லங்காபுரம்


தேவகாந்தனின் "லங்காபுரம்"
- முதல் வாசிப்பின் பகிர்தல்கள்..


பிரதீபன் சிவபாலன்


தேவகாந்தன் அவர்களின் லங்காபுரம், விதி ஆகிய நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். வைகறை பத்திரிகையில் தொடராக வெளிவந்து இன்று அச்சுருப்பெற்று வெளியாகும் இந்த லங்காபுரம் நாவலுக்கு என்னை முதல் வாசகனாக இருக்கச் சொல்லிக் கேட்ட தேவகாந்தனின் அன்புக்கு முதலில் நன்றியை சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் மீதான முதல் தொடுகையை நானும் செய்திருக்கிறேன் என்பது என்னளவில் திகில் மிகுந்த பரவசமானது. எல்லா நூல் வெளியீட்டிலும் நான் நினைத்திருக்கிறேன் வெளியிடப்படும் அந்த நூலை முதன் முதலில் வாசிப்பவர்கள் என்ன விதமான மனநிலையை அடைவார்கள் என்று – இன்று அந்த முதல் மனநிலையின் சில நொடிகளைத் தன்னும் உங்களோடு பேசும் சந்தர்ப்பத்தை அச்சத்துடன் கூடிய பொறுப்பாகவே உணர்கிறேன். இதனையும் தாண்டி இந்த நூலுக்கு ஒரு விமர்சனத்தையோ மதிப்புரையையோ என்னால் முன் வைக்க முடியாது என்பதை வாக்குமூலமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

“கதைகள் இன்பத்துக்காகவே புனையப்படுகின்றன. இன்பத்துக்கான புனைவுகள் இறுகி இறுகி உண்மையானவை உருத்தெரியாமல் மறைக்கப்பட்டு விடுவதும் உண்டு. அதுபோல இந்த ராவண காதையும் நாளை வேறொரு கதைபோல உருமாற்றம் பெறலாம். அப்பெரும் பொய்கள் ஒரு கவிஞனால் நாளை காவியமாய் பாடவும் பெறலாம். தமிழ் மொழி உள்ளளவும் அப்பொய்கள் நின்று நிலைபெறவும் படலாம்” என்று இந்த நாவலின் இறுதி அத்தியாயங்களில் வருகின்ற கதையாடியின் நீதிக்கான குரலைத்தான் நாவலுக்கான நியாயமாக கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நியாயத்தை நோக்கிய புனைவின் வழக்குரைப்புத்தான் லங்காபுரம்.

வரலாற்றில் இராவண - இராம காதை அடைந்திருக்கக்கூடிய தொன்மம் மிகவும் புராதனமானது. அது மிகத் தனக்கேயான நுட்பங்களையும் அடையாளங்களையும் கொண்டு காலங்கள் வழியே பயணிப்பது. இரு வேறுபட்ட நிலப்பரப்பின் கதை என்பது இருபுறமும் ஒரேமாதிரியான சாத்தியத்தை கொண்டியங்க எந்தவித தேவையுமற்றது. அதேசமயம் வென்றவர்களின் கதைகளில் வருகின்ற வெல்லப்படுகின்றவர்களின் நிலை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைத்தானே. ஆக லங்காபுரம் இங்கே இராவண கதையின் மறுவாசிப்பாக - ஒரு அரசனுக்கும் அறவாடிக்குமான உறவில் முளைக்கின்ற நட்பின் சித்திரமாக.- ஒரு சிவனாலயத்தின் இருப்பை வரலாற்றின் ஆள்கூற்றில் புள்ளி குறிக்கும் இலக்கிய சாட்சியாக – இன்னும் ஒரு பெருநகரின் மர்மத்தை, ரகசியத்தை, சூழ்ச்சியை கொண்டாட்டத்தை முன்வைக்கும் அச்ச உணர்வின் ருசி எழலாக - இத்தனையையும் உள்ளடக்கும் புனைவின் கூத்தாக தன் தேவை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

எல்லாப் புனைவிலும் பிரதியாளன் - வாசகன் சுதந்திரம் முக்கியமானது. அதுவே அந்தப் பிரதி குறித்த அதி உச்ச நிலை அனுபவத்தை அவர்கள் இருவருக்கும் கொடுக்க கூடியது. பிரதியாளனின் தளத்தை வாசகன் சென்றடையும் வசதியை அந்தச் சுதந்திரம் வழங்குமாயின் அந்தப் பிரதியை ஒரு நல்ல படைப்பாக காலம் கௌரவம் செய்யும். அந்த வகையில் லங்காபுரமும் தனது சிக்கலான செறிவான கதையப்பின் வழியாக வாசகனை அழைத்துச் செல்லும் தளத்தில் பிரதியாளனின் செய்தி புனைவின் அசாத்தியச் சாத்தியங்களோடு சொல்லப்படுகிறது – அதுவே இந்தப்படைப்பில் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.

வரலாறுகள் என்பது எப்போதும் தவறுகளால் நிறைந்திருப்பது – நம் முன்னோர்கள் செய்த தவறுகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் அந்த வகையில் முதல் தவறை செய்த மூதாட்டி குவேனி என்றார் செங்கை ஆழியான் தனது குவேனி நாவலில் – அதுபோலவே லங்காபுரமும் ஒரு ஆதித்தவறின் அவலக்கதைதான். அந்த வகையில் தவறுகள் வரலாறு வழியே காலங்கலூர்ந்து இன்னும் இன்னும் எம்மை தொடரும் நிலையிலே இந்தப் புனைவை ஒரு அரசியல் பிரதியாகவும் ஒருவருக்கு வாசிக்க சாத்தியங்கள் இருப்பதையும் குறித்துக் கொள்கிறேன். இதில் இராவணன் யார் சித்து யார் வீடாணன் யார் கதக்கண்ணன் யார் என்பது குறித்து நமக்கான சித்த்திரங்களை உருவாக்கும் வெளியை நாவல் அளிக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

நாவல் என்பது ஒரு தொடர்ச்சிக்குட்படுவது என்பது எனது எளிமையான அனுமானம் – ஒரு நிலவியலின் தொடர்ச்சி, கதைமாந்தரின் தொடர்ச்சி, கதைப்பரப்பின் தொடர்ச்சி என்பதோடு கூட கதை நிகழும் மொழியின் தொடர்ச்சி என்பதாகவே ஒரு நாவலின் தொடர்ச்சி இருக்க முடியும். மேலும் முக்கியமாக இந்த நாவலின் முதல் இருபது அத்தியாயங்களில் நான் காமத்தின் தொடர்ச்சியையும் ஒரு புகாரைப்போல புகையைப்போல காணவும் உணரவும் கூடியதாக இருந்தது. சீதை கவர்ந்து கொள்ளப்படும் வரை நாவல் வழி விரவிக்கிடக்கின்ற காமத்தின் தகிப்பு அவளை கவர்ந்தபின் ஒரு யுத்தம் சார்ந்ததும் அதன் விளைவுகள் சார்ந்ததுமான பெரும் தவிப்பாகவே மாறிவிடுகிறது. அது இராவணனுக்கு மட்டுமல்ல, அவன் உறவுகளுக்கும், அவன் குடிகளுக்கும் அதனை தொடர்கின்ற நமக்கும்தான் –இது மறைபொருளாய் உணர்த்தும் செய்தி கூட இன்னொரு நீதிதான்.

இந்த நாவலின் மொழியின் கவிதைக்கூறுகள் ஒரு வாசக ரசிகனாய் என்னை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.

அணையத் தயாராக இருந்த தீபம் ஒன்று – காற்றில் – இறுதிச் சுடர் வரிகளை எழுதிக்கொண்டிருந்தது என்று ஒரு இடத்தில் எழுதப்படுகிறது.

மேலும் தென்திசை நோக்கி அரசிழந்த கணவனுடனும் அவள் இளவலுடனும் சீதை என்னும் அந்தமில் அழகி வனமூர்ந்து வருவது – போன்ற வசனங்களில் நிறைகிறது புனைவின் அழகியல்.

இந்த நாவலின் இறுதி அத்தியாயங்கள் புனைவுகளோடு வரலாற்றுக் குறிப்புகளை பொருத்தும் வேலையை செய்திருக்கிறது – இங்கே புனைவுவழி வரலாற்றை சாத்தியம் செய்வதும் வரலாறு துணைகொண்டு புனைவை நிறுவுவதுமான ஒரு சுழல் நிகழ்கிறது – வரலாறு என்பதும் ஒரு புனைவுச் சொல்லே என்னும் விவாதம் முன்வைக்கப்படும் சூழலில் புனைவென்பது ஏன் வரலாற்றை பேசக்கூடாது என்கின்ற கேள்வியை தாங்கி நிற்பதுதான் லங்காபுரம்.

சிவனாலயம் பற்றிய வரலாறும் – இராவண செல்வம் பற்றிய தகவலும் புனைவின் சுவையோடு பேசப்பட்டிருக்கிறது. சிவனாலயம் பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் பெருஞ்செல்வம் பாடல்களில் இடம்பெறுகின்ற தகவல்களை தொடர்ந்து செல்லும் ஒருவருக்கு லங்காபுரத்தின் கதை காத்திருக்கிறது. அந்தக் கதை உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் சொல்லப்படட்டும்!.

காலங்கள் தோறும சூழ்ச்சியால் விழுந்த இராச்சியங்களும் அதன் மன்னர்களும் அவர்தம் கோலவெளிப்பாடுகளும் கட்டிடங்களாக, அரண்மனைகளாக, பெருங்கோவில்களாக, புராதன சின்னங்களாக வரலாற்றின் தொன்மங்களாக இருந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் கதைகள் மக்களின் மனங்களிலும் புனைவாளன், படைப்பாளன் எழுத்துகளிலும் மீள மீள வந்து கொண்டே இருக்கிறது – எல்லா பேரலைகளும் பெருந்துயர்களையும் தாண்டி. அதனை காலங்கள் தாண்டி வாழச்செய்யும் சிரஞ்சீவிப்பணியை இத்தகைய படைப்புகள் செய்யும்.

இது குறித்து வேதாகம வாசகம் ஒன்று நினைவு கூரத்தக்கது “ஒரு கலசம் நீர் தரப்பட்ட உதவியையும் ஆண்டவன் மறப்பதில்லை” என்பதே அது. லங்காபுரமும், சிவன்கோவில் வரலாறும் அதன் காலங்கள் தோறும தொடரும் தீராத்தாகத்துக்கு வழங்கப்பட்ட ஒரு கலசம் நீரே என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த தருணத்தை இங்கே சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.
நன்றி வணக்கம்!

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி