எனக்குப் பிடித்த சிறுகதைகள் 5


(அண்மையில்தான் ந.வினோதரனின் 'தவிச்ச முயல்' சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு பொலிஸ் விசாரணையின் கேள்வி பதில்கள் ஒரு கதையாக விரிந்த சிறப்பு எப்போதும் மனத்திலிருந்துகொண்டிருந்தது. இந்தவகையான உத்தி மிகவும் பழையதென்றாலும், மிக நுட்பமான கேள்வி-பதிலை அமைத்ததின்மூலம் ஒரு கதையே பின்னணியில் ஓடிக்கொண்டிருக்குமளவிற்கு அற்புதமாயமைந்திருக்கிறது கதை.)

வேதாளத்திற்கு அளித்த வாக்குமூலம்
ந.வினோதரன்

“பெயரென்ன?”
“அன்பழகன்.”
“முழுப்பெயரைச் சொல்லு.”
“அண்ணாமலை அன்பழகன்.”
“ஊரு?”
“யாழ்ப்பாணம்.”
“யாழ்ப்பாணம் எங்கு?”
“சாவகச்சேரி.”
“சாவகச்சேரி அற்றஸ் சொல்லு.”
நாச்சிமார் கோயில் வீதி, கல்வயல், சாவகச்சேரி.”
“டேற் ஆவ் பேர்த்?”
“22-09-1984.”
“வயசு?”
“இருபத்தஞ்சு.”
“ஐ.சி.நம்பர்?”
“841363140.”
“பிறந்தது?”
“பளை ஆஸ்பத்திரி.”
“யவ்னாவில கொஸ்பிடல் இல்லையா?”
“சாவகச்சேரியிலும் இருக்குது. ஆனால் அம்மம்மா வீடு பக்கத்தில எண்டதாலயாம்.”
“அப்பாட முழுப் பெயர்?”
“வல்லிபுரநாதர், கதிர்காமர், அண்ணாமலை.”
“அப்பா என்ன வேலை?”
“ஊரில வயல் இருந்தது. இப்ப வேலையில்லை.”
“எத்தனை சகோதரம்?”
“இரண்டு தங்கச்சியும் ஒரு தம்பியும்.”
“அம்மா பெயர்?”
“அண்ணாமலை சரஸ்வதி.”
“அம்மா என்ன வேலை?”
“வீட்டிலதான்.”
“சாப்பிட எப்படி காசு வருது?”
“1260 ரூபா நிவாரணம் வரும். அதோட நானும் வேலை செய்தனான்.”
“என்ன வேலை?”
“அச்சக வேலை.”
“சகோதரங்கள் பேரு?”
“ஆதித்யா, அன்பரசி, ஆரூரன்.”
“சகோதரங்கள் என்ன செய்யிறது?”
“இரண்டு தங்கச்சிமாரும் படிச்சிட்டு வீட்டில இருக்கினம். தம்பி ரெக்கில படிக்கிறான்.”
“எந்த ரெக்?”
“கொக்குவில் ரெக்.”
“நினைவு தெரிஞ்ச நாளிலயிருந்து நடந்ததைச் சொல்லு.”
“ஆண்டு ஒண்டிலயிருந்து ஐஞ்சு வரை கல்வயல் அ.மி.த.க. பாடசாலை.”
“பிறகு?”
“மகாவித்தியாலயம். ஏ.எல். சாவகச்சேரி கிண்டுவிலதான் படிச்சனான்.”
“எப்ப ஏ.எல். எடுத்தனி?”
“2003இல.”
“அதுக்குப் பிறகு என்ன செய்தனீ?”
“அதுக்குப் பிறகுதான் அச்சகத்திலை வேலை செய்தனான்.”
“எங்கை?”
“சாவகச்சேரி இளம்பிறை அச்சகம்.”
“எவ்வளவு சம்பளம்?”
“பத்தாயிரம் கிடைக்கும்.”
“யவ்னா ஆமி ஐ.சி. இருக்கா?”
“இருக்கு. அதுகின்ர நம்பரும் பாடம். 091045689.”
“எப்ப வழங்கினது?”
“21-01-1997ல. எங்கட பள்ளிக்கூடம்தான் தந்தது.”
“அப்பா அம்மாவுக்கு சகோதரம் இல்லையா?”
“அப்பாவோட சேர்த்து அஞ்சு பேர். அம்மாவில எட்டுப் பேர்.”
“எல்லாரும் எங்கை?”
“சவுதியில இருக்கிற சித்தப்பாவை தவிர எல்லாரும் யாழ்ப்பாணத்தில.”
“என்ன சாதி?”
“சிறீலங்கா தமிழ்.”
“தெமில்தான கேக்கிறன். சாதியைச் சொல்லு.”
“….”
“ஏன் கொழும்புக்கு வந்தது?”
“வெளிநாடு போக.”
“கொழும்பு அற்றஸ்?”
“இருபத்தி நாலின் கீழ் பத்து, புதிய கதிரேசன் வீதி, கொழும்பு பதின்மூண்டு.”
“பொலிஸ் றிபோட்?”
“இருக்குது.”
“என்ன இதிலை ரபர் ஸ்ராம் இல்லை?”
“பெற்றா பொலிஸ் பிரிவில ரபர்ஸ்ராம் குத்தறதில்லையாம். சைன்தான் வைச்சிருக்கு.”
“வீடா? லொட்சா?”
“லொட்ச்.”
“எந்த லொட்ச்?”
“ஏ.எஸ்.பி. லொட்ச்.”
“லொட்ச் ஓனர் யார்?”
“தெரியாது. மனேஜரைத்தான் தெரியும்.”
“இந்தப் போட்டோ உன்ரைபோல இல்லையே?”
“என்ரை போட்டோதான். பாஸ்போட்டுக்கு எடுத்தது.”
“பாஸ்போட் எங்கை?”
“ஏஜன்சிட்ட குடுத்திட்டன்.”
“ஆர் ஏஜென்சி?”
“நவாங்டீன். இதுதான் அவற்றை விசிற்றிங் காட்.”
“பாஸ்போட் நம்பர்?”
“அதுமட்டும் ஞாபகமில்லை.”
“எப்ப எடுத்தனீ?”
“போன மாதந்தான்.”
“எங்கை எடுத்தனீ?”
“புஞ்சி பொரளையில.”
“எப்படி யவ்னாவிலயிருந்து வந்தது? என்.ஜி.ஓ.தான கொண்டு வந்தது?”
“இல்லையில்லை. பிளைற்றிலைதான் வந்தனான்.”
“எத்தனையாந் திகதி?”
“தை மாதம் எட்டாந் திகதி.”
“யவ்னா பொலிஸ் பிரிவு?”
“முதல் சாவகச்சேரி. இப்ப நெல்லியடி.”
“ஏன் நெல்லியடி?”
“இரண்டாயிரம் ஆண்டு இடப்பெயர்வோட நெல்லியடிக்கு வந்திட்டம்.”
“எங்கை கிளியரன்ஸ் எடுத்தது?”
“நெல்லியடி சிவில் ஒவிசில.”
“ஆர் சிவில் ஒவிசில?”
“பண்டார சேர் எண்டு நினைக்கிறன். சரியா பேர் தெரியவில்லை.”
“நெல்லியடி அற்றஸ்?”
“24\9, கொடிகாமம் வீதி, நெல்லியடி.”
“ஏன் வெள்ளவத்தைக்கு வந்தனீ?”
“”அம்மா பார்சல் போட்டுவிட்டவா. அதை எடுக்கிறதுக்கு.”
“கொட்டகேனாவிலயிருந்து இங்கை எதில வந்தது?”
“பஸ்ஸில.”
“எந்த பஸ்?”
“இலக்கம் நூற்றியிரண்டு.”
“உடம்பில ஏதாவது காயம் இருக்கா?”
“இந்த வலக்கை சுட்டுவிரல் நொங்கு வெட்டேக்கை ஒரு இஞ்சி இல்லை. காலிலை கருக்கு வெட்டினது.”
“கத்தி வெட்டினதுக்கு அத்தாட்சி இருக்கா?”
“ஒண்டுமில்லை.”
“இவங்க யாரு?”
“Wife.”
“ஏன் பொட்டு, தாலி ஒண்டுமில்லை?”
“தாலி கட்டயில்ல. எழுத்துத்தான் எழுதினது. பயத்தில நாந்தான் பொட்டு வைக்கவேண்டாமென்று சொன்னனான்.”
“அவங்கடை அப்பா அம்மா?”
“அவையளும் யாழ்ப்பாணத்திலதான்.”
“எங்கை றிஜிஸ்ரர் பண்ணினது?”
“கொழும்பில. இங்கை…. வெள்ளவத்தையிலதான்.”
“ஆர் றிஜிஸ்ரர் பண்ணினது?”
“சந்திராணி சந்திரசேன.”
“ஆர் சாட்சிக்கு கையெழுத்துப் போட்டது?”
“என்ரை மச்சானும் அவாடெ அன்ரியும்.”
“ஏன் அப்பா அம்மா வரேல்ல?”
“எல்லாருக்கும் கிளியறன்ஸ் கிடைக்காது. எனக்குக்கூட அப்பாதான் பிணை வைச்சு அனுப்பினவர்.”
“லவ்வா?”
“ஓம். ஆறு வரிச லவ்.”
“கொழும்பு செலவுக்கு ஆர் காசனுப்புறது?”
“அவாட சித்தியும் என்ரை சித்தப்பாவும்.”
“எங்கை இருக்கிறா?”
“லண்டனில.”
“மாதம் எவ்வளவு வரும்?”
“றூமுக்கு பத்து. செலவுக்கு பத்து. மொத்தம் இருபது.”
“எதிலை அனுப்பறது?”
“உண்டியல்லதான் வரும்.”
“லொட்சில உங்க ரூமில ஆரார் இருக்கிறது?”
“நானும் அவாவும்.”
“ஏன் வெளிநாடு போகவேணும்?”
“உழைச்சு தங்கையாக்களையும் அம்மா அப்பாவையும் பார்க்கவேணும்.”
“கொழும்பில எவ்வளவு காலம் இருக்க விருப்பம்?”
“விசா கிடைச்ச உடனேயே போயிடுவம்.”
“நீ போகேலாது. அறஸ்ற்.”
“ஏன் சேர்?”
“உன்னைப்பற்றி நியூஸ் வந்திருக்கு.”
“சத்தியமாய் நான் இனெசன் சேர்.”
“இனெசனா இல்லையா எண்டது விசாரிச்ச பிறகுதான் தெரியும்.”
(இவ்வளவு நேரமும் நடந்தது…???)
“மூண்டு மாசம் DO அடிச்சாச்சு.”
“பிளிஸ் என்னை விடுங்கோ, சேர். அவள் பாவம் தனிய, சேர். என்னை விட்டிடுங்கோ, சேர்.”
“அவங்களுக்கு பிரச்சனையில்ல. நீதானே பொட்டு வைக்கிறது பயம் எண்டிட்டாய்… பொட்டு வைக்காட்டி பயமில்லைதானே?”
000
‘ஶ்ரீலங்கா தாயே நம்
ஶ்ரீலங்கா…
நானொரு ஈழத் தமிழன்
எனக்கிப்ப வயது இருபத்தைஞ்சு
ஏ.எல். வரைக்கும் படிச்சன்…
நமோ நமோ நமோ நமோ தாயே

வாழ்தல் பயத்தாலும்
குடும்பத்தை நிமித்தவும்
வெளிநாடு போக வந்தன்.
உரிமைகள் அறுந்து
உணர்வுகள் சிதைந்த
மனிச சடமாய்
அயல் நாடுகளில்
அலைய போகிறேன்…
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா.’
000

(‘தவிச்ச முயல்’ தொகுப்பு, 2015)







Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி