அஞ்சலிக்கான வெளி - தேவகாந்தன்


 

அண்மையில் கி.ரா.வின் மறைவின் உடனடிப் பின்னால், அவரது அந்திம கிரியைகளின் முன்னாலேயே, நண்பர் வண்ணநிலவன் வெளியிட்ட கி.ரா.மீதான அபிப்பிராயம் அதிர்ச்சியாகவிருந்தது.

ஆனால் அதில் உண்மையும் இல்லாமலில்லை. வண்ணநிலவன் தெரிவித்த கருத்துக்களின் வரிக்கு வரியான அர்த்தத்திலன்றி, ஒரு பிரபலத்தின் மறைவின் முதல் தகவலிலேயே அந்தப் பிரபலமே தாங்கமுடியாத புகழாரங்களைக் குவித்துவிடுகிறதை பொது ஊடக வெளியில் நிறையவே காணக்கூடியதாகவிருப்பதைக் குறிப்பிடுகிறேன். அந்த ஒவ்வாமை சில அபிப்பிராயங்களை அசந்தர்ப்பமாய் வெளிப்படுத்திவிடுகின்றன என கொள்ளமுடியும்.

அண்மையில் பாடகர் எஸ்.பி.பி. காலமானபோதும், அதற்குச் சற்று முன்னர் கொரொனா காலத்திலேயே இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா மரணித்தபோதும்  தமிழிசைக் கடல் வற்றிவிட்டது, இலங்கைப் புனைவெழுத்தின் உச்சம் சரிந்துவிட்டது என்பதுமாதிரியாக பொது ஊடக வெளியில் வெளியிடப்பட்ட  அபிப்பிராயங்கள் கொஞ்சம் மனத்துக்கிசைவில்லாததாக  இருந்ததை நான் உணர்ந்தேன். அவ்வாறேதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவரை ஒரு கணம் எண்ணி பிரலாபப்படக்கூட ஒரு வெளியை பொது ஊடக வெளிகள் விட்டுவைக்கவில்லை.

பல ஆளுமைகள் மரணிக்கும்வரை கண்டுகொள்ளப்படவேயில்லை. இறந்தவுடன், அதுவரை கவனிக்காதிருந்த ஓர் ஆதங்கத்தில்போல்…. குற்றவுணர்வுடன்போல் ஆகா … ஓகோவெனப் புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். இதில் அவ்வவ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளோடு வாசனைத் தொடர்புமற்ற பலரின் குரல்கள் கதறல்களாகவே ஒலிப்பதை  யாரேனும் கவனித்திருக்க முடியும்.

கி.ரா.வின் மறைவின் பின்னாக வண்ணநிலவனின் அபிப்பிராய உந்துவிசையில் ஜெயமோகனது பதிவும், எஸ்.ரா.வின் பதிவும் மதிப்பு வாய்ந்தவை. ஜெயமோகனதை ஒரு சிறப்பான ஆய்வாகவே சொல்லமுடியும். நேற்று ‘தமிழ் இந்து’வில் வெளிவந்த ‘உலக எழுத்தாளர் கி.ரா.’ என்ற தலைப்பிலான சமஸின் எழுத்தும் அவ்வாறே இருந்தது. இருந்தும் அவைகூட கொஞ்சம் அவசரமென்றே எனக்குப் பட்டது.

மறைந்தவரின் இலக்கியத் திறன்களைவிட, கொஞ்சம் சக மனிதராய் அவரடைந்த வாழ்வியல் வெற்றி தோல்விகளும், இலக்கியவாதியாய் அந்த இடத்தை அவரடைய எடுத்த பிரயத்தனங்களும் பதிவிடப்படுவதே இத் தகு சமயங்களில் மிக்க பொருத்தமாயிருந்திருக்குமென எனக்குத் தோன்றுகிறது.

தேவை, எங்கோ ஒரு முறையோ பலமுறையோ சந்தித்து, ஒரு வார்த்தையோ அல்லது ஒரு உரையாடலோ நடாத்திய மறைந்துபோன அந்த ஆளுமைமீது ஒரு அஞ்சலியைச் செலுத்துவதற்கான வெளியே.

கி.ரா.வை அதிகமும் நான் சந்தித்ததில்லை. பாண்டிச்சேரிக்கு நண்பர் எம்.கண்ணனைச் சந்திக்கச் சென்றிருந்த சமயங்களில் திட்டமிட்டபடி கி.ரா.வைச் சந்திக்க முடியாதபடி பல சந்தர்ப்பங்கள் நழுவிப் போயிருக்கின்றன. அவர் அபூர்வமாக சென்னை வந்திருந்த ஓரிரு சமயங்களிலேயே சில சந்திப்புகள் சாத்தியமாகியிருந்தன. அவருடனமர்ந்து போட்டோ எடுத்து வைத்திருக்கக்கூடிய அவகாசம் கிடைத்திருந்தபோதும், அதையும் செய்யாமல் அளவளாவும் சுகத்தோடுமட்டும் அந்தச் சந்திப்புக்கள் முடிந்துபோனதில் இன்று எனக்குத் துக்கமில்லை. அந்த என் நெஞ்சின் ஞாபகங்களே  போதும்.

கரிசல் இலக்கியம் தமிழிலக்கியத்தின் ஒரு வகைமை. அதில் முன்னேர் பிடித்தவர் கி.ரா.என்பது சரியான வாதமே. அதிலிருந்துதான் இன்று கோணங்கியும் பா.செயப்பிரசாசமும் சோ.தருமனும் பூமணியும் இன்னும் பலரும் கிளைத்திருக்கிறார்கள் என்பதும் சரிதான். ஆனால் ‘கன்னிமை’ தொகுப்பினையும், ‘கோபல்ல கிராம’த்தையும், ‘கோபல்ல கிராம மக்க’ளையும் நாம் இலக்கியமாகத்தானே கற்றோம்! நெஞ்சில் இன்றும் ஆழப் பதிந்திருக்கும் இலக்கிய சாட்சியங்கள் அவை. ‘கோபல்ல கிராம’த்துப் பாத்திரங்களேயெனினும் கோபால நாயக்கரும் ஆவாவும் மனிதர்களாகவே நின்று தம்மைப் பிறப்பித்த படைப்பாளியின் மறைவில் துடிப்பதாகக்கூட என்னால் பாவித்துக்கொள்ள முடிகிறது. அது என் மன வார்ப்பு.

கி.ரா.வுக்கு என் அஞ்சலி.  

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி