பெண்களும் மனச்சிதைவும்


தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலில்
பெண்களும் மனச்சிதைவும்
-மைதிலி தயாநிதி –

பெண், மனச்சிதைவு, ஆணாதிக்க சமூகம் எனுமிம் மூன்றுக்குமிடையிலான சிக்கலான தொடர்பினை காலச்சுவடு பதிப்பக வெளியீடான தேவகாந்தனின் கந்தில் பாவை (2016) சித்திரிக்கின்றது. நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் கதையினை, நான்கு பாகங்களில், 263 பக்கங்களில் பின்னோக்கி நகர்ந்து செல்லும் காலவொழுங்கு அடிப்படையில்  (2015 – 1880) நாவல் விரித்துச் செல்கின்றது. பாத்திரங்ககளின் மனச்சிதைவிற்கான மூல காரணத்தைத் தேடுவதால், கூறும் விடயத்திற்கேற்ப, நாவலின் கால ஒழுங்கமைவும் பின்னோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. அதாவது, நிகழ்காலத்தில் கடந்த கால நினைவுகளை மீட்டெழுப்பும் flash-back  உத்திக்குப் பதிலாகக் கதையின் நான்கு பாகங்களும் பின்னோக்கிய கால ஒழுங்கடிப்படையில்  (reverse chronological order) அமைந்துள்ளன.

            எந்த ஆணாதிக்க கலாசாரத்திலம், அதன் உள்ளார்ந்த நம்பிக்கைகளுடன் வளர்தல் என்பது பெண்கள் மனநலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஷானா ஒல்வ்மன் கூறுகின்றார். அவ்வகையில், பெண்களின் மனச் சிதைவிற்கு பரம்பரை மட்டுமன்றி, சமூக பண்பாட்டுச் சூழல் அம்சங்களும் காரணிகளாய் அமைகின்றன என்பது இந்நாவல் வலியுறுத்தும் முக்கிய கருத்தாகும். அதாவது, பரம்பரை அலகுகளுடன், ஆண் அதிகாரமைய சமூகத்தில் பெண்ணின் மீதான ஆணின் அடக்குமுறையும், வன்முறையும் ஒன்று சேர்ந்து பெண்களின் மனநலத்தைச் சிதைக்கின்றன என்பது நாவலின் மையக் கருத்தாகும். இதை எவ்வாறு நாவல் சித்தரிக்கின்றது என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            பெண்ணின் மனநலக் குறைவினைக் குறிப்பதற்கு நாவலில் கதைசொல்லி பயன்படுத்தும் பதம் மனச் சிதைவு ஆகும். அதே சமயம், நாவலில் வரும் பாத்திரங்கள் மூளைப் பிசகு, மூளை மாறாட்டம், மனநிலைக் குழப்பம், மனநிலை சரியில்லை என்ற சொற்பிரயோகங்கள் மூலமாக இதைத் தெரிவிக்க முயல்கின்றன.   Schizophrenia என்பது தமிழில் மனச்சிதைவு என்று மொழிபெயர்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் ஏற்பட்ட மனவடுக்கள்கொண்ட பெண்பாத்திரத்தினைப்பற்றிக் குறிப்பிடும்போதும் நாவல் ‘சிதைவு’ என்ற சொல்லையே பயன்படுத்துகின்றது. ‘தனக்குள்ளேயே சிதைவை வைத்துக்கொண்டா தன் தாயின் சிதைவுபற்றி அறியத் தன்னோடு கூடி, அவ்வளவு இடமும் அலைந்து திரிந்தாள்? இது டாக்டர் சண்முகநாதன் சொன்ன மாதிரியானதில்லைத்தான். இது வேறு வகை. இதைப் போர் செய்திருந்தது’ என்று தர்மினி எனும் பெண் பாத்திரம் போரினால் பெண்கள் மனநலநிலை பாதிக்கப்படுதல் பற்றிச் சிந்திக்கின்றது. எனினும், பரம்பரை பரம்பரையாக ஏற்படக்கூடிய. மருத்துவ ரீதியாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கப்படக் கூடிய மனச் சிதைவையே நாவல் முதன்மைப்படுத்தகின்றது. நாவல் முதன்மைப்படுத்துகின்றது. நாவல் காட்டும் மனச்சிதைவினை ஒருவரின் சிந்தனையும், உணர்ச்சிகளும் வெளியுலக யதார்த்தத்துடன் தொடர்பிழக்கும் நிலை என்று சுருக்கமாக  வரையறை செய்யலாம்.
           
மனச் சிதைவும் பரம்பரையும்:

மனச்சிதைவு பெண்களுக்குப் பரம்பரையாக ஏற்படக்கூடியதொன்று என்ற கருத்தினை மையமாகக் கொண்டே நாவல் புனையப்பட்டுள்ளது. அத்துடன், அதற்குரிய குணங்குறிகளையும் நாவல் கூறிச் செல்கின்றது. தனிமையில் அசாதாரண சிரிப்பு, கணவனைத் துளியேனும் அடையாளம் காணவியலாமை, பற்றறுப்பு, மௌனம், பாலியல் வேட்கை அற்றிருத்தல், தனிமையில் இருத்தல், அசாதாரண கேள்விகள் கேட்டல், குறிப்பிட்ட சில விடயங்களில் மாத்திரம் மீண்டும் மீண்டும் புலன் செலுத்துகையென்பன முதலாம் பாகத்தில் சுபத்திராவின் மனச்சிதைவின் அடையாளங்களாக கூறப்படுகின்றன. பார்வதியாச்சி சுபத்திராவின் கணவன் கனகராசனுக்கு இது பரம்பரையாக இரக்கக்கூடும் என்ற எண்ணத்தை விதைக்கின்றாள்: ‘இவையின்ர குடும்பத்திலயே இந்தமாதிரியொரு கதை நடந்ததை, இவையின்ர தாய்க்கோ  பேத்திக்கோவெண்டு ஞாபகமில்லை, நான் முந்தி அறிஞ்சிருக்கிறன்’ (பக்.59). கனகராசன் இலங்கை சென்று இதுபற்றி அறிய எண்ணுகிறான்.

            அவனுக்குத் தெரியும், தான் கேட்டிருந்தது எதிரொலிதான் என்பது. அதுவும் ஒலித்து, ஒலித்து வந்த கடைசியொலியின் கீறு. தலைமுறைக் காலத்தின் முன்னல்ல, ஏறக்குறைய நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முந்தி எழுந்திருக்கக்கூடிய மூலவொலி தேடும் எத்தனம் அது. சூழலேமாறி சாத்தியங்கள் இறுகியுள்ள நிலைமையிலும் அந்தத் தேடுகை இருக்கப்போகின்றது. நூற்றாண்டிற்கும் முந்திய அந்தக் குடும்பச் சரித்திரத்தில் பாதியாவது திறந்து விழிவிடுமா அவனுக்கு? மூலவொலி ஒன்று இருந்ததென்ற அறுதியிலிருந்து அந்த எத்தனத்தை அவன் தொடரத் துணிந்தான். (பக். 60)

            இவ்வாறு சமகாலத்தில் வாழும் சுபத்திரா, ரதி எனும் பெண் பாத்திரங்களுக்கு உண்டான மனச்சிதைவு மரபுவழி வருவது என்பதை நிறுவும் நாவல், அத்துடன் நின்றுவிடாது அதற்கான புறக்காரணிகளையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இவற்றுள் மிக முக்கியமானது ஆணாதிக்க சமூக அமைப்பும், பெண் திருமணம் முடிந்த பின்னர் ஆணின் இல்லத்தில் வந்து வாழ்வேண்டும் என்ற வழக்கமும் (patrilocal) ஆகும். ‘மணமகன் வீட்டிலேயே பெண் வந்து வாழவேண்டும் என்கிற நடைமுறை’யை (பக்கம் 211) அனுசரிப்பவர்களாகவே நாவலில் பெண்கள் காட்டப்படுகின்றனர். தனது இனசனம் விட்டு இன்னோரிடத்தில் வாழும்போது ஆணாதரிக்க சகூகத்தில் பெண்ணின் நிலை இன்னும் பலவீனமடைகிறது. முதியவள் ஒருத்தியின் வார்த்தைகளில் அத இவ்வாறு வெளிப்படுகின்றது: ‘இதுதான் பொம்பிளயளின்ர தலையெழுத்தெண்டிறது. தெரியுமோ, உமக்கு? நான் பிறந்தது கந்தர் மடத்தில. பன்ரண்டு பதின்மூண்டு வயசில எனக்கு சடங்கு முடிஞ்சுது. அந்தாள் அல்வாய் ஆள். அப்பிடியே அங்க வந்ததுதான்’ (பக்கம் 95).  நாவலில் உடுவிலில் இருந்து கந்தரோடைக்கு இடம் பெயர்கின்றாள் பொன்னரியம். கனகவல்லி கந்தரோடையிலிருந்து மல்லாகத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வாழச் செல்கிறாள். அது குறித்த நாவலில் இவ்வாறு கூறப்படுகின்றது: ‘நிரந்தரமாக அவள் அந்த இடத்தைவிட்டுப் போக நேர்ந்திருக்கின்றது. அம்மா, ஐயாவைவிட்டு அகலாத தவமுடையது அவளது அதுவரையான காலம். இப்போது அவர்களையும் பிரிந்துதான் போகப்போகிறாள். அம்மாவைத்தான் அவள் இழப்பது பெருந் துக்கமாக இருக்கப்போகின்றது’ (பக்கம் 157).

            ஆணாதிக்க சமூகத்தில் மனைவி மீது கணவன் புரியும் வன்முறைகளுள் கடும் மன உளைச்சல்களை ஏற்படுத்தக்கூடியது பாலியல் வல்லுறவு ஆகும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவளாகக் காட்டப்படும் பொன்னரியம் கணவனின் கிறிஸ்தவ மத ஈர்ப்பிற்கு எதிராகச் செயற்படுகின்றாள். தனது அதிகாரத்திற்குச் சவால்விடும் பொன்னரியத்திற்குத் தண்டனையாக அவளது விரதத்தைப் பங்கப்படுத்தும் வகையில் அவள்மீது பாலியல் வல்லுறவு புரிகிறான் அவள் கணவன் சண்முகம்.பொன்னரியம் – சண்முகம் தம்பதியினரைப் பக்கத்து வீட்டிலிருந்து அவதானித்த நாகாத்தையின் பார்வை தூரவிருந்தும் இருளைத் துளைத்து வந்து அதைக் கண்டது. பல்வேறு இரவுகளில் எழுந்த பொன்னரியத்தின் அனுக்கங்கள் அவள்மேல் புரியப்பட்ட போகங்களின் திணிப்பை அவளுக்குத் தெரிவித்தன. ஒரு பொழுது தேவதையாய், இன்னொருபொழுதில் பிசாசாய் அவள் கொண்டிருந்த கோலங்கள் அவள்மேல் வற்புறுத்தப்பட்ட இரட்டை வாழ்க்கையின் வெளிப்பாட்டு அடையாளங்களென்பது அவளுக்குப் புரிந்தது. அவள் மிக மிகப் பட்டுவிட்டாள். அதனால் அவளுக்கு அதுவே விடுதலை எனில் அவள் இனியும் ஓடட்டும் என்பதாகவே நாகாத்தையின் முடிவு இருந்தது (பக்கம் 261).

            மேலும் திருப்தியற்ற பாலுறவு மனச்சிதைவுக்குள்ளாகக் கூடிய மரபணுக்களைக் கொண்ட பெண்களைத் திடீரெனத் தடம் புரளவைக்கின்றது. முதலாம் பாகத்தில் உடலுறவின்போது நன்றாகக் குடித்திருந்த கணவன் வாந்தி எடுத்தது சுபத்திராவின் மனநிலையை மிகவும் பாதிக்கின்றது. அதற்குப் பின்னர் தாம்பத்தியத்தில் அவளுக்கிருந்த ஆர்வம் வற்றிவிடுகின்றது.

            ‘குளித்து வந்து கண்ணாடியின் முன் நின்றவள் நினைவெழுப்பிய நெருப்பில் நின்று கொதித்தாள்… அந்த வாளிப்பு, அந்த அளவுகள், அந்த நிறம் எல்லாவற்றுக்கும் என்ன பெறுமதி, கண்மூக்குத் தெரியாமல் குடித்து, ஒருவன் அவளை அசிங்கப்படுத்திய பிறகு? தன்னைக் கழவியபோதே, தன்னில் ஊறக்கூடிய காமத்தையும் அன்று சுபத்திரா கழுவிவிட்டாள். காமம் அருவெறுப்பொன்றானது அவளுக்கு அன்றிலிருந்துதான். அவையெல்லாவற்றிற்கும்; கனகராசனே காரணம்…’ (பக்கம் 49).
           
            அதேபோன்று எதிர்பாராது தடைப்பட்ட பாலுறவு மூன்றாம் பாகத்தில் கனகவல்லியை வேற்றாள் ஆக்குகின்றது. ‘கனகவல்லி படுத்தாள். எழும்பினாள். சமைத்தாள். அன்றாட இயங்குதலை பிரக்ஞையின்றியே சரியாக நடத்தினாள். அவளில் கூறு விழுந்திருந்தது. சிவநாயகமூர்த்தி விழுத்தியதுதான்’ (பக்கம் 165 -166). மேலும் நோர்வேயில் தனது தாயின் மனப் பிரச்சினையை பாலுறவுப் பிரச்சினையாகத்தான் மகள் தர்மினி விளங்கிக் கொள்கிறாள் என்பது குறிப்பிடத் தக்கது.


கூறுபட்ட சுயம்:

நாவலில் பெண்களுக்கு வரும் மனச்சிதைவினை உளவியலாளர் R.D.Laing என்பவர் முன்மொழியும் கூறுபட்ட சுயம் (The divided self) எனும் கருத்தாக்கம் மூலம் விளங்கிக்கொள்ளலாம். புறவுலகையம், அகவுலகையும் இணைத்து முரண்பாடுகளேதுமின்றிக் கொண்டு செல்லும்போது சுயம், திருப்தி, மகிழ்ச்சி எனும் நேர்மறை  (positive) உணர்ச்சிகள் உடையதாக இருக்கின்றது. ஆனால் சுயத்திற்கு இது எப்போதும் சாத்தியமானதாக இருப்பதில்லை. சுயத்தின் அகவுணர்வுகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்பனவற்றிற்கு மாறாக இருந்தாலும்கூட, புறவுலகு எதிர்பார்ப்புகள். விழுமியங்கள், மதிப்பீடுகள், ஒழுக்கநெறிகள் என்பனவற்றுக்கேற்பவே சுயம் இயங்கவேண்டியுள்ளது. இவ்;வாறு அகவுலகு – புறவுலகு முரண்பாடகள் தோன்றும் சமயங்களில் சுயம் தன்னைப் புறத்தில் ஒன்றாகவும், அகத்தில் ஒன்றாகவும் பிரித்து இயங்குகிறது. புறவுலகில் உடல் இயக்கம், செயற்பாடுகள் இருப்பினும், மனம் வேறு வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். இத்தகைய இரட்டை வாழ்க்கையினைச் சுயம் ஓரளவுகாலந்தான் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டு செல்ல முடியும். அக புற முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் சுயத்தின் கட்டுப்பாட்டிலிருந்து எல்லை மீறும்போது, சுயம் புறவுலக சம்பந்தங்களிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக்கொண்டு, அக உலகிலேயே வாழத் தலைப்படுகிறது. தனக்குள்ளே கதைத்து, தனக்குள்ளே சிரித்து, பிறர் தொடர்பாடலின்றி, புறவுலக யதார்த்தத்திலிருந்து சுயம் தன்னை விடுவித்துக்கொள்கிறது. இந்த நாவலில் வரும் மனச் சிதைவுக்குட்பட்ட பெண் பாத்திரங்கள் யாவும் இத்தகைய கூறுபட்ட சுயங்களாகவே இருக்கின்றன. அக புற உலக முரண்பாடுகளைச் சமாளிக்கவியலாத கட்டத்தில், புறவுலகக் கடமைகளை, செயற்பாடுகளை, கணவனை, குழந்தைகளை ஓம்புவதைத் துறக்கின்றன. ருக்மணி, பொன்னரியம் போன்றவர்கள் வீட்டைவிட்டே சென்றுவிடுகின்றனர். கனகவல்லி தன் தாய்வீட்டில் வாழ் முற்படுவதின் மூலம் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விடுதலை பெறுகிறாள். சுபத்திரா வீட்டைவிட்டுச் செல்லாவிடினும் வீட்டிலே தனிமையிலே புற உலகத் தொடர்புகளில் ஆர்வமேதுமின்றி நேரத்தைக் கழிக்கின்றாள். ரதி வீட்டைவிட்டு அடிக்கடி செல்கிறாள்.

கந்திற்பாவை:

இத்தகைய பெண்கள் சிலருக்கு நாவலில் வரும் முதுபெண்டிர் பேராதரவாளராய் விளங்குகின்றனர். இவர்களையே நாவல் மணிமேகலையை வழிநடத்திய கந்திற்பாவை எனும் தெய்வத்தின் பெயரால் சுட்டுகின்றது. மனச் சிதைவுற்ற பெண்களினை விளங்கிக் கொள்பவர்களாக, அவர்களின் நோயின் பண்பினை மனவலியைப் புரிந்துகொள்பவர்களாக, அவர்களின் நோயின் பண்பினை விளங்கிக் கொள்பவர்களாக, அவர்களின் நிலைக்கு புறக்காரணிகளின் தாக்கம் குறித்தும் தெளிவான சிந்தனையுடையவர்களாக, மொத்தத்தில் இத்தகைய பெண்களின் மீது பேரனுதாபம் பூண்டவர்களாக இவர்களைச் சித்திரிக்கின்றது. பொன்னரியம் குறித்த நாகாத்தையின் புரிதல் ஏலவே சுட்டப்பட்டது, தன்னைத் திணறடிக்கும் சமூகக் கட்டிலிருந்து விடுபடுவதற்கு பொன்னரியம் வீட்டைவிட்டுச் செல்லுதலை நாகாத்தை அங்கீகரிக்கின்றாள். சமூகப் பொறுப்புக்களையும், கடமைகளையும் துறக்கும் பெண்ணுக்கு முன்மாதிரியாக (archetype) காரைக்காலம்மையாரை முதியவளொருத்தி சுட்டுகின்றாள். காரைக்காலம்மை கணவனின் சந்தேகத்தினைத் தாங்க இயலாது மூளை மாறாட்டம் கொண்டு ‘தெய்வந்தான் கதியெண்டு நெச்சுக்கொண்டு ஊரூராய்த் நடந்து திரிஞ்சுதாம்.’ மேலும் மகள் கனகவல்லி அவளை விரும்பியவனையே திருமணம் புரிந்திருந்தால் அவள் வாழ்வு வேறுவிதமாக இருந்திருக்குமோ என மங்களநாயகி யோசிக்கிறாள். கணவனை, பிள்ளைகளைப் பிரிந்து பிறந்தகம் வந்து, தன்னுள் வாழ்ந்த கனகவல்லிக்குத் தன்னை இளவயது தொட்டுக் காதலிக்கும் கணேசமூர்த்தியுடன் பாலுறவுத் தொடர்பு இரவில் ஏற்படுகின்றது.

            நிழல் திடங்கொண்டு அசைந்து வந்து அவ்வப்போது அவளுடம்பை உயிர்ப்பித்து அடங்கச் செய்யும் விந்தையைப் புரிந்துகொண்டே இருந்தது. கயிறறுந்ததுபோல் பிடிப்பறுத்த வாழ்க்கையில் விழுந்த அத்தொடுப்பு, அவளின் பறப்பு விசையை எதார்த்தத்தில் நிலைநிறுத்தியது. பௌர்ணமிகள் அவளுக்கு வெறுப்பாகின. அமாவாசைகளை எதிர்பார்த்திருக்கத் தொடங்கினாள். சில அமாவாசைகளில் நிழலின் அசைவு தோன்றாமலே போயிடினும், நிழலுக்கான காத்திருப்பை அவள் செய்துகொண்டேயிருந்தாள் (பக்கம் 177 – 178).

            சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நிகழும் மகளின் பாலுறவிற்கு மங்களம் மனதார ஒத்துழைப்பு நல்குகிறாள்: ‘அவளது சிதைவின் மூலத்தை எவ்வளவு யோசித்தும் மங்களத்தால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் அந்த நிலமையிலிருந்து மீளக்கூடிய உபாயத்தை அவளது முதுமை ஞானத்தின் வாழ்தலறம் பற்றிய புரிதல் மங்களத்துக்கு முற்தரிசனம் கொடுத்திருந்தது’ (பக்கம் 178).

            நிறைவாக, உளநோயில் சமூகக் காரணிகளின் முக்கியத்துவம் குறித்து 1990கள்  தொடக்கமே ஆய்வுகள் பேசத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் மனச்சிதைவினை மையமாகப் புனையப்பட்ட இந்த நாவல், உளநோயில் பரம்பரைக் காரணிகளின் முக்கியத்துவத்தைச் சற்றேனும் குறைத்து மதிப்பிடாத அதே சமயம், ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தையும் துலக்கமாகக் காட்டியிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், கணவனே மனைவியின் மனச்சிதைவின் பிரதான. உடனடிக் காரணமாக, வெளிப்படையாகக் குறிப்பிடப்படுகிறான்.  {ஆண்கள் சிருஷ்டித்த } ‘பைத்தியக்கார ‘ புறவுலகிற்குப் பெண்கள் கண்ட விவேகமான பதிலே உளநோய் என்று உளவியலாளர்  Laing கூறுவது சிந்தனைக்குரியது.

000
உசாத் துணை:

* மௌனகுரு, சித்திரலேகா. பெண் நிலைச் சிந்தனைகள், கொழும்பு, பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், 1993.
* Abel, Elizabeth. ‘Women and Schizophrenia: The Fiction of Jean Rhys’. Contemporary    Literature Vol. 20 No 2 (1979) : 155 – 177.
* Jarvis, Eric. G. ‘Rethiking Social  Causes Psychosis.‘ The Canadian Journal of Psychiatry. mVol.52, No 5 (2007): 275 – 276
* McKenzie, Kwame. ; ‘How Do Social Factors Cause Psychotic Illnesses?’ The Canadian Journal of Psychiatry. Vol 58 No 1 (2013): 41 -43.

* Olfman , Sharna. ‘Gender , Patriarchy and Women’s Mental Health: Psychoanalytic Perspectives.’ Journal of American Academy of Psychoanalysis  Vol 22, No 2 (1994) 259-271.



 - தாய்வீடு, செப். 2019

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி