தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம் - ஒரு பார்வை' சுல்பிகா




யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்ற தேவகாந்தனின் நாவல், பத்து பகுதிகளையும் பதினெட்டு அத்தியாயங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இது 1800 களிருந்து 1975 வரையான 175 வருட காலப்பரப்பினை உள்ளடக்குகின்றது. எனது கட்டுரை  1970 வரையான காலப்பகுதியில் அமைந்த எட்டு அத்தியாயங்களின் கதை மூலங்களை /ஆதாரங்களை மாத்திரமே கவனத்திற்கொண்டு எழுதபபட்டுள்ளது.

நாவல்கள், சிறுகதைகள் கொண்ட தொகுதிகளென இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் படைத்திருக்கின்றார். இருந்தபோதிலும் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்கு எனறு ஒரு வேறுபட்ட சிறப்பு பரிமாணம் உண்டு. அதாவது இந்த நாவலின் கதை, புனைவு இலக்கியத்தின் தன்மைகளுக்கு அப்பால், சற்றுத்தூக்கலாகவே சமூக, அரசியல் விடயங்களை அலசுகின்றதாக பின்னப்பட்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இந்த நாவலின் தலைப்பும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இது மக்களின் கதை என்ற வகையிலோ அல்லது யுத்தகால சமூகக்கதை எனற வகையிலோ தலைப்பிடப்படவில்லை. ஒரு சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போல் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்றே தலைப்பிடப்பட்டிருக்கின்றது. அதன் உள்ளடக்கமும் அவ்வாறே அமைந்திருக்கின்றது. இந்த வகையில், ஒரு சமூகவியல் ஆய்வாளருக்கான நாவல் இலக்கிய ஆய்வு வெளியை தேவகாந்தன் சற்று விரிவாக்கித் தந்திருக்கின்றார்.

இந்த நாவல் உருவாக்கத்தின் பிரதான நோக்கத்தினை தேவகாந்தன் பின்வருமாறு கூறுகிறார்.

‘இலங்கையின் சமீபத்திய நெடுயுத்தத்திற்கு சற்றொப்ப ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு எவ்வாறு அதன் பொருளாதார நிலமைகள் ஒரு முரண்நிலையில் இருந்தன என்பதை ஒரு மூன்றாம் நோக்கு நிலையில் கண்டறிந்து அவற்றை நாவலின் நிகழ்வுகள், உரையடல்கள், தொடர்ந்து சென்ற கதைவிரிப்புக்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன் என்பதே என் நம்பிக்கை.’ (ப:5)

மேலும் ‘இது பாத்திரங்களின் கதை அல்ல; யுத்தத்தினது கதை அல்ல; இது யுத்தம் தோன்றியதன் கதை; காலங்காலமாக இலங்கைச் சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை மூண்டு வந்ததன் கதை’ என்று இந்த நாவலின் தனித்தன்மையையும் அல்லது சிறப்பு குறிக்கோளையும் பின்னட்டைக் குறிப்பு சுட்டிக்காட்டுகின்றது. 

யுத்தத்திற்கு காரணமான பொருளாதார நிலமை குறித்த முரண்களைக் கண்டறிதல் என அவர் குறிப்பிட்ட போதிலும் அதன் அடிப்படைக் காரணமாக அமைந்த சாதீயத்தின் பாரபட்சங்கள் எவ்வாறு சமூக, மற்றும் பொருளாதார நிலமைகளில் ஏற்றத்தாழ்வையும் அதனோடு கூடிய வாழ்தல் சிக்கல்களையும் உருவாக்கின; அவை எவ்வாறு பாதிக்கப்பட்ட சமூகக்குழுக்களினால் கையாளப்பட்டன: அவர்களது எதிர்ப்பு அணுகுமுறையின் வளர்ச்சிப்போக்கில் என்ன மாற்றங்கள், திரிபுகள், செல்வாக்குகள் இடம்பெற்று நாம் எல்லோரும் சாட்சிகளாயிருந்த இந்த யுத்தம் உருவாகியது என்பதன் முதற்பகுததான் இந்த நாவலின் சாரமாகிறது.  மற்றொரு வகையில் சொன்னால், யுத்தம் ஒன்று எவ்வாறு யாழ்ப்பாண  சமூகத்தினுள் கருக்கொண்டு உருவாகி பரவலடைந்தது என்பதுதான் இந்த நாவலின் பிரதான உள்ளடக்கம்.

தேவகாந்தன் இந்நாவலின் சமூகக் களத்திலேயே பிறந்தவர், உருவானவர், வாழ்ந்தவர் என்பதால் அவர் அச்சமூகத்தின் உள்உறுப்பினராவார். மேலும் அதன் சமூகஅரசியல் செயல்நெறியில் பங்குபற்றியவர், விரும்பியோ விரும்பாமலோ அடக்குமுறையாளராகவோ அல்லது அடக்குமுறைக்கு உட்பட்டவராகவோ அதன் பங்காளியாக இருந்தவர். அதன் அடிப்ப்டையில்,  இந்த நாவலின் நோக்கு ‘ஒரு மூன்றாம் நோக்கு நிலை’ என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தேவகாந்தன் இந்த நாவலின் பல பத்திரங்களினூடாக,, அவர்களது அகச்சார்புநிலைகளுக்கூடாக நாவல் முழுவதிலும் பயணிக்கின்றார். மேலும், தான் கண்டு கேட்டு, அறிந்திராத எந்த அரசியல் சமூக நிகழ்வும் இந்நாவலில் பதிவாகவில்லை என்றும் அவரே குறிப்பிட்டிருக்கின்றார். அந்த வகையில், யுத்ததின் உருவாக்கம் பற்றிய எல்லா விடயங்களும் கருத்துக்களும் ஒரு உள்ளுறுப்பினரின்  பார்வையிலேயே (insider perspectivess)  இங்கு முன்வைக்கப்படுகின்றன என்றே கொள்ள வேண்டும்..

ஒரு சமூகக்குழுமத்தின் வாழ்தல் அல்லது வாழ்க்கை என்பது, அங்கு நிலவுகின்ற சமூக, அரசியல் சித்தாந்தங்களின் கீழ், மக்கள் பயணிக்கின்ற சமூக-அரசியல் செயன்முறைகளின் இடைவெட்டாகவே அமைகிறது. அதன்பாற்பட்டே ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலும், அவர்கள் மீதான கடந்த கால சமூக, அரசியல் செல்வாக்குகளினூடாக கட்டமைக்கப்படுவதால், அச்செல்வாக்குகளின் இடையீடுகளையும்  தாக்கங்களையும் கொண்ட இயங்குநிலைத் தளமாகவே அது அமைந்து விடுகின்றது. இந்த நாவலின் குறிப்பான கதைக்களம் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட, பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகக்குழுமங்களின் வாழ்தலாகும். அது நிலமின்மை,  நிலயுரிமையின்மை,  வளமின்மை, வளங்களை அடைவது மறுக்கப்படுதல், வேலைவாய்ப்புக்களில் மட்டுப்படுத்தல்கள், ஒதுக்குதல்கள், மற்றும் கீழ்நிலைப்ப்டுத்துதல்கள் போன்ற அடக்குமுறை – சமூக அரசியல் முறைமைகளாலும் செல்நெறிகளாலும் வடிவமைக்கப்படுகின்றது. இவ்வடக்குமுறைச் செல்நெறிகளும் அதன் விளைவுகளும் சாதாரணமாக்கப்பட்டு, அம்மக்கள் மீது திணிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேலும் சாதீய பாரபட்சங்கள், அடக்குமுறைகளுடன் இணைந்து   தனிமனித, சமூக அறங்கள் குறித்த நியமங்கள், பொருளாதார வகுப்புவாதம், காலனித்துவ அடக்குமுறைகள், மதமாற்றத்த்தினால் உருவாகும் புதிய மதமேலாண்மை போன்றனவும் சமூகக் குழுக்களிடையே இருந்த பாரபட்சங்களையும் முரண்பாடுகளையும் மேலும் அதிகரிக்கச்செய்கின்றன. இது பல தசாப்தங்களின் தொடர்ச்சியையும் அதன் வலுவூட்டலையும் கொண்டது என்பதையும் தேவகாந்தன் அத்தியாயம் ஒன்றிலிருந்தே முன்வைக்கின்றார்.

இவ்வாறான அடக்குமுறைகளுள்ள வாழ்வியலுக்குள், பேச்சுவார்த்தைக்கான அல்லது சமரசத்திற்கான வழிமுறைகளையும் எதிர்த்தலுக்கான வன்முறையல்லாத வழிமுறைகளையும்  விடுத்து, எதிர்த்தலுக்கான ஒரே வழிமுறையாக ஆயத-மோதல் (வன்முறை) வழிமுறையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் எவ்வாறு தள்ளப்படுகின்றனர்? அவ்வாறு தேர்ந்தெடுக்க அவர்களைக் கட்டாயப்படுத்துகின்ற காரணிகள் யாவை? இந்த எதிர்ப்பும் வன்முறையும் எவ்வாறு ஒரு பாரிய யுத்த முறைமையாக விரிவாக்கம் பெற்றது? எவ்வாறான சமூக நிகழ்வுகள், சமூக செயல்நெறிகள், பெரும்பான்மையான மக்களை,  அல்லது முழு சமூகத்தையும்  இந்த யுத்த முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கத் தூண்டின? என்பதையும் விபரிக்க விளைகிறது இந்த நாவல். அந்த வகையில், இந்த  நாவலின் பிரதான கருப்பொருளாக அமைவது, போராட்டத்தின் கருவியாக ஆயுத-வன்முறையைத் தேர்வு செய்வதற்கான அல்லது யுத்த உருவாக்கத்திற்கான பிரதான சமூக அரசியல் காரணிகள்  யாவை என்பதாகும். உப விடயங்களாக ஆயுத-வன்முறை அணுகுமுறையின் விளைவுகள் பற்றிய எடுகோள்கள், அதன் பாதகமான பக்கவிளைவுகளை புறக்கணிப்பதற்கான நியாயப்படுத்துதல்கள், வன்முறைகளை சாதாரணமாக்கல்,  உளஆயுதமயமாக்கம் மற்றும் ஆயுதக்கலாச்சார உருவாக்கம் போனறவற்றையும் இந்த நாவல் விபரிக்க முற்பட்டிருக்கினறது. மேற்குறித்த, நாவலின் சமூகவியல் பின்னணியில்  பின்வரும் விடயங்களை சிறிது விரிவாக நோக்குவோம்.

1.           மக்களின் வாழ்வியலை / வாழ்தலை இடை வெட்டுகின்ற முக்கியமான நிகழ்வுகள் அல்லது  சமூகஅரசியல் அல்லது அரசியல் பிரளயங்கள் யாவை? அவை எவ்வாறு அவர்களது வாழ்வியலை இடைவெட்டுகிறன (விளைவுகளை உருவாக்குகின்றன)? அந்த இடைவெட்டுகளில் ஆயுத-வன்முறையுடன் கூடிய யுத்தம் எவ்வாறு கருக்கொள்கிறது?

2.           மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக தேவகாந்தனின் அகச்சார்பு நிலைகள் (subjectivities)  / நிலைப்பாடுகள் (positions) யாவை? யுத்த உருவாக்கம் தொடர்பான அவரது கருதுகோள் யாது? அவர் முன்வைக்கின்ற, அவற்றுக்கான வாழ்வியல் சான்றுகள் யாவை? அவை நியாயப்படுத்தப் படக்கூடியதாக உள்ளனவா?

இந்நாவலின் கால இடைவெளி மிக நீண்டது. 175 வருட காலப் பகுதிக்குள் சாதீயத்தால் ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடையே உருவாகின்ற முரண்களும் முரண்பாடுகளும் பல்வகைப்பட்டன. அதற்கான எதிர்த்தல் முறைகளும் வேறுபட்டன. ஆரம்பத்தில், அவை மீறல் யுத்திகளாகவோ சமரச யுத்திகளாகவோ உள்ளன. அவை குறிப்பட்ட கால ஒழுங்கில் இடம்பெறுவதையும் இந்நாவலில் அவதானிக்கலாம்.  அறுபதின் முற்பகுதி வரை, ‘அந்த சமூகத்தில் அடாவடித்தனமோ, வெட்டுக்குத்தோ கொலையோ நடந்ததில்லை’ என்றும், ஆனால் அக்கால கட்டத்தின் பின்னர், முதல்முறையா, தமது  வறுமை நிலையையும் வசதியீனங்களையும், அடக்குதல்களையும் ஏற்க மறுத்து அச்சமூகம் திமிறத் தொடங்கியிருந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

“இந்த மாதிரி கேந்தி, கிண்டல், குசும்பு, குயுக்தி எல்லாம் அந்த சமூகத்தில் அண்மைக்காலமாய் மிக அதிகம். அதுவும் ஒரு வகையில் கலகக்குணமே” “சங்கானை, அச்சுவேலி, சுண்ணாகம், பருத்தித்துறை, கரவெட்டியென்று வடமாகாணத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே சாதிக்கலவரங்கள் இடம்பெறத் தொடங்கியிருந்தன.” (ப:92)

அறுபதின் பிற்பகுதிகளின் (அத்தியாயம் 4), சமூகஅரசியல் பிரளயமாகக் கருதக்கூடிய, மிக முக்கியமான முதலாவது ஒரு ஆயுதமோதல்-வன்முறை நிகழ்வு இடம்பெறுகிறது. அது மந்துவில் பக்கமாக எழுந்த வெடிச்சத்தமும் ரத்தினத்தின் கொலையுமாகும்.

“ரத்தினம், வேலையாவின் அண்ணன், இருவரும் அவர்கள் சமூகத்தின் பலங்கள். தம் சாதியினரின் விடுபடுதல்களை நோக்கி தம் சமூகத்தை இயக்கியவர்கள்” என்று அவர்கள் பற்றி நாவல் ஆசிரியர் விபரிக்கின்றார். அந்த வகையில் அவர்கள் இருவரையும் தனி மனிதர்களாக அல்லாது அவர்களது சமூகத்தின் எழுச்சிக் குறியீடாகவும் படிமமாகவும் ஆசிரியர் சுட்டுகிறார் என்று எடுத்துக்கொள்ளமுடியும். ரத்தினத்தின் மீதான தாக்குதலும் கொலையும் அவர்கள் குழுக்கள் மீதான தாக்குதலாகவும் அவர்களது நியாயமான அபிலாசைகளுக்கான சாவு மணியாகவும் அச்சமூகத்தால் நோக்கப்படுதல் இயல்பானதே. அதனால் அவர்களின் செயற்பாடுகளும், இறப்பும், மற்றும் இழப்பும், பின்னர் வரும் காலங்களின் சமூக, அரசியல் செயற்பாடுகளையும் அதன் செல்நெறிகளையும் வறையறுப்பதையும் தீர்மானிப்பதையும் காணலாம்.

இந்தக் கொலைக்கு முன்னரும் பின்னரும் எழுகின்ற சமூக எழுச்சிகள், எதிர்ப்புக்கள், கொந்தளிப்புககள் போன்றன ஆயுதமோதல்-வன்முறைப் போராட்ட அனுகுமுறையின் கூர்ப்பினைப் பொறுத்த வரை மிக முக்கியமானவை. குறிப்பாக சற்று முன்னரான காலப்பகுதியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர்களிடையே உருவாகின்ற தமது நிலை, உரிமைகள், உரிமை மறுப்புக்கள் பற்றிய விழிப்புணர்வும்,,டக்குமுறைகளின் தாக்கங்களை, அடாவடித்தனங்களை ‘மேலும் சகிக்க முடியாது’ என உணர்தலும், முனனேற்றத்திற்கான நேர்மையான அவாவும் முரண்படுதலினதும் யுத்தம் தோன்றிய கதையினதும் ஆதிப்பின்னணி என ஆசிரியர் கருதுகிறார். அந்த விழிப்புணர்வு அச்சமூகங்களுக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். அடங்கிப்போதல் அல்லது விட்டுக்கொடுத்தல் என்ற தளத்திலிருந்து விலகிச்செல்லுதல், மாற்று தொழில்/வழிகாணல், மீறல், மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்தல் என்று அவர்கள் கையாளும் உத்திகள் கூர்ப்படைவதைதக் காணலாம்.

“அரசாங்க வர்த்தமானியில் வரும் தகுதியுள்ள வேலைகளுக்கு எழுதிப்போட்டுக்கொண்டுதான் இருந்தான். ரகுநாதன் குடும்பத்தை உதாரணத்தின் பருக்கையாகக் கொண்டால், அந்தச்சமூகத்தின் சீற்றத்தை எவரலும் தான் உணரமுடியும். (ப 84)


எனினும், சமூகநீதியின்மையுடன் கூடிய விரும்பத்தகாத நிலமைகளை அடக்குமுறையாளர்களுக்குப் புரியவைக்கும் செயற்பாடுகளோ (lobbying),  அல்லது அடக்குமுறைக்கு எதிரான இடைவிடாத, தொடர்ச்சியான பிரச்சாரமோ (campaigning), அல்லது எதிர்ப்பை ஏத்திவைத்து நீதியான தீர்வுகளை மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கும் தீவிரமான முயற்சிகளோ (advocacy) ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதற்கான வாழ்வியல் சான்றுகள் (நிகழ்வுகள், உரையடல்கள், கதைவிரிப்புக்கள் போன்றன) இந்நாவலுக்கூடாக வெளிப்படவில்லை. இந்நிலமை, இவை குறித்த தேடல்களை ஆய்வாளர்களுக்கு அவசியமாக்குகின்றது. அந்த வகையிலும் இந்த நாவலின் வரவு முக்கியமானதாகின்றது. ஏனெனில் இந்த விடயங்கள்  குறிப்பாக சமூக அரசியல் முரண்பாடுகளைக் கையாள்வதற்கான, ஒரு முக்கியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளாகும். இப்போதைக்கு, இந்த யுத்திகள் பெருமளவில் இச்சமூகக்களத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. இது சமூகஅரசியல் முரண்பாட்டு தீர்வுக்கான போராட்டச் செல்நெறியில் ஏற்பட்ட அடிப்படை இடைவெளியாகும். மாற்று யுத்திகள் அல்லது நடவடிக்கைகள் இல்லாத / குறைவான நிலை, ஆயுதமோதலுக்கான உடனடித் தேவையை உருவாக்கி அதன் பரீட்சாத்த  முயற்சியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.


இந்நிலமையில், யாழ்ப்பாண சமூகத்தில், பொதுவிடயத்திற்காக, துவக்குப்பாவனையும் வன்முறையும் முதன்முதலாக எதிர்த்தலை அடக்குவதற்காக அல்லது முறியடிப்பதற்காக உபயோகிக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் ஒரு பொதுவெளியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அடக்குமுறையிலிருந்து விடுபடுதலுக்கான நீண்டகால வன்முறையற்ற, ஆனால் மந்தமான பிரயத்தனங்களின் பின்னர், ஒட்டுமொத்தமாக, இந்தக் ‘கொலைச் சம்பவத்துக்குரிய’ பதில் நடவடிக்கையாகவே ஆயுதமோதலும் வன்முறையும் ஒரு போராட்ட வழிமுறையாக, வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. எதிர்வினைக்கான யுத்தியாகவும் அல்லது எதிரியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சக்தியாகவும் துவக்குப்பாவனையும் வன்முறையும் இங்கு இனங்காணப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் ஒடுக்குதல்களை வெற்றி கொள்ளலாம் எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வரும் காலங்களில், குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாலிபர்கள் குழுக்களாகவும் தனியாகவும் ஆயுதபலமே தம்மைப் பலப்படுத்தும்; ‘எதிராளி’களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உதவும் என நம்ப ஆரம்பிக்கின்றனர். அத்துடன் அதற்கான நிதித்தேவை பற்றியும், கிளர்ச்சியில் ஈடுபடுகின்ற இளைஞர்களின் பாதுகாப்புப் பற்றியும், அவற்றினை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் வெளிப்பாடையாகப் பேச ஆரம்பிக்கின்றனர். 

“ஆயுதமெண்டால் அவைக்கு அச்சுவேலி, சங்கானைப்பக்கம் போக வேணும். அங்கையில்லாத துவக்கே மற்றவையிட்ட இருக்கு.” (ப:88)

“அவைக்கு அது வேணுமல்லோ. அதாலதான் எங்களிட்டை வந்திருக்கினம்.
    தருமபுரம், கண்டாவளைப் பக்கத்தில கள்ளத்துவக்குகளும் எடுக்கலாம்.(ப 88)

ஆயுதங்களைக் களவாகப் பெற்றுக்கொள்வதால் தார்மீக அறம் பாதிக்கப்படுமா என்ற அச்சம் உணரப்பட்டபோது, வெளிப்படையாக, அவர்களாகவே நியாயப்படுத்தல்களையும் சமாதானப்படுத்துதல்களையும் முன்வைப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

“அதைக்கூட அவையால செய்யேலும். அதுஇல்ல பிரச்சினை. எங்களுக்கு கொள்கை ரீதியா இதில மறுப்பு இருக்கு

“மெய்தான். எண்டாலும் இதை எதிரியளின்ர பிரச்சினையாய் எடுக்காமல் எங்கட சமூக வர்க்க ஆக்களின்ரயாயும் பாக்க வேணுமெல்லோ. ரெண்டு கள்ளத்துவக்கு எடுத்துக்குடுக்கிறதில பெரிய கொள்கைப் பிழை ஒன்றும் வந்துவிடாது” என்றான் ரகுநாதன். (ப:88)

மறுபுறத்தில், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒன்றின் உருவாக்கம் பற்றியும் அதனை விரிபடுத்துவது பற்றிய ஆலோசனையும் முன்வைக்கப்படுகின்றது. எற்கனவே இருக்கின்ற அரசியல் கட்சிகளின் முயற்சிகளிலுள்ள சந்தர்ப்பவாத போக்குகளும் அக்கட்சிகளிலுள்ள மறைமுகமான சாதிமேலாண்மைப் போக்கும்  வெளிப்படையாகவே விமர்சிக்கப்பட்டு அவைகளின் அரசியல் ரீதியான போராட்டங்கள் புறம் தள்ளப்படுகின்றன. இது ஆயுதமோதலை ஒற்றையான, அப்போதைக்கு சிறந்த அணுகுமுறையாக ஏற்றுக்கொள்ள அவர்களை நிர்ப்பந்திக்கிறது என்ற வாதத்தை தேவகாந்தன் முன்வைக்கின்றார். அதேவேளை, ஆயுதமோதல் அணுகுமுறையின் பின்விளைவுகள் குறித்த தனது அச்சத்தையும் சார்பு நிலையையும் பின்வருமாறு அவர் வெளிப்படுத்துகிறார்.

“சாதீயப்போராட்டத்தின் செல்திசையையும், அதன் கடூரங்களையும் எண்ண அதிர்ச்சி ஓடி மறைந்தது.(ப 88)

ஆழமாக நோக்குமிடத்து, , அறிவு ரீதியான சமூக எழுச்சியை விட உணர்ச்சி ரீதியான (வசப்பட்ட) சமூக எழுச்சியானது இங்கு மேலோங்குவதை அவதானிக்கலாம். இந்த உணர்ச்சி ரீதியான சமூக எழுச்சியானது, மக்களைத் திரட்டுவதற்கும் அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்வதற்கும் பெருமளவு உதவியிருக்கின்றது. எனினும், இந்தநிலமை,  உணர்வு மேலோங்கிய தீர்மானங்களைக் மேற்கொள்வதற்கும், தந்திரோபாயமான முறையில், மக்கள் உணர்ச்சிகளையும் அதன்பாற்பட்ட ஈகோவையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கும் உரிய, ஒரு ஆபத்தான /  சிக்கலான சூழ்நிலமையை உருவாக்கியதை நாம் அறிவோம்.

ஆரம்பத்தில், அடக்குமுறைக்குள்ளான பிரிவினர்,  அடக்குமுறைகளை உருவாக்கி அதன் மூலம் சலுகைகளையும் பலன்களையும் அநுபவித்து வருகின்றவர்களூக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பிக்காது, பாரபட்சமான நடைமுறைகளை உடைத்தெறியவே முற்பட்டனர்  என்பதை ஆலயப்பிரவேசப் போராட்ட நடவடிக்கை போன்றன எடுத்துக்காட்டுகின்றன. அந்த நடைமுறைகளின் முகவர்களை எதிரிகளாக அடையாளப்படுத்தவோ அல்லது அவர்களைத் தாக்கவோ திட்டமிடப்படவுமில்லை  தாக்க ஆரம்பிக்கவுமில்லை என்றே நாவல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடக்குமுறையின் முகவர்களை எதிரிகளாகவும் அவர்களது வீழ்ச்சியில் தமது மீட்சி எய்தப்படலாம் என்ற கருத்தியல் இன்னும் போராளிகளுக்குள் / கிளர்ச்சியாளர்களுக்குள் உருவாக்கப்படாமல் இருந்தமை ஒருவகையில் ஆரோக்கியமான விடயமாகும். ஏனெனில் எதிரி யை கவனத்தில் கொண்டு போரட்டம் முன்வைக்கப்படும்போது, எதிரியால்  உருவாக்கப்பட்ட அடக்குமுறைச் சித்தாந்தங்களும் அதன் உத்திகளும் கண்டு கொள்ளப்படாமலேயே நிலைத்து விடுகின்ற அபாயம் எப்பொழுதும் உண்டு. ஆனால் ரத்தினத்தின் கொலையின் பின்னர் எதிரிகளும் எதிர்க்குழுக்களும் போராட்டத்தின் முழுமையான ஒற்றைக் குறியாக (target) மாறும் நிலை உருவாகின்றது. ஆயுதமோதல் அல்லது ஆயுதப்போராட்ட அணுகுமுறையின் அடிப்படையே அதுதான். அதன்பின்னர், அடக்குமுறைச் சமூகஅரசியல் சித்தாந்தங்கள், அதன் நடைமுறைகளின் மாற்றத்திற்கான எந்த மாற்றுப் போராட்ட முயற்சிகளும், கவனத்திற்கொள்ளப்படாமல் விடப்படுகின்ற அல்லது உதாசீனம் செய்யப்ப்டுகின்ற அல்லது பலாத்காரமாகத் தடுத்து நிறுத்தப்படுகின்ற நிலமை உருவாக்கப்படுகின்றது. நாவலில் இது குறித்த விடயங்கள் இடம் பெறவில்லை என்பதற்கு அதன் கால வரையறை ஒருகாரணமாக இருக்கலாம். ஆயுதமோதல் உக்கிரமடைகின்ற காலப்பகுதியில் குறிப்பாக இவை இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

1960 களின் பிற்பகுதிக்குரிய அத்தியாயத்தில், இதுவரை காலமும் முரண்பாட்டுத்தீர்வுக்கு அணுகப்படாத கொலைக்கலாச்சாரமும் வன்முறைகளும் இப்போது பரீட்சித்துப் பார்க்கப்படும் யுத்தியாக மாறியுள்ளது” என்றும், கொலைகள் விழத்தொடங்கியாயிற்று” என்றும் தேவகாந்தன் குறிப்பிடுகின்றார். இக்கூற்று,  குறிப்பாக கொலைக்கலாசாரம்  வன்முறைபோன்ற சொற்பிரயோகங்கள், அவரது அகச்சார்பு நிலையைக் காட்டுவதாகவே நான் கருதுகிறேன். அதாவது, ஆயுதமோதல்-வன்முறை அணுகுமுறையில் அவருக்குள்ள அதிருப்தியையும் வரையறையையும் சுட்டுவதாக எடுத்துக்கொள்ள முடியும்.

தனிப்பட்ட மனிதர்களும் குழுக்களும் ஒரு சமூகம் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ளுகின்ற போது, அது தொடர்பான அவர்களது நிலைப்பாடுகள் குறித்து ‘அவர்களுக்கென்று ஒரு நியாயம் இருக்கும் என்று விட்டு விட முடியாது. குறிப்பாக, அந்தத் தீர்மானங்கள் பாதகமான நிலமைகளை உருவாக்குமிடத்து யார் இதற்கு பொறுப்புக்கூறுவது? சமூகக் கூட்டுப்பொறுப்பு ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் உண்டு. சமூகத் தீர்மானங்களைக் கேள்விக்குட்படுத்தாத போதும், மௌனமாக இருக்கும் போதும், அதன் கூட்டுப் பொறுப்புக்கூறல் சமகாலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் சாருகிறது. நாவலில் வரும் பாத்திரங்கள் எந்தளவுக்கு இதில் பங்கேற்றார்கள் என்பது தனியாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய மற்றுமொரு விடயமாகும்

ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான நேர்மையான சமூகஅரசியல் விடுதலை வேட்கையானது, பொது அரசியல் விடுதலை நோக்கி நேர்மையாகவோ இல்லாமலோ திசைதிருப்பப்பட்டதா? அல்லது பொது அரசியல் விழிப்புணர்வும் சமூக அரசியல் விழிப்புணர்வும் சமாந்தரமாக உருவாகி விடுதலைக்கான செயல்நெறிக்காக இணைக்கப்பட்டதா? அவ்வாறாயின் விடுதலைப் போராட்டத்த்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சமூக, பொருளாதார, தொழில் ரீதியாக சமூகப்படி நிலையில் உயர்நிலையிலிருந்தோரின் நேரடி பங்கேற்றல் விகிதாசாரம் ஏன் மிகக்க்றைவாக இருந்தது? அதுவும் மற்று ஒரு வகையான சமூகப் பாரபட்சத்தின் வெளிப்பாடா? என்பன போன்ற பல விடையங்களையும் இந்த நாவல் கலந்துரையாடலுக்காக முன்வைக்கின்றது.
000

.


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி