பாரபாஸ்


-தேவகாந்தன் 


பேர் லாகர்க்விஸ்ட் என்கிற சுவீடிய எழுத்தாளரின் ‘பாரபாஸ்’  நாவலை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.

க.நா.சு.வின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்த நாவலை அது வெளிவந்த 1995ஆம் ஆண்டிலேயே வாசித்திருந்தும், இருபதாண்டுகளுக்கு பிறகான இப்போதைய வாசிப்பிலும் நாவல் தன் வீர்யம் குறையாத அழகுடன் விளங்குவதைக் காண முடிந்திருந்தது. வாசிப்பின் சுகம் அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் மொழி, நடை ஆகியன நவீன எழுத்தியலின் ஊடாகக்கூட குறையாதிருந்தமை முக்கியமானது.

இந் நாவல் 1950இல் வெளிவந்திருக்கிறது அதன் மூலமொழியில். இதன் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பு 1955இல் ‘அன்புவழி’ என்ற பெயரில் அ.கி.ஜெயராமனால் வெளியிடப்பட்டதை தமிழ் பதிப்புரை தெரிவிக்கிறது. மூல நாவலுக்கு 1951இல் நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு  மூன்று நான்கு ஆண்டுகளிலேயே   இதன் கலாநேர்த்தி கண்டறியப்பட்டு  க.நா.சு.வினால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிகிறபோது வியக்காமலிருக்க முடியவில்லை.

1953இல் அரங்காக்கமாகவும், 1961இல் அன்ரனி குயின் நடிப்பில் சினிமாவாகவும் பாரபாஸ் அடைந்த விருத்திகள் கவனிக்கப்பட வேண்டியவை.

அ.கி.ஜெயராமனால்  வெளியிடப்பட்ட  நூலுக்கு க.நா.சு. எழுதியிருக்கும் முன்னுரை வேர்கள் இலக்கிய இயக்கத்தின் வெளியீடாக வந்திருக்கும்  பதிப்பிலும் மறுவாக்கம் பெற்றிருப்பது சிறப்பு.  க.நா.சு. காலமான பிறகு அதைவிட வேறு வழியுமில்லைத்தான்.

அலன் ப்ளேர் (Alan Blair) என்பவரால் 1989ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் 144 பக்கங்களையே கொண்ட சிறிய நாவலெனினும் அது கொண்டிருக்கும் வீறு பிரமாண்டமானது.

கொல்கோதா மலையில் யேசு சிலுவையில் அடைபடுவதற்கிருந்த நாளில் கூடவே சிலுவையில் அறையப்படவிருந்தவன் பாரபாஸ். மரண தண்டனை பெற்றவரில்   ஒருவர் விடுவிக்கப்பட முடியுமென்றிருந்த நடைமுறையால் பாரபாஸ் என்கிற இந்தத்  திருடனுக்காக யேசு தன்னை ஒப்புக்கொடுக்கிறார். நடந்ததாக எழுத்துருவாக்கம் பெற்றிருப்பவற்றைக் கொண்டு மிக அழகாக புனைவாக்கம் பெற்றிருக்கிற இந்த நாவல், காலம் மீறிய ஒரு சரித்திர நாவல் தன் காலகட்ட சூழ்நிலையை எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய்க் காட்டக்கூடிய தகைமை வாய்ந்ததாகவிருக்கின்றது.

எழுதப்படாக் காலத்துச் சரித்திரங்கள் எவ்வாறு ஆக்கம் பெறுகின்றன என்பதனை வாசகன் உள்ளுணரும்படிக்கு தன்னைக் கட்டமைத்திருப்பதே இதன் அதி உச்சபட்ச சாதனை என்பது மிகையான கூற்றேயல்ல.

Source Language இலிருந்து Target Language க்கான மொழிமாற்றத்தின்போது நிகழும் ரசாயனத்தில் மூன்றாவது ஒரு உலகமே சிருஷ்டிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இது குறித்து ஆய்வாளர்களும் ‘In the process of a translation, building up a new relationship between language and the outer world, dividing-and welding-in a continuous energy till a 'third universe' is created' என்றே குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான ஒரு மூன்றாவது உலகம் சிறப்பாக, நுட்பமாக கட்டப்பட்டிருக்கிறது இந்த நாவலில். சிலுவையில் அறையப்படுவதிலிருந்து விடுவிக்கப்படும் பாரபாஸ் அடையும் சந்தேகம் மனத்துயர் நிம்மதியிழப்புகளும், பின்னால் தேவமகனான யேசுவின் மீதான சாட்சி சொல்பவளாகவிருந்து அவரின் மீள்வருகையின் நம்பிக்கையால் அவரை அரசதிகாரத்தின் முன் மறுதலிக்காமல் தண்டனையையேற்று கல்லெறிபட்டு மரணிக்கும் உதடு பிளந்த பெண்ணினால் அடையும் பாரபாஸின் மனத்திலெழும் மாற்றங்களும், கடைசியில் ரோம சக்கரவர்த்தியை மறுதலிப்பதின் மூலம் யேசுவை ஒப்புக்கொள்வதாய்க் காட்டி மறுபடி சிலுவையில் அறையப்பட்டு பாரபாஸ் மரணமாவதும் என நாவல் விரிக்கும் களம் கால இயைவும் கருத்தியைவும் பெற்று ஆன்மீகம்-நாத்திகம் இரண்டுக்குமிடையிலான ஓர் உசாவலாக அமைந்து சிறப்புப் பெறுகிறது.

மிகக் குறைந்த பாத்திரங்களைக்கொண்டு அமைந்திருக்கும் இந்நாவல் பாரபாஸை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டிருப்பினும், உதடு பிளந்த பெண்ணும், ஹகாக்கும்கூட விரிந்த தளத்தில் இயக்கப்பெறுகிறார்கள்.

முரட்டுத்தனமும், இருண்ட சிந்தனையும் கொண்ட ஒருவனே பாரபாஸ். தனக்காக மரித்த யேசுவின்மீதுகூட மதிப்பில்லாமல் போகிறது அவனுக்கு. அவனே யேசுவின் தலையின் பின்னால் ஒளிர்ந்த ஒளிவட்டத்தைக் கண்கூடாகக் காண்கிறான். ஆயினும் அது தன் சிறையிருளின் விடுவிப்பில் திடீரென விரிந்த வெளிச்சப் பரப்பினால் தோன்றிய மாயை என நினைக்கிறான். அவர் தேவகுமாரனாயிருந்தால் அந்தக் கொடு வலியிலிருந்தும், மரணத்திலிருந்தும் ஏன் தப்ப முடியாது போனது என்பதே அவனது கேள்வியாக இருக்கிறது.

புருஷனிழந்த தாய்க்கு மகனாகப் பிறந்து, பிறந்த கணங்களிலேயே தாயை இழந்து, வளர்ந்த பின் தந்தையென்று அறியாமலே ஏற்பட்ட மோதலில் அவனைக் கொன்று முரட்டுத்தனம்கொண்டு அலைந்த பாரபாஸ் அன்புக்காக ஏங்கியவன். அந்த ஏக்கமே அழகற்றவளும் உடல் பருத்தவளுமான உதடு கிழிந்து அவலட்சணமான பெண்ணோடு உடலிணைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், அது காமமாக மட்டுமே இருக்க அவளைவிட்டும் அது அவனை விலகியோட வைக்கிறது. அன்பு, காதலில் நம்பிக்கையற்ற ஒரு பிறவி அவன். அதுவே கடவுளின் வருகை, ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்ற அவரது போதனை சகலவற்றையும் மறுப்பவனாக அவனை ஆக்குகின்றது.

இறுதியில் அவனது ஒப்புக்கொடுத்தல்கூட ஒரு எதிர் மனநிலையின் மூர்க்கம் காரணமாக நடந்ததாகவே நினைக்கவேண்டியிருக்கிறது. அவன் இருளுக்குள் வாழ்ந்தவன் மட்டுமில்லை. இருளை நோக்கியும் வாழ்ந்தவன். அதனால்தான் அவனது இறுதிக் கணங்கள்கூட இருண்மையை அழைக்கின்றன.

நாவல் இவ்வாறு முடிவடைகின்றது: ‘இன்னும் உயிர் இருந்தது அவனுக்கு. அவன் ஆயுள்பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றி சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிறமாதிரி சொன்னான்.
“என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.”
பிறகு அவன் செத்துப்போனான்.’

மொழிபெயர்ப்பு குறித்தும், நவீன இலக்கியம் குறித்தும் மூலமொழிப் புனைவின் வலிமை குறித்தும் மட்டுமல்லாமல், இலக்குமொழி மாற்றத்தில் அடையக்கூடிய உச்சங்கள் குறித்துமான விஷயங்களில் தன்னை   முதன்மையானதாய் தமிழ் மொழிபெயர்ப்புலகில் தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கிறது பிரதி.

முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

000

நூல்: பாரபாஸ் (Barabbas)
சுவீடிஷ் ; மூலமொழி ஆசிரியர்: பேர் லாகர்க்விஷ்ட் (Par Lagerkvist)
தமிழில்: க.நா.சுப்பிரமணியம்
பதிப்பு: 1995
வெளியீடு: வேர்கள் இலக்கிய இயக்கம், நெய்வேலி.

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி