நுண்பொருள்: அறம் - பொருள்- காமம் நூலின் என்னுரை

என்னுரை

திருக்குறளை  சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதை சங்க காலத்ததென எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப்   பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப்பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும்   மகிழச் செய்திருந்தேன். அப்போது வயது எனக்கு பதினேழுதான்.

அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர் உரையை முதன்மையாகவும், இளம்பூரணர், பேராசிரியர் உரைகளை உரைக் குறிப்புகளினூடாகவும் அறிய நேர்ந்திருந்தது.

பின்னால் டாக்டர் மு.வரதராசன், நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி உரைகள்வரை தேடிப் படிக்கும் பழக்கம் எனக்கு வசமாகிப்போனது.

இலக்கிய உலகில் திருக்குறள் இலக்கியமா, நீதி நூலா என்ற வாதப் பிரதிவாதங்களில் அது நீதிநூல்தானென முடிவு சாய்வுகொள்ள ஆரம்பித்திருந்தும், அதை இலக்கியமாக நான் நம்ப ஆரம்பித்தது இந்த ஆழ்ந்த வாசிப்பினூடகவே நிகழ்ந்தது.

எனினும் உரைகாரர் தமக்குள் மாறுகொள்வது தெரிந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். உரைகாரர் சொல்லிய பொருளையே வள்ளுவனும் கருதியிருப்பானா என்ற கேள்வி என்னுள் அடியூன்றியது.
எனின் எனக்குள் முகிழ்க்கும் அவையல்லாத வேறு அர்த்தங்களுக்கு அர்த்தமிருக்கிறதென நான் ஏன் எண்ணக்கூடாது? அது என்னை உரையற்ற தனிக் குறள் பாக்களுக்குள் துணிந்து புகவைத்தது. அது மிக்க ரசனையாயிருந்தது.

உரைகாரர், தெளிவுரைகாரர் இன்றி திருக்குறளைப் புரிய முடிந்த கணத்திலிருந்து ஒரு தாக்கம் ஏற்பட்டதாய்ச் சொல்ல முடியும். இவர்களின் பாதிப்பின்றியும், மறைப் புனித மரபுகள் போன்றனவற்றின் செல்வாக்கினுக்கு ஆட்படாதும்,  நூல் யாக்கப்பட்டதாய் பெருமளவு ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தின் பின்னணியிலிருந்து  அதனை அதுவாகவே விளங்கி அவற்றினுள்ளும் நுண்பொருளுள்ள குறள்களைத் தொகுக்க முனைந்ததின்  விளைவே   ‘நுண்பொருள்: அறம்-பொருள்-காமம்’ என்ற  இத் தொகுப்பு. பாயிரத்திலிருந்து சில குறள்களுக்கான ரசனையும் இதில் சேர்ந்திருப்பினும்,  அவற்றின் மிகச் சொற்பம் கருதி அறம் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

என் மொழியில், என் பார்வையில் உரைகாரர், பண்டிதர்களை மறுத்தும் திருத்தியுமாய் திருக்குறளில் நான் விரும்பும் சில குறள்களுக்கு இங்கே சொல்லப்போகும் விளக்கம் ஒருவகையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கான என் அர்ப்பணமே. இருபது வயதளவில் ‘கலித்தொகைக்   காட்சிகள்’ என்ற  தொடர்  கட்டுரையை  நான் ‘ஈழநாடு’ தமிழ்த் தேசிய நாளிதழின் வாரமலரில் எழுதியதற்குப்  பிறகு,  என் செவ்விலக்கியம் சார்ந்த எழுத்துப் பிரவேசம் இப்போதுதான்  நிகழ்கிறது.

 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இம் முயற்சியை நான் தொடங்கியிருந்தாலும், இப்போதுதான் தீவிரமாய் இறங்க முடிந்திருக்கிறேன். இதன் ஆரம்ப  முயற்சியாக சில குறள்கள் முதலில் இன்தாம்.கொம் என்ற இணைய தளத்திலும், பின்னர் சில ‘வள்ளுவம்’ இதழிலும் வெளிவந்திருந்தன என்பதை இங்கே நான் குறிப்பிடுவது அவசியம். முன்னதற்காக நண்பர் திரு. சூரியசந்திரனுக்கும், பின்னதுக்காக திரு.பல்லடம் மாணிக்கத்துக்கும் என் நன்றிகள்.

நான் 2004இல் கனடா வந்த பிறகு ‘வைகறை’ பத்திரிகையில், ‘உள்ளது உணர்ந்தபடி’ என்ற தலைப்பில் இருபத்திரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். ஏறக்குறைய அறுபது அல்லது  அறுபத்தைந்து  குறள்கள் அதில் வந்திருக்கலாம். கைவசம் எழுதி வைத்திருந்த  மீதிக் குறள்களுக்கான என் ரசனை விளக்கத்தையும் சேர்த்து நூலாக வெளியிடலாம் என்ற நண்பர்களின் பரிந்துரையை இப்போதுதான் நிறைவேற்ற  இயன்றிருக்கிறது.

அன்புடன்,
தேவகாந்தன் (கனடா, தை 24, 2019)







Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி