ஈழவர் கதை



ஈழவர் கதை
(ஈழவர் என்பது இங்கே ஈழத் தமிழரையே சுட்டாய்க் குறிக்கிறது. ஈழத் தமிழர்பற்றி ஒரு வரலாறு சார்ந்த ஓர் அரங்க நிகழ்வுக்காக இலங்கையின் புராதன வரலாற்றின் மேலாக மீண்டும் ஒரு வாசிப்புப் பயணத்தை நிகழ்த்தியபோது எடுத்த குறிப்புகள் இவை. இதன் முக்கியமான நோக்கம் ஈழத் தமிழரின் பூர்வீகம் மற்றும் வரலாற்றின் தனித்துவத்தை இனங்காட்டுவதே ஆகும். இதை இன்னும் விரிவாக எழுதி நூலாக்கும் ஓர் எண்ணமும் என்னிடத்தில் இதை எழுதத் தொடங்கிய ஜுன் 2008 அளவில் இருந்திருந்தது. வேறு முயற்சிகளில் அதை முன்னெடுக்க வாய்ப்பு இதுவரை ஏற்படவில்லை. எதற்கும் ஒரு பதிவாக இருக்கட்டுமேன் என்பதற்காக என் வலைப்பூவில் இதை பதிவேற்றி வைக்கிறேன். இன்னுமொன்று, இக்குறிப்புகள் என் முடிவுகள் அல்ல.)

1.   பொதுவாகவே தமிழரின் தொன்மையை காலவரையறை செய்து நிறுவுவதற்கான அறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை அகப்படவில்லை. இலக்கியத்திலுள்ள சில தரவுகள் மூலமாகவும், அகழ்வாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட சில ஆதாரங்களின் அடிப்படையிலும்தான் இத் தொன்மை ஓரளவு கணிக்கப்பெற்றிருக்கிறது.
2.   இலக்கியத் தரவுகளின்படி பண்டைய தமிழகத்தில் இருந்ததாகக் கருதப்படும் முச் சங்கங்கள் சுமார் கி.மு.2000க்கு முற்பட்டவையெனக் கருதக்கிடக்கின்றது. முதல் சங்கம் கி.மு.2000க்கும், இடைச் சங்கம் கி.மு.1200க்கும், கடைச் சங்கம் கி.பி.200க்கும் உரியவையென பரவலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆதாரம்: திராவிடர் வரலாறு, முன்னுரை, ப.சிவகாமி )
3.   அவ்வாறெனின் தமிழ் தோன்றியதும், பயிலத் தொடங்கியதும் கி.மு. 2000க்கு பன்னெடுங்காலம் முந்தியதாயிருக்க வேண்டும். அந்த ஆதித் திராவிட மொழிக் காலம் அறுதியிட்டு உரைக்க முடியாதது.
4.   எனினும், சங்கங்கள்பற்றி இதுவரை உரைக்கப்பெற்றவைகளை மூன்று வகையாக பகுக்க முடியும். (1) மிகவும் தமிழர் சார்பான முடிபுகள். இவை 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்த குடியென தமிழைரைச் செப்பும். (2) இதற்கு எதிரிடையான வடமொழிப் பற்று மிக்கவர்களால் உரைக்கப்பெற்ற கருத்துக்கள். இவை இலக்கியத் தமிழ்மொழிக் காலத்தையே இழுத்து இழுத்து வந்து கி.பி.க்கும் பின்னதாக ஆக்கும். இதன்மூலம் தமிழர் தொன்மையை மறைப்பது இவர்களது திட்டமாக்க கருதலாம். (3) ஓரளவு நடுநிலை நின்று பகுக்கப்பட்ட கணிப்புகள்.
5.   கி.மு.5000க்கு உரியதெனக் கணிக்கப்பட்டுள்ள சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களது என்பது பல ஆய்வாளராலும் ஒப்ப முடிந்த முடிபாகும்.
6.   இந்தக் காலவரையறை முக்கியமானது. ஏனெனில் ஆரியரின் வருகையோடு இத் திராவிட தொல் குடிகள் தெற்குநோக்கி நகர்ந்ததாக சில ஆய்வாளர்கள் கூறும் கருத்துக்கு இது வலு சேர்க்கிறது.
7.   லெமூரியா என்ற கண்டத்தைப்பற்றி பல தமிழறிஞரும் ஆய்வாளர்களும் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு நிலம் இருந்ததாக கடல், நில ஆய்வுகள் எதனின் மூலமும் நிரூபிக்கப்படவில்லையென சிலர் கூறுவர்.
8.   'பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற சங்க இலக்கிய அடிகள்மூலம் குமரிக்குத் தெற்கே இருந்த நிலம் அழிந்த கதை தெரிகிறது. சலப் பிரளயங்கள் அவ்வப்போது ஏற்பட்டமையை இலக்கீயங்களால் மட்டுமன்றி இதிகாச நூல்களாலும் அறிய முடிகிறது. ராமாயணத்தில்கூட ஒரு சலப் பிரளயம்பற்றிய பிரஸ்தாபம் உண்டு.
9.   இப்போதுள்ள குமரியல்ல, அழிந்த கமரி நிலமொன்று தெற்கே வெகுவாக நீண்டிருந்ததென பல தமிழறிஞர்கள் அதுவே லெமூரியாவென சிலர் வாதிடுவர்.
10. புராதனத்தில் இலங்கை ஒரு தீவாகவன்றி ஒரு பெருநிலப்பரப்பின் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்பு உண்டு. முழு இலங்கையை விடுத்து, வடபகுதித் தீவுகளின் கதைகளை வைத்துப் பார்தாலும் இந்த உண்மை புரியும். ஆதியில் அது ஒரு பெரும் நிலப் பிரிவுகளாக இருந்தது. பின்னரே ஒரு சலப் பிரளயத்தில் ஏழு தீவுகளாக உடைந்தது.
11. உண்மையான தமிழ்நாடு குமரிமுனைக்குத் தெற்கிலேயே இருந்தது. இங்கிருந்தே தமிழர் வடக்கே (தமிழ்நாட்டில்) சென்று குடியேறினர். ஆதாரம்: தமிழர் சரித்திரம், ந.சி.கந்தையாபிள்ளை)
12. ராஜாவளி என்ற பாளி நூலில் ராவணன்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ராவணன் இயக்க இனத்தைச் சேர்ந்தவன். இவர்கள் பேசிய மொழி 'எல' என அழைக்கப்பட்டது. இதுவே திராவிடத் தாய்மொழியாகும். 'எல' என்ற சொல்லிலிருந்தே ஈழம் வந்தது.
13. நாகர் பேசிய மொழி மூலத் தமிழ் (Proto – Tamil). இவை நாகரும் இயக்கரும் சேர்ந்த ஒரு கலப்பினத்திலிருந்தே இன்றைய ஈழத் தமிழரின் வம்சம் தொடங்கியதென்ற கூற்றை நிரூபிக்கின்றன.
14. ஒரு காலத்தில், அதாவது இலங்கை பிற தேசங்களில் தப்பிரபானே அல்லது சிகள அல்லது வேறு எந்தப் பெயராலும்தான் அழைக்கப்படும் முன்னர், தாமிரபரணி என அழைக்கப்பெற்றிருக்கிறது. 'இந்தியா, கிரேக்கம் முதலான நாட்டு இலக்கியங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரபூர்வமான குறிப்புகளிலிருந்து கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தாமிரபரணி என்ற நிலப்பரப்பின் பெயரால் இலங்கை பிற நாடுகளில் அறிமுகமாகியிருந்தது' என ஜி.தனபாக்கியம் தனது 'இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இது காலத்துக்குக் காலம் தமிழ்நாட்டிலிருந்து தொழில் நிமித்தமாகவும், மன்னார் முத்துச் சலாபத்தில் முத்துக் களீப்பதற்காகவும் தமிழர் இங்கு வந்து நிலைபெற்றிருந்தமையைத் தெரிவிக்கின்றது. ஈழத்தின் ஆதித் தமிழ்க் குடிகளுடன் தமிழ்நாட்டினர்க்கு கலப்பு ஏற்பட நிறைய வாய்ப்பிருந்ததை இது தெரிவிக்கின்றது.
15. பல பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தென்னிந்திய பிரமிக் கல்வெட்டுக்களை நிகர்தன. பௌத்த மதத்துடன் வடபிராமி எழுத்துக்கள் இலங்கையில் நடைமுறையில் இருந்தன. இதை சிங்கள ஆய்வாளர்களான ஈ.பி.பெர்னாண்டோ, சத்தமங்கள கருணாரத்ன, ஆரிய அபயசிங்க போன்றோரின் முடிவுகள் தெரிவிக்கின்றன. (ஆதாரம்: தமிழீழ நோக்கு தொகுதி 1, ப.புஷ்பரட்னம்)
16. முதுமக்கள் தாழி முறை இலங்கையில் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் அண்மையில் கிடைத்துள்ளன. 19ஆம் நூற்றாண்டில் எச்.பாக்கர் என்பவர் திசமகாராம பகுதியில் அகழ்வாய்வினை மேற்கொண்டபொழுது இத்தகைய தடயங்களைக் கண்டுபிடித்தார் (ஆதாரம்: Archeological Investigation near Pomparippu, எஸ்.பரணவிதான)
17. விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் வந்தேறியபோது இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கட் கூட்டமும், பண்டைய வாழ்முறையைக் கைக்கொண்டு வாழ்ந்த ஒரு மக்கட் கூட்டமும் இருந்திருக்கிறது (ஆதாரம்: குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள், கலாநிதி க.குணராசா).
18. 'பகைவராக வந்த சிங்களவர் ஓரளவு நாகரிகமடைந்திருந்த மக்கள்வசத்தில் இந்த நாடு இருந்ததைக் கண்டனர்.' (ஆதாரம்: Ancient Ceylon, 1909, H.Parker)
19. இக் குறிப்புகளிலிருந்து நாம் நிச்சயமான முடிபுகளுக்கு வரமுடியாவிட்டாலும், உண்மைக்கு அணுக்கமான சில அனுமானங்களை மேற்கொள்ளமுடியும்.
ஈழத் தமிழர் புராதனமான இனத்தைச் சேர்ந்த, ஈழத்தை காலகாலமாக தம் தாய்நாடாகக்கொண்ட ஒரு இனத்தவர் ஆவர். அவர்கள் பேசிய மொழி தமிழேயானாலும் அது ஆதித் தமிழ்மொழியாக, தூய்மையானதாக அதாவது அதிகமான வடமொழிக் கலப்பின்றி இருந்திருக்கிறது. 

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி