்டுகள் வரை வர்க்க அரசியலும் எண்பதாம் ஆண்டுகளில் இருந்து அடையாள அரசியலும் தீர்மானகர வடிவங்களாக இயக்கம் பெற்றிருப்பது இந்திய அனுபவம். இலங்கையின் நவீன வரலாற்று செல்நெறி இவை இரண்டிலிருந்தும் வேறுபட்டதான திணை அரசியல் ஒழுங்கொன்றில் இயங்கி வந்திருப்பதான விடயம் இன்று பேசுபொருளாகி வருகின்றது.

தேவகாந்தனின் நாவல்கள் திணை அரசியலுக்கு, அதிலும் குறிப்பாக விடுதலைத் திணை அரசியல் நாட்டத்துக்கு எடுத்துக்காட்டாக அமைவன. மேற்கொண்டு தொடர்ந்து உரையாடுவதனூடாக இதனை விளக்கம்கொள்ள முயல்வோம். பின்வரும் நான்கு பகுதிகளில் இந்த உரையாடலைக் கட்டமைக்க இயலும்: 1. காலங்கள் தோறும் செயலாற்றும் யுத்த களம், 2. தொடக்கம் பெற்ற புதிய யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 3. நெடுயுத்தத்தின் நிறைவுறாத அத்தியாயங்கள், 4. விடுதலையை அவாவும் கருத்தியல் தேடல்.

  1. காலங்கள் தோறும் செயலாற்றும் யுத்த களம்

திணைக் கோட்பாட்டை தமிழிலக்கிய வரலாற்றுத் தொடக்கம் எடுத்துக் காட்டியிருந்தது. வர்க்க அமைப்புக்கு அப்பாலான ஒரு சமூக முறைமை இயக்கம் கொள்ளத் தொடங்கிய போது தனக்கென உருவாக்கிக் கொண்ட கோட்பாடு அது. ஐரோப்பியச் சமூகம் வர்க்கங்களைக் கொண்டிருந்ததோடு வர்க்கப் போராட்டங்கள் வாயிலாகச் சமூக மாற்றங்களைக் கண்டடைந்து வந்தது என்ற படிப்பறிவை எட்டியவர்கள் அதன் வழி எமக்கான விடுதலை மார்க்கத்தை கண்டடைய இயலுமென நம்பினர். அந்தப் புரிதலுடனேயே எமது சாதிச் சமூக முறையும் அணுகப்பட்டது; இன்னும் அந்த அவலம் நீடித்து வருகிறது. இங்கு எவ்வண்ணம் வர்க்கப் போராட்டம் முன்னதாக நடந்தேறி வந்ததெனத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டும் வரக் காண்கிறோம். இந்தத் தவறைக் களைவதன் பொருட்டு தமிழர் வரலாற்றை மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. தமிழியல் எடுத்துக்காட்டும் மருத திணை மேலாதிக்கம் ஊடாக ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம் பெற்ற வரலாற்றுத் தொடக்கத்தை அரசியல் செல்நெறிக்குரிய பிரத்தியேகத் தன்மையுடன் கவனத்தில் எடுப்பது அவசியமானதாகும்.வென்றவர்கள் ஆதிக்க சாதி ஆகியமையும் வென்றடக்கப்பட்டவர்கள் பல படிநிலைகளுக்குரிய சாதிகளாக்கப்பட்டமையும் புதிய அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டும்.

வட இந்தியாவில் ஏற்கனவே சாதிகள் தோற்றம் பெற்று அதற்கான கருத்தியலை வடிவமைக்கும் பிராணர் தனிச் சாதியாக மேலாண்மை பெற்றும் இருந்தனர். இந்தச் சாதிபேதம் எவ்வகையில் தோற்றம் பெற்றது என்பதைக் கண்டறிவதற்கான தெளிவு இன்னமும் எட்டப்படவில்லை. தமிழகத்தில் மூவேந்தர் மேலாண்மை மருத திணையின் மேலாதிக்கத்திக்கான அரசியல் வடிவம். இந்த மேலாண்மையின் சமூக சக்தியாக கிழார்கள் இருந்தனர். வேந்தர்களும் கிழார்களும் வடக்கிலிருந்து வந்த பிராமணர்களுக்கு நிலங்களை வழங்கி அவர்களது சாதியக் கருத்தியலைத் தமிழர் வரலாற்றுக்கானதாக வரித்துக் கொண்டனர். நிலக்கிழார்கள் நிலப்பிரபுத்துவ சக்தியாக வளர்ந்து ஆளும் சாதியான வெள்ளாளர் என ஆனதோடு ஏனைய குடிகள் ஒவ்வொன்றும் சாதி அடையாளம் பெற வைக்கப்பட்டனர். ஆக, திணை மேலாதிக்கம் பெற்று முழுச் சமூக சக்தியாக ஆளவும் சுரண்டவும் ஆட்சியுரிமை செலுத்தவுமான வடிவம் சாதி என்ற புரிதலைத் தமிழர் வரலாறு எடுத்துக் காட்டியிருக்கிறது. சமூக மாற்றப் போக்கில் அதிகாரமற்ற சாதி மேலாண்மை பெறுவதும், ஆதிக்க சாதி ஆளப்படும் நிலைக்கு மாறுவதுமான சமூக மாற்றச் செல்நெறியையும் தமிழக வரலாறே காட்டி நின்றது.

மூவேந்தர் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னரே குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகள் மருத திணையை விட ஆளுமை உடையனவாக இருந்துள்ளன. அவை ஏனைய திணைகளை வென்றடக்க முற்படவில்லை என்ற பொழுதிலும் வேளிர்கள் எனும் மன்னர் ஆட்சி முறை இருந்துள்ளது. மூவேந்தர் எழுச்சிக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னரிருந்தே வேளிர்கள் ஆட்சி இருந்துள்ளது. அப்போது பிற திணைகள் ஆக்கிரமிக்கப்படாத து மட்டுமன்றி உள்ளேயும் பெரிதாக சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை. பெண்கள் பிற்காலத்துடன் ஒப்பிடப்படும்போது ஆளுமை பெற்றவர்களாக இருந்த போதிலும் வேளிர் ஆட்சிக் காலத்திலேயே ஆண் மேலாதிக்கம் இயல்பானதாக செயலாற்றத் தொடங்கியமையை ஆட்சியாளர்களாக ஆண்களே இருந்தனர் என்பதில் இருந்து அறிந்து கொள்ள இயலும். ஏற்றத் தாழ்வுச் சுரண்டலின் முதல் வடிவம் முழுச் சமூக சக்தியாக (திணையாக) ஆண்கள் பெண்களை ஒடுக்குதலுக்கு உட்படுத்தி ஆளுமைப் பறிப்புக்கு ஆட்படுத்தியதில் ஆரம்பித்துவிடுகிறது. இந்த ஒடுக்குதலுக்கு ஏற்ற கருத்தியல் ஆயுதம் அப்போதே கண்டறியப்பட்டுப் பிரயோகிக்கப்படலாயிற்று. இது பிராமணியத்துக்கு முந்தியது. இந்த வரலாற்றுத் தொடக்கத்துக்கு உரிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகம் இங்கே இயங்கியது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லாத போதிலும் மூவேந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆசீவகமும் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் பரவலடையத் தொடங்கிவிட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் வீச்சளவில் இல்லையெனிலும் பிராமணரது வருகையும் அப்போதிலிருந்து வர ஆரம்பித்திருந்தது. இவையனைத்தும் பெண்ணொடுக்கு முறைக்கு உரிய கருத்தியல்களைப் பரப்புரை செய்யத் தொடங்கிய மதப் பிரிவுகள்; அவற்றை உள்ளீர்த்துத் தனக்குரிய வகையில் வளர்த்தெடுக்கிற பண்பு தமிழுக்கு அப்போதிருந்து இயலுமான பண்பு!

முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினுள் வாழும் எமது வாழ்முறையின் பல்வேறு பரிமாணங்களைப் படைப்பாக்கம் செய்தவர் தேவகாந்தன். சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் அறுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறிலிருந்து ஆயுதப் போராட்டமாக யாழ்ப்பாணத்தில் பரிணமித்தமையை “யுத்தத்தின் முதலாம் அதிகாரம்” என்ற நாவலாக வெளிப்படுத்தியவர். ஈழப் போராட்டத்தை “கனவுச் சிறை”, “கலிங்கு” நாவல்கள் பேசு பொருளாக்கி இருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்படுகிற பெண்களின் போராட்ட வடிவங்கள் சாதி, தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிரானவை போன்று இருந்தனவல்ல. வெளிப்படாத யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளூர இருந்து வந்தன. முந்திய இலக்கியங்கள் பெண்ணொடுக்குமுறைக்கான கருத்தியல்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தவை; அவற்றினுள்ளே மறைந்திருந்த பெண்ணின் போராட்ட வீறுகள் ஆங்காங்கே வெளிப்படாமல் இருந்ததில்லை. விடுதலைக் கவியான பாரதி ஆணுக்குப் பெண் சம உரிமை உடையவள் என்று முழங்கியதிலிருந்து பெண் விடுதலைக் குரல்கள் பல வடிவங்களில் வெளிப்பட்டு வரத் தொடங்கிவிட்டன.

இங்கு கவனிப்பைப் பெறும் தேவகாந்தனின் பத்து நாவல்களிலும் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண் விடுதலைப் போராட்டக் குரல்கள் ஊடாடிய படியே இருக்கின்றன. பழைய இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்து நாவல்களாக வழங்கிய போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாக பெண்ணொடுக்கு முறைக்கு எதிரான போருணர்வுகளையும் எதிர்ப்பு வடிவங்களையும் எடுத்துக் காட்டி வந்துள்ளார். மகாபாரதம் (“கதாகாலம்”), இராமாயணம் (“லங்காபுரம்”) போன்ற இதிகாசங்களுடன் தமிழ் பௌத்தக் காப்பியமான மணிமேகலையும் (“மேகலா கதா”) இத்தகையன. “மேகலா கதா” மணிமேகலையை அடி பிசகாது நாவலாக்கிய முயற்சி. தமிழ் பௌத்தம் ஈழத்தின் மணிபல்லவத்துடன் (நயினாதீவு) கொண்டிருக்கும் ஊடாட்டத்தை நாவலின் மையப் பொருளாக்கி உள்ளார் தேவகாந்தன். காதலுணர்வையும் உடைத்துத் துறவை நாடும் மணிமேகலை ஊடாக குடும்ப பந்தம் ஏற்படுத்தும் ஒடுக்கு முறைக்கு எதிரான கருத்துகளை ஆசிரியர் வெளிப்படுத்தத் தவறவில்லை. “மணிமேகலை” எனும் காப்பியத்தில் இடம்பெற்ற கந்தில் பாவை முற்பிறப்பு உரைக்கும் ஒரு தெய்வம். அந்தப் பண்பை உள்வாங்கி கி.பி. 1880 முதல் 2015 வரையான ஒரு குடும்பத்தின் பெண்கள் தலைமுறைகள் கடந்தும் மனச்சிதைவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாவதில் ஆணாதிக்கச் சமூக முறைமைக்கான இடத்தைக் காட்டுவார்.

இராமாயணம், மகாபாரதம் என்பன நாட்டார் கதைகளாக மக்களிடையே தொடர்ந்து ஊடாடிய படி இருப்பவை. பலவேறு ஆசிரியர்களால் வேறுபட்ட வாசிப்பனுபவங்களுக்கு உரிய வண்ணம் ஏற்கனவே படைப்பாக்கம் செய்யப்பட்டவை. அவற்றை நாவலாக்குவதில் இன்றைய வாசிப்புக்கு உரியவாறு மறுபடைப்பாக்கும் வாய்ப்பை ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். கதா காலம் கைவசமாகாத காரணத்தால் அதனைக் குறித்து இங்கு பேச இயலவில்லை. கம்பராமாயணத்திலிருந்து அடிப்படையான பல விலகலை உடையது “லங்காபுரம்”. குறிப்பாக, பெண் பாத்திரங்களின் சித்திரிப்பு கவனத்தை ஈர்ப்பன. ஆட்சியியல் சாத்தியப்படத் தொடங்குவதோடு பெண் ஒடுக்குமுறை ஆரம்பிப்பதனையும், அந்த மாற்றத்தை உள்வாங்காத தாயுரிமை வாழ்வியலும், அங்கும் மாற்றம் தலைகாட்டத் தொடங்குவதும் லங்கா புரம் நாவலின் பேசுபொருளாக இருந்தன. ஆயினும் பெண்களது போராட்டக் குணாம்சத்தை மையப் பொருளாக்கும் நாவல் அல்ல அது. எலு மொழி பேசிய இயக்கர் (பின்னர் சிங்கள இனக் குழும உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த முன்னோடிகள்) தமிழ் மொழி பேசிய நாகர்களுடன் அந்நியோன்யமான வாழ்வைக் கொண்டிருந்த அதேவேளை அதிகார மோதல்களை அவ்வப்போது கொண்டிருந்த நிலையில் பிற நாட்டாருடன் யுத்தம் தொடங்கிய வரலாற்று வளர்ச்சியைப் பிரதான பேசு பொருள் ஆக்கி இருப்பது லங்கா புரம். பெண்ணை (சீதையை) ஒரு பொன்னாபரணம் போல (உயிர்ப்பற்ற பொருளாக) வல்லாதிக்க ம மதை கொண்டிருந்த லங்காபுர வேந்தனான இராவணன் கடத்தியிருந்தான். அதற்கப்பால் பெண் மோகம் கொண்டவனல்ல என்பதோடு இயக்கர் - நாகர் எனும் இனக்குழுமங்களிடையே நல்லுறவு பேணப்பட வேண்டும் எனும் அக்கறை உடையவன் இராவணன். இயக்கர் தலைவனான அவனது மனைவி மந்தாகினி (மண்டோதரி) நாகர் குலத்தவள். அவளையும் நண்பர்களாக உள்ள நாகர்களையும் அரவணைக்கும் நோக்கில் தான் பிரமாண்டமாக கட்டியெழுப்புகிற தன்னிறையான சிவன் கழுத்தில் நாகர்களது கடவுளான நாகத்தை வளையவிட்டவன் இராவணன். ஆயினும், பெண்ணை வெறும் அலங்கார மணியாக கருதிக் கடத்திய அவனது செயலால் அனுமன் படையுடன் கூட்டமைத்து வந்த வட இந்திய வீரனான இராமனால் லங்காபுரம் நாசமாக்கப்பட இடமேற்படுத்திக் கொண்டான் என்பார் தேவகாந்தன்.

ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண் விடுதலைப் போர்க் குரலை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்துவனவாக “நிலாச் சமுத்திரம்”, “ந திமேல் தனித்தலையும் சிறுபுள்” எனும் நாவல்கள் அமைந்துள்ளன. முதல் நாவல் நொவெம்பர் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது தமிழக கதைப்புலம் மட்டுமன்றி முற்றாகவே இந்தியக் கதாமாந்தர்கள் பற்றியது. எண்பதாம் ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்ணிய வாதம் பேசுபொருளான சூழலில் சுதந்திர வாழ்வை நாடும் பெண் எதிர் நோக்கிய வாழ்வியல் நெருக்கடி அதன் களம். கனடாவில் புலச் சிதறலுக்கு ஆட்பட்டு வாழும் ஈழத் தமிழர் வாழ்க்கைப் போராட்டத்தில் பெண் பெற்றுள்ள சுயாதீனத்தைப் பேசுவது மற்றைய நாவல்.

பாடசாலைக் காலத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட மாணவி, சிறுமியாக இருந்த பொழுதே தந்தையை இழந்து வசதிகளைப் பறிகொடுத்தவள். ஆங்கில மொழி மூலத் தனியார் பாடசாலையில் இருந்து தமிழ் வழிக் கல்வியை அரசாங்கப் பாடசாலையில் பெற நிர்ப்பந்திக்கப்பட்டவள். அறிவாற்றலில் மேலோங்கியிருந்தும், அனைவரது எதிர்பார்ப்பிலும் அவளே வேண்டியவாறு பெரிதினும் பெரிது கேட்டுச் சாதிப்பாள் என்ற நம்பிக்கைகள் தகர்ந்து சாதாரண வாழ்வுக்குத் தள்ளப்பட்டவள். அவளது ஆளுமையைப் புரிந்துகொள்ளாத, இயல்பாக நல்லவனான கணவனால் குடும்பப் பொறுப்பற்றவள் எனக் காயப்படுத்தப்பட்ட போது குடும்பத்தைத் தகர்த்து வெளியேறியவள். அது விட்டேற்றித்தனம் எனக் கண்டித்த தாயையும் வெறுத்து தனியாக வாழ்ந்து சாதிக்க முனைந்தவள். முடிவில் தாயன்புக்கு ஏங்குபவளாக, தனது தாய்மைப் பொறுப்பை உணர வேண்டியவளாக வாழ்வியல் நிர்ப்பந்திப்பதை ஏற்கும் வகையைப் பேசுவது “நிலாச் சமுத்திரம்”.

காயப்பட்டிருந்த அந்தப் பெண் ஆனந்தியிடம் அவளது மகள் அற்புதா மீண்டும் தங்களுடன் வந்திணையும்படி கோரிய பொழுது அவள் பதிலிறுக்கும் இந்த இறுதிப் பக்க வாக்கியங்கள் நாவலைப் புரிந்துகொள்ள வழி வகுக்கும்: “சொன்னால் விளங்கிக் கொள்வாளா என்று தயங்கினாள் ஆனந்தி. ‘சொல்லுங்கள் அம்மா’ என்று அற்புதா மறுபடி வற்புறுத்த, சொன்னாள்: ‘குடும்பமென்றால் பிரியாமலே இருப்பதுதான் உத்தமம். தனித்தனியாய் வாழத் துவங்கிய பிறகு சுயாதீனமான வாழ்முறையும் கருத்துக்களும் உருவாகி வலுப்பெற்றுவிடுகின்றன. பிரச்சினைகளை ஒதுக்கி, மறந்து வாழத் தீர்மானித்துக் கொண்டால் கூட உடனடியாகவே இணைந்து வாழ்தல் சாத்தியமில்லாமலே இருக்கும். பல தளங்களில் வாழ்க்கையின் பெறுமானங்களை நான் மீறி நடந்திருக்கிறேன். பிரக்ஞையோடுதான் செய்தேன். ஒரு சுயாதீனமான பெண்ணாய் வாழ எனக்கு இந்த மீறல்கள் அவசியமாயிருந்திருக்கின்றன. ஒருவேளை...ஒருவேளைதான்... அந்த மீறல்கள் ஒரு போதாமையின் விளைவல்ல என்று எப்போதாவது எனக்குத் தோன்றுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஒருவகையான குற்றவுணர்வுக்கு நான் ஆட்படவேண்டி நேரலாம். மீண்டும் குடும்பம் குழம்புவதற்குத் தான் வாய்ப்பு அப்போது ஏற்படும்.”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆணாதிக்கக் கருத்தியல் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு, அடக்க ஒடுக்கமாக குடும்பத்தினுள் கட்டுப்பட்டு இருக்க வேண்டியவள் பெண் என்ற கருத்து வலுப்பட்டிருந்தது. இந்த நிலைப்பாட்டில் பாரதியின் பெண்விடுதலைக் குரல் பலத்த அதிர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. பெண் கல்வி பரவலாகி, உத்தியோகப் பதவியும் பெற்ற பின்னரும் பழைய கட்டுப்பெட்டித் தனத்தை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. எண்பதாம் ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்த பொருளாதாரம் சாத்தியப்படத் தொடங்கி அனைத்தையும் கட்டுப்பாடற்ற சுதந்திர வர்த்தகப் பண்டமாக்கும் நுகர்வுப் பண்பாடு வலுப்படத் தொடங்கியபோது பெண்ணியவாதம் மேலோங்கி வந்தது. பெண்விடுதலை என்பதற்கும் அப்பால் கட்டற்ற வாழ்வியலில் பெண்ணுக்கும் சம உரிமை கோரும் நிலை உருவானது. இவற்றை “நிலாச் சமுத்திரம்” நாவலில் வேறொரு கோணத்தில் பேசுபொருளாக வடித்திருந்த தேவகாந்தன் கனடா வாழ்வியலைப் பேச வேண்டி வந்தபோது பெண்களது சுயாதீனம் இன்னொரு தளப் பரிமாணத்தைப் பெற்றிருந்தது. அதனை “ந திமேல் தனித்தலையும் புள்ளினம்” எனும் நாவலாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தப் பகைப்புலம் அடியந்தமான பல மாற்றங்களை உடையது. கட்டுப்பெட்டித் தனத்துடன் வளர்ந்து வரும் குடும்ப உறவுக்குள் வெளிச் சமூக மாற்றங்களின் அதிர்வுகள் ஏற்படுத்தும் தாக்குறவில் இருந்து கனடாவில் எம்மவர் எதிர் நோக்கிய நெருக்கடி இன்னொரு வகையானது. அங்கே பெண்கள் தனி ஆளுமையுடன் வாழ ஏற்ற சமூக கட்டுமானங்கள் வலுவுடன் உண்டு. ஊரில் போல அங்கும் பெண் அடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஆணுக்குத் தனது மனைவியின் ஆளுமை விளங்கவியலாத நெருக்கடி ஆகிவிடுகிறது. அங்கே தாய்மை பெண்ணின் பலமாக இருக்கிறது. தமிழகத்தில் சுதந்திரம் நாடும் பெண் வீட்டைத் துறந்து போவது போல அங்கே இல்லை. உழைத்துப் போடுவது எனது பொறுப்புப் பிள்ளையை வளர்ப்பது தாய் என்று ஊரில் நினைத்தது போலப் புலப்பெயர்வு வாழ்வில் இல்லை. அங்கு தாய்மை விலங்காகவன்றிப் பெண்ணின் பலமாக இருப்பதை மூன்று குடும்ப உறவுகளூடாக ஒரு ஆண் உணர்வதை ஆசிரியர் எடுத்துக் காட்டுவார். குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையை ஆண் எதிர்கொள்ள வேண்டிய வகையில் சட்ட ஒழுங்குகள் அமைந்துள்ளன. இங்கிருந்து சிரம ப்பட வேண்டாம் ஊருக்குப் போய்விடுங்கள் என்று தாயுடன் உள்ள அவனது மகனே பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும்போது சொல்ல வேண்டியும் வருகிறது.

பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தனித்து வாழ ஏற்ற சமூக கட்டுமானம் ஊரில் இல்லாத நிலையில் கனடாவிலேயே சாத்தியம் என்பதனால் புலப்பெயர்வு வாழ்வை உதறிவிட்டு ஊர் திரும்பாமல் அங்கேயே தொடர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம். “எந்தளவு தனியனானாலும் கனடாவில் அவரால் வாழ்ந்துவிட முடியும். தனியன்களுக்கான வாழிடம்தான் அது. தனியன்களைக் குறிக்கொண்டு அமைந்த அரசும் சட்டங்களும்தான் அங்கே பயில்விலிருக்கின்றன.

ஆனால் இலங்கை அவ்வாறனதில்லை. அது சமூகங்களால் ஆன நாடு. ஊர்களால் ஆன தேசம். அது ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே ஒருவரோடு ஊடாட்டம் கொள்கிறது. ஐந்தொழுக்கமாக இல்லாவிட்டாலும் அதன் அக்கறை சமுதாய ஒழுக்கமாகவாவது எப்போதும் இருந்திருக்கிறது. எதுவெதுவெல்லாம் தனியன்களின் இச்சைக்கான வெளிகளாய் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அங்கே அடைக்கப்பட்டிருக்கின்றன. தனி மனிதர்களால் இசைகேடுகளை அங்கே கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும். ஆனால் சமூகம் ஒழுக்கத்தை நிபந்தனையாக்கும். தன்மீது தன் உற்றாரும் நண்பர்களும் சொல்லும் அபவாத த்தில் பாதிக்கப்படாமல் அங்கே வாழ்ந்துவிட முடியாது. அவரது நடத்தைகளின் பாரம் திரும்பத் திரும்ப அங்கே சுமத்தப்பட்டுக்கொண்டே இருந்துவிடும்”

காலமும் இடமும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட களப் பரிமாணங்களை வெவ்வேறு வகையில் வடிவப்படுத்துவன. ஆணாதிக்கத்தில் இருந்து பெண் விடுபடுதல் அவசியம். அதேவேளை அவளுடன் கூட ஒன்றித்து வாழ்பவனாக ஆண் இருக்கிறான். இந்த தனிச் சொத்துரிமைச் சமூகத்தில் அவனும் பந்திக்கப்பட்டு இருக்கிறான். சாதி, தேசியம், வர்க்கம் என்ற வடிவங்களில் ஆண்களும் பெண்களும் ஒரேவகையில் ஒடுக்கப்படவும் சுரண்டப்படவும் வாய்ப்பாகியுள்ள வாழ்முறை. ஒரேபடித்தான இதற்குள்ளேயும் சம நிலையிலுள்ள பெண்ணை இதுவரை இருந்த கருத்தியல் வாய்ப்புடன் ஒடுக்கிச் சுரண்டி வந்தமையை ஆண்கள் விட்டொழிப்பது தமக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பாதையின் ஈடேற்றத்துக்கு அவசியப்படுகிற ஒரு விவகாரம்!

  1. தொடக்கம்பெற்ற புதிய யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

இன்றைய தலைமுறையினருக்கு முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் பற்றித் தெரியும். முன்னதாக அறுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் இருந்து கடைக்கூறு வரை இடம்பெற்ற சாதியத்துக்கு எதிரான போராட்டம் பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லை. அதனை நடாத்தியிருந்த புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி (‘சீன சார்பு’ என அறியப்படுவது) தமிழ் மக்களிடையே ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது மட்டுமன்றி, அகில இலங்கைக் கட்சியாக இயங்கியதில் சிங்கள மக்களிடையே இருந்து கூட மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்களையும் கணிசமான அளவில் விவசாயிகளையும் புத்திஜீவிகளையும் அணிதிரட்டி இருந்தது. அதன் உறுப்பினராக இருந்து வெளியேற்றப்பட்டவர் ரோஹண விஜயவீர; வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் போலத் தெற்கிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற அதிதீவிர நிலைப்பாடு ரோகண விஜயவீரவிடம் இருந்தது. சிங்கள இளைஞர்களை அணிதிரட்டி “மக்கள் விடுதலை முன்னணி” (ஜே.வி.பி.) என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார். அந்த அமைப்பு ‘ஏப்ரல் கலவரம்’ என வரலாற்றுப் பதிவாகியுள்ள போராட்டம் ஒன்றை 1971 இல் முன்னெடுத்திருந்தது. இவ்வருடம் ஏப்ரலில் அதன் ஐம்பதாம் ஆண்டு நினைவு கூரப்படும். அப்போது அந்தக் கிளர்ச்சி அடக்கப்பட்ட போதிலும் மீண்டும் 1987-1989 வரையிலான மூன்று வருட உள் நாட்டு யுத்தத்தை அந்த அமைப்பினால் முன்னெடுக்க இயலுமாயிற்று; அதன்போது தலைவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டு போராட்டமும் அடக்கி ஒடுக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட அந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் இயங்கப்போவதாக கூறிச் செயற்பட்டு வருகிறது.

அறுபதாம் ஆண்டுகளின் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை தென்மராட்சிப் பகுதியை மையமாக்கொண்டு நாவலாக்கி உள்ளார் தேவகாந்தன். சாதி ஒடுக்குமுறை இரத்தப்பலி எடுப்பதும் அதற்குப் பதிலடியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்தி வீறுடன் போராடியதும் “யுத்தத்தின் முதலாம் அதிகாரம்” நாவலின் பாடுபொருள். ஆயுத ரீதியில் பதிலடி கொடுப்பது அவசர முடிவுகளின் பாற்பட்டதாக அமைந்ததில்லை; கட்சி நிலைப்பாடு, கோட்பாட்டு விளக்கம், அமைப்பாக முடிவெடுத்தல் என்பவற்றின் வாயிலாகவே நிறைவாக்கப்படுவதை நாவல் சித்திரிக்கும். பன்றித்தலைச்சி அம்மன் கோவில் போராட்டம் தீர்மானித்த முறைமை சற்றுப் பிசகியதில் தவறாக வன்முறைப் பிரயோகம் நேர்ந்ததாகவும் அதன் பின்னரான காவல்படைக் கெடுபிடியுடன் பலரும் தலைமறைவாக வேண்டியேற்பட்டைமை பேசப்பட்டு, கட்சித் தலைவர்கள் சீனாவுக்கு ஓடித் தப்பிவிட்டார்களெனச் சனம் பேசியதாகவும் நாவல் வளர்ந்து செல்லும். எவ்வாறாயினும் பிரதான பாத்திரம் குடும்ப நிர்ப்பந்தங்களும் நெருக்கிய நிலையில் வன்னிக்கு விவசாயக் காணி நாடிப் பெறுவதற்கு செல்ல வேண்டியவனாகிறான். வன்னி எல்லைப் பிரதேசங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்படுவதைக் கண்ட போதிலும் தனக்கான காணிக்குக் காடழித்து முயற்சித்தவன் கொல்லப்பட்டு ‘காணாமலாக்கப்பட்டான்’. இதனோடு யுத்தத்தின் முதலாம் அதிகாரம் முடிவுபெற்று தொடரும் அடுத்த அதிகாரங்களுக்கான களம் திறக்கப்பட்டு இருக்கும்.

ஆயினும் அந்த முதலாம் அதிகாரம் நெடுயுத்தத்தின் தொடக்க அத்தியாயமல்ல என்பதை ஆசிரியர் வலியுறுத்தத் தவறவில்லை. நெடுயுத்தத்தின் மூல காரணிகளும் தளகர்த்தர்களும் வேறொரு பரிமாணத்துக்கு உரியன. அந்த நூல் 2004 இல் முதல் பதிப்பாக வெளிவந்த பொழுது நெடுயுத்தம் உச்ச நிலையில் இருந்தது. 2018 நொவெம்பரில் “யுத்தத்தின் முதலாம் அதிகாரம்” நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்த பொழுது நெடு யுத்தமும் முடிந்து,
மொத்தத்தில் வன்முறைப் போராட்டங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்ததான மனப்பதிவை ஆசிரியர் கொண்டிருந்தார் என்பதனைப் புதிய பதிப்பின் முன்னுரை வாயிலாக அறியக் கிடைக்கிறது. அந்த முன்னுரையில் தேவகாந்தனின் கூற்று இது: “தோற்றவர் வடுக்களும், வென்றவர் ஆவணங்களும் வரலாற்றெழுதியலில் மிகச் சிறிதளவு கண்டுகொள்ளப்பட்டாலும், யுத்தத்தின் மூல காரணம் அதில் முற்றாக நிராகரிக்கப்படுகிறது. பல வேளைகளில் நிஜங்கள் திரித்து எழுதப்படுகின்றன. நிலவுகின்ற வரலாறென்பது வென்றவர் பார்வையில் எழுதப்பட்டதென்பது மிகவும் சரியானதே. ஆயினும் வென்றவர் தோற்றவர் பார்வைகளுக்கும் அப்பாலான ஒரு தேடலில் அவை மாற்றீடு செய்யப்பட முடியுமென்பது இன்று நிரூபணமாகியுள்ளது. தோற்றவர் வென்றவர் ஆகிய இரு பகுதியினருமே இதை இலேசுவில் கண்டுகொள்ளப்போவதில்லையென்பது சோர்வு தருகிற விஷயம் தான்”.

சாதியத் தகர்ப்புப் போராட்டம் தோல்வியடைந்தது போன்ற தொனி ஏன் எழுப்பப்படுகிறது? ஆயுதப் போராட்டம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தித் தற்காலிகமாக சிதற நேர்ந்ததனாலா? மட்டுவிலின் அந்தப் போராட்டம் நிறைவு பெற்ற ஒன்று. அதன் பின்னர் வெவ்வேறு இடங்களில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது. கோயில்களில் நுழைவதற்கான போராட்ட வேளைகளில் அவை மூடப்பட்டனவே அன்றிப் பின்னர் அனைவருக்குமாகத் திறக்கப்பட்டன. ஏனைய இடங்களின் தேநீர் கடைப் பிரவேசப் போராட்டங்களும் ஆயுதப் பிரயோகங்களினால் அதற்குரிய இடங்களில் நெருக்கடிகளைச் சந்தித்த பொழுதிலும் அனைத்துச் சமூகப் போராளிகளும் மீண்டெழுந்தனர், மார்க்சியர்களாகத் தொடர்ந்து இயங்கிவரலாயினர்.

ஒன்றுபட்ட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த கொம்யூனிஸ்ட் கட்சி 1972 இல் கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி தலைமையில் பிளவடைந்தது. மீண்டும் ஒரு பிளவு 1978 இல்; கே.ஏ. சுப்பிரமணியம் தலைமையில் சண்முகதாசனை விட்டு நீங்கியவர்கள் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) என இயங்கினர்; இன்றுவரை புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி என இயங்குகின்றனர். தொடர்ந்து ஏற்பட்ட பிளவுகளால் தாம் சிறு குழுவென ஆகிய போதிலும் சண் தலைமையைத் தொடர்ந்து முன்னெடுத்ததாக எம்.ஏ.சி. இக்பால் கூறுவார். அந்தக் குழுவை ஆதரித்த கே. டானியல் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை 1974 இல் “பஞ்சமர்” எனும் நாவலில் படைத்தளித்திருந்தார்; தொடர்ந்தும் ‘பஞ்சமர் நூல் வரிசை’ நாவல்களை எழுதினார். டானியல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்பு எந்தத் தேவையின் பொருட்டு உருவானதோ அதனை நிறைவாக்கிய பின்னர் அது செயற்பாட்டைக் கைவிடப்பட்டதாயினும் அதன் வாயிலாகச் சமூக மாற்றத்துக்காக உழைத்த கொம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்தும் மார்க்சியத்தைப் பின்பற்றி இயங்குகின்றனர். பிளவடைந்த எந்த அமைப்பிலும் மட்டுவில் தோழர்கள் இணைந்து செயற்படாத போதிலும் அவர்கள் தம்மளவில் மார்க்சிய நேசிப்பைக் கைவிடவில்லை என்று வலியுறுத்தி வரக் காணலாம்.

அறுபதாம், எழுபதாம் ஆண்டுகளில் வீறுடன் செயற்பட்ட கொம்யூனிஸ்ட்டுகளால் ஏன் தொடர்ந்து அதேவேகத்துடன் இயங்க இயலவில்லை எனக் கேட்க இயலுமே அல்லாது அனைத்தையும் கைவிட்டுக் காணாமல் போனார்கள் என்று சொல்லிவிட இயலாது. கொம்யூனிஸ்ட் கட்சி உதயமான நாற்பதாம் ஆண்டுகளில் “சிறுபான்மைத் தமிழர் மகா சபை”தோற்றம் பெற்று சாதியத்துக்கு எதிராகப் போராடியது. அந்த அமைப்பில் இயங்கத் தொடங்கிய கொம்யூனிஸ்ட் கட்சியில் 1964 இல் பிளவேற்பட்ட பொழுது ஒரு தரப்பினர் தொடர்ந்து சி.த.ம.ச. செயற்பாட்டில் நீடிக்க, பிளவுபட்ட மற்றத் தரப்பினர் “தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தில்” முனைப்புக்காட்டி சாதி அமைப்புக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேகம் காரணமாகத் தமிழரசுக் கட்சிகூட சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதாயிருந்தது. இவையனைத்தும் சாதியத்தில் பலமான அடியைக் கொடுத்த பின்னர் அந்த அமைப்புகளைத் தோல்வியடைந்தவையாக எப்படிக் கூற இயலும்?

தென்மராட்சிக் கிராமத்தில் துப்பாக்கி வேட்டு முழக்கம் ஒன்றை முதன்முதலாக கேட்டவர்கள் மத்தியில் இந்த உரையாடல் முத்தாய்ப்பு: “இவன் ஒப்புக்கொள்ள மாட்டான். தமிழரசுக் கட்சியினரின் பாத யாத்திரைகளதும் சாதிப் பிரிவினைகளைச் சட்டத்தின் மூலம் எதிர்கொண்டிருந்த அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை செய்த முயற்சிகளதும் விளைவே தமது அந்த வெற்றிகளென்று சாதிப்பான். ஆனால் இரண்டு பேரினதும் எண்ணங்களுக்கு மாறாகவே நிலைமை துரித வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சாதிப் போராட்டத்தில் துவக்குகள் பாவிக்கப்படத் துவங்கிவிட்டிருந்தன. கொலைகள் சில விழுந்தாயிற்று. எங்கோவாய் நடந்துகொண்டிருந்த சாதிப் போராட்டம் ஊர் எல்லையில் வந்து நின்று உறும ஆரம்பித்திருக்கிறது. இரவு கேட்ட வெடிச்சத்தம் அதன் அடையாளம்தான். இனி சரசாலை, மந்துவில், கொடிகாம ம், கைதடி, அரியாலை ஆகிய பகுதிகளில் கொலைக் களங்கள் தவிர்க்க முடியாதபடி அமையும். வட்டாரம் கிராம ம் அதன் மூடுண்ட புவியமைப்புக் காரணமாய் ஒதுங்கியிருந்தாலும் அதன் பாதிப்பு இப்பவோ பின்னரோ தவிர்க்கப்பட முடியாத து. இவன் ஒதுங்கி வந்துவிட்டாலென்ன, பாதிக்கவேபடுவான்”.

  1. நெடு யுத்தத்தின் நிறைவுறாத அத்தியாயங்கள்


சாதியப் போராட்டத்தை முகங்கொண்ட மட்டுவில் போராளி வன்னிக் குடியேற்றப் பகுதியில் காணாமல் போனான். அங்கே சிங்களக் குடியேற்ற முனைப்பும் இருந்தது. ஆயினும் எழுபதாம் ஆண்டுகளின் கடைக்கூறில் தொடங்கப் பெற்று முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த நெடு யுத்தம் பேரினவாத அரசின் நில அபகரிப்புக்கு எதிராகத் தொடக்கம் பெற்ற ஒன்றல்ல. ஜேவிபி இனரின் ஏப்ரல் (1971) கிளர்ச்சியின் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் யுத்த முனைப்புக் கொண்டதன் காரணத்தை ஆராய்ந்த ஆட்சியாளர் தீர்ஙுக்கான வழியாகத் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தினர். தரப்படுத்தலால் பல்கலைக்கழக வாய்ப்பை அதிகம் இழந்தது யாழ்ப்பாணச் சமூகம். அதனை எதிர்ப்பதற்கான வழிமுறையாக ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களை அரச பயங்கரவாதம் ஒடுக்க முற்பட்டபொழுது வடக்கு - கிழக்கு பூராவும் பரவிய யுத்தம் முப்பது வருடங்கள் நீடித்தது. “கனவுச் சிறை” நாவல் 1981 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண நூலகம் அரச படையினரால் எரிக்கப்பட்டதுடன் தொடக்கம் பெற்றது என்பது கவனிப்புக்குரியது.

அந்த நாவல் 2001 சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்குவதோடு முற்றுப் பெற்றிருந்தது. யுத்தம் முடிந்த பின்னரான தமிழர் வாழ்வியலை “கலிங்கு” நாவல் பேசுபொருளாக கொண்டிருந்தது. காலவளர்ச்சி நீடிப்பைக் காட்டியபோதிலும் அதன் தொடர்ச்சியாக புதியநாவல் இல்லை என்பதை ஆசிரியர் வலியுறுத்துவார். இவ்விரு நாவல்கள் மேலும் காத்திரமாக அமைந்திருக்க இயலும். மக்களின் ஏற்பு நிலைக்கு மட்டுப்படுத்தும் சுய தணிக்கை ஆரோக்கியமான படைப்பியலுக்கு இடந்தராமலாக்கி உள்ளது. இது குறித்து “ஜீவ ந தி”யின் 2019 தை மாத (124 வது) இதழில் “படைப்பூக்கச் சிதைவில் சுய தணிக்கை (தேவகாந்தனின் இரு நாவல்களை முன்னிறுத்தி ஒரு முன்னுரைக் குறிப்பு)” எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். அவற்றைத் தவிர்த்து மேற்கொண்டு பேச வேண்டியுள்ள சில விடயங்களை இங்கு பார்க்கலாம்.

பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டம் இத்தனை காலம் நீடித்தது ஏன்? மிகப் பிரமாண்டமான யுத்தகளமாக விரிவு பெற்றது எப்படி? இவ்வளவு வீரியமிக்க படையொன்று மீள எழ முடியாத வகையில் முழுதாக அழிக்கப்பட இயலுமானது எவ்வாறு? இவை அனைத்துக்குமான பதில், இவற்றுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என்பதுதான். ஆளுமையுடன் இருந்த இலங்கையை அதனது கட்டுப்பாட்டுக்கு ஆட்படுத்தும் பொருட்டுப் போராட்டம் பிரமாண்டமாக வளரப் பின் தளத்தை வழங்கி, இலங்கை கட்டுப்பட இணங்கியபோது சகல வழிகளையும் அடைத்து மேடையை அகற்றிவிட்டதும் போராடும் அணிக்கு களமாட இயலாத நிலை ஏற்பட்டது.

இன்றும் இனவாத அலை ஓயாமல் பேணப்படுவதற்கு இன்னமும் சிங்களத் தலைமைகளை இந்தியாவால் நம்ப இயலாமல் இருப்பதே காரணம். ஊடக ஊடுருவல் எம்மிடையே இனக்கொந்தளிப்பைக் கொதிநிலையில் பேணியபடி இருப்பதற்கு வகை செய்வதாக அமைந்துள்ளது. யுத்தகால மக்களின் வாழ்வியலை வேறெந்தப் படைப்புகளை விடவும் தேவகாந்தனின் நாவல்கள் வெளிப்படுத்துவன; இவையும் கூட எமது அவலத்தைப் பெருக்கும் அந்த மேலாதிக்கத் திணையைத் தோலுரித்துக்காட்டும் வகையில் வாசக மனத்தை ஆற்றுப்படுத்த முனையவில்லை.

  1. விடுதலை அவாவும் கருத்தியல் தேடல்

மோதலுக்குள் இயங்கும் சமூக சக்திகளின் (திணைகளின்) உள் முரண்பாடுகளைக் கவனத்தில் எடுத்து விடுதலையை நாடுவோர் பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பும் அவசியத்தை வலியுறுத்தும் கருத்தியல் தளம் தேவகாந்தனுடையது. வேறெந்தப் படைப்புகளை விடவும் மக்களை, அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தை மிக நுட்பத்துடன் அவரால் வெளிப்படுத்த இயலுமானதற்கு இந்தக் கருத்தியல் தளம் உதவியுள்ளது.

எழுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் வாழ்க்கை நெருக்கடி நிர்ப்பந்தித்த காரணத்தால் கப்பல் பணியாளராக நேர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக கடலோடி வாழ்வை மேற்கொண்டவர் தேவகாந்தன். அதன்போதான சிங்கள இளைஞர், பெண்கள் தரப்போடு ஊடாடிய அனுபவங்களை “கலாபன்” (ஜூலை 2019) நாவலில் காட்டி இருப்பார். அவரையே போல கடலோடி வாழ்வில் சிங்கள உழைக்கும் மக்களுடன் ஊடாடிய நண்பரை முன்னிறுத்தி அந்த நாவல் படைக்கப்பட்டிருந்தது. இயக்கங்கள் தலையெடுத்த பொழுது ஊருக்குத் திரும்பிய அந்த நண்பன் இயக்கம் ஒன்றால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுப் போயிருந்தான்.

சாதிப் போராட்டம் என்பதை சாதியவாத அணுகுமுறைக்கு இடமளிக்காமலே எழுதுவது போன்றே தேசிய இன விடுதலைப் போராட்டக் களத்தை இனவாதம் அண்டாமல் அவரால் எழுத இயலுமாயிற்று. டானியலுடைய படைப்புகளில் ஓரிரு அம்சங்களில் சாதிவாதம் தலைகாட்டுவதான விமரிசனங்கள் உள்ளன. ஆயினும் அதைவிடவும் முக்கியத்துவமுடைய அம்சம், சாதியத் தகர்ப்புப் போராட்டத்தின் படைப்பாக்கத்தில் அவர் தொட்ட எல்லையை வேறெவராலும் தொட இயலாதிருக்கிறது. மட்டுவிலை மட்டுமே களமாக்கொண்டதால் மட்டுமே தீ.ஒ.வெ.அ. போராட்டம் தோல்வியுற்றதாக தேவகாந்தன் கருதுகிறார் என்பதற்கில்லை. டானியல் “பஞ்சமர்” நாவலில் அனைத்துப் பகுதிகளது போராட்டங்களையும் உள்ளடக்கி இருந்தார். அதைவிட அவரிடம் இருந்த தலித் நிலைப்பாடு போராட்டத்தின் வெற்றிக்குரிய பக்கங்களை வெளிப்படுத்த வழிசமைத்துத் தந்திருந்தது. தலித்தியவாதப் பார்வை தவிர்க்கப்பட வேண்டும், சாதியத் தகர்ப்புக் களத்தை பூரணமாக வெளிப்படுத்த வேண்டுமாயின் தலித் நிலைப்பாடு வந்தமைவது அவசியமாகும். தலித் நிலைப்பாட்டை வரிப்பதற்கு தேவகாந்தனால் இயலாமல் போனாலும் தலித் ஆதரவு நிலையுடன் அந்தப் போராட்டத்தைப் படைப்பாக்கி உள்ளார் எனக் கூற இயலும்.

ஒப்பீட்டு ரீதியில் பெண் விடுதலைக் கருத்தியலுடன் பெண்ணியப் பிரச்சினைகளை அவரால் வெற்றிகரமாக படைப்பாக்க முடிந்துள்ளது. பெண் ஒடுக்குமுறையைப் பெண் உணர்வதைப் போல ஒரு ஆணால் எழுத்தில் கொண்டுவர இயலாது என்பது மெய். ஆயினும் ஒவ்வொரு ஆணுடனும் தாயாக, சகோதரியாக, மகளாக பெண் ஊடாடியபடி இருக்கும் வாய்ப்புள்ள வகையில் பெண் உணர்வை வெளிப்படுத்துவதில் ஓரளவு வெற்றிபெற இயலும். வேறு தளத்தில் வாழ வைக்கப்பட்ட தலித் மக்களது உணர்வைத் தலித்தல்லாத ஒருவரால் முழுதும் வெளிப்படுத்திவிட இயலாது என்பதனையே புரிதல் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவை தொடர்பில் மேலும் விரிவாகப் பேச அவசியம் உள்ளது. தேவகாந்தனின் படைப்புகள் பூரண ஈடுபாட்டுடன் படிக்கப்பட வேண்டும். பல பரிமாணங்களிலான விவாதங்கள் வாயிலாக எமக்கான விடுதலைத் திணை அரசியலுக்கு உரிய கருத்தியலை வெளிப்படுத்த முயற்சிப்போம்!



(நன்றி: ஜீவநதி)

Sent from my iPad

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி