எனக்குப் பிடித்த சிறுகதைகள்: 10 (நந்தினி சேவியரின் 'மேய்ப்பன்')


 எனக்குப் பிடித்த சிறுகதைகள்....

1970 இல் வெளிவந்த சிறுகதை இது. அறுபது எழுபதுகளில் இதுதான் எழுத்தின் முறைமையாக ஆகிக்கொண்டிருந்தது. இயற்பண்பு வாத்திலிருந்து யதார்த்த வாத நடை உருப்பெற்ற அக்காலத்தில் பல முற்போக்கு எழுத்தாளர்களும் இவ்வண்ணமே முயன்றார்கள். நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' மற்றும் 'அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' கூட எனக்குப் பிடிக்கும். அண்மையில் 'நந்தினி சேவியர்: படைப்புகள்' வாசித்தபோது இந்தக் கதையும் ஏதோவொரு விதத்தில் பிடித்திருந்தது.


மேய்ப்பன்

-        நந்தினி சேவியர்

 

“டாண்… டாண்! டாண்!”

புனித தோமையார் ஆலய திருந்தாதி மணி இடையிடையே ஒலிக்;கிறது.

இன்று ஞாயிற்றுக் கிழமைதான்.

ஆனால் இந்தக் கோவிலில் பூசை நடக்காது.

பூசை நடைபெற்று இரு வருடங்களாகிவிட்டன. கோவிலில் பூசைமட்டும் நடைபெறுவதில்லையே தவிர, காலந்தப்பாது திருந்தாதிமணி மட்டும் ஒலிக்கும்.

இந்த ஒழுங்கின் காரணகர்த்தா சங்கிலித்தாம் அவர்கள்.

அவர் இல்லாவிட்டால்…?

அவ்வூரின் கேந்திரப் பகுதியாக உள்ள கடற்கரைப் பிராந்தியத்தில் விரிந்து இருக்கும் கடற்கரையின் எதிர்ப்புறத்தில் அஞ்சல் அகத்தை அண்மித்து நிமிர்ந்து நிற்கின்றது தோமையார் ஆலயம்.

அது அப்பிராந்திய கடற்கரை வாழ் மக்களின் சொத்தாகும்.

புனித தோமையார் ஆலயத்தை நினைப்பவர்கள் சங்கிலித்தாம் கிறகோரியை மறக்க மாட்டார்கள்.

கோவிலின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பாளி அவர்தான். இதனால் அவருக்கு ஊரில் நல்ல மரியாதையும் இருந்தது.

சங்கிலித்தாம் கிறகோரி நல்ல தேகக்கட்டுடையவர். வயது சுமார் அறுபதுக்கு மேல் இருக்கும். ஆனால் இன்றுகூட தனியே கடலுக்குப் போக அஞ்சாதவர்.

“நான் எதுக்கும் பயப்பிடவில்லை மகன். கும்பாகூட என்னாலை கோயிலுக்கு வாறதில்லை எண்டிறதை நின்னக்க…”

கிறகோரி விம்மினார்.

“கும்பா” என்கிற உறவு முறை பிரான்சிஸின் தந்தையைப் பற்றியது.

பிரான்சிசுக்கு கிறகோரியோடு கதைக்கக்கூடாதென்று அவன் தந்தை கட்டளையிட்டிருந்தார். ஆனாலும் அதை அவன் மிகவும் பயத்துடனேயே மீறிக்கொண்டிருந்தான்.

அவனால் தன் ஞானத் தந்தையைப் புறக்கணிக்க முடியவில்லை. அவர் நியாயத்தைத்தான் செய்திருப்பதாக அவன் நம்பியிருந்தான்.

“நீங்கள் சுவாமியிட்டை போனனீங்களோ?”

“ஓம்… போனனான்…”

“எல்லாரும் ஒற்றுமையாய் வந்தால் தானும் வாறாராம். மேற்றிராணியாரும் அதைத்தான் சொன்னவராம்.”

“இது நடக்கக்கூடியதா?” பிரான்சிஸ் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.

அங்குள்ளவர்களுக்குள் இரண்டு பிரிவு. இதைத் தீர்த்துவைக்கக்கூடிய சங்கிலித்தாமே இரு பகுதியினருக்கும் எதிரி. இந்நிலையில்…

தீர்வு…?

பிரான்சிஸ் தன் ஞானத் தந்தையை வெறிக்கப் பார்க்கிறான். அவர் நிலத்தில் ஏதோ ககைகளால் கீறிக்கொண்டிருக்கிறார். அவர் சிந்தனை வலை பின்னுகிறது. அது அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. சென்ற வருடம் அடித்த புயலில் மகன் அள்ளுண்டு போகாதிருந்தால்… அவர் இப்போதும் மதிப்பானவராகத்தான் இருந்திருந்திருப்பார்.

அவரது மகனின் மனைவியாகிய தெரேசாவை அவர் கந்தசாமிக்கு மறுமணம் செய்துகொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், சங்கிலித்தாமின் மதிப்புக் குறைந்ததம் இதனால்தான்.

அவர் தெரேசாவை… அத்; திருமணத்தை முடிக்காதிருந்தால்….

இழிவேதும் ஏற்படாதிருக்கவே கிறகோரி இருவரையும் நேர்மையாக இணைத்தார்.

சங்கிலித்தாமின் நேர்மை மற்றவர்களுக்கு சகிக்க முடியாத கோபத்தை உண்டுபண்ணுமென எதிர்க்கவில்லை.

சங்கிலித்தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.

முன்பே பல பிரச்சினையையும் அழுங்குப் பிடியாகப் பிடித்து கோவிலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.

கோவிலில் பூசை இல்லை.

திருந்தாதி மட்டும் அடிக்கிறது. கிறகோரியும் இல்லாவிட்டால்…? கிறகோரி பிரான்சிஸை நிமிர்ந்து பார்த்தார்.

“மகன்! கோயில் சிலவுக்கு ஒரு ஐம்பது ரூபா வேணும். தேவ நற்கருணைக் கூட்டுச் சீலையும் நல்லாய்க் கிழிஞ்சுபோச்சுது… இப்பிடியே விட்டிட்டால் இரண்டும் உக்கிப்போயிடும்…”

கிறகோரி எட்டாத் தண்ணியில் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத மனிதனின் அவஸ்தையில் முக்கிமுனகினார்.

பிரான்சிஸிடம் ஏது பணம்?

அவன் தனது முகத்தை மறுபுறம் திருப்பி வைத்துக்கொண்டான். கிறகோரிக்கு அவன் நிலை புரிந்திருக்கவேண்டும்.

இருட்டில் சீறும் அலைகளின் பேரோசை கேட்கிறது. கிறகோரியின் இதயமும் அடித்துப் புரண்டு அலையோசை காட்டுகிறது.

பிரான்சிஸ் அங்கு வந்தபோது இருந்த அதே நிலை. ஐஸ்போட்ட மீனின் அதே மரத்தன்மையது.

பிரான்சிசுக்கு அவர் அப்போதும் இதைத்தான் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது.

திடீரென கிறகோரி விம்மி அழுதார்.

“மகன் எனக்கொரு உதவி செய்வியளே?”

“என்ன தொட்டையா?”

“இண்டைக்கு கடல்லை போகலாமெண்டிருக்கிறன்… வந்து அந்த மரத்தைப் பிணைச்சுத் தாறியளே…?”

அவன் தலையசைத்தான்.

கிறகோரி கடலுக்குப் போய் இரண்டு வருடங்கள். சக்கரியாஸ் இறந்த பிறகு அவர் கடலுக்கே போகவில்லை. ஆனால் இன்று… ஒரு நிர்ப்பந்தம். பிரான்சிசுக்குப் புரிந்தது.

அவரது குடிலிலிருந்து கொண்டுவந்த ஏதனங்கள் அனைத்தையும் பிணைத்துவிட்ட மரத்தில் வைத்துவிட்டு கைகளால் மரத்தை நீரினுள் தள்ளினான் பிரான்சிஸ்.

ஏனோ அவன் கை நடுங்கியது. கிறகோரி அவனைப் பாடும்படி வற்புறுத்தினார். பிரான்சிஸ் மெதுவாகப் பாடினான். “எங்கே சுமந்து போகிறீர்? என் யேசுநாதா எங்கே சுமந்து போகிறீர்?”

கிறகோரியும் மெதுவாகப் பாடியபடி சவளால் நீரை வலித்து முன்னேறிக்கொண்டிருந்தார். இருளில் மரம் வானைக் கடந்து அலைகளைப் பிறந்து முன்னேறிக்கொண்டிருந்தது.

பிரான்சிஸ் நெடுநேரம் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தான்.

இடி இடித்தது. மின்னல் மின்னியது.                                

இரவு முழுக்க நல்ல மழை. தொடர்ந்து பகலுமிரவுமாக அன்றிரவு கடலுக்குப் போன அனேகர் ஏதேச்சையாகத் தப்பிவந்தார்கள்.

வராத சிலருள் சங்கிலித்தாம் கிறகோரியும் ஒருவர்.

டாண்… டாண்… டாண்!

தோமையார் கோவில் மணி தேய்வாக ஒலிக்கிறது.

அது திருந்தாதியல்ல…

இறந்துவிட்ட கிறகோரிக்காகவும் மற்றவர்களுக்காகவும் அடிக்கப்படும் துக்கமணி.

அடிப்பவன் பிரான்சிஸ்.

இன்று இதுவும் நின்றுவிடும்.

திருந்தாதி…?

0

 


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி