கறாரான முடிவுக்கு வராத கலகத்தின் ஆதரவாளரா தேவகாந்தன்?

தேவகாந்தனின் 'எதிர்க்குரல்கள்' உரைக்கட்டுத் தொகுப்புப் பற்றிய ஒரு 'கலக்கப் பார்வை'!

.இராஜேஸ்கண்ணன்

--------------------------------------------------------------------------------------------------------------------------


               கார்ல் மார்க்ஸ் தனது இயங்கியல் சிந்தனைக்கான அடிப்படை மெய்யியல் தளத்தை ஹெகல், ஃபுவர்பாக் என்பவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இயங்கியல் தத்துவத்தின் அடிப்படைக் கருத்து (Thesis), எதிர்க்கருத்து(Anti-Thesis), புதுக்கருத்து(Synthesis) என்பவற்றின் தொடருறுதன்மையை விளக்குகின்றது. வரலாற்றின் வளர்ச்சியில் இந்த இயங்கியலை கண்டுகொள்ளலாம். கருத்துநிலை உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும்கூட இந்த இயங்கியல் உள்ளுறைந்திருக்கும். கருத்து ஒன்றுக்கு எதிர்க்கருத்து உருவாகும் அது இருந்துவந்த கருத்துநிலையை புதிய தளத்துக்கு இட்டுச்செல்லும் என்ற சாதாரண இயங்கியலை மறுத்துரைப்பவர்கள் இன்றும்கூட இருப்பார்களாயின் அது தேக்கநிலையின் அறிகுறியேயன்றி பிறிதொன்றல்ல. எதிர்க்கருத்தை மறுத்தல் என்பது முற்போக்கை(Progress) மறுத்தலே. முற்போக்கான கருத்துநிலை என்பது 'மாற்றுக்குரலுக்குஅல்லது 'எதிர்க்குரலுக்குசெவிசாய்த்தலின்வழிதான் சாத்தியமாகின்றது. எதிர்க்குரலை நிதானத்துடனும் ஆழமாகவும் உள்வாங்கிக்கொள்ளும் சமூகம்தான் 'ஓணானை கரக்கட்டான் என்றும் சொல்லமுடியும்என்பதில் உடன்படு சமநிலைக்கு வரும் என்பதுதான் தேவகாந்தனின் 'எதிர்க்குரல்கள்உரைக்கட்டுகளின் உள்ளார்ந்தம்.

               கட்டுரைகளை உரைக்கட்டுக்களாகவும், பத்தி எழுத்துக்களை பக்க எழுத்துக்களாகவும் வரையறுத்துக்கொண்டு மிகுந்த கட்டிறுக்கமான கருத்தாடல்களைச் செய்யும் தேவகாந்தனின் எதிர்க்குரல்கள் 2020 மார்கழியில் ஜீவநதியின் 171ஆவது வெளியீடாக வந்துள்ளது. எதிர்க்குரல்கள் அதுகொண்ட 'கலகக்குரல் பான்மைகாரணமாக புதிய பல விவாதங்களைக் கிளர்த்துகின்றது. எதிர்க்குரல்களில் நிறைந்துள்ள கலகக்குரல் பான்மை பல்வேறு பரிமாணங்களைப் பெறுகின்றன. மாற்று வரலாறு, வரலாற்றின் முரண்நகை, கலகக்குரல், மாற்றுப்;பிரதி, எதிர்ப்பிலக்கியம், மாற்று இலக்கியம், மாற்றுக்கான வடிவங்களின் கண்டனங்கள் என்று தேவகாந்தனின் எதிர்க்குரல்கள் எடுக்கும் பரிமாணங்கள் கனதிமிக்க தர்க்கநிலைப்பட்ட விவாதங்களுடன் உரைக்கட்டுக்கள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. தனிமனித அனுபவங்கள் மற்றும் உணர்வுகள், தனித்த ஆளுமைகள், வாழ்க்கைத் தடத்தின் சில நினைவாழியாத் தருணங்கள், இலக்கியச் செல்நெறிகள், அரசியல் நிலவரங்கள் முதலானவற்றை உரைக்கட்டுக்களாக அவ்வப்போது பல்வேறு ஊடக வெளிகளில் வெளியிட்டு, பின்னர் அவற்றை ஒருசேர நூலாகத் தொகுத்துத் தருகின்றபோது அவை யாவற்றுக்குள்ளும் இழையோடி நிற்பது கலகக்குரல் பற்றிய தேவகாந்தனின் கரிசனைதான்.

               தனது எதிர்க்குரலைப் பதிவு செய்ய தேவகாந்தன் இரண்டு 'அந்தலைகளுக்குஇடையில் நின்று கொண்டு கருத்தாடல் செய்கின்றார். ஓர் எல்லையில் மார்க்சியம் மற்றவொரு எல்லையில் பின்நவீனத்துவம். அவற்றுக்கிடையே செ.கணேசலிங்கன், எஸ்.பொ., வெங்கட்சாமிநாதன், சுஜாதா, மு.தளயசிங்கம், கா.சிவத்தம்பி, அம்பை, சமுத்திரம் முதலான பலரின் பங்கு பணிகள் மற்றும் கருத்துநிலைகளை விளக்குகின்றார். மார்க்சியர்கள், மார்க்சிய எதிர்ப்பாளர்கள், முற்போக்குவாதிகள், நற்போக்குவாதிகள், உருவவாதிகள், உள்ளடக்கவாதிகள், மெய்மைவாதிகள், தீவிர இலக்கியவாதிகள் என்றெல்லாம் கணிப்புப்பெற்ற பல்வேறு ஆளுமைகளையும் அவர்கள் கொண்ட சமூக, அரசியல் மற்றும் படைப்பாக்கக் கருத்துநிலைகளையும் கருத்தாடலுக்கு உட்படுத்துவதன் வழி 'கறாரான முடிவுக்கு வராத கலகத்தின் ஆதரவாளராக!’ எதிர்க்குரல்களில் தன்னை அடையாளப்படுத்துகின்றார் தேவகாந்தன்.

வெங்கட்சாமிநாதன் பற்றி 'கலை, இலக்கியத்தின் விமர்சனக் குரல் ஓய்ந்தது" எனும் தலைப்பில் எழுதிய உரைக்கட்டில் 'ஒரு படைப்பு குறித்து, அவரது பாதையினூடாகவன்றி எனது பாதையினூடாகவும் ஒரே முடிவையே நாம் வந்தடைந்த வியப்பு நீண்டகாலமாக என்னுள் தங்கியிருந்தது. எனது மார்க்சிய ஈடுபாடு பின்-மார்க்சியமாக விரிவடைந்தும், பின்நவீனத்துவ ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தும் அந்த முரண் நிலையை, கலை வேறு விசயமென்பதை, நான் புரிந்துகொண்டேன். என்னுள் நிகழ்ந்த வளர்சிதை மாற்றத்தில் வெ.சா.வுக்கு பெரும் பங்கு இருக்கிறது’ (பக்:78) என்று குறிப்பிடுகின்றார். இந்தக் கருத்து, கருத்துநிலையில் முரண்பாடு கொண்ட கலகம் எதுவாயினும் படைப்பாக்கத்தில் கலைக்கான உடன்படு சமநிலை கொள்ளுகின்ற 'வளர்சிதை மாற்றத்தைதரவேண்டும் என்பதை உட்கிடையாக கொண்டுள்ளது. அந்த உரைக்கட்டின் இறுதிப்பகுதியில், 'கடல் கடந்தும்என்ற வெங்கட்சாமிநாதனின் நூல் பற்றிக் குறிப்பிடும்போது 'மார்க்சிய எழுத்துக்களை மறுத்து விமர்சித்துவந்த வெ.சா. அந்த நூலில்தான் கே.டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடி ஆகவும், அவரது எழுத்துக்கள் சமரசமாகாதவை என்றும் விதந்து பாராட்டியிருந்த கட்டுரை வெளிவந்திருந்தது’ (பக்:79) என்று தேவகாந்தன் கலகக்குரலான வெ.சா.வின் 'வளர்சிதை மாற்றத்தின்இறுதிப்புள்ளி ஒன்றை எடுத்துக்காட்டியுள்ளார். அதன்வழி கலகம் உண்மையாக இருப்பதில்லை என்பதை வலியுறுத்த விளைகின்றாரோ? என்று எண்ணத்தூண்டியது!

               எண்ணத்தை சரியென உறுதிப்படுத்திக்கொள்ள எஸ்.பொ.வின் இலக்கிய ஆளுமை பற்றி தேவகாந்தன் எழுதிய உரைக்கட்டில் 'கலகம் பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஊரிலே ஒரு சொலவடை உண்டு. கலகம் வழியைத் திறக்குமென அதற்கு அர்த்தம்கொள்ள வேண்டும். ஆனால் கலகத்தை உண்மை என்று நம்பியதன் விளைவே, எஸ்.பொ. பின்னாளில் அடையாளம் மறந்தவரானதற்குக் காரணம் என்பது இப்போது புரிகிறது. கலகத்தின் மூலம் உண்மையை அறிவதற்குப் பதிலாக, கலகத்தையே கோசமாக உச்சாடனப்படுத்தியதன் விளைவு அது’ (பக்:12) என்று குறிப்பிடும் பகுதி துணையானது. இது கலகம், முரண், மாற்று, எதிர்ப்பு முதலானவை தொடர்பில் தேவகாந்தனின் கருத்துநிலையை தெளிவுறக் காட்டுகின்றது. கலகம் தொடர்பில் தேவகாந்தனின் கருத்துநிலை என்ன? என்பது எஸ்.பொ. பற்றிய அந்தக் உரைக்கட்டில் விரவிக்கிடக்கிறது. எஸ்.பொ.வின் வழியைப் பின்பற்ற ஒரு படைப்பாளிகூட இன்றில்லை என்பதும், அதற்குக் காரணம் தான் போட்ட வட்டத்துக்கு வெளியே பார்க்க மறுத்தமை என்பதும், தான் கை வைத்த இலக்கியத் துறைகள் பலவற்றில் அவரில்லை என்பதைக் காலம் காட்டியிருக்கிறது என்பதும் எஸ்.பொ. வரித்துக்கொண்ட கலகத்தின் மீதான தேவகாந்தனின் விமர்சன பார்வையாகியுள்ளது. 'நற்போக்கு இலக்கியக் கொள்கைஅவர் அதை நிறுவ முனைந்த காலத்திலேயே உயிரோடு இல்லை என்பது எவ்வளவு துர்லபம்!’ (பக்:12) என்று எஸ்.பொ.வின் கலகக் குரலில் பலவீனம் உள்ளதாக தேவகாந்தன் குறிப்பிடுகிறார். 'எஸ்.பொ. இன்றுவரை மாறவேயில்லை. மட்டுமன்றி, அவர் வளராதும் இருந்துவிட்டார்’ (பக்:13) என்று கூறுவது மாற்றுக்கருத்தை முற்றிலும் நிராகரிக்கின்ற கலகக்காரன் கருத்துநிலைத் தேக்கமுடையவன் என்பதையா? என்று எண்ணவைக்கின்றது.

               முற்போக்கு இலக்கிய எதிர்ப்புக் கலகக்காரனான வெங்கட்சாமிநாதனின் வளர்சிதை மாற்றத்துக்கும், நற்போக்கு ஆதரவுக் கலகக்காரனான எஸ்.பொ.வின் மாற்றமேயில்லா நிலைக்கும் இடையிலான வேறுபாட்டின் வாயிலாக தேவகாந்தன் சொல்லவருவதுதான் என்ன? என்று ஒரு வாசகனிடத்தில் வினா எழும்போது, 'கலகத்திலுள்ள முக்கிய தன்மை என்னவெனில், அதுவே உண்மையாக இருப்பதில்லை என்பதுதான். அது உண்மையைக் கண்டடைவதற்கான ஒரு உந்தலை உருவாக்குமே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை என்பது அதிலுள்ள சூட்சுமம்’ (பக்:12) என்று அதற்கும் பதில் வைத்துக்கொண்டே தேவகாந்தன் கருத்தாடுகின்றார். இதுதான் கலகம் என்றால் என்ன? என்பது பற்றிய தேவகாந்தனின் கறாரான முடிவாகின்றது. இந்த முடிவின் அடித்தளத்தில்தான் 'எதிர்க்குரல்கள்என்ற உரைக்கட்டுக்களின் தொகுப்பான இந்த நூலின் உள்ளடக்கத்தை மதிப்பிடவோ புரிந்துகொள்ளவோ வேண்டியுள்ளது.

               கலகம் உண்மையைக் கண்டடைவதற்கான உந்தலைத் தருவது என்று வரையறுக்கின்ற நிலையில், தேவகாந்தன் கலகத்தின் பின்னணியில் மெய்மைகாணும் தர்க்கம் ஒன்று அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பது புலனாகின்றது. மெய்மைகாணும் தர்க்கமே மெய்யியல். மெய்யியல் என்பது கலகத்தின்வழி பிறப்பது என்ற நம்பிக்கையின் விகசிப்பை தேவகாந்தனின் உரைக்கட்டுக்களில் காணலாம். 'பின்நவீனத்துவம் குறித்துஎன்ற உரைக்கட்டில் கருத்துநிலைகளின் அரசியல் குறித்தும், பொருளாதார நோக்கங்கள் குறித்தும் சிலாகிக்கின்றார். உலக அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கிலான மாற்றத்;தினால் கருத்துநிலை எவ்வாறு தீர்மானமாகின்றது என்பதை விளக்குகின்றார். தங்கள் மேலாதிபத்தியத்தை நிலைநாட்ட நாடுகள் 'கருத்தியல் யுத்தத்தைஎப்படி நிகழ்த்தின என்பதை அமெரிக்க முரண்பாட்டின் பின்புலத்திலும், மார்க்சிய-பின்நவீனத்துவ முரண்பாட்டின் பின்புலத்திலும் விளக்குகின்றார். ஓர் எல்லையில் மார்க்சியத்தையும் இன்னோர் எல்லையில் பின்நவீனத்துவத்தையும் வைத்துக்கொண்டு நவீனத்துவம், அமைப்பியல், பின்அமைப்பியல் என்பவற்றைக் கடந்து எப்படி ஐரோப்பாவில் பின்நவீனத்துவம் வளர்ச்சிகண்டது என்பதை விவரிக்கின்றார். இந்தக் 'கருத்துநிலை யுத்தத்தின்அடிப்படையே மெய்மையைத் தர்க்கித்தல்தான் எனும் பொருள்பட விளக்கமளிக்கின்றார். எல்லா உரைக்கட்டுகளையும்போல இந்த உரைக்கட்டை செறிவாக்க முடியாது. அது விரிவுபெறவேண்டியது. செறிவாக்கப்படும் தருணத்தில் கருத்துப் பிறழ்வுக்குச் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. உண்மையில் மேலாதிபத்தியத்தின் மாயாவாதம் எது? அந்த மாயாவாதத்தை முதலாளித்துவத்தின் வெளிப்பேறாக ஏன் பார்க்க வேண்டும்? பின்நவீனத்துவத்தின் நிலைபேற்றுக்கு முதலாளித்துவத்தின் ஆதரவுக்கும் என்ன தொடர்பு? முதலான வினாக்களுக்கான பதிலை அந்த உரைக்கட்டு விலாவாரியாக உரைக்காது ஊகிக்கவே வைத்திருக்கிறது. கருத்துநிலை யுத்தத்தின் அடிநீரோட்டமாக முதலாளித்துவம் - சோசலிசம், அமெரிக்கா-ஐரோப்பா எனும் எதிர்நிலை இரட்டைகளின் கலகம் ஒன்று எப்படி அமைந்தது என்பதை வரலாற்றாசிரியனுக்குரிய பொறுப்புணர்வுடன் விவரிக்கும்போது மட்டுமே கருத்துநிலையின் சரியான இயங்கியலை புகட்டமுடியும். இதனால் அந்த உரைக்கட்டு விவாதத்துக்கான மேலும் விரிவான விவரிப்பைக் கோரிநிற்கின்றது. அத்தகைய விரிவாக்கம் மார்க்சியத்தின் இயங்கியலை பின்நவீனத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிவரை இழுத்துச் சென்று கருத்துநிலைக் கலகத்துக்கான பின்னணிகளை திரிபறவைக்கும். அதுவே கருத்துநிலைக் கலகத்தின் மெய்யியலுமாக பரிணமிக்கும். இதனை விவரித்துரைக்கும் வல்லபம் தேவகாந்தனின் அனுபவவெளிக்கு உள்ளது. அந்த விரித்துரைப்பு தனித்து நிகழவேண்டும். அதைவிடுத்து 'நடைமுறை அரசியலின் அடிநாதத்தை விளங்கிக்கொள்வதற்கு மார்க்சீயம் எப்படி உதவுகிறதோ, அதேபோல இலக்கியத்தைப் புரிந்துகொள்ள பின்நவீனத்துவம் உதவுகின்றது’ (பக்: 09) என்று அறுதியிட்டுக்கூறுவது போதுமான தெளிவை வாசகனுக்கு கொடுக்காது. ஏனெனில், இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கான வல்லமை மார்க்சியத்துக்கு இல்லையா? அது பின்நவீனத்துவத்துக்கு மாத்திரமே உண்டா? மார்க்சியம் வெறும் அரசியல் புரிதலுக்கான தத்துவம்தானா?  முதலான வினாக்களுக்கும் சரியாக பதிலிறுக்க வேண்டிய தேவை உருவாகும். பல்வேறு கலகத்தை தூண்டிவிடும் இந்தக் உரைக்கட்டு மேலும் விரிவாக்கம் பெறும் நிலையில் புதிய மெய்மைகளை நோக்கி நகரும்.

               முரணிகளைக் கொண்டாடுதல் என்பது துணிச்சல்மிக்க விடயம்! பிரமிள், மு.., எஸ்.பொ. முதலானவர்களை 'நாரதர் கலகம் நன்மையில் முடியும்" எனும் வெகுஜன வாக்குக்கு அமைவாக கொண்டாடுவது 'எஸ்.பொ.: ஈழத்து இலக்கியத்தின் தன்னேரில்லாத் தலைவன்"(பக்:71-75) எனும் உரைக்கட்டின் நோக்கமானது. நாரதனின் கலகம், சித்தர்களின் கலகம் என்பவற்றின் தொடர்ச்சியில்வைத்து எஸ்.பொ.வின் கலகத்தையும் நன்மையை பிறப்பித்த கலகமாகப் பார்த்துள்ளார். ஈழத்து இலக்கியப் பரப்பில் எழுத்துப் புனித அழிப்பை செய்த எஸ்.பொ.வின் தீ, சடங்கு  நாவல்கள் பற்றி குறிப்பிடுகின்றார். அந்த உரைக்கட்டின் கருத்தாடலின் போக்கை 'எஸ்.பொ. என்றொரு இலக்கிய ஆளுமை’ (பக்:11-14) எனும் உரைக்கட்டுடன் ஒருங்குவைத்துப் படிக்கின்றபோது ஏற்றலும் - எதிர்த்தலும் எனும் எதிர் இரட்டைநிலையை எவ்வாறு தேவகாந்தன் சீர்தூக்கி மதிப்பிட முனைகின்றார் என்பதைக் காட்டுகின்றது. கலகத்தில் ஏற்றலும் எதிர்த்தலும் சமதளத்தில் அமையும் போலும்!

               தமிழ் இலக்கியச் சூழலில் கலகக்குரல்களாக அமைந்த பல ஆளுமைகள் பற்றி தேவகாந்தன் பதிவுசெய்கின்றார். அவர்களை அவர்கள் நிலையில் வைத்தும், தன்னுடனான தொடர்பின் வழியே வைத்தும் புறநிலையிலும், அகநிலையிலும் மதிப்பிடுகின்றார். சமுத்திரம் 'தேவகாந்தனுக்கும் எனக்குமான நட்பு சண்டையில் ஆரம்பமானதுஎன்று கூறுவதை நினைவுகூர்ந்துள்ளார். தேவகாந்தனது இந்த நூலின் உரைக்கட்டுக்களின் நுண்மாண் நுழைபுலமும் அதுதான். ஆகர்ஷ்யம் பெறும் மனிதர்களின் வாழ்வு ஓர் இழையால் இணைக்கப்படும்போது, அது எப்படி ஒரு வரலாறாக மாறும் என்பதை இந்தத் தொகுப்பு புரியவைக்கிறது. அத்துடன் இலக்கிய வரலாறு என்பது இலக்கியங்களின் வரலாறு என்பதைக் காட்டிலும், அது இலக்கியங்களைப் படைத்த ஆளுமைகள் சம்பந்தப்பட்ட, ஆளுமைகளின் கருத்துநிலைகளின் முரண்களின் அல்லது கலகத்தின் வரலாறு ஆகின்றது போலும் என்றும் சிந்திக்கவைக்கின்றது. கருத்துநிலையிலான இரட்டை எதிர்நிலைகளே (Binarynaடிiயெசல ழிpழளவைநள ழக னைநழடழபல) இலக்கியத்தின் வரலாறாக பேசப்படுகின்றது எனும் முடிவுக்குவரத் தடமிடுகின்றது.

               இந்த எதிர்நிலை இரட்டைநிலைகளையும், மார்க்சியம் குறிப்பிடும் துருவநிலைப்படுத்தலையும் (Polarization) ஒன்றாகப் புரிந்துகொள்ளலாமா? என்ற வினா எழும் தருணத்தில்தான் கொள்கை நிலையில் மார்க்சிய இடதுசாரிய கருத்துநிலைக்கும் பின்நவீனத்துவக் கருத்துநிலைக்கும் இடையிலான தேவகாந்தனின் ஊடாட்டம் பற்றிய மதிப்பீடு ஒன்று ஏற்படுகின்றது. 'மனத்தில் பதிந்திருக்கும் கருத்துநிலைகளும் ஏறக்குறைய இதுமாதிரித்தான். எவ்வளவுதான் வாசித்தாலும் சிலபேரது மனம் அசைந்துகொடுப்பதேயில்லை. வாசிப்பதை ஒப்புவிக்கின்ற பாணியில் அவர்களது கதை பேச்சுக்கள் அருமையாகத்தான் இருக்கும். பெரிய விஷயக்hரர்கள்போலவேதான் அவர்களும் தோன்றச் செய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்திலான அபிப்பிராயம் என்று வருகையில், அவர்கள் தமது எண்ண அமைப்பிலிருந்து மாறுவதில்லை’ (பக்:126) என்று 'கரக்கட்டான்எனும் உரைக்கட்டின் இறுதியில் குறிப்பிடுகின்றார். எண்ண அமைப்பிலிருந்து மாறாமை என்பது கருத்துநிலையின் இயங்கியலை மறுப்பாதாகவே அமையும். மாற்றம் எனும் அடிப்படை இயங்கியலை மறுப்பவர்களோடு கலகம் செய்வது தவிர்க்கவியலாததாகின்றது. இது ஒருவகையஷpல் இலக்கிய வாரலாற்றை மீள்வாசித்தலும் அதன் வழியான சுயமதிப்பீடும் ஆகின்றது. வரலாற்றை மீள்வாசித்தல் என்பது தவறுகளிலிருந்து மீள்நிமிர்வுகொள்ளல் ஆகின்றது. அது தேவகாந்தனுக்கு உவப்பானதொன்றாகின்றது. இதனை தி.ஜானகிராமனது மரப்பசு நாவல் குறித்தான அம்பையின் கட்டவிழ்ப்பு விமர்சனம் பற்றிய தேவகாந்தனின் மதிப்பீடான 'நவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல்எனும் உரைக்கட்டில் காணலாம். அம்பையின் கூற்றாக தேவகாந்தன் எடுத்துக்காட்டும் கருத்து ஒன்று 'இப்படியெல்லாம் அதைப் பார்க்க தி.ஜா.வுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கனவே உள்ள கச்சிதமான அடைப்புக்குள் போட விரும்புகிறார்’ (பக்:55) என்று நிறைவுறுகிறது. அதில் 'ஏற்கனவே உள்ள கச்சிதமான அடைப்புக்கு போடுதல்என்பதை 'எண்ண அமைப்பிலிருந்து மாறுவதில்லைஎனும் தேவகாந்தனின் கருத்துடன் பொருத்திப்பார்க்கும் ஒருவருக்கு கருத்துநிலை இயங்கியலின் உண்மையான அர்த்தம் புரியும் என்று நம்பமுடியும். ஏற்கனவேயுள்ள கச்சிதமான அடைப்புக்களைக் கட்டவிழ்ப்பதில் தேவகாந்தனுக்குரிய உடன்பாடு இதன்வழி தெரியும். தேவகாந்தனின் 'கதாகாலம்போன்ற படைப்புக்களில் இந்தக்கட்டவிழ்த்தலையும், பெருங்கதையாடலின் மீள்வாசிப்பையும் காணலாம். Deconsruction என்பது வேறு Destructionconstrucion என்பது வேறு. Deconstruction என்பது இருந்துவந்த கட்டமைப்புக்களை இயங்கியலின் தேவை அறிந்து இன்னொன்றாக மீளமைப்பது; மாற்றியமைப்பது. அது Reconstruction அல்ல. Reconstruction என்பது இருந்துவந்த அமைப்பை புதுக்கி இருந்தவாறு புத்துயிர்ப்பளித்தல்; மிளிரச் செய்தல். Destruction இருந்துவந்த அமைப்பை நிர்மூலமாக்குவது. முதலாவது மீளநிர்மாணிப்பது. இரண்டாவது நிர்மாணத்தை இல்லாதொழிப்பது; அழிப்பது. கட்டவிழ்த்தல் என்பது கலகத்தின்வழி மீள்நிர்மாணத்தை தரவேண்டும் என்பது தேவகாந்தனின் கருத்தாக எதிர்க்குரல்கள் முழுவதும் விரவியுள்ளது.

               மிகத்தீவிரமான விவாதங்களை உருவாக்கவல்ல எதிர்க்குரல்களை முன்வைக்கும் உரைக்கட்டுக்களின் இடையிடையே தன்னுணர்வு வெளிப்பாடுகளாகவும் சில வந்துள்ளன. குறிப்பாக 'மரணித்த பின்பும்’, 'பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒரு நினைவுப் பகிர்வு’, 'கொடிது கொடிது மரணம் கொடிதுபோன்றன அத்தகையவை. மரணித்த பின்பும் என்பது ஒரு சிறுகதைக்கான உணர்வின் உள்ளடக்கத்தோடு வந்துள்ளது. உண்மை அனுபவத்தில் ஆன்மா லயித்து நின்று உணர்வுகளைப் பரிமாறும்போது அத்தகைய குறித்துச் சொல்லக்கூடிய உரைக்கட்டுக்கள் அமையும்போலும். ஏனைய இரண்டிலும் அத்தகைய பண்புகூட மேலெழவில்லை. அவை வெறுமனே ஒருவரின் மறைவின் பின்னே அவரை நினைந்துருகி கவலைதீர்த்தலுக்கான 'கல்வெட்டுக் கட்டுரைத்தனம்" வெளிப்பட்ட உரைக்கட்டுக்களாகத் தெரிகின்றன. அவற்றை எதிர்க்குரலில் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத்தூண்டுகின்றது. இலங்கை, இந்தியா, கனடா எனும் முத்தளங்களில் நிகழ்ந்தேறிய இலக்கிய செயற்பாடுகளின் ஒரு காலப் பதிவாக வரும் உரைக்கட்டுக்களில் தேவகாந்தனின் உலக இலக்கியப் பரிச்சயம் தெரிகின்றது. அல்பேர் காமு பற்றி அவர் எழுதிய உரைக்கட்டு படிப்பவருக்கு இன்னொரு தளத்தை விரிக்கிறது. தேவகாந்தனின் அரசியல் பிரக்ஞை ஆங்காங்கே தென்பட்டாலும் 'இனி நடப்பது நல்லாகவே நடக்கட்டும்என்பதிலும் 'கனவின் மீதியைக் கொண்டலைந்த பயணத்தின் முடிவுஎன்ற   கி.பி.அரவிந்தன்பற்றிய உரைக்கட்டிலும் ஈழத்தமிழர்களின் போராட்டம் மற்றும் அரசியல் குறித்த சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

               தேவகாந்தனின் சிறுகதைகள், நாவல்களில் மொழியின் பிரவாகம் சிறப்பாய் அமைந்திருக்கும். விவரணங்களும் சித்திரிப்பும் இலக்கியம் படைப்பது மொழியின் நிலைபேற்றுக்கே எனும் பிரக்ஞையுடன் அமையப்பெற்றிருக்கும். அவர்கொண்ட சமஸ்கிருதப் பயிற்சியினால் மொழியில் மணிப்பிரவாளம் கலந்து இரசனை தரும். அத்தகைய பிரக்ஞை உரைக்கட்டுகளிலும் தென்படுகின்றது. ‘நவீன இலக்கியம்:ஈழம்-புகலிடம்-தமிழகம்’ (2019), 'நுண்பொருள்:அறம்-பொருள்-காமம்’ (2019),'காற்று மரங்களை அசைக்கின்றது’ (2021) ஆகிய உரைக்கட்டுக்களின் தொகுப்புக்களைப்போலவே 'எதிர்க்குரல்கள்எனும் இந்தத் தொகுப்பிலும் மொழி குறித்த தேவகாந்தனின் பிரக்ஞை விரவிக்கிடக்கிறது. சினிமா, இலக்கியம், கலைகள், மொழியாக்கம், அரசியல், வரலாறு என்று பல்நிலைப்பட்ட பொருண்மைகளை வெளிப்படுத்தும் தருணங்களிலெல்லாம், விடயத்தின் நேர்த்திக்கும் ஆழத்துக்கும் கொடுக்கப்படும் கரிசனை மொழி வெளிப்பாட்டுக்கும் கொடுக்கப்படுவது தனித்துவமான ஓர் அம்சமே. பல்கடைக்கூடம்,அழிச்சாட்டியம், மூர்த்தண்யம், மிஞ்சிகை என்று வரும் அவருக்கே உரித்தான மொழிப் பயன்பாட்டுக்கு மேலாக 'மீறல் செயற்பாட்டினை மீறல் இல்லாத மொழியின் மூலம் வெளிப்படுத்திவிட முடியாது...... நாம் ஒரு மொழியைக் கண்டடையாமல் ஒரு புதிய உபாயத்தைப் பேசிவிட முடியாதென்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். தலித்துக்களுக்கான ஒரு மொழி இருப்பதுபோல, பெண்களுக்கான ஒரு மொழி இருக்கிறது. தத்தம் உணர்வுகளை அந்தந்த மொழியில் வெளிப்படுத்துவதற்கான பிரக்ஞை அந்தந்தப் படைப்பாளிகளுக்கு இருக்கவேண்டியது நியதியாகும்’ (பக்:56-57) என்று குறிப்பிடுவதில் தேவகாந்தனுக்கான மொழிபற்றிய பிரக்ஞைநிலையை அறிந்துகொள்ளலாம். 'கலை கலைக்காகவே என்ற கலைவாதியல்ல நான். கலையில் சமகாலக் கருத்துக்கள் இருக்கமுடியும். கருத்துக்களின் இழையோட்டம் இருக்ககூடிய அதேவேளையில், கலையைக் கருத்தின் வாகனமாகப் பாவித்துவிடக்கூடாது என்பது என் தெளிவாக இருக்கிறது’ (பக்:120) என்பது கூட உட்பொருளாக கலைவெளிப்பாட்டில் மொழிக்கான முதன்மையையே கருதுகின்றது. கலை மொழியின் வாகனமேயன்றிக் கருத்தின் வாகனம் அன்று என்பது இதன் அடிச்சரடாகின்றது.  

               'இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிப்பது. சமூகமோ இடையறாது மாறிக்கொண்டிருப்பது. பழமைகள் கழிவதும் புதுமைகள் புகுவதுமாய் இருப்பது. பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது. அந்தவகையில் படைப்பாளி சமூக மாற்றத்தை எற்றுக் கவனிப்பது இயல்பானதே. ஆயினும், பொதுவாக எல்லாப் படைப்பாளிகளுமே இந்த அம்சத்தில் கவனம் செலுத்துவார்கள் என்றில்லை. மிகப் பெரும்பாலோர் சமூகத்தின் இந்த மாறும் இயல்பை கருத்திற்கொள்வதில்லை. அந்தக் கணத்து வாழ்வு பற்றிய சித்திரத்திலேயே அவர்கள் திருப்தியுறுவார்கள். ஆனால் வாழ்வின் முழு அர்த்தத்தையும் தேட விரும்பும் ஒரு படைப்பாளி சமூகத்தின் இந்த இயக்கப் போக்கை புறக்கணிக்க முடியாதுஎன்று எம்..நுஃமான் தனது 'சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்’ (2017:32-33) எனும் நூலில் குறிப்பிடுகின்ற கருத்தானது சமூகமாற்றம் குருத்துநிலையில் மாற்றங்களை உருவாக்குவது தவிர்க்கவியலாதது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. கருத்துநிலை மாற்றம் எதிர்க்குரல்களால் சாத்தியமாகின்றது. எதிர்க்குரல்கள் படைப்பாளிகளையும், படைப்பாக்கத்தையும் செழுமைபெற வைக்கிறது. இந்தச் செழுமையை நோக்கிய இயங்கியலின் அவசியத்தை தேவகாந்தனின் 'எதிர்க்குரல்கள்வலியுறுத்தி நிற்கின்றது எனலாம்.  

0

நன்றி: ஜீவநதி ஜுன் 2021

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி